பிக் போஸ் 88 ஆம் நாள்: ‘ஒய் கிரியேட்டிங் சீன் சுஜா?’ | தினகரன்


பிக் போஸ் 88 ஆம் நாள்: ‘ஒய் கிரியேட்டிங் சீன் சுஜா?’

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

ரெட் பெட்ரூமில், தேவதைகளான சிநேகன், கணேஷ், சுஜா பாதுகாத்துவரும் லாக்கரை, பேய்களான ஆரவ், ஹரீஷ், பிந்து அணியினர் தங்களிடம் உள்ள சாவியால் திறக்க வேண்டும் என்கிற ‘தேவதைகள் மற்றும் பேய்கள்’ டாஸ்க் தொடர்கிறது. நள்ளிரவு 2:30 மணிக்கு எழுந்து ஆரவ் இப்போது லாக்கரைத் திறப்பதற்கான சூழல் இருக்கிறதா என்று சுற்றி சுற்றி வந்தார். ஆனால் தேவதைகள் அணியினர் பெட்டை கொஞ்சம் இழுத்துப்போட்டு லாக்கரை மறைத்தாற்போல் படுத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால், இப்படி டாஸ்க் என்னும் பெயரில் அங்கேயே பாயப்போட்டு படுத்துக்கொள்வதெல்லா, மிகவும் மோசம். நேற்று ஆரவ் சொன்னது போல், கணேஷ், சிநேகன் என இரு டாஸ்க் வெறியர்களுடன் போட்டி போட்டதற்காகவே, பேய்கள் அணியினருக்கு பாயின்ட் கொடுத்து விடலாம் என்று தான் தோன்றியது.

பிக் பாஸ் தமிழ்

**

விடிந்திருந்தது. டாஸ்க்கின் காரணமாக வேக்கப் சாங்கிற்கு முன்பே எல்லாரும் எழுந்திருந்தார்கள். ஆரவும் ஹரீஷூம் சுஜாவின் கைகளை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இழுத்துவிளையாடிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிநேகனுக்கும் கணேஷூக்கும் பொறாமையாக இருந்தது போல. கணேஷ் தன் வாயாலேயே அதைச் சொன்னார். ‘இப்படியெல்லாம் பண்ணா தேவதைகளுக்கு ஜெலஸ்ஸா இருக்கும்’ என்றார். சார் உங்க ஒயிஃப் பாத்திட்டு இருப்பாங்க… ஜாக்கிரதை. கோலம் போடவிடுங்கடா என்று சிணுங்கினார் சுஜா. கோலம் போட்டு லவ் யூ எழுதிட்டு வர்றேன் என்று அவர் குழந்தைத்தனமாக சொன்னது கவிதையாக இருந்தது. சுஜா வழக்கம்போல் சிணுங்கிக்கொண்டே ஏதோ சொல்ல ஆரவ், சுஜாவை எட்டி உதைத்தார். அன்பாகத்தான் செய்தார் அவ்வளவு ஃபோர்ஸாக இல்லையென்றாலும் இதெல்லாம் நல்ல பழக்கமாக தெரியவில்லை.இதற்கு முன்னரும் இப்படித்தான் ஓவியாவை செல்லமாக உதைக்கிறேன் என உதைத்து, ஓவியா ஆர்மியின் வசவுகளை வாங்கிக் கொண்டார் ஆரவ். சுஜாவிற்கு ஆர்மி இல்லை என்கிற வரை சந்தோஷம்.(இல்ல ஆரம்பிச்சுட்டாங்களா?) ‘நீ நாட்டி பாய் இல்ல நாட்டி பேய்’ என்று கலாய்த்தார் கணேஷ்.

