பிக் போஸ் 90 ஆம் நாள்: சுஜா - கணேஷ் வெளியேறுவது யார்? சிநேகன் கையில் வரம் | தினகரன்


பிக் போஸ் 90 ஆம் நாள்: சுஜா - கணேஷ் வெளியேறுவது யார்? சிநேகன் கையில் வரம்

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

இந்த வாரம் முழுக்கவே கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸில் கமல் வரும் நாள்.அதிலும் நிகழ்வுக்கான 'பொறுத்திருந்து பார்ப்போம்' ப்ரோமோவில் " பெருகிய ஆசையில்... குறுகிய காலம். நாற்காலி வேட்டையில் போர்க்கால வேகம்... கைகோர்த்த கூட்டணி கடைசி வரை வருமா பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார் ஆண்டவர். ரொம்ப ஓப்பனா சொல்லிட்டமோ என நினைத்தாரோ என்னவோ,  வேறொரு அறிமுக உரை கொடுத்தார்.  சம்பிரதாய வணக்கங்கள் முடிந்து ‘முக்கியமான கட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு’ என்று சொல்லி நிறுத்தியபோது ரைட்டுடா என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். ‘இப்படித்தான் வெற்றியை அணுகவேண்டும் என்று வெற்றியை நோக்கி நகர்பவர்கள் இருக்கிறார்கள், எப்படிவேண்டுமானாலும் வெற்றியை அணுகலாம் என்று விளையாடுபவர்கள் இருக்கிறார்கள். உங்கள் கையில் இருப்பது வாக்குச்சீட்டு’ என்று சொல்லிவிட்டு இதுவரை நாம் போட்ட ஓட்டுகள் போட்டியாளர்களைக காப்பாற்ற பயன்பட்டது, இனி நாம் போடும் ஓட்டுகள்  வெற்றிக்கான ஓட்டுகள் என்பதை நினைவூட்டினார்.  நிகழ்ச்சியையும், தமிழக நிகழ்வுகளையும் கலந்துகட்டி சொல்வதில், கமல் நிச்சயம் பிக் பாஸ் தான்

கமல்

தொடர்ந்து, இந்தவாரம் நடந்த காட்சிகளின் ரீகேப்பை போட்டுக் காட்டினார்கள். க்ரிஸ்பாக எதுவுமே இந்த வாரம் நடக்கவில்லை என்பது அந்த ரீகேப்பைப் பார்த்தாலே தெரிந்தது. அடுத்ததாக வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்களை போட்டுக் காட்டினார் கமல். 

**

காலை 9 மணிக்கு ‘வேக்கப்’ பாடலை ஒலிக்கவிட்டார்கள். ஜில்லா படத்தில் இருந்து ‘ஜிங்கினமணி ஜிங்கினமணி’ பாடல் ஒலித்தது.  நேற்றைய முட்டை டாஸ்க் இன்னும் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஒரு கையில் அதைப் பிடித்தபடி பொண்ணோ பூவோ என்று மெதுவாக டான்ஸ் ஆடினார்கள் போட்டியாளர்கள். சுஜா, ஹரீஷ் ஆடியது மட்டும் கொஞ்சம் க்யூட்டாக ரசிக்கும்படி இருந்தது. 

சுஜா

 

முந்தையநாள் இரவில் யார் முட்டையாச்சும் உடைச்சு விடலாமா என்று சுஜா தனியாக பேசிக்கொண்டிருந்தார். ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என்று நினைத்தால் உண்மையிலேயே அந்த எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார் என்பதைக் காலங்காத்தலேயே காட்டினார். ஹரீஷிடம் சென்று யார் முட்டையையாவது உடைத்துவிட்டால் அவங்க டிஸ்குவாலிஃபை தானே அவங்க பதிலுக்கு என் முட்டைய உடைக்க முடியாதுல என்று டவுட் கேட்டார். ஒரு வேகத்துல பதிலுக்கு இவருடைய முட்டையை உடைத்துவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் அவருக்கு. எதிர்வினை என்ன வரும் என்று யோசிக்காமல் அட்டாக் பண்ணக்கூடாது என்று நினைக்கிறார். ‘சொல்லிட்டு உடைங்க’ என்று பொறுப்பான அட்வைஸ் வழங்கினார் ஹரீஷ். ஏங்க சொன்னா உடைக்கவிடுவாங்களா என்ன?. பிறகு பாத்ரூமில் இருந்த சிநேகனிடம் போய் இதே கேள்வியைக் கேட்டார்.  உடைக்குறதுனா பொசுக்குனு உடைச்சுவிட்றவேண்டியதுதான அப்போசிட் டீம்லயா போய் அட்வைஸ் கேக்குறது? அவர் முட்டையை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி தனது தோழர்களை அலர்ட் ஆக்கினார். 

‘நேத்து நைட்டு இவிய்ங்க கழுத்துல முட்டைய மாட்டிவிட்டோம் இன்னும் எவன் முட்டையும் உடையக்காணோம்… இந்த புள்ள சுஜா வேற எல்லார் முட்டையும் குறுகுறுன்னு பாக்குதே தவிர எவன் முட்டையையும் உடைக்க மாட்டேங்குது.. என்ன தப்பா இருக்கு?’ என்று பிக்பாஸ் டீம்  முந்திரி பக்கோடா சகிதம் மீட்டிங் போட்டு பேசியிருப்பார்கள் போல.  மதியம் ஒரு மணிக்கு புதிய விதிமுறை ஒன்றை அறிவித்தார்கள். அதன்படி, இனி முட்டையையோ முட்டையைத் தாங்கும் தொட்டிலையோ கைகளால் பிடிக்கக் கூடாது. ‘தெளிவு நாயகி’ பிந்து முட்டைக்கு தலைகாணியில் முட்டுக் கொடுத்திருந்தார். அவர் தலையில் கொட்டு வைத்து தலைகாணியை எடுக்கச் சொன்னார் பிக்பாஸ். தரையில் அமர்ந்திருந்த ஆரவ் எழுந்திருக்கவே சிரமப்பட்டார். ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடியது செம டைமிங். ஆனால் அது கரகம் இல்லை ஆரவ், உங்களைப் பிடித்திருக்கும் கிரகம்.

ஒரு கையில் முட்டையைப் பிடித்திருந்தபோதே மெதுவாக நடந்தார்கள், இப்போது பிடிக்கவும் கூடாது என்று சொன்ன பிறகு நிறைமாத கர்ப்பிணி போல ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்துவைத்தார்கள். ‘அய்யோ ஆறு ஆஃபாயில் ஆச்சே’ என்று புலம்பினார் சிநேகன். (அதேதான் அந்த டெய்லரும் சொன்னான்). ‘உங்க அம்மாகூட இப்படி பார்த்துக்கிட மாட்டாங்க.. நான் உன்னை எப்படி கண்ணும் கருத்துமா பாத்துக்குறேன் பாத்தியா’ என்று ஆரவ் முட்டையுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் முட்டை ட்ரெயில் இருந்து வெளிநடப்பு செய்து உருளத் தொடங்கியது. பிந்துவின் முட்டையும் ஸ்டாண்டில் இருந்து வெளியில் தான் இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் தன் முதுகு வலியைப் பொறுக்க முடியாமல் முட்டையை கழட்டிவைத்துவிட்டார். 

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கெஸ்டான அந்த பழைய டெலிஃபோனில் இன்றைய நாளின் முதல் அழைப்பு. போனுக்கு அருகிலேயே சேர் போட்டு அமர்ந்திருந்த சிநேகன் எடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்,  ஒரு பாடல் ஒலிபரப்புவார்கள், ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடன் சேர்ந்து அந்த பாடலுக்கு ஏற்றார்போல நடனம் ஆடவேண்டும். ம்க்கும் காலையில் ஒலிக்கும் திருப்பள்ளி எழுச்சிப் பாட்டுக்கே தன் பாட்டுக்கு ஆடுவார் சிநேகன். இப்போது கங்காரு குட்டி மாதிரி முட்டையைச் சுமந்துகொண்டிருக்கும்போது பொருத்தமாக ஆடவேண்டுமாம். ‘நான் முட்டையோட காய்கறியே வெட்டிட்டேன்.. நான் ஆடமாட்டேனா?’ என்று முதலில் அட்டெண்டன்ஸ் போட்டார் கணேஷ். சுஜாவும், ஹரீஷூம் தாங்களும் ரெடியாக இருப்பதாகச் சொல்ல.. சிநேகன் ஹரீஷைத் தேர்ந்தெடுத்தார்.

சிநேகன்

குலுங்கி குலுங்கி ஆடவைத்தால்தான் யார் முட்டையாவது உடையும் என்று யோசித்து சுப்ரமணியபுரம் படத்திலிருந்து ‘மதுர குலுங்க குலுங்க’ பாடல் போட்டார்கள். அதற்கு சிநேகனும், ஹரீஷூம் ஆடியது ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ பாடலில் நாகேஷூம் நம்பியாரும் ஆடுவது போலவே இருந்தது. ஆனாலும் இந்த மூவ்மெண்டுக்கே சிநேகனின் முட்டை எகிறிக்குதித்து தன்னை மாய்த்துக் கொண்டது. அனைவர் கழுத்தில் மாட்டி இருந்த முட்டைகளை உடைக்க, சுஜாவை விட பிக்பாஸ் தான் ஆர்வமாக இருந்து இருப்பார் போல.

அடுத்த அழைப்பை சுஜா எடுத்தார். அவருக்கான டாஸ்க்கை சொல்வதற்கு முன்பாகவே கணேஷ், ‘Buddy  நான் ரெடி’ என்று ஆஜர் ஆனார்.(அட, இருப்பா) அவருக்கான டாஸ்க் ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடன் யோகாசணம் செய்யவேண்டும்.  இந்த டாஸ்க் பெரிய ரிஸ்க் என்பதால் அவசரப்பட்டு ஒத்துக்கிட்டமோ என்று நினைத்த கணேஷ், ‘நான் இப்போதான் சாப்பிட்டேன் உடன் யோகா பண்றது கொஞ்சம் கஷ்டம்’ என்று ஜகா வாங்கினார். ஹரீஷூம் இதே காரணத்தைச் சொல்லி பின்வாங்க சிநேகன் தான் செய்வதாக ஒத்துக் கொண்டார். ஆனால் முட்டையோடு இருப்பவர் மட்டுமே இந்த டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியும் என்று பிக்பாஸ் முட்டுக்கட்டை போட்டார். இதற்கிடையில் ஆரவ் எழுந்திரிக்க முயல அவருடைய முட்டையும் கீழே விழுந்து உடைந்தது. சுஜா கணேசை மீண்டும் கன்வின்ஸ் செய்து தோற்றார். சரியான நேரத்தில் கணேஷ் இப்படி காலைவாறிவிடுவார் என்று துளியும் நினைத்திருக்கமாட்டார் சுஜா. அந்த ஆற்றாமை அவர் முகத்தில் தெரிந்தது. பிந்துவுடன் சேர்ந்து இந்த டாஸ்க்கை செய்வதாகச் சொன்னார். ஆனால் பிந்துவும் தான் முட்டையில்லாமல் இருந்தார். அவர் மட்டும் எப்படி இதில் கலந்துகொள்ளமுடியும். ஹரி படங்களில்கூட லாஜிக்கை எதிர்பார்க்கலாம் போல பிக்பாஸில் ம்ஹூம்..!

பிந்துவும் சுஜாவும் சேர்ந்து யோகாசணங்களில் ஈடுபட்டார்கள். முட்டையைக் காப்பற்ற அடிப் பிரதட்சணம் செய்துகொண்டிருந்த சுஜாவை இப்போது அங்கப் பிரதட்சணமே செய்யச் சொல்கிறார் பிக்பாஸ். பிறகென்ன நடந்திருக்கும் அதேதான், முட்டை டமாலு… பாயிண்டு பணாலு..! ஆனாலும் யோகா டாஸ்க்கை முடிக்க நினைத்து மூன்று ஆசனங்களையும் செய்தார்கள். ஒரு டவுட்டு நிஜமாவே இதெல்லாம் ஆசனங்கள்தானா? எனக்கென்னவோ Wedding Photography க்கு போஸ் கொடுப்பதுபோலவே இருந்தது.

மீதம் இருப்பது கணேஷூம் ஹரீஷூம், சிநேகனை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ் அவர்களையும் யோகாசணம் செய்யச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார். சந்திரமுகி படத்தில் பிரபுவின் காபியைத் தட்டிவிட ரஜினி ‘செந்தில்ல்ல்ல்ல்’ என்று பாய்ந்து வருவாரே… அந்த போஸில் நிற்கவேண்டும். ஒற்றைக்காலில் ரொம்ப நேரம் நிற்கமுடியாமல் இருவரும் தள்ளாட, கணேஷின் முட்டை முதலில் விழுந்து உடைந்தது. ஹரீஷ் இந்த முட்டை டாஸ்க்கில் வெற்றி பெற்றவரானார்.

**

தொடர்ந்தது விளம்பரதாரர் பகுதி. சிப்ஸ்களைக் கொடுத்து கொரிக்கச் சொன்னார்கள். ஆபிஸ்ல வச்சு சிப்ஸ் பாக்கெட்டை பிரிச்சாலே அந்த சத்தம்கேட்டு எட்டு டெஸ்க்குக்கு அந்தப் பக்கம் இருக்குறவன்லாம் எட்டிப்பார்ப்பான். இதுல மைக் பக்கத்துல சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு சாப்பிட இரண்டு நிமிடத்திற்கு சிப்ஸ் பாக்கெட் கசங்குற சத்தம் தான் வந்தது. இரவு 7 மணிக்கு இன்றைய நாளின் டெய்லி டாஸ்க்கை அறிவித்தார்கள். ‘யார் நடிகரல்ல’ என்பது டாஸ்க்கின் பெயர். நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சில போலியான மனிதர்களைப் போல நடித்துக்காட்டவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டர் கொடுத்திருந்தார்கள். 

கமல்

பிந்துவுக்கு கொடுக்கப்பட்டது ‘எப்போதும் சன்கிளாஸ் போட்டுக் கொண்டு திரிபவர்’. சமைக்கும்போதும் சன்கிளாஸ் போட்டுக்கொண்டே வெஜிடபிளுக்கும் விரலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வெட்டிக்கொள்வதுபோல நடித்துக்காட்டிய விதம் அருமை. புரொபஷனல் ஆக்டர் அல்லவா பின்னி எடுத்தார். சுஜாவுக்கு ‘நன்றாக உடையணிந்துகொள்ள நினைப்பவர்’ கேரக்டர். சிறப்பாக சொல்லும்படி எதுவும் இல்லை. ஆரவுக்கு ‘அர்த்தம் புரியாவிட்டாலும் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்’ கதாபாத்திரம். கணேஷூக்கு ‘எப்போதும் உதட்டைக் குவித்துக் கொண்டு போஸ் கொடுப்பவர்’ கதாபாத்திரம். ஓவியாவை சக்தி அடிக்கக் கை ஓங்கியது, கஞ்சா கருப்பு பரணியை அடிக்கப்போனது என பிக்பாஸில் நடந்த சம்பவங்களை வைத்தே தனது ஆக்ட்டை செய்துகாட்டினார். கேண்டிட் ஷாட் என்று சொல்லி ஒவ்வொரு பொசிசனாக நின்று போஸ் கொடுத்தது ரசிக்கும்படி இருந்தது. ஹரீஷூக்கு ‘தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்பவர்’ ரோல். நேத்து நான் ‘Steam rice cake with coconut candy sauce’ சாப்டு இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட்டேன் என்று சொல்ல, ஆரவ் ‘மச்சான் அது இட்லி சாம்பார்டா’ என்று கலாய்த்தது அருமை.  சிநேகன் ‘வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்’ காதாபாத்திரத்தை நடித்துக் காண்பித்தார். நியூயார்க்கின் பெருமைகளை அவர் சொல்லிக் கொண்டிருக்க, அவர் டீசர்ட்டில் இருப்பது அமெரிக்கா கொடியா என கலாய்த்தார் பிந்துமாதவி. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த டாஸ்க்தான் ரசித்து சிரிக்கும்படி கலகலப்பாக இருந்தது. 

பிந்து மாதவி

இப்போது எல்லாவற்றிற்கும் வடிவேலு வெர்சன் யோசிப்பதுதானே ட்ரெண்டு. இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் செய்து காட்டிய கேரக்டர்களின் வடிவேலு வெர்சன் யோசித்துப் பார்த்தேன். 

பிந்து - கூலிங் க்ளாஸ் போடலைனா ரெண்டு கண்ணும் அவிஞ்சுடும் போல

சுஜா - இந்த மாதிரி கலர் சட்டைல போடுறதுக்கு ஒரு தகுதி வேணும்டா

ஆரவ் - சிங் இன் தி ரெயின்

கணேஷ் - இரும்மா ஒரு பொசிசன்ல நின்னுக்குறேன்

ஹரீஷ் - ஆஃப்ட்ரால ட்வண்டி க்ரோர்ஸ் லாஸ்மா

சிநேகன் - துபாய்ல நாம இருந்த இருப்புக்கு

**

இந்த டாஸ்க்கின் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் யார் யார் எவ்வளவு போலியாக நடந்துகொள்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் பிறருக்கு ரேட்டிங் கொடுக்கவேண்டும். சொல்லிவைத்தார்போல எல்லாருமே சுஜாவை ஃபேக் என்று குறிப்பிட்டார்கள். கணேஷ் சிநேகனை நல்ல லிசனர் இல்லை என்று குறிப்பிட்டார். மற்றவர்களெல்லாம் ஃபேக் ரேட்டிங் 9, 10 என கொடுக்க… பிந்து மாதவி, ஃபேக் என நினைக்கும் சுஜாவுக்கும் கணேஷூக்கும் ஃபேக் ரேட்டிங்கில் 2 தான் கொடுக்கிறார் அவ்வளவு நல்ல மனசு. எல்லாருடைய குட் புக்கிலும் இடம்பிடித்த ஹரீஷ், ‘பிக்பாஸ் வீட்டில் அசலான நபர்’ என்ற பட்டம் பெற்றார். சூப்பர் ஹரீஷ். 

