பிக் போஸ் 89 ஆம் நாள்: கிளிப் மாட்டிக்கிட்டு, போன் அருகில் யோகா? | தினகரன்


பிக் போஸ் 89 ஆம் நாள்: கிளிப் மாட்டிக்கிட்டு, போன் அருகில் யோகா?

Part 01

Part 02


Part 03


Part 04


Part 05

இன்றைக்கு ’வேக்கப் சாங்’ ஒன்பது மணிக்குதான் ஒலித்தது. ’ரோமியோ ஜூலியட்’ படத்திலிருந்து ‘அடியே அடியே இவளே..’ என்ற பாடலை ஒலிக்கவிட்டார்கள். வழக்கம்போல சுஜாவும் கணேஷூம் கூட்டணி போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டார்கள். நேற்றைய டாஸ்கிற்கு தண்டனையாக ஹரீஷ், ஆரவ் மற்றும் பிந்துவின் கால்கள் ஒன்றாக கட்டப்பட்டிருந்ததால் மூவரும் சேர்ந்தே ஆடினார்கள். கால்கள் கட்டியிருந்தாலும்கூட ஆரவ்வும் பிந்துவும் கொஞ்சமாவது ஃபோர்ஸாக ஆடினார்கள். ஆனால் பாவம் ஹரீஷ்... என்ன சார் அது டான்ஸா? (சரோஜா குப்பை கொட்டுறியா.. கொட்டு கொட்டு..). இது எதிலும் ஒட்டாமல் ’காதல் கொண்டேன்’ தனுஷ் ஸ்டெப்களைப் போட்டுக்கொண்டிருந்தார் சிநேகன். 

சுஜா , கணேஷ்


**
நேற்றைய டாஸ்க்கில் ஹரீஷ், ஆரவ், பிந்து அணி 6 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்கள் அதை ஆளுக்கு 2 ஆக பிரித்துக் கொண்டார்கள். ’நாங்க எடுத்த பாயிண்ட்ஸெல்லாம் வெளில சொல்லாதீங்க பிக்பாஸ் கேவலமா இருக்கும்’ என்று பிக்பாஸூக்கு வேண்டுகோள் வைத்தார் பிந்து. (மார்க் மட்டும்தானுங்களா?). சரி விடிஞ்சிருச்சு அவிய்ங்களுக்கும் காலைல பல சோலி இருக்கும் என்று இரக்கப்பட்ட பிக்பாஸ் கால்கட்டிலிருந்து விடுதலை கொடுத்து தீர்ப்பளித்தார். 

ஹரிஷ், பிந்து

 

நேரம் மதியம் இரண்டு மணி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது சிநேகன் கோலம் போடுவதைக் காட்டினார்கள். சேவல் கூவும்போதுதான் கோலம் போடுவாங்க... சேவலை அடிச்சு கொழம்பு வச்சு சாப்பிடுற  மத்தியான வேளையில ஏன் இவரு கோலம் போடுறாரு. இறுதி நாளை எட்ட இன்னும் 10 நாள் இருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் 10 என்று வாசலில் எழுதினார். இனி ஒவ்வொரு நாளும் கவுண்டவுன் போல இப்படியே கோலம் போடுவார்கள் போல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் போடலாம் என்று வேற முடிவு செய்தார்கள். பக்கத்துல பிந்து சிகப்புகலர் ட்ரெஸ் செமயாக இருந்தார். தெரியாமதான் கேக்குறேன் 10னு எழுதுறது பெரிய கம்ப சூத்திரமா அதை சிநேகன் தான் போடணுமா? ஏன் பக்கத்துல இருந்த பிந்துகிட்ட கொடுத்து போட சொன்னாதான் என்னவாம். உடனே ‘ஏன் காலம் காலமாக பெண்கள்தான் கோலம் போடவேண்டுமா? ஏய் ஆணாதிக்கவாதியே..!’ என்று  பாயாதீர்கள். கோலம் போடுவது என்ற கவித்துவமான காட்சியில் ரசனை சேர்க்காமல் கவிஞரின் தாடி குத்துதேன்னு சொன்னேன். அதுவுமில்லாமல் வரவர ரொம்பவும் சளிப்பூட்டும் டாஸ்க்குகளாக வந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற சில காட்சிகள்தான் மோட்டிவேசனாக இருக்கும்.

பிந்து மாதவி

 

நமீதாவின் தமிழைப் பற்றியும் அனுயாவை கமல் ’தமிழரசி’ என்று அழைத்ததைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். நமீதாவைப் போல இமிட்டேட் செய்து காட்டிக்கொண்டிருந்தார் சிநேகன். இந்த பிக்பாஸ் வீட்டில் எல்லாருமே ஒருவரைப் போல் ஒருவர் மிகவும் அழகாக இமிட்டேட் செய்கிறார்கள். ஒருவேளை மொபைல் போன், டிவி, புத்தகமெல்லாம் இல்லாமல் இருந்தால் நாமும் சுற்றியிருக்கும் மனிதர்களை, அவர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிப்போமோ? 
**

தொடர் டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் டயர்டாக இருந்ததால் இன்றைக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக விட்டுவிட்டார்கள் போல. இன்றைக்கான முதல் டாஸ்க்கே மாலை 4 மணிக்குதான் ஆரம்பமானது. அதுவும் ஸ்பான்ஸர்ஸ் டாஸ்க். இதற்கு மதிப்பெண்கள் எதுவும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரதான ஸ்பான்ஸரான மொபைல் நிறுவனம் தங்களுடைய மொபைலை ப்ரோமோட் செய்வதற்காக இந்த டாஸ்க்கை நடத்தினார்கள் போல. டாஸ்க்கின் பெயர்  ’கண்டுபிடி ஒட்டிமுடி’. டிவியில் இரண்டு படங்கள் காட்டப்படும். அந்த படங்கள் பல துண்டுகளாக வீட்டில் ஆங்காங்கே ஒளித்துவைக்கப்பட்டிருக்கும். ஹவுஸ்மேட்ஸ் இரு அணியாகப் பிரிந்து அந்தப் படங்களைத் தேடி கண்டுபிடித்து ஒன்று சேர்க்க வேண்டும். நேற்றாவது வெற்றி பெற்றவர்களுக்கு ட்ராஃபி வழங்கினார்கள் இந்த முறை அதுவும் கிடையாது. ஜெயித்தவர்கள் தோற்றவர்களுடன்  செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.. மொபைல் கம்பெனி விளம்பரத்துக்காக பண்றதுனாலும் ஒரு நியாயதர்மம் ?

பிக் பாஸ் தமிழ்

ஆரவ், பிந்து, கணேஷ் ஒரு அணியாகவும், சுஜா, ஹரீஷ், சிநேகன் ஒரு அணியாகவும் பிரிந்து படத்துண்டுகளை தேடும் வேட்டையில் இறங்கினார்கள். ஒரு டீம் கண்டுபிடித்தது இன்னொரு டீமுடைய பாகமாக இருந்தால் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு உதவிக்கொண்டார்கள். நன்றாகப் போய்க்கொண்டிருக்க இரண்டு டீமுக்கும் இரண்டு பாகங்கள் தேவை என்ற நிலையில் வந்து நின்றது. பிந்து மாதவி ஸ்மோக்கிங் ஏரியாவில் தேடியபோது அவருக்கு இரண்டு படத்துண்டுகள் கிடைத்தது. இந்த நேரத்தில் சாதுர்யமாக கேமாடத் தொடங்கினார் பிந்து. தனது அணியினரை மெதுவாக அழைத்து இது நம்மோடதா பாருங்க அப்படி இருந்தா மட்டும் எடுத்துக்கலாம் அவங்களோடதுனா இங்கயே ஒளிச்சு வச்சுடலாம் என்று ஐடியா தர, இல்லை எடுத்துக் கையில வச்சுக்கலாம் கணேஷ் சொல்ல, அவர்கள் வைத்திருப்பது சிநேகன் அணியின் படத்துண்டுகள்தான் என்பதைக் கண்டுபிடித்த சிநேகன் அதை வாங்கிப் பொறுத்த அவருடைய அணி வெற்றி பெற்றது. ஒருவேளை பிந்து அதை ஒளித்து வைத்திருந்தால் பிந்து டீம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ‘நான்தான் நீங்க ஜெயிக்குறதுக்கு ஹெல்ப் பண்ணேன். அடுத்த டாஸ்க்ல எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’ என்று கவிஞரைக் கேட்டுக்கொண்டார் பிந்து. சரி கழுதை பாயிண்ட்தான் இல்லையே யார் ஜெயிச்ச என்ன என்ற மோடிலேயே இருந்தார்கள். 
இவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கான மொபைல் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்தது. ஜெயித்த அணி தோற்ற அணியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த செல்ஃபியில் இருப்பவர்களில்  யார் யார் ஜெயித்தவர்கள் யார் யார் வெற்றியைத் தவறவிட்டவர்கள் என்று எப்படித் தெரியும். என்ன லாஜிக்கோ? 

ஆரவ்வும் சிநேகனும் போனைப் பார்த்ததில் குஷியாகி இருந்தார்கள். உங்க பெயர் போட்ட காபி கப்ல தினம் காபி குடிக்கிறோம். உங்க தலைகாணியெல்லாம் யூஸ் பண்றேன் ஆளுக்கு ஒரு போனாவது கொடுங்க என்று மொபைல் நிறுவனத்திடமே வேண்டுகோள் வைத்தார்கள். பிக்பாஸ் போட்டியாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் விளம்பரம் செய்திருக்கும் நிறுவனங்களிடம் இலவசங்களை எதிர்பார்ப்பார்களானால் ஒரு வீடு மட்டும் கட்டினால் போதும்... வீட்டுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் இலவசமாக வந்துவிடும். சுற்றிச் சுற்றி அவ்வளவு விளம்பரங்கள். அடுத்தடுத்த சீசன்களிலெல்லாம் லாங் ஷாட்களில் வீட்டைக் காட்டும்போது விளம்பரப் பலகைகளுக்கு நடுவே போட்டியாளர்கள் எங்கே என்று தேடிக்கண்டுபிடிப்பதை நமக்கே ஒரு டாஸ்க்காக கொடுப்பார்கள்போல.

கணேஷ்


**
அந்த பழைய டெலிஃபோன் மீண்டும் ஒலித்தது. (இன்னும் அது முடியலையா???) அந்த நேரத்தில் சுஜா மட்டுமே வீட்டிற்குள் இருந்ததால் ஓடிச் சென்று போனை எடுத்தார். இப்படி ஒரு சமாச்சாரம் வீட்டில் இருப்பதையே  மறந்து வெளியில் உலாத்திக்கொண்டிருந்த மற்றவர்கள் சுஜா போனை எடுத்தபிறகுதான் உள்ளேயே எட்டிப்பார்த்தார்கள். சுஜாவுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரது உடலில் 30 கிளிப்களைக் குத்த வேண்டும். இந்த முறை தெளிவாக ‘க்ளிப்பைக் கழட்டலாம் என்ற அறிவிப்பு வரும்வரை கழட்டக்கூடாது..!’ என்று சொன்னார். ஆமா.. இல்லைனா இவங்க அடுத்த போன்காலையே அடுத்த அறிவிப்புனு நினைச்சு டாஸ்க்கை நட்டாத்துல விட்டுடுறாய்ங்க. சுஜா யாரைத் தேர்ந்தெடுப்பார் என நமக்குத் தான் தெரியுமே.. ஆம் கணேஷேதான். 
‘கன்வின்ஸ் பண்ணாங்க ப்ரோ பாத்தீங்கள்ல’ என்று கணேஷை ஓட்டினார் ஆரவ். ஆரவ் இன்று ஏனோ கணேஷ் மீது ஓவர் வெறுப்பைக் கொட்டினார். கணேஷ் கையிலும் காதிலும் க்ளிப்புகளைக் குத்தினார் சுஜா. (முட்டையும் பாலுமா குடிச்சு வளர்த்த உடம்புடா அது இப்படி க்ளிப்பைக் குத்தி காயப்படுத்துறாய்ங்களே..!) ’ஸ்ட்ரேட்டஜி’ கிங்கான கணேஷ் தெளிவாக வேலைகள் செய்வதற்கு ஏதுவாக வலது கையில் மட்டும் குத்திக்கொள்ளவில்லை. க்ளிப்புகள் தாங்கித் திரியும் கணேஷூக்கு சுஜா சாப்பாடு ஊட்டிவிட... ‘கைய அசைச்சா க்ளிப் வந்துடும்ல’ என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நக்கலாக ஆரவ் கேட்க அதற்கும் கணேஷ் சீரியஸாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். 
போனுக்குப் பக்கத்தில் ஒரு பாயைப் போட்டு தியானம் செய்யப்போவதாக அமர்ந்தார் கணேஷ். கணேஷின் கைகளில் குத்தப்பட்டிருக்கும் க்ளிப்பை க்ளோசப்பில் காட்டுகிறார்கள் அதுலயும் எதாச்சும் ப்ராண்ட் பேர் போட்ருக்காய்ங்களா என்று உற்றுப்பார்த்தால் நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை. 