பிக் பாஸ் தமிழ்

 

8 மணி வெள்ளைச்சாமி என்ற பெயர் பிக் பாஸூக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஆட்டோமேட்டிக் டைமர் எதுவும் செட் பண்ணி வைத்திருக்கிறார்களோ என்னவோ தினமும் சரியாக 8 மணிக்கு வேக்கப் சாங்கை ஒலிக்க விடுகிறார் பிக்பாஸ். இன்றைக்கு ‘நாடோடிகள்’ படத்திலிருந்து ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’. டைனிங் டேபிளுக்கு அருகில் தேவதைகள் மூவரும் ஆடிக்கொண்டிருக்க…  தனது பேய் அங்கியை லுங்கியைப் போல் தூக்கிப் பிடித்துக்கொண்ட ஆரவ், அரை டவுசர் தெரிய ‘நாடோடிகள்’ பாட்டிற்கு ‘ஆடுகளம்’ மூவ்மெண்டுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். இன்றைக்கு வெளுத்துவாங்கியது சுஜாவும் கணேஷூம். அருமையாக ஆடினார்கள். பாடல் முடிந்ததும் கடைசியாக ஆரவ் கொடுத்த போஸ்… ஏன்யா காலங்காத்தால..

பிக் பாஸ் தமிழ்

 

**

எப்படி லாக்கரைத் திறக்கலாம் என்று பேய் டீம் வழக்கம்போல் டிஸ்கஸனைத் தொடங்கியிருக்கிறார்கள்.  இவர்களும் வளைச்சு வளைச்சு மீட்டிங் போட்டு பேசுகிறார்களே தவிர.. லாக்கரை திறப்பதற்கு ஒரு முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. இஸ்ரோவில் புது புராஜக்ட் தொடங்குவதற்குக் கூட இத்தனை மீட்டிங் போட்டிருக்க மாட்டார்கள். சட்டுபுட்டுனு லாக்கரை திறந்து டாஸ்க்கை முடிச்சுட்டு அடுத்த டாஸ்க்குக்கு வாங்கடா என்றுதான் சொல்லத்தோன்றியது. இதற்கிடையில் தேவதைகளுக்கான சாப்பாடு வந்திருந்தது. ஸ்டோர் ரூமில் சென்று சுஜா எடுக்க உள்ளே புகுந்த ஹரீஷ் சுஜாவிடம் இருந்து உணவைப் பிடுங்க ஏதேதோ ட்ரை பண்ண, அதற்குள் சிநேகன் அங்குவந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். ஆரவ் சுஜாவை வெறுப்பேற்ற காலை அமுக்கி விடச்சொன்னார். பேய் என்றால் எல்லா தேவதைகளையும்தானே இரிடேட் செய்ய வேண்டும். அதென்ன சுஜாவை மட்டும்? ஷாப்ட் கார்னர் என்பதலா? 

அடுத்த சீனில் ஆக்சனில் இறங்கியிருந்தார்கள் ஆரவ், ஹரீஷ், பிந்து மூவரும். கணேஷிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே லாக்கர் இருக்கும் ரூமுக்குள் நுழைய முயன்றார்கள். சடாரென்று சுதாரித்த சினேகன், சுஜா, கணேஷ் மூவரும் எதிரணியினரை உள்ளே நுழையவிடாமல் தடுத்துப் பிடித்தனர். ம்ஹூம் எவ்வளவு முயன்றும் அவர்களின் கிடுக்குப்பிடியில் இருந்து நழுவ முடியவில்லை. ஒருகட்டத்தில் ஹரீஷூம் கணேஷூம் கண்ணாடிக் கதவுகளின் மீது மோதப் போக, காயப்படுத்தாதவாறு விளையாடுங்கள் என்று போட்டியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் அறிவுறுத்தியிருந்ததால் இரு அணியினரும் ஒருவழியாக சமாதானத்திற்கு வந்தார்கள். ‘கேம்னா கேம் மாதிரி விளையாடணும். நாங்களும் விளையாட இடம் கொடுக்கணும். நீங்க இங்கேயே இருந்தா நாங்க எப்படி லாக்கரை திறக்குறது?’ என்று சீரியஸாக கம்ப்ளைண்ட் செய்துகொண்டிருந்தார் ஆரவ். என்ன மாதிரியான வாதம் இது.. ‘ஸ்டம்ப்பை மறைக்காம நில்லுயா அப்புறம் நான் எப்படி அவுட்டாக்குறது?’ என்று பேட்ஸ்மேனிடம் பௌலர் சொல்வது போல முட்டாள்தனமாக இருந்தது. 

