நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப ஏற்றப்பட்ட அணையாத விளக்கு | தினகரன்

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப ஏற்றப்பட்ட அணையாத விளக்கு

அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையினூடாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்கை அணைய விடாமல் மேலும் பல விளக்குகளை ஏற்றுவதற்கான முயற்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியிருக்கின்றார். வருடத்திற்கு ஒரு தடவை தீபாவளி தினத்தன்று ஏற்றப்படும் தீப ஒளி போன்று நாடு முழுவதிலும் அணையாத விளக்குகளை பிரகாசிக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார்.

கொழும்பு மாநகர சபையினூடாக 39 இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்ற போது உரையாற்றிய பிரதமர், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் நாட்டு மக்களனைவரும் அதில் ஒன்றிணைய முன்வர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் இரவுபகல் பாராது பல்வேறுபட்ட முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. அரசின் இந்த முயற்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெகிழ்வுப் போக்கு பலம் சேர்ப்பதாக அமைந்திருப்பதையும் அதன் காரணமாக சகல கட்சிகளும் சாதகமான சமிக்​ைஞயை வெளிப்படுத்தி இருப்பதையும் காண முடிகிறது.

நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால் அரசியல் முரண்பாடுகளை புறமொதுக்கி ஒன்றுபட்டுச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டுமென்ற பகிரங்க அழைப்பை பிரதமர் விடுத்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும். முப்பது வருட கால யுத்தம் காரணமாக பௌத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் அழிவடைந்தன. இவ்வாறானதொரு துயர்நிகழ்வுகள் இனியொரு போதும் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. அதன் பொருட்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். இன நல்லிணக்கமும், மத நல்லிணக்கமும் நாடு முழுவதிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

என்றாலும் கூட நாட்டில் மேலும் சில சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தேயாக வேண்டியுள்ளது. மழை விட்டாலும் தூவானம் குறையவில்லை. கடந்த கால மனக்கசப்புகளை முழுமையாக மறந்து விடும் நிலையில் நாட்டு மக்கள் காணப்படவில்லை. ஆனால் இந்த நிலை தொடரக் கூடாது. தொடர்வதற்கு இடமளிக்கவும் கூடாது.

இன ஒற்றுமையும், மத ஒற்றுமையும் வளர்க்கப்பட வேண்டும். இதில் சகல மதத் தலைவர்களும் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும். மதங்களின் போதனைகள் முரண்பாடானவையல்ல. எந்தவொரு மதமும் வேற்றுமையை, முரண்பாடுகளைப் போதிக்கவில்லை. அன்பு, கருணை, சமத்துவத்தையே போதித்து நிற்கின்றன. மனித நேயமே சகல மதங்களினதும் தாரக மந்திரமாகக் காணப்படுகின்றன.

மனிதாபிமானம் அல்லது மானுட நேயம் என்ற இந்த தாரக மந்திரம் மேலெழுந்து நிற்குமானால் அதனை வலுவாக இறுகப் பற்றிக் கொள்ள முடிந்தால் அரசும் நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சுலபமாகி விடும். ஒரே நாடு என்ற கொள்கை எல்லோர் மனங்களிலும் நிலைத்து விடும் போது தேசிய நல்லிணக்கம் மலர்வதோடு இருண்ட யுகம் மாறி முழு நாட்டிலும் ஒளி பரவ முடியும். இதுதான் இன்றைய தேவைப்பாடாகவும் உள்ளது.

அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்து கிடப்பது நல்லிணக்க முயற்சிகளுக்கு பெரும் தடையாக இருப்பதை கடந்த காலங்களில் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் முன்னெடுக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களின் போது இவ்விவகாரமே பூதாகரமாகக் காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வழிகள் கண்டறியப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டே அரசு வழி நடத்தல் குழுவை அமைத்தது. இதன்போது சகல கட்சிகளும் தத்தமது கட்சிக் கொள்கையின் அடிப்படையில் யோசனைகளை முன்வைத்தன. அந்த ஆலோசனைகளை உள்வாங்கியே இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது அடுத்த கட்டத்துக்கான நகர்வை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு போதியகால அவகாசம் தேவை. ஒரு விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. அந்த விளக்கு அணைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதோடு அதனூடாக நாடு முழுவதிலும் ஒளி பரவக் கூடிய விதத்தில் விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்ற பிரதமரின் சிந்தனையை நாமனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தையும், எமது எதிர்கால சந்ததியினரின் நலன்களையும் நினைவிலிருத்தி தேசத்தை ஒரே திசையில் பயணிக்கக் கூடிய விதத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். இனம், மதம், மொழி என்ற நிலைகளுக்கப்பால் ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற சிந்தனை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரது உள்ளத்திலும் பிரகாசிக்க வேண்டும்.

எமக்கிடையே எல்லைக்கோடுகள் இருக்கக் கூடாது. ஒரே தேசம் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். இதில் உயர்வு, தாழ்வு என்ற பேச்சுக்கு இடமிருக்கக் கூடாது. இந்த விடயத்தில் அரசியல் வேறுபாடுகளோ, குரோதங்களுக்கோ இடமளிக்கப்படக் கூடாது. நாளைய விடியல் முழு தேசத்திலும் தீப ஒளி பரவக்கூடியதாக மலர வேண்டுமென்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...