முப்பெரும் தேவியரின் அருள் வேண்டும் நவராத்திரி விழா | தினகரன்

முப்பெரும் தேவியரின் அருள் வேண்டும் நவராத்திரி விழா

புரட்டாதி மாத சுக்கில பட்ச பிரதமை முதல் நவமி ஈறாக வரும் ஒன்பது நாட்களுடன் விஜய தசமியும் சேர்த்து பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி ஆகும்.வைதீக சமயங்கள் சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு வகைப்படும் என்று ஆதிசங்கரர் வகுத்துள்ளார்.இவற்றுள் சாக்தம் சக்திக்கு இறைமை கூறும் நூலாகும்.இறைவன் தனது சக்தியைக் கொண்டே இப்பிரபஞ்சத்தை இயக்குகின்றான்.எனவே சக்தியை வழிபடும் பொழுது ஏனைய தெய்வங்களையும் வழிபட்டபலன் எமக்குக் கிடைக்கின்றது.

சக்தி வழிபாடுகளில் நவராத்திரி முதன்மை பெற்று விளங்குகின்றது.ஜகன்மாதா ஆகிய ஆதி பராசக்தி கிரியாசக்தி துர்க்கையாக, இச்சா சக்தி இலட்சுமியாக, ஞான சக்தி சரஸ்வதியாக இருந்து பிரபஞ்சம் முழுவதற்கும் அருள் பாலிக்கின்றாள்.

மனித வாழ்விற்கு மிக இன்றியமையாத கல்வி, செல்வம், வீரம் ஆகிய முப்பேறுகளையும் அவரவர் பக்குவத்திற்கேற்ப முத்தெய்வங்களுடாக அன்னை பராசக்தி வழங்கிக் கொண்டிருக்கின்றாள்.

நவராத்திரி விரதத்தை முதல் எட்டு நாட்களும் இரவில் பால் பழம் பலகாரம் உண்டு, ஒன்பதாம் நாள் உபவாசம் இருந்து, 10ம் நாள் காலை பாரணை செய்வது வழக்கம்.இயலாதவர்கள் சைவ உணவை உண்டு புனிதமாக இருந்து இறைவழிபாடு செய்யலாம்.

துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளையும் மும்மூன்று நாட்களாக ஒன்பது இரவுகளில் வணங்கி வழிபட வேண்டும்.மனிதனுக்கு அறம், பொருள், இன்பம் எவ்வாறு முக்கியமோ அது போல தெய்வ அனுக்கிரகத்தோடு கூடிய வீரம், செல்வம், கல்வி இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாதவையே.படைப்பின் நாயகன் பிரம்மா, படைக்கப்பட்ட உயிரின் சிந்தனை அறிவுக்கு நாயகி சரஸ்வதி,அறிவு ஞானம் புத்தி மூன்றையும் தருபவள் சரஸ்வதி.அதனால் அவள் தூய வெள்ளை ஆடை உடுத்தி வெண் தாமரையில் வீற்றிருக்கின்றாள்.

நவராத்திரி ஒன்பது நாளும் அன்னையை வழிபட முடியாவிட்டாலும் அட்டமி தினமாகிய 8ம் நாள் தேவியை வழிபட்டாலும் போதுமானது.அரக்கர்களை அழித்தாள் அன்னை பராசக்தி என்று தேவி மகாத்மியம் கூறுகின்றது.யார் அந்த அரக்கர்கள்?அஞ்ஞானத்தின் பல வடிவங்கள் தான் நம்மைச் சுற்றியுள்ள அரக்கர்கள்.பத்தாவது நாள் விஜயதசமி அம்பாளின் இந்த வீர சரித்திரம் எழுநூறு மந்திரங்களாக மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.இவை தேவி மகாத்மியம் என்று சொல்லப்படும் சக்தி வாய்ந்த மந்திரங்களாகும்.

நவராத்திரி நாட்களில் தேவி பாகவதத்தை செவிமடுப்பது பெரும் புண்ணியமாகும்,இறுதி நாளாகிய நவமியன்று வீடுகளில் சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.இந்நாளில் பிள்ளைகள் தமது புத்தகங்களை பூஜையில் வைத்து வழிபட்டு தசமியன்று எடுத்துப் படிக்க வேண்டும்.பழைய காலங்களில் போரையும் ஒரு கலையாகக் கொண்டு ஆயுத பூஜை செய்யப்பட்டு வந்தது.தற்காலத்தில் அவரவர் தமது தொழிலுக்குரிய உபகரணங்களை வைத்து வழிபடுவது வழக்கமாகி விட்டது.

இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும்.இவ்வுலகில் பிறந்து வாழ்வது பெரிதல்ல எப்படி வாழ்ந்தோம்.மக்களுக்கு எதைச் சாதித்தோம் என்று எண்ண வேண்டும்.கல்வி ஒழுக்கம் இரண்டும் இருந்தால் நல்ல பழக்க வழக்கம் உண்டாகும்.நான் என்ற அகங்காரத்தையும் எனது என்ற மமகாரத்தையும் நீக்கும் துர்க்கையை வழிபட்டு மனதைப் பண்படுத்த வேண்டும்.பண்பட்ட நிலத்தில் பயிர் நன்கு செழித்து வளரும்.அதனால் பக்குவப்பட்ட ஆன்மா செல்வத்தை அறநெறியில் செலவு செய்யும்.

அதற்கு நல்ல கல்வி வேண்டும்.வீரம் கல்வி செல்வம் மூன்றையும் ஒருங்கே பெற்று மனிதன் பூரணமானவனாக வாழ வேண்டும்.வீரத்தைத் தருபவள் துர்க்கை.உடல் வலிமை மட்டும் வீரம்அல்ல.எமது வாழ்வில் ஏற்படும் நன்மை தீமை இன்ப துன்பம் போன்ற சகல தாக்கங்களையும் மனத் தைரியத்தோடு ஏற்கும் பண்பு வீரம் ஆகும்.வாழ்க்கையில் அச்சம் சோர்வு போன்ற உணர்வுகளால் உள்ளம் துவண்டுவிடாமல் மனம் பக்குவமடைந்து வெற்றி பெறுவதற்கு வீரம் வேண்டும்.அதனைக் கொடுப்பவள் துர்க்கை.துர்க்கை அளிக்கும் வீரத்தின் உதவியோடு சமுதாயம் போற்றும் செல்வம் நிறைந்த செல்வாக்குப் பொருந்திய உன்னத வாழ்வைப் பெற லக்ஷ்மியை வழிபட வேண்டும்.ஏழ்மையில் வாழ்ந்தாலும் உலகம் போற்றும் பண்பான வாழ்வே செல்வம் பொருந்திய வாழ்வாகும்.

ஒன்பது நாட்களும் பூஜை செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று தினங்களாகிய சப்தமி, அட்டமி, நவமி ஆகிய நாட்களில் வழிபாடு செய்தாலும் முழு நாட்களும் செய்த பலன் கிடைக்கும்.இந்து சமய மக்களின் சமய வளர்ச்சிக்கும் மன அமைதிக்கும் சிறப்பினைக் கொடுக்கும் நவராத்திரி விழாவானது சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை விளக்கி நிற்கின்றது.

சாமஸ்ரீ- க.மகாதேவன்- , உடப்பூர்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...