பிக் பாஸ் தமிழ்

 

**

‘லூசு தேவதை’ என்று சுஜாவை ஓட்டிக்கொண்டிருந்தார் ஹரீஷ். சுஜா கீழே கிடந்த ஹரீஷீன் துணிகளைக் காலால் தள்ளிவிட ஹரீஷ் டென்சனானார். ‘காலால தள்ளுறீங்க. ஒழுங்கா இருந்த இடத்துல வைங்க’ என்று கோபமாக சொல்ல சுஜா மீண்டும் கால்களாலேயே நகர்த்த, பக்கத்திலிருந்த டேபிளை சடாரென்று தள்ளிவிட்டார். ஹரீஷ் இவ்வளவு கோவக்காரரா? ஆரவ்விடம் முறையிட்டார்… அவர் லைட்டாக கலாய்க்கிற டோனில் விசாரித்த பிறகுதான் மனிதர் கொஞ்சம் கூலானார். “என் வேலையை செய்ய விடுங்கயா… நானும் யாரையாவது இரிட்டேட் பண்ணனும்ல” என்று ஆரவ் கெஞ்சியது ஜாலியாக இருந்தது. படுதிராபையான இந்த பேய் டாஸ்க்கில் கொஞ்சமேனும் ரசிக்கும்படி இருந்தது ஆரவ்வின் மாடுலேசன்தான். “சாவடிக்குறாய்ங்களே இந்த ஏஞ்சல் பயலுக” என்று சிரிப்பு போலீஸ் மாதிரி இவர் சிரிப்பு பேயாக உலா வந்தார்.

பிறகு குடித்தவர்போல பேசி அலப்பறையைக் கொடுத்தார் ஆரவ். விஜயகாந்த் வாய்ஸில் பேச முயற்சி செய்தார் போல. அவர் ஸ்டைலில் தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க என்று சொல்லி அருகிலிருந்த சேரைத் தூக்க, அதற்கருகில் கால் வைத்திருந்த சுஜா தன் காலில் இடித்துவிட்டதாக கத்தினார். ஆரவ் வேண்டுமென்றே செய்யவில்லை என்று எல்லோரும் சமாதானம் சொன்னாலும், சுஜா கோபித்துக்கொண்டார். ஆமா நாந்தான் தெரியாம ஆக்ஸிடன்ட் பண்ணிக்கிட்டேன் என்று புலம்பினார். ‘ஒய் கிரியேட்டிங் சீன் சுஜா?’ என்று ஹரீஷ் கேட்டதற்கு, ‘யார் நான் சீன் கிரியேட் பண்றேனா நீங்க பண்றீங்களா?’ என்று கடுப்பானார். அவருக்குப் பரிந்து பேசி அமரச் சொன்ன கணேஷிடம் கூட ‘Wait Buddy வலி இருந்தா உட்காந்துக்கணுமா, கால் வலிச்சாலும் நின்னுக்கலாம் பரவால்ல’ என்று கடுப்பாக சொன்னதெல்லாம் செம சீன் (அய்யோ நான் சுஜாவை சொல்லலைங்க).

**

இந்த பாடாவதி டாஸ்க் பார்ட் டூவிற்கு சென்றது. பார்ட் ஒன்னில் தேவதைகளாக இருந்தவர்கள் இப்போது பேய்கள். பேய்களாக இருந்தவர்கள் இப்போது தேவதைகள். அதன்படி இப்போது ஹரீஷ், ஆரவ், பிந்து மூவரும் தேவதைகளுக்கான வெள்ளை அங்கியை அணிந்துகொண்டார்கள். சிநேகன், கணேஷ், சுஜா மூவரும் பேய்களுக்கான கருப்பு அங்கியை அணிந்துகொண்டார்கள். சாவி மீண்டும் சுவரில் தொங்கவிடப்பட்டது. 