ஆரவ்

**

இனி கமல் ஹவுஸ் மேட்ஸை சந்திக்கும் வைபவம். “நான் ஏன் வெல்ல வேண்டும்?” என்ற தலைப்பில் போட்டியாளர்களை பேசச் சொன்னார் கமல். சுஜா தான் உண்மையாக இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய வாழ்க்கை போராட்டமானது என்றார். கேரியரில் வெற்றியே பெற்றதில்லை இதிலாவது வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பதாகச் சொன்னார். சிநேகன் அரசியல் தலைவர்களைப் போல் உடையணிந்திருந்ததாலோ என்னவோ “வாக்காளப் பெருமக்களே” என்று தொடங்கி அரசியல் பிரச்சார தொனியிலேயே பேசிக்கொண்டிருந்தார். தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றால் அந்த பணத்தில் 100 கிராமங்களுக்கு ‘பிக்பாஸ்’ நூலகம் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தார். மக்களின் ஓட்டுகளைப் பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், மக்களைக் கவர்வதற்காகத்தான் இப்படியான வாக்குறுதிகளை அளிக்கிறார் என்றால், அவர் யுக்தி சரிதான். இதுவரை அரசியல்களத்தில் ஜெயித்தவர்கள் எல்லாம் இப்படி வாக்குறுதிகளைக் கொடுத்துதானே ஜெயித்தார்கள்.  இந்த சந்தர்பத்தை கமலும் பயன்படுத்திக் கொண்டார், ‘எனக்கும் சில கனவுகள் இருக்கிறது. பணக்காரர்களும் கிராமத்தில் வாழும் அளவிற்கு கிராமங்களை வளர்த்தெடுக்கணும். இனி அன்னாடங்காட்சி மட்டும்தான் சிட்டிக்குள்ள இருக்கணும். சந்தர்பத்தை பயன்படுத்திக்கணும். வேறு ஒரு நடிகருக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இந்த மேடை இது எனக்குக் கிடைச்சிருக்கு இதை எப்படி பயன்படுத்தணும்னு யோசிச்சிருக்கேன். பயன்படுத்தி இருக்கேன்’ என்று தன் பங்கு பிரச்சாரத்தை நிகழ்த்தினார்.  கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்காக தான் ஒரு பாடல் எழுதியிருப்பதாகச் சொன்னார் கவிஞர் சிநேகன். (அட ஆமா இவரு பாடலாசிரியர்ல… மறந்தே போச்சுங்க). பிறகு வாசித்தும் காண்பித்தார். 

சிநேகன்

கணேஷ் தன் உரையை சுருக்கமாக முடித்துக்கொள்ள, ஹரீஷ் பேச எழுந்தபோது, அரங்கத்தில் அவ்வளவு க்ளாப்ஸ். இன்றுதான் அசலான நபர் என்ற பட்டம் பெற்றிருக்கும்நிலையில் இந்த கைதட்டல்களைப் பார்க்கும்போது ஒன்று புரிகிறது. மக்களுக்கு ஒரிஜினலாக இருப்பவர்களைத்தான் மிகவும் பிடிக்கிறது. முன்பு ஓவியா இப்போது ஹரீஷ். சென்ற வாரம் கமல் உள்ளே வந்தபோது அந்த நிகழ்வை எஞ்சாய் பண்ண முடியாததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வெளில வந்ததும் உங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கணும் என்று ஹரீஷ் சொன்னதும், “எல்லா ஆம்பளைங்களும் இந்த ஆசைப் படாதீங்க” என்று கமல் குறும்பாக கலாய்த்தார். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்ப மூடியா இருக்கீங்களே இப்படி இருந்தா மக்கள் எப்படி ஓட்டுப் போடுவாங்க என்றார் கமல். ஆனால், மக்களின் கைத்தட்டல், ஹரிஷுக்கு புது உத்வேகத்தைக் கொடுத்து இருக்கும் என்றே தோன்றியது

பிந்துவை சுந்தரத்தமிழில் பேசச்சொல்லி அழைக்க அவர், ‘மக்களே மக்களின் மக்களே’ என்றபோது  இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே!. யார் நல்லவரோ அவருக்கு வாக்களியுங்கள் என்று பிந்துசொல்ல இதுவே ஒரு ஸ்ட்ரேட்டஜியா என்று அவரையும் கலாய்த்தார் கமல். 

கணேஷ்

ஹவுஸ்மேட்ஸ் இதுவரை பெற்ற மதிப்பெண்களை வாசித்துக்காட்டினார் சிநேகன். சுஜா - 63, சிநேகன் - 53, கணேஷ் - 52, பிந்து - 45, ஹரீஷ் - 40, ஆரவ் - 37 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்கள்.

**

கமல், ‘இவர்கள் ஏன் ஜெயிக்கக்கூடாது? அவர்களுக்கு என்ன தகுதி இல்லை?’ என்று டாபிக் கொடுத்து அனைவரையும் பேசச் சொன்னார்.  ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி அடுத்தவரின் குறைகளைப் பட்டியலிட்டார்கள். ஆரவ், சுஜா உண்மையாக இல்லை என்று சொன்னபோது அரங்கத்தில் கைதட்டல். எல்லாருடைய குறைகளையும் சொல்லிக் கொண்டே வந்த பிந்து ஆரவ் பற்றி என்ன சொல்வது என்று யோசிக்க, ‘அப்போ ஆரவ்வையே ஜெயிக்க வைக்கலாமா?’ என்று கமல் கேட்டபோது, ஐய்யயோ நாந்தான் ஜெயிக்கணும் என்று சொன்னார். பிறகு ஒன்றும் தோன்றாததால் “தாடியை எடுத்தப்பறம் கேவலமா இருக்காரு..!” என்றார். கமல், உட்பட அனைவரையும் சிரிக்க வைத்தது பிந்துமாதவியின் பேச்சு. ஹரீஷ், ஆரவ்விடம் விளையாட்டுத்தனம் ஜாஸ்தி இருப்பதாக சொல்ல, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று கமல் எடுத்துக் கொடுத்தார்.  ‘சிம்பதிக்காக கிராமத்தை பத்திப் பேசி ஓட்டுவாங்கப் பாக்குறாரு’ என்று கவிஞரைக் கவிழ்த்துவிட்டார்.(அதற்கும் அதிக கைத்தட்டல்). இதற்கு சிநேகன் சிரித்தாலும் உள்ளுக்குள் ‘பெர்பாமன்ஸ் பண்ண விடுடா’ என்று நினைத்திருப்பார். 

பிந்து மாதவி, சுஜா

அடுத்து சிநேகனின் முறை. ’சுஜா சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். சந்தர்பவாதிகள் தலைமை ஏற்கக் கூடாது.. கணேஷூக்கு மக்களுக்கு ஒரு விஷயத்தை விளக்கும் தன்மை இல்லை… ஒரு தலைவன் அப்படி இருக்கமுடியாது.’ என்று அடுக்கிக்கொண்டே போக.. ‘நீங்க தலைமைப் பொறுப்பு தலைமை பொறுப்புனு சொல்றது பிக்பாஸ்லனு சொல்லிடுங்க இல்லைனா தப்பா நினைச்சுக்கப் போறாங்க’ என்று கமல் தன் வழக்கமான நக்கலை சேர்த்தார். அடுத்து சிநேகன் உதிர்த்த கருத்துதான் மெர்சலாக்கியது. பிக்பாஸ்ல வர்றவங்களுக்கு தலைவரா பிராகாசிக்குறதுக்கு சான்ஸ் இருக்கு என்றார் சிநேகன். தலைமைக்கான ட்ரெயினைங் இங்கு கொடுக்கப்பட்டதாக சொன்னார். எது மைதாவைப் பூசிக்கிட்டு சுத்துனது, கிழிஞ்ச பனியனைப் போட்டு சுத்துனதெல்லாமா? பிக்பாஸில் ஜெயிப்பதற்கும் தலைமைப் பண்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஒருவேளை ஓவியா உள்ளேயே இருந்திருந்தால் ஓவியாவை மக்கள் வெற்றிபெற வைத்திருப்பார்கள். இதைப் போட்டியாளர்களிலேயே பலர் ஒத்துக் கொண்டார்கள். அதற்கான காரணம் அவர் பழகுபவர்களிடம் உண்மையாக இருந்தார் என்பதாகவே இருந்திருக்கும். இதை மட்டுமே தலைமைப் பண்பு என்று சொல்லிவிட முடியுமா? ஆக மக்கள் பிக்பாஸ் வெற்றியாளரைத் தலைமைப் பண்பை பார்த்து முடிவு செய்வார்கள் என்று நினைப்பதே சரியல்ல… அதிலும் நீங்கள் பிக்பாஸில் ஜெயிப்பவர் அரசியல் தலைவராகவும் வர முடியும் என்கிற அளவிற்கு நினைப்பதெல்லாம்.. புண்ணாக்கு விக்குறவன் குண்டூசி விக்குறவன்லாம் தொழிலதிபராம் என்ற கவுண்டமணியின் வசனத்தைதான் நினைவூட்டுகிறது.

**

அடுத்ததாக ரேபிட் ஃபயர் ரவுண்டுக்குச் சென்றார் கமல். கமல் சொல்லும் வார்த்தைகளுக்கு உரிய நபரைச் சொல்ல வேண்டும்.  ‘ஆர்வக் கோளாறு’ ஆரவ், ‘சோக சுந்தரன்’ சிநேகன், ‘சோம்பேறி’ பிந்து, ‘சுயநலவாதி’ கணேஷ் என்று ஆளுக்கொரு பட்டம் பெற்றுக்கொண்டிருந்தார்கள். சுஜா சிநேகனை அழுமூஞ்சி என்று சொன்னபோது, ‘வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி’ என்று கலாய்த்தார் கமல். ‘ஜெயிக்க என்ன வேணா பண்றவங்க யார்?’ என்று ஹரீஷைக் கேட்டபோது அவர் சுஜாவை கைகாட்டினார். ஆரவ், ஹரீஷ் இருவரில் யார் ஹேண்ட்ஸம் என்று தேர்ந்தெடுக்கும் கஷ்டமான வேலை பிந்துவுக்கு, அவர் ஆரவ்வை தேர்ந்தெடுத்தார். (ஏற்கெனவே அவர்மேல ஆம்பளைப் பசங்கள்லாம் காண்டுல இருக்காய்ங்க இதுல நீங்க வேற).  

பிக் பாஸ் தமிழ்

 

சிநேகன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வாகிவிட்டபடியால் அவர் டாஸ்க் மூலம் பெற்ற பாயின்ட்கள் அவருக்கு உபயோகப்படாது என்பதை கமல் கூற, ‘வேற யாருக்காவது என் பாயின்ட்ஸை கொடுத்து உதவமுடியும்னா தந்துடுறேன்’ என்று பெருந்தன்மையாக முன்வந்தார் சிநேகன். யாருக்கு தேவையோ அவருக்குக் கொடுக்கலாம், இந்த வார எவிக்சனில் மக்களிடம் குறைவான  ஓட்டுக்களைப் பெற்றவர்கள் சுஜாவும், கணேஷூம் இவர்கள் இருவரில் யாருக்காவது உங்கள் பாயின்ட்ஸைக் கைமாற்றிவிடுங்கள் என்று கூறினார் கமல். சிநேகனும் இந்த பாயிண்ட்களை சும்மா பெற்றுவிடவில்லை. இரண்டு பகல் ஓரிரவு முழித்திருந்து, பாயில் படுத்து என பல தவம் இருந்து சிநேகன் பெற்ற வரம் அவை.  அதனால் நன்கு ஆலோசித்து நாளைக்கு முடிவைச் சொல்லுங்கள் என்று கூறிவிடைபெற்றார் கமல்.

**

சிநேகன் கமல் எடுக்கப்போகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்காக தான் எழுதியதாகச் சொன்ன ‘வாடா தோழா வாடா’ கவிதையில் இப்படி ஒரு வரி எழுதியிருந்தார். 

‘என்றோ தொடங்கிய சத்தியசோதனை இன்றும் தொடருது புரிகிறதா’. 

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சத்திய சோதனை யாருக்கு கவிஞரே.. போட்டியாளர்களுக்கா.. கமலுக்கா.. இல்லை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கா?  

பிக் பாஸ் நிகழ்ச்சி தன் 90வது நாளையும் கடந்துவிட்டத்உ. இருக்கும் ஆறு போட்டியாளர்களில், யார் சோம்பேறி, அழகு, சுயநலவாதி போன்ற கேள்விகளை வைத்து ரேபிட் ஃபயர் ரவுண்ட் விளையாடினார் கமல். உங்களைப் பொறுத்தவரையில், யாருக்கு என்ன பட்டம் கொடுப்பீர்கள்?. உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

- தி. விக்னேஷ்


Add new comment

Or log in with...