Friday, March 29, 2024
Home » காசாவில் இஸ்ரேல் இதுவரை இல்லாத தாக்குதல்: ஒரே நாளில் 400 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் இதுவரை இல்லாத தாக்குதல்: ஒரே நாளில் 400 பேர் பலி

மற்ற இடங்களிலும் மோதல் அதிகரிப்பு

by damith
October 24, 2023 6:34 am 0 comment

இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்ததில் இதுவரை இல்லாத அளவுக்கு காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதோடு கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 400 பலஸ்தீனர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இடம்பெயரும் மக்கள் அடைக்கலம் பெறுவதற்கான இடமும் தீர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த மோதல் மற்ற இடங்களுக்கும் பரவும் சமிக்ஞையாக தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி இருப்பதோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு எதிரான மோதலும் வலுத்து வருகிறது.

எகிப்துடனான ரபா எல்லை வழியாகா காசாவுக்கு மேலும் உதவிப் பொருட்கள் சென்றபோதும் அது அங்குள்ள தேவையில் மிகச் சிறிய அளவையே பூர்த்தி செய்யும் என்று ஐ.நா மனிதாபிமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் முழு முற்றுகையில் உள்ள காசா பகுதியில் உணவு, நீர், மருந்து மற்றும் எரிபொருள் இன்றி மக்கள் பேரவலத்தை சந்தித்துள்ளனர்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் போராளிகளின் சுரங்கப்பாதைகள், பல டஜன் கட்டளையகங்கள் மற்றும் முகாம்கள் உட்பட 320க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்தது.

காசாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமாக இருந்தததாக பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடக்கில் ஜபலியா அகதி முகாமுக்கு அருகில் இருக்கும் வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

கான் யூனிஸில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த மோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்திற்குள் 400 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவமனைகளின் பிணவறைகள் நிரம்பி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 5000ஐ நெருங்கி இருப்பதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

காசா மீதான தரைவழி தாக்குதலை முன்னிட்டு வான் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது.

இந்த குண்டு மழையால் காசாவில் பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் சுமார் 1.4 மில்லயன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் சூழலில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே மக்கள் நிரம்பி வழியும் ஐ.நா அகதி முகாம்களில் அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

மோதலில் சிக்குவதை தவிர்ப்பதற்கு வடக்கில் இருந்து தெற்கை நோக்கி வெளியேறும்படி காசா மக்களுக்கு இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது. எனினும் தெற்கிலும் தாக்குதல்கள் தீவிரமாக இருப்பதாலும் போதிய தற்காலிக முகாம்கள் இல்லாததாலும் அங்கு வெளியேறிச் சென்ற பலரும் மீண்டும் வடக்கு காசாவுக்கு திரும்பி வருவதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – காசா மோதல் மத்திய கிழக்கெங்கும் பரவும் அச்சம் அதிகரித்துள்ள சூழலில், பிராந்தியத்தில் உள்ள நலன்கள் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் மேலதிக துருப்புகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு நிலைநிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.

லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்ல அமைப்புக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது 2006 இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போருக்கு பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கும் மோசமான வன்முறையாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்றுக் காலை இஸ்ரேல் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட் குண்டுகளை வீசிய இரு நிலைகளை இலக்குவைத்து லெபனானில் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது. வளாகங்கள் மற்றும் கண்காணிப்பு நிலைகள் உட்பட மேலும் பல ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

தமது போராளி ஒருவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா நேற்று குறிப்பிட்டபோதும் அது பற்றி எந்த விபரத்தையும் அது வெளியிடவில்லை. தற்போதைய மோதல் வெடித்தது தொடக்கம் லெபனான் எல்லையில் தமது ஏழு படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் ரமல்லாவுக்கு அருகில் ஜலாசோன் அகதி முகாமில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

இஸ்ரேலிய படையினர் இங்கு சுற்றி வளைப்பை மேற்கொண்டு பலரை கைது செய்ததோடு ஆயுததாரிகளுடன் சண்டையிட்டதாகவும் இளைஞர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் குடியிருப்பாளர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கிற்கான சீனாவில் சிறப்புத் தூதுவர் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையில் பரந்த அளவான தரைவழி தாக்குதல் இந்த மோதல் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணையம் வழி பேச்சு நடத்தியுள்ளார்.

போரால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றிப் பேசிய தலைவர்கள் அந்த வட்டாரத்தில் அமைதியை எப்படி நிலைநாட்டுவது என்பதையும் விவாதித்தனர். இஸ்ரேலுக்கான ஆதரவை மறுவுறுதிப்படுத்திய தலைவர்கள் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுத்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT