முன்னாள் பிரதம நீதியரசர் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் | தினகரன்

முன்னாள் பிரதம நீதியரசர் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல்

உள்நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் திருத்தச்சட்டமூலத்தை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மனித உரிமை மீறல் மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான தீர்ப்பு வெளியாகும்வரை இதனை நடைமுறைப்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையின் 41ஆவது பிரதம நீதியரசராக கடமையாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 12(1) இனால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையானது பிரதிவாதிகளின் நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கைகளால் மீறப்படக்கூடாது என மனுதாரரான முன்னாள் பிரதம நீதியரசர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1988ஆம் ஆண்டு 2ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச்சட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் நிறைவேற்றப்பட்ட விடயங்கள் குறிப்பாக இயங்கச்செய்யக் கூடிய சரத்துக்கள் முழுமையாக நீக்கப்பட்டு புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திடக்கூடாது என்றும் முன்னாள் நீதியரசர் கோரியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை பின்போடுவதற்காக 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி உச்சநீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தில் பெண்களின் விகிதாசாரத்தை அதிகரிப்பது என்ற திருத்தம் கொண்டுவருவது என்ற போர்வையில் நிறைவேற்ற முடியாதுபோன விடயங்களை உள்நுழைத்திருப்பதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


Add new comment

Or log in with...