.பிக் பாஸ் தமிழ்

புதிய தேவதைகள் மீண்டும் கும்பலாக மீட்டிங் போட்டு சாவியை எப்படி பாதுகாக்கலாம்? லாக்கரை எப்படி காப்பாற்றலாம் என்று திட்டம் வகுத்தார்கள். சுஜா இந்தநேரத்தில் உள்ளே வந்தார். கொஞ்ச நேரம் பெட்டில் அமர்ந்து விட்டு மீண்டும் இவர்களுக்கு அருகில் நடக்க, ‘நாங்கதான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்ல வெளிலபோங்க’ என்று ஆரவ் அதட்டினார். நான் பக்கத்துலயா உக்காந்திருக்கேன் நீங்க பாட்டுக்கு பேசுங்க என்று சுஜா அவர்களை வெறுப்பேற்றினார். மாத்திரை எடுக்கணும்னாங்கனு பரிதாபப்பட்டு உள்ளே விட்டா உள்ளேயே உட்காந்துக்கிட்டா எப்படிங்க என்று சிநேகனிடம் முறையிட்டார் ஆரவ். அதற்குள் டாஸ்க் தொடங்கிவிட்டதற்கான பஸ்ஸர் ஒலிக்க, சாவியை எடுக்க முயன்றபோது ஆணி உடைந்தது. பிந்து சாவியை கையில் வைத்திருந்தார். அதெல்லாம் கூடாது சாவியை சுவரில்தான் மாட்டி வைக்கவேண்டும் அதான் ரூல்ஸ் என்று சிநேகன் டீம் சொல்ல.. மொதல்ல நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க பஸ்ஸர் அடிக்குறதுக்குள்ள நீ ஏன் உள்ள வந்த என்று சுஜாவை கேட்டார் ஆரவ். ‘நீ வா போ’னு பேசாதீங்க என்று ஆவேசமானார் சுஜா. 

அதை மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ‘Women Need Respect’ என்பதையும் சேர்த்து சொன்னார். அன்பின் மிகுதியால் ஒருவரை ஒருமையில் அழைப்பது எப்படி மரியாதைக் குறைவாக இருக்கும்? ஆரவ் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே பெண்களுக்கு மரியாதை தராமல் இல்லை. இந்த டயலாக்கை சுஜா சொன்னது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே சிநேகனிடமும் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். சுஜா மரியாதையை எதிர்பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை ஆனால் அதை எல்லா நேரத்திலும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நேரம் சிரித்துப் பேசுகிறார், குறும்பு செய்கிறார், மடியில் அமர்கிறார், கன்னத்தை கிள்ளுகிறார். அப்போது லூசு, நீ வா போ என்றால் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் தன் மீது தவறு இருக்கும் நேரம் எதிராளி கோபப்பட்டால் உடனே  நீ வா போனு பேசாதீங்க என்று சொல்லி பிரச்னையை திசைதிருப்ப முயல்கிறார். 

ஹரிஷ்

 

ஆணியை சரிசெய்து சாவியை மீண்டும் மாட்ட, சில நொடிப் போராட்டத்தில் அதை எடுத்துவிட்டார் சிநேகன். ஆனால் சிநேகனை இந்த கருப்பு அங்கியில் பார்க்கும்போது ‘அந்நியன்’ விக்ரம் போலவே இருந்தார். இனி புதிய பேய்களின் ஆட்டம் தொடங்குகிறது.

தான் பேயாக இருந்தபோதும் சரி இப்போது ஏஞ்சலாக இருக்கும்போதும் கணேஷிடம் சிக்கி படாதபாடு படுவதென்னவோ ஆரவ்தான். இந்த முறை அவருடைய கன்னங்களுக்கு ரோஸ் பவுடர் அடித்துவிளையாடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு மீசையில்லை இதுல இவரு வேற. சிநேகன் பெட்டியை நெருங்கவிடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் ஹரீஷ். அருகிலிருந்த பிந்து கவிஞரே நீங்க தேவதையா இருந்தாலும் பேயா இருந்தாலும் ஒரே எக்ஸ்பிரசன்தான் கொடுக்கிறீங்க.. எக்ஸ்பிரசனை மாத்துங்க என்று அலுத்துக்கொண்டார். பிந்து மட்டும்தான் தேவதை உடையில் பார்க்க பாரதிராஜா படப் பாடல்களின் கோரஸ் கதாபாத்திரம் போல் அழகாக இருந்தார்.

‘ஹரீஷ் சட்டைல சாம்பாரா ஊத்திடுவியா நீ’ என்று சுஜாவை ஏற்றