மனிதாபிமானத்துக்கு விடுக்கப்பட்ட சவால் | தினகரன்

மனிதாபிமானத்துக்கு விடுக்கப்பட்ட சவால்

மியன்மார் தாயகத்திலிருந்து உயிர் பாதுகாப்புக்காக அகதிகளாக வெளியேறிய ரோஹிங்கிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியமையானது இந்நாட்டு மக்கள் அனைவருமே வெட்கித் தலைகுனியும் செயலாகும். கடந்த செவ்வாய்க்கிழமை கல்கிசைப் பகுதியில் ஐ. நா. அகதிகளுக்கான உயிர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிங்கிய அப்பாவி அகதிகள் மீது பௌத்த பிக்குகள் சகிதம் சில கடும்போக்குவாதிகள் மேற்கொண்ட தாக்குதலானது மனிதாபிமானமற்ற செயலாகவே நோக்க வேண்டியுள்ளது.

அன்பையும், கருணையையும் போதிக்கும் உயர்ந்த மதத்தை பின்பற்றும் மக்கள் வாழும் இந்த நாட்டில் இப்படியானதொரு வெறுக்கத்தக்க செயல் நடந்தமையானது உலகளாவிய ரீதியில் எமக்கேற்பட்ட அவமானமாகும்.

ஜனநாயகத்தையும், மனிதாபிமானம், சகோதரத்துவத்தை மதிக்கும் மக்கள் இச்செயலை எந்த வகையிலும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த அப்பாவி மக்கள் விடயத்தில் நாம் இனம், மதம், மொழி என்பவற்றுக்கப்பால் மனிதாபிமான ரீதியில் பார்க்க வேண்டும். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட இந்த அப்பாவி மக்கள் இங்கு என்ன அரசியல் உரிமை கேட்டா வந்தார்கள். முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த அடாவடித்தனத்தை காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருப்பது போன்று இவர்கள் வெறிபிடித்த மிருகங்களேயாவார்கள். இதுவொரு காட்டுமிராண்டித்தனமன்றி வேறெதுவாக இருக்க முடியும். மியன்மாரில் உள்ள மனிதாபிமானமற்ற பௌத்த பிக்குகள், இராணுவத்தினர்கள் கைகளில் சிக்கிவிடாமல் உயிர்ப் பாதுகாப்புக்காக ரோஹிங்கியாவிலிருந்து வெளியேறி தப்பி வந்த அகதிகளாவர். ஜனநாயக நாடொன்றில் அடைக்கலம் கேட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது மிக மோசமான நாகரிகமற்றதொரு செயற்பாடு.

இந்த ரோஹிங்கிய மக்கள் அகதிளாக வெளியேறி வருகின்ற நிலையில் இலங்கை கடற் பரப்புக்குள் புகுந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இவர்கள் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிவுறுத்தலுக்கமைய கல்கிசையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்து கொண்ட சில கடும் போக்குவாதச் சக்திகள் அந்த அப்பாவிகளை உடன் நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்திலீடுபட்டதோடு அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் முற்பட்டனர்.

அந்த ரோஹிங்கிய அப்பாவிகளை பாதுகாப்பாக அவ்விடத்தை விட்டும் அகற்றிக்கொள்வதைத் தவிர வேறெதனையும் செய்ய முடியாத நிலைக்கு பொலிசார் தள்ளப்பட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே பொலிசார் உடனடியாக அந்த மக்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

இந்த விடயம் மறுதினம் கல்கிஸை நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நீதிபதி அந்த 32 பேரையும் பூஸா முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். இன்று அந்த மக்கள் மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குற்றமிழைத்தவர்கள் போன்றதொரு பார்வையில் அந்த ரோஹிங்கிய பெண்கள், சிறுவர் உட்பட 32 பேரும் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சில மனிதநேய அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் தாக்குதலில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சகலரையும் கைதுசெய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு பணிப்புரை விடுத்திருக்கின்றார். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ் தரப்பு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசும், பாதுகாப்புத் தரப்பு இந்த விடயத்தில் எந்தளவுக்கு நம்பகத் தன்மையுடன் நடந்து கொள்ளப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

எமது நாடு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற நாடு. இந்த நற்பெயரை காலம் காலமாக கட்டிக்காத்து வந்துள்ளோம். அந்த நற்பெயருக்கு களங்கம் கற்பித்து விட்டனர். இந்த களங்கத்தை எப்படி எம்மால் நிவர்த்தி செய்ய முடியும்? இலங்கை மக்கள் எம்மை ஆதரிப்பார்கள், அரவணைப்பாளர்கள் என்று எதிர்பார்த்த ரோஹிங்கிய அப்பாவிகளுக்கு பலத்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

நாட்டில் படிப்படியாக வளர்ந்துவரும் தேசிய நல்லிணக்கத்தை குழப்பும் நோக்கத்துடனேயே கடும் போக்குவாதிகள் இத்தாக்குதலை மேற்கொண்டதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது போன்று குழப்பவாதிகளுக்கும், கடும்போக்குவாதிகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகவே நோக்க வேண்டும். நாட்டில் நல்லிணக்கம் நிலைபெற்றால் தான் உலகளாவிய ரீதியில் இலங்கையின் நற்பெயரை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.


Add new comment

Or log in with...