முதியோர் கொண்டுள்ள மனத்துயரை இளவயதினர் புரிந்து கொள்வது அவசியம் | தினகரன்

முதியோர் கொண்டுள்ள மனத்துயரை இளவயதினர் புரிந்து கொள்வது அவசியம்

விஞ்ஞான விந்தைகளும் வியக்கத்தக்க சாதனைகளும் நிறைந்துள்ள இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் மட்டுமல்ல மரம்,செடி,கொடி மற்றும் மிருகங்களும் கூட என்றோ ஒரு நாள்,முதுமை நிலையை அடைந்தே தீர வேண்டும். இந்நிலையினை எந்த ஒரு விஞ்ஞானத்தாலும் மாற்றி விடவோ, தடுத்து விடவோ முடியாது.

மனிதப் பிறப்பில் பல பருவங்கள் உள்ளன. சிசு,குழந்தை,பிள்ளை,சிறுவர், இளைஞர்,வாலிபப் பருவமென்னும் பருவங்களையும், பல்வேறு அனுபவங்களையும், ஆற்றல்களையும்,செயல்திறன்களையும் தாண்டிய பருவந்தான் 'சிரேஷ்ட பிரஜைகள்' எனும் முதுமைப் பருவமாகும்.

ஆனால், இன்றைய நவநாகரிக உலகிலே முதியோர் என்றால் அதன் முக்கியத்துவம் குறிப்பாக இன்​ைறய இளைஞர்கள் மத்தியில் உணரப்படுவதில்லை.இது துரதிர்ஷ்டமானதாகும். அறுபது வயதைத் தாண்டியவர்களே முதியோர் என அழைக்கப்படுகின்றனர்.

அன்று கட்டான உடலமைப்போடும் கம்பீரத் தோற்றத்தோடும், வீரம் கொண்ட செயற்பாடுகளோடும் திகழ்ந்த அன்​ைறய இளைஞர்கள் இன்று உடல் தளர்ந்து, வலுவிழந்து, பார்வையும் மங்கி,நோய்வாய்ப்பட்டு முதியோர் என்ற முத்திரை பதித்து ஏழ்மையோடு வாழ்ந்து வருவதை நாம் இன்று காண்கின்றோம்.

முதியோர் என்றால் கடந்த காலங்களில் உண்டு, களித்துஅத்தனையையும் அனுபவித்து வாழ்ந்து முடித்தவர்கள் என்றெல்லாம் சிலர் நினைக்கின்றார்கள்.

இன்றைய சிரேஷ்ட பிரஜைகளான முதியோர் யார் என்று நாம் நன்கு சிந்திப்போமானால், அவர்கள் வெறுக்கத்தக்கவருமல்ல வேற்றாருமல்ல,அவர்களே நம் பெற்றோர்கள்; ஆயிரம் ஆயிரம் கஷ்டங்களுக்கு மத்தியில் நம்மை வளர்த்து,அறிவூட்டி,சமுதாயத்தின் முன் சங்கையோடு வாழ வழிவகுத்தவர்கள்,பல்துறைசார்ந்த அனுபவமும் ஆற்றலும் செயல்திறனும் கொண்டவர்கள் அவர்கள்.

இளைஞர்களின் எதிர்காலவழிகாட்டிகள், மதிக்கப்பட வேண்டியவர்கள்,கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையெல்லாம் பலர் மறந்தே வாழ்கின்றனர். ஆனால் இன்றைய நவநாகரிக இளைஞர்கள் சிலர் தொழில் பட்டம், பதவி கிடைத்தவுடன் முதியோர் எனும் தம் பெற்றோரை பிறருக்கு அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.இது வெறுக்கத்தக்க செயலாகும்.

உலகளாவிய ரீதியில் முதியோர்களின் நலனில் அக்கறை கொண்ட ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியை(நாளை) முதியோர் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. 1991 ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படும் இத்தினம் அமெரிக்கா,கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் முதியோரைக் கௌரவிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுவதை அறியக் கூடியதாகவுள்ளது.

இலங்கையின் முதியோர்களின் நலன் கருதி தேசிய சபையும் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இச்சபையினூடாக முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்றுக் கொள்ளவும் முடியும்,மேலும் முதியோர்களின் பாதுகாப்புத் தொடர்பிலும் இலவச சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் இருந்த போதிலும், பெரும்பாலான பாமர மக்கள் அவற்றை அறிந்திருப்பதில்லை. இது தொடர்பில் முதியோர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தரங்குகள் நடாத்தப்படல் வேண்டும்.

முதுமையடைந்த பெரும்பாலானோர் பலவிதமான கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர். வாய்க்கு ருசியான உணவு இல்லை,நிம்மதியான உறக்கமில்லை. அனைத்துக்கும் மேலாக பிள்ளைகளின் கவனிப்புமில்லை என முதியோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இன்று பெரும்பாலான முதியோர்கள் எதுவித பொழுதுபோக்குகளுமின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் இவர்களது மனநிலை பாதிக்கப்பட்டு பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இலங்கையில் கிராமங்கள் தோறும் சிறுவர் பூங்காஅமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சிறுவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இதேபோல முதியோர்களுக்கும் பொருத்தமான பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டால் முதியோர்களும் பெரிதும் பயனடைவார்கள். முதியோர்களின் தனிமையும்,ஏக்கமும் பறந்தேபோகும். கடந்தகால பாடசாலை நண்பர்களையும் சந்தித்து பழைய நினைவுகளை மீட்டுக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைப்பதோடு, உடல்உள நிம்மதிக்கும் வழிவகுக்கும். முதியோர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் இவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

முதுமைப் பருவத்தில் நாம் பலசெயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். முதியோர்களின் உடலமைப்பானது இளமைப் பருவத்தினரின் உடலமைப்பை போன்று திடகாத்திரமாக இயங்காது. சோர்ந்தே காணப்படுவதால் நோய்களும் எதிர்பாராத விபத்துக்களும் ஏற்படலாம்.

மேலும் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் சத்துணவுகளை வேளை தவறாமல் சாப்பிட்டுவருவதோடு முடிந்தளவு நாளாந்தம் உடற்பயிற்சியிலும் ஈடுபடுதல் வேண்டும். இன்றைய முதியோர் சிலர் எந்த நிலையிலும் உறுதியோடும் உற்சாகத்துடனும் (முதுமையை எண்ணி தளர்வடையாது) செயல்படுகின்றனர்.

இவர்கள் முதுமைப் பருவத்திலும் இளவயதினர் போன்று காணப்பட்டாலும் இவர்களின் உடல் உறுப்புக்கள் வீரியம் இழந்திருப்பதை மட்டும் மறுத்து விட முடியாது. முதுமைக் காலத்தில் பெரும்பாலானோர் பல்வேறுபட்ட நோய்களினாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவதை தினமும் காணக் கூடியதாக உள்ளது. இவர்கள் சில பழக்கவழக்கங்களை கடைப்பிபிடிப்பதன் மூலம் சில நோய்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும்.

மதுபாவனை,புகைப் பிடித்தல்,வெற்றிலை போடுதல் என்பனவற்றை தடுத்துக் கொள்வதோடு இனிப்பு,கொழுப்பு மற்றும் மாமிச உணவுகளையும் முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு இவர்களுக்குப் போதுமான பொருத்தமான உடற்பயிற்சியும்,நேரம் தவறாது மருந்துப் பாவனையும் சத்துணவும் முக்கியமாகும். முதியோர்கள் வீட்டாருக்கும் குடும்பத்தினருக்கும் சுமையாக இருக்காமல் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிகோரும் வகையில் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் முதியோர் தானே என நினைத்து சுகாதார பழக்கவழக்கங்களை கைவிடாமல் தினமும் தூய்மையாகவும்,சந்தோஷமாகவும் இருப்பதன் மூலம் குடும்பத்தினரின் அன்பையும்,பிறரின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு தன்னுடைய வேளைகளை தாமே செய்து கொள்வதும் பிறருக்கும் நமக்கும் திருப்தியாக இருக்கும்.

கிராம அபிவிருத்திச் சங்கம், இணக்கசபை, இலக்கிய மன்றங்கள், கூட்டுறவுச் சங்கம்,ஓய்வூதியச் சங்கம் போன்றஅமைப்புகளில் இணைந்து செயல்படுவதன் மூலம், முதுமைக் காலத்தை குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் பயனுடையதாக்கிக் கொள்ளலாம்.

முதியோர் தனிமையில் ஏக்கத்தோடு சதாகாலமும்,வீணாக வீட்டில் காலம் கழிக்காமல் முடிந்தளவு பயன் தரக் கூடிய அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுதல் ஆத்மதிருப்திக்கு வழிவகுக்கும்.

கலாபூஷணம்
எம்.ரி.ஏ. கபூர் ஜே.பி
கௌரவ செயலாளர், சிரேஷ்ட
பிரஜைகள் சம்மேளனம், நிந்தவூர்


Add new comment

Or log in with...