**
அடுத்த போன்கால் வருகிறது.
கணேஷ் அருகில் இருந்ததால் போனை எடுக்கிறார். அவருக்கான டாஸ்க், ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடைய உடல் முழுக்க மைதாவைக் கரைத்துப் பூச வேண்டும். அவர் தேர்ந்தெடுப்பவர் ஆணாயிருந்தால் டீசர்டைக் கழட்டிவிட்டு உடலில் பூச வேண்டும். ’ஹரீஷ் நீங்க பண்றீங்களா?’ என்று எடுத்ததும் ஹரீஷைக் கேட்க, அவர் தன்னால் டீசர்டை எல்லாம் கழட்டமுடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு சுஜா தான் வருவதாக ஒத்துக் கொண்டார். சிநேகன் எனக்கும் பண்ண விருப்பம்தான் ஆனா அவங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க அவங்களே பண்ணட்டும் என்று ஒதுங்கிக் கொண்டார். 

அந்தப் பக்கம் கணேஷூம் சுஜாவும் மைதாவைப் பிசைந்துகொண்டிருக்க, இந்தப் பக்கம் ஆரவ் கணேசைப் பற்றி பொரணி பேசிக்கொண்டிருந்தார். ‘இவரு போன் பக்கத்துலயே உட்கார்ந்துக்கிட்டு எல்லா டாஸ்க்கையும் இவரும் சுஜாவுமே பண்ணிட்டு இருக்காங்க’ என்று கடுப்பு காட்டிய ஆரவ், ‘கேவலமா இருக்கு’ என்று ஆரம்பிக்க... ‘கேணைத்தனமா இருக்கு’ என்று பிந்து தொடர... ஹரிஷும் கோபப்பட்டார். ஆரவ்வும் பிந்துவும் கோபப்படுகிறார்கள் ஓக்கே? ஹரீஷ் ஏன் கோபப்படுகிறார். கணேஷ் இந்த டாஸ்க்கை செய்ய முதலில் அழைத்தது ஹரீஷைத்தான். ஹரீஷ்தான் வேண்டாமென்று மறுத்தார். இப்போ அவங்களா டாஸ்க் பண்ணிக்குறாங்க என்று சொல்வதில் அர்த்தமே இல்லையே...! 

ஹரிஷ், ஆரவ், பிந்து

 


இந்த எல்லாப் பஞ்சாயத்துக்கும் காரணம் கணேஷின் தியானமா என்றால் இல்லை... யாருமே தியானம் செய்வதில் ஒரு பிரச்னையும் இல்லை. தியானம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிற இடம்தான் பிரச்னையை பூதாகரமாக்கிவிடுகிறது. கணேஷ் விஷயத்திலும் அப்படியே... தியானம் செய்வதென்றால் ஒரு ஓரமாக உட்கார்ந்து பண்ணியிருக்கலாம். 

பிக்பாஸ் வீட்டிற்குள் க்ரூப்பிசம் புதிதில்லை. முன்பு மூன்று மூன்று பேர் க்ரூப்பாக இருந்தார்கள். இப்போது கணேஷ் மற்றும் சுஜா ஒரு க்ரூப். ஆரவ், சிநேகன், ஹரீஷ், பிந்து நால்வரும் ஒரு க்ரூப். பிக்பாஸின் அறிவுரைப் படி கார்டன் ஏரியாவில் அமர்ந்து சுஜாவின் உடல் முழுவதும் மைதாவை பூசிக்கொண்டிருந்தார் கணேஷ். உள்ளே ஆரவ் தன் சேட்டையைத் தொடங்கினார். டெலிஃபோனுக்கு அருகில் ஒரு சேரைப் போட்டு, ‘நாம இங்க உக்காந்துக்குவோம்’ என்றார். சிநேகன்.. ‘நான் போன் எடுக்கல நீங்க யார் வேணா எடுங்க.. எதுவும் கஷ்டமான டாஸ்க்குனா சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன்.. ஏன்னா போன் எடுக்குறவங்களை விட அவர் சூஸ் பண்றவருக்குத்தானே ரிஸ்க் ஜாஸ்தி’ என்று பாயிண்டாக பேசினார். பிந்து இதுவரை தான் போன் எடுக்கவே இல்லை என்ற வருத்தத்தை தெரிவித்தார். அப்படியானால் அடுத்த போனை நீங்கள் எடுங்கள் என்று முடிவெடுத்தார்கள்.

சுஜா

சுஜாவுக்கு மைதா மாவு பூசி முடித்திருந்தார் கணேஷ். தயிர்ப் பானை உடைஞ்சு தலையில் கொட்டுன மாதிரியே இருந்தது அவரைப் பார்க்க. இப்படியே இவர் தூங்க வேண்டுமென்றால் அதோகதிதான். கணேஷ் மீண்டும் தன் தியான பீடத்துக்கு வந்து அமர்ந்தார்... ஒரு க்ளிப் சரியாக மாட்டாமல் இருந்ததுபோல ஹரீஷைக் கூப்பிட்டு அவரைச் சரிசெய்ய சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் பிக்பாஸின் குரல் ஒலித்தது. டாஸ்க் முடியும் வரை 30 க்ளிப்கள் உடலில் இருக்க வேண்டும். நடுவில் கழட்டியதால் உங்களுக்கான மதிப்பெண் ரத்துசெய்யப்படுகிறது. சுஜாவுக்கான மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும் என்றார் பிக்பாஸ். 

வாக்குமூல அறைக்கு சென்று வந்த கணேஷ் நேராக சுஜாவிடம் சென்று, ‘என்னாலதான பாயிண்ட்ஸ் காலியாகிடுச்சு. அதனால நீங்க 9 பாயிண்ட் எடுத்துக்குங்க நான் 1 பாயிண்ட் எடுத்துக்குறேன்’ என்ற சொல்ல பிஜிஎம்மில் லாலாலாலா என்று எஸ்.ஏ.ராஜ்குமார் இசை ஒலிப்பதுபோல் புல்லரித்தது. அம்புட்டு நல்லவனாயா நீ? 
**
இன்றைய நாள் சல்லென்று போனதுபோல் இருந்தது. அதற்குள்ளாக 10 மணிக்கு வந்துவிட்டார்கள். ஹவுஸ்மேட்ஸூம் இதை உணர்ந்திருந்தார்கள் போல.. நைட்டு விடிய விடிய முழுச்சிருக்கற மாதிரி ஏதோ டாஸ்க் சொல்லப்போறாங்க போல என்று சிநேகன் சொல்ல அப்படியிருந்தா நான் வரலைப்பா என்று முதலிலேயே ஜகா வாங்கினார் பிந்து. வேணும்னா ஹரீஷூக்கு குடுங்க என்று பிந்து சொல்ல... ஏதா இருந்தாலும் கேட்டுட்டு கொடுங்கடா என்று ஹரீஷ் கூறினார். 
போன் அடித்தது. பிந்து எடுத்தார். அவருக்கான டாஸ்க் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருடைய சட்டையை வெட்டி அணிய வைக்கவேண்டும். டிசைனா வெட்டக் கூடாதாம்...இந்த டாஸ்க்கெல்லாம் எங்கிருந்து பிடிக்குறாய்ங்க.. ஒவ்வொரு டாஸ்க்கும் ஒவ்வொரு தினுசாக இருக்கு. ஒருவேளை துப்பாக்கி க்ளைமேக்ஸ் காட்சிபோல இந்த எல்லா டாஸ்க்குகளுக்கும் ஒரு கனெக்டிவிட்டி இருக்குமோ? இல்லை ஒரு குத்துமதிப்பாக வாய்க்குவந்ததை டாஸ்க்காக சொல்கிறார்களா?

ஹரிஷ்


இந்த சட்டைய கிழிச்சுக்கிட்டு சுத்துற டாஸ்க்கில் பிந்து ஹரீஷை தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்த பிக்பாஸ், போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து, அவர்களுக்கான தண்டனைகளை உடனுக்குடன் வழங்கிவிடுகிறார்.  கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் சட்டையைக் கழட்ட மாட்டேன் என்று ஹரீஷ் கெத்துக் காட்டினார். இதோ இப்போது அவருக்கு கிழிஞ்ச சட்டைய போட்டு சுத்தவேண்டும் என்பது டாஸ்க். ஆரவ், கணேஷ் கொடுத்த ஐடியாக்களின் படி ஹரீஷின்  டீசர்ட்டை டிசைன் டிசைனாக வெட்டினார் பிந்து. இறுதியில் அந்த சட்டையை போட்டால் இதுக்கு நீ சட்டையை கழட்டிட்டு மைதா மாவையே அப்பியிருக்கலாம் என்று தோன்றியது. இது என்னடா ஹேண்ட்சம்பாய் ஹரீஷ்க்கு வந்த சோதனை.
**
இரவு 10 மணிக்கு Ticket To Finaleவுக்கான அன்றைய நாளின் டாஸ்க் தொடங்கியது. இந்த டாஸ்க்கின் பெயர் ’பாத்து பத்திரம்’. அவர்கள் கொடுக்கும் முட்டையை சிறைத் தொட்டிலில் வைத்து உடையாமல் பார்த்துக்கொள்வது தான் டாஸ்க். அப்படி பார்த்துக்கொண்டால் 10 பாயின்ட்ஸ். யாருடைய முட்டையையாவது திருடி ஒளித்துவைத்தால் அதற்கும் 10 பாயின்ட்ஸ். அல்லது எவருடைய முட்டையையாவது உடைத்துவிட்டால் அதற்கு 2 பாயின்ட்ஸ். தெரிந்தோ தெரியாமலோ முட்டை உடைந்தால் அவர்கள் அவுட். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் (சப் டாஸ்க் பண்ணும்போதுகூட) முட்டையை சுமந்துகொண்டுதான் திரிய வேண்டும். 

எது யாருடைய முட்டை என்று அடையாளப்படுத்திக்காட்ட முட்டையில் ஒவ்வொருவரையும் ஸ்கெட்ச் செய்யச் சொன்னார்கள். ’நைட்டு சுஜா உன் முட்டையை உடைச்சாலும் உடைச்சுடும் கவனமா இருங்க பிந்து’ என்று பிந்துவை அலர்ட்டாக்கினார் ஆரவ். ’டாஸ்க் முடிஞ்சப்பறம் இந்த முட்டையை அவிச்சு சாப்டுடலாம்ல’ என்று ஜோக்கினார் கணேஷ். (வேண்டாம் சார் நமக்கு காமெடிலாம் செட் ஆகல. நீங்க முட்டையை பாதுகாக்க என்ன ஸ்ட்ரேட்டஜி வச்சிருக்கீங்க?). ‘நான் போட்ட முட்டை’ என்று கேமிராவில் தன் முட்டையைக் காட்டினார் ஆரவ். எது நீங்க போட்டதா? கெரகத்த.

பிக் பாஸ் தமிழ்

ஃபுல் மைதா மாவு மேக்கப்பில் முட்டையைத் தூக்கிக் கொண்டு குறுக்கும் மறுக்குமாக சுஜா ஓடியதைப் பார்க்க ஜெகன் மோகினி பேய் மாதிரி இருந்தது. ’ஏன் தெரியுமா முட்டைல பெயின்ட் பண்ண சொன்னாங்க? நாம ஃப்ரிட்ஜ்ல இருக்குற முட்டையோட நம்ம முட்டைய மாத்தி வச்சி ஏமாத்திட்டோம்னா?’ என்று தன் அறிவு முட்டையை உடைத்து ஆஃப் பாயில் போட்டார் சுஜா. ஏங்க அவ்ளோ கேமரா சுத்திவச்சிட்டு இப்படியெல்லாம் பண்ணி நீங்க ஏமாத்திட முடியுமா என்ன? 
**

இந்த டாஸ்க்கின் பார்ட் டூவை அறிவித்தார்கள். சாக் ரேஸ். சாக்கிற்குள் நின்றுகொண்டு ஒரு கையில் முட்டையை வைத்துக்கொண்டு, ஒரு கையில் சாக்கைப் பிடித்துக்கொண்டு.. எல்லைக் கோட்டைத் தொட்டுத் திரும்பவேண்டும்.
ஆரவ், ஹரீஷ், சுஜா மூவரும் முதலில் களமிறங்கினார்கள். முதலில் ஹரீஷ் வேகமாகச் சென்றாலும், திரும்பிவரும்போது சுஜா அவரை விட வேகமாக ஓடி முதலில் வந்தார். அடுத்ததாக பிந்து, சிநேகன், கணேஷ் களமிறங்க... சிநேகன் முதலாவதாக வந்தார். பிந்துவும் சிநேகனும் போட்டியை முடித்தபிறகே கணேஷ் எல்லைக் கோட்டையே தொட்டிருந்தார். அவ்வளவு ஸ்லோவாக நடந்தார்.
’இதுக்கே இவ்ளோ கஷ்டமா இருக்கே அடுத்து குதிச்சு குதிச்சு போக சொல்வாங்களோ’ என்று ஹரீஷ் வார்த்தையைவிட அந்த ஐடியாவை கப்பென்று பிடித்துக் கொண்ட பிக்பாஸ்... இந்தா போறேன் சொசைட்டிக்கு என்று அடுத்த டாஸ்க்காக இதே ரேஸை நொண்டிக்குதித்துக் கடக்க வேண்டும் என்று அறிவித்தார். இதில் முதல் அணியில் ஹரீஷூம் அடுத்த அணியில் சிநேகனும் வென்றார்கள். 
**

பிந்து - ஹரீஷ் டாஸ்க்கில் ஆளுக்கு 5 பாயின்ட்ஸ் எடுத்துக்கொண்டார்கள். அடுத்ததாக மைதாமாவு டாஸ்க்கில் கணேஷும் சுஜாவும் தங்கள் பாயின்ட்ஸை பிரித்துக்கொள்ளவேண்டும். கணேஷ் சாதுர்யமாக போன டாஸ்க்ல நீங்க 9 நான் 1 எடுத்துக்கிட்டோம்ல.. இந்த முறை நான் 9.. நீங்க 1 எடுத்துக்கலாம் என்றார். சுஜா குழம்பினாலும் பிறகு ஏற்றுக்கொண்டார். கேமரா முன் இதைச் சொல்ல வேண்டும். கணேஷ் அறையில் இருந்த எல்லாரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு தனியாக மார்க்கை சொன்னார் .சார் உங்களுக்கு ஜெண்டில்மேன்னு சர்டிஃபிகேட்லாம் கொடுத்தோமே!? என்ன இதெல்லாம்? இப்போது ஆளுக்கு 10 மதிப்பெண்கள் என்று சரிசமமாக வந்தாலும்.. விதிமுறையை மீறியதாக பிக்பாஸ் உங்கள் மதிப்பெண்ணை ரத்து செய்தாரே அது எங்கே போனது? உங்கள் மீது தவறில்லையென்றால் எதற்காக எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு ரகசியமாக மதிப்பெண்களை சொல்ல நினைக்கவேண்டும். அவர்கள் ஏன் இப்படி பிரிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதாலா? இடையில் கன்ஃபஸன் ரூமுக்கு வேறு சென்று வந்தீர்கள்.. அப்போது உங்களிடம் என்ன சொன்னார்?இதையெல்லாம் நாளை கமல் தான் விசாரித்துச் சொல்ல வேண்டும்.

கணேஷ், சுஜா

**

யார் முட்டையாவாச்சும் உடைச்சு விடலாமா? என்று தனியாக அமர்ந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார் சுஜா. கட் பண்ணினால் அடுத்த காட்சியில் போட்டியாளர்கள் இதுவரை பெற்ற மதிப்பெண்களை வாசித்தார் ஹரீஷ். சுஜாதான் டாப் 58 மதிப்பெண்கள். தொடர்ந்து சிநேகன் 48, கணேஷ் 52, பிந்து 40, ஆரவ் 37,ஹரீஷ் 23 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள். அதோடு சுஜாவின் மைதா மாவு டாஸ்க்கும் ஹரீஷின் கிழிஞ்ச டீசர்ட் டாஸ்க்கும் முடிந்ததாக சொன்னார் ஹரீஷ். சுஜா நம்பாமல் வாசித்துக்காட்டச் சொன்னார். வாசித்துக்காட்டியும் நம்பாமல் தானே ஒரு முறை பார்த்தார்.

’அசிங்கமா இருக்கு போனுக்காக வெயிட் பண்றது’ என்று சொன்ன சிநேகன், ’கடைசியா உயிரை விட்ருவாங்கல்ல மத்த எல்லாத்தையும் தான எடுப்பாங்க’ என்றபோது போட்டியாளர்களை எந்த அளவுக்கு மனதளவில் வீக் ஆக்குகிறார்கள் என்பது புரிகிறது.
தூங்கும்போது தங்கள் முட்டையை ஒளித்துவைக்கக்கூடாது என்று பிக்பாஸ் உத்தரவிட்டிருந்ததால் கணேஷூக்கு ஒரு சந்தேகம் வந்திருந்தது. பத்திரமாக ட்ரேயில் வைத்தால் அது ஒளித்துவைத்ததாக ஆகுமா? என்று ஹரீஷிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். அதிக முறை விதிமீறல்களால் அவுட் ஆவது அவர்தான் என்பதால் இந்த முறை கொஞ்சம் கவனமாக இருக்க நினைக்கிறார்.
லிவிங் ரூமில் இதைக் கலாய்த்துக்கொண்டிருந்தார் ஆரவ். இந்த முட்டையை இப்படி வைக்கணுமா? தலைகீழா வைக்கணுமா? எப்படி வைத்தால் விதிமீறாமல் இருக்கும் என்று கணேஷை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆரவ்க்கு கணேஷ் மேல் இன்று ஏன் இத்தனை கோபம்? முன்பு சிநேகன் மீது வெறுப்பாக இருந்தார்.. நேற்று சுஜாவின் மீது வெறுப்பாக இருந்தார்.. இன்று கணேஷ்மீது... என்னதான் பிரச்னை இவருக்கு? 

’வெல்லப்போவது யார் வெளியில் செல்லப் போவது யார்?’ என்ற ரைமிங் வசனத்துடன் விளக்குகள் அணைந்தது,

**
இன்றைக்கு எபிசோடை பார்த்துக் கொண்டிருந்தபோது ரொம்ப நாளாக பிக்பாஸ் பார்க்காத நண்பர் ஒருவர் வந்தார். சில நிமிடங்கள் அவர் என்னுடன் ஷோவைப் பார்த்தபோது, அவருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

“இவன் ஏன் கிழிஞ்ச டீசர்டை போட்டு சுத்துறான்?”

“அதான் ப்ரோ டாஸ்க்கு”

“இது ஏன் என்னத்தையோ பூசிக்கிட்டு பேய் மாதிரி சுத்துது?”

“அட அதான் ப்ரோ டாஸ்க்கு”

“என்னடா எல்லாம் கழுத்துல முட்டைய மாட்டிக்கிட்டு சுத்துறாய்ங்க?”

”அட அதான்யா டாஸ்க்கு”

அவர் பாவம் வெறியாகிப்போனார். டாஸ்க்குங்குற பேர்ல இன்னும் என்னென்ன கிறுக்குத்தனங்களையெல்லாம் பண்ண வைக்கப்போறாரோ பிக்பாஸ்???

- தி. விக்னேஷ்

 

 

 
 

Add new comment

Or log in with...