Home » ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதே அரசின் கொள்கை
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதுடன்

ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதே அரசின் கொள்கை

மன்னார் தேசிய மீலாத் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

by damith
October 23, 2023 6:50 am 0 comment

* மோதல்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட ஐ.நா முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு இலங்கை பூரண ஆதரவு

* இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது

நாட்டிலுள்ள சகல மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதுமே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்டும் ஐ.நா பொதுச்செயலாளரின் வேலைத் திட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று (22) முற்பகல் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, முஸ்லிம் சமய மற்றும் கலாசார முறைப்படி மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர். தேசிய மீலாதுன் நபி விழாவின் சிறப்புரையை அஷ்ஷெய்க் பி. நிஹ்மத்துல்லாஹ் மௌலவி நிகழ்த்தினார்.

தேசிய மீலாதுன் நபி விழா 2023 க்கான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டதுடன், தபால் மாஅதிபர் ருவன் சத்குமாரவினால் ஜனாதிபதிக்கு முதல் முத்திரை மற்றும் முதல் நாள் அட்டை வழங்கப்பட்டது.

தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட நினைவுச் சின்னம் மற்றும் “மன்னார் மாவட்ட வரலாறு” நூலும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“‘எமது முன்னோர்கள் காத்துவந்த மரத்தின் விதைகளை நான் மறவாது காத்திருக்கிறேன். இந்த விதைகளையே எனது தாயக்கத்தில் மீண்டும் விதைப்பேன். எழுபது ஆண்டுகளான ஆக்கிரமிப்பிற்கும் அவலங்களுக்கும் மத்தியில் பாலஸ்தீன மண்ணில் இருந்து எழும் நம்பிக்கையின் குரல் இது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்திற்குமிடை யிலான மோதல் குறித்தும் மக்களின் அவலங்கள் குறித்தும் எனது கருத்துக்களை வழங்கியமைக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நடக்கும் இந்த மோதலானது இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான பொது மக்களை காவு கொண்டிருக்கின்றது. பலரை அங்கவீனமாக்கியுள்ளது. பல வள அழிவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.

நீடித்த காலமாக பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதுவரையில் சுமுகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இருதரப்பினரும் சமாதானத்திற்கு வரவேண்டுமானால் சில விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும். ஒன்று, பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பாலஸ்தீனிய அகதிகளின் நிலை பற்றியது. இவர்களுக்கான வழி என்ன? என்பது தொடர்பில் இருதரப்பினரும் இதுவரை எந்தவிதமான தீர்வுகளுக்கும் வரவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டியுள்ளது. இரண்டாவது, மேற்கு கரையில் இஸ்ரேலினால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கள் தொடர்பான விடயம். சர்வதேச விதிகளின்படி இந்தக் குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை நிலைப்பாடிது. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. எனவே, இந்தக் குடியிருப்புக்கள் அகற்றப்பட வேண்டுமா? இல்லையா என்பது தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டும்.

மூன்றாவது, ஜெருசலேம் நகரை இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொள்வதா? இல்லையா/ என்பது குறித்து இரண்டு தரப்பினரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது, இஸ்ரேலைப் போன்று பாலஸ்தீனமும் தனியான சுதந்திர நாடாக கருதப்படுமா என்பது தொடர்பிலும் தீர்வு காண ப்பட வேண்டும். மேற்படி விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தி நிரந்தர தீர்வு எட்டப்பட்டு விட்டால், அங்கு நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

நானும் எமது மக்களுக்கான நீதியான உரிமைப் போராட்டத்தை வழிநடத்தியவன். அந்தப் போராட்டத்தில் நான் தமிழ் மக்களை மாத்திரம் நேசித்தவன் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் மலையக மற்றும் இஸ்லாமிய மக்களை மாத்திரமன்றி சிங்கள மக்களையும் ஆழமாக நேசித்தவன். அதுபோல, உலக அரங்கில் எங்கெல்லாம் விடியலுக்கான போராட்டங்கள் நடந்தனவோ, அங்கெல்லாம் உள்ள மக்களையும் நேசித்தவன்.

பாலஸ்தீனம் 1978 இல் எமக்கு ஆயுதப் பயிற்சி தந்தது. 1984ஆம் ஆண்டிலும் தோழர்களை அங்கு பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது பாலஸ்தீன மக்களுடன் நான் பழகியிருக்கின்றேன். அவர்களின் ஆழமான உணர்வுகளையும் விரும்பங்களையும் உணர்ந்திருக்கின்றேன். எமது பயிற்சியின் போது அவர்களின் போராட்டங்களிலும் நான் களத்தில் நின்று பங்குபற்றியுள்ளேன். ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கின்றேன்.

அங்கிருந்த பல்வேறு விடுதலை இயக்கங்களுடனும் பன்னாட்டு விடுதலை இயக்கங்களுடனும் பழகி இருக்கின்றேன். அவர்களது வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் அப்போது ஆராய்ந்து பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT