புதிய அரசியலமைப்புக்கு தெளிவான பாதை திறப்பு | தினகரன்

புதிய அரசியலமைப்புக்கு தெளிவான பாதை திறப்பு

 

நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்புச் சபையின் வழி நடத்தல் குழு அதன் இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம் கூடிய அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பித்திருக்கின்றது. குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 112 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்களில் வழிநடத்தல் குழுவில் இனங்கப்பட்ட விடயங்களும், அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களும் இந்த இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பல்வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கி 12 பிரிவுகளின் கீழ் முன்மொழிவுகள் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இது எந்தவொரு தரப்பினரதும் தனிப்பட்ட ஆவணமல்ல, ஒவ்வொரு தரப்பும் முன்வைத்த யோசனைகளை உள்வாங்கி இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மேலோட்டமாகப் பார்க்கின்றபோது இலங்கை ஒரே நாடு என்ற கோட்பாட்டை சகல கட்சிகளும் ஒத்த நிலைப்பாட்டில் ஏற்றுக்கொண்டிருப்பதை கவனத்தில்கொள்ள முடிகிறது. பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிகளும், குழுக்கள் மற்றும் அமைப்புகளும் ஏற்றுக்கொண்டிருப்பதாக அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டி இதனடிப்படையில் புதிய அரசியலமைப்பைத் தயாரித்து பலம் வாய்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம் என அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இந்த இடைக்கால அறிக்கையானது ஒரு சட்டமூலம் மாத்திரமே சட்டபூர்வ ஆவணமல்ல இறுதி ஆவணம் மக்களது அங்கீகாரத்துடனேயே தயாரிக்கப்படும். அதன் பின்னரே புதிய அரசியலமைப்பு உருவாகும் என்பதை பிரதமர் அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட முரண்பாடுகள், பின்னடைவுகள் எதிர்காலத்திலும் தொடர இடமளிககப்படமுடியாது. இதன் காரணமாகவே புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் உணரப்பட்டது. 2015 ஜனாதிபதி தேர்தலின்போது இருபிரதான கட்சிகளும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படியே புதிய அரசியலமைப்புக்கான உத்தேச ஆவணம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்திற்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 12 பிரிவுகளைக் கொண்ட விடயங்கள் எதுவும் தனி நபராலேயோ, தனிக்கட்சியாலேயோ முன்மொழியபடவில்லை. சிலர் ஒன்றுபட்டும் சில கட்சிகள் தனியாகவும் யோசனைகளையும், பிரேரணைகளையும் முன்வைத்திருக்கின்றனர். அத்தோடு ஏற்கனவே முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்ட விடயங்களும் இந்த இடைக்கால அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக முன்வைக்கப்பட்டுளள யோசனைகள், பிரேரணைகளும் அரசியலமைப்பு சபையில் ஆராயும் பொருட்டு உள்வாங்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான விடயம் பல விடயங்கள் தொடர்பில் சகல தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதுதான்.

இந்த அரசுக்கு எதிரான ஒரே சக்தியாக மஹிந்த தரப்பினரை மட்டுமே நோக்கவேண்டியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை எந்த நல்ல காரியமானாலும் அவற்றை எதிர்ப்பதும், நிராகரிப்பதும் தான் அவர்களது ஒரே நிலைப்பாடாகும். அது தான் இந்த விடயத்திலும் நடத்திருக்கின்றது. எமது நாட்டுக்கு பொருத்தமான, உறுதிமிக்கதானதொரு அரசியலமைப்பு, அனைத்து இன மக்களையும் உள்வாங்கியதான அரசியலமைப்பு மிக அவசியமானது என்பது உணரப்பட்டதன் காரணமாகவே இந்த புதிய யாப்பு தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டில் வாழும் சகல இன குழுக்களுக்கு தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டுமென நீண்டகாலமாகவே குரல் கொடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள அரசியலமைப்பும் சரி முன்னிருந்த யாப்புகளாக இருப்பினும் சரி குறைபாடுகள் உள்ளவையாகவே காணப்பட்டு வந்தன. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பொருட்டு சகல தரப்புகளையும் இணைத்து தேவைகளையும், இனைக்குழுக்களின் பிரேரணைகளையும் பெற்று அர்த்தபூர்வமான யாப்பொன்றைத் தயாரிப்பதில் சகல தரப்புகளும் ஒத்த நிலைப்பாட்டுக்கு வந்திருப்பது வரவேற்கக் கூடிய விடயமாகும்.

நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்படவேண்டுமானால் அதற்கேற்ற விதத்தில் அரசியலமைப்பு காணப்படவேண்டும். அந்தக்குறை நீண்டகாலமாகவே காணப்பட்டு வந்தது நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்ததும் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஜனநாயகததைப் பலப்படுத்த உறுதிபூண்டது இதனை அரசு மட்டும் தவிர்த்துச் செய்யமுடியாதென்பதால் அரசியல் கட்சிகள், தனிநபர்கள், சிவில் அமைப்புகள், புத்தி ஜீவிகள் என சகல தரப்புக்களையும் இணைத்துத் திட்டத்தையும் தயாரித்துள்ளது.

அரசியலமைப்புச் சபை அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடாத நாட்களில் பாராளுமன்றத்தில் பலகட்டங்களாகக் கூடி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். நாட்டில் இன நெருக்கடி உட்பட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்படவேண்டுமானால் ஆரோக்கியமானதொரு அரசியலமைப்பு அவசியமானதாகும். இந்த வழிநடத்தல் குழுவின் அறிக்கைகள், சிபாரிசுகள், யோசனை அதற்கு பலம் சேர்ப்பதாக அமையவேண்டும். இந்த விடயத்தில் காலம் கடத்தாமல் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைவதே மிக முக்கியமானதாகும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...