ரூ. 88 மில். பெறுமதியான கரன்ஸிகளை துபாய்க்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு | தினகரன்

ரூ. 88 மில். பெறுமதியான கரன்ஸிகளை துபாய்க்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு

இலங்கையிலிருந்து சுமார் 88 மில்லியன் உள்நாட்டு, வெளிநாட்டு கரன்ஸி நோட்டுக்களை துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட கணவன், மனைவி நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். பயணப் பொதிகளில் மிகவும் சூட்சுமமாக இவற்றை மறைத்து எடுத்துச் சென்ற போதே சுங்க அதிகாரிகள் இறுதி நேரத்தில் இவர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். வர்த்தக பயணம் நிமித்தம் வெளிநாடு செல்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 7,500 ரூபா கட்டணம் செலுத்தி செல்லக்கூடிய Silk Rout வழியாக இவர்கள் விமானத்தை அடைவதற்காக சென்ற போதே கைதாகியுள்ளனர்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக பயணப்பொதிகளை விமானத்தில் ஏற்றுவதற்காக ஒப்படைக்கும் இடத்தில் பொதிகளை ஒப்படைத்ததன் பின்னரே பொதிகள் சோதனையிடப்பட்டன.

பயணப்பொதிக்குள் 1,000 ரூபா இலங்கை நாணயத்தாள்கள் 44 மில்லியன் ரூபாவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 35,985 யூரோக்கள், 4000 ஓமான் ரியால், 45,000 அமெரிக்க டொலர்கள், 5 இலட்சத்து 99 ஆயிரம் சவூதி ரியால், 72,000 ஐக்கிய அரபு குடியரசின் திர்ஹம், 2,685 பஹ்ரெய்ன் டினார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்குள் சென்றதும் பயணப்பொதிகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிடும் போதும் பயணப் பொதிக்குள்ளிருந்த கரன்ஸி நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது தெரிந்தே இவர்களை அனுப்பியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெருந்தொகைப் பணத்தை பயணப்பொதியில் மறைத்து கொண்டு செல்வதை எவரும் கவனிக்கவில்லை என்பது நம்ப முடியாதுள்ளது என்பதால் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்துக்குள் இவர்களுக்கு உதவி கிடைத்ததா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வருடத்தில் இதுவரை வெளிநாடுகளுக்கு கரன்ஸி நோட்டுக்களை கடத்தும் 8 சம்பவங்கள் சிக்கியுள்ளதுடன் இதனூடாக அரசுக்கு 42 கோடி ரூபா சுங்கத்திணைக்களம் பெற்றுக்கொடுத்துள்ளது என சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். இவற்றில் மிகக்க கூடுதலான தொகையாக 88 மில்லியன் ரூபாவே நேற்று கைப்பற்றப்பட்டதாகவும் சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

கே. அசோக்குமார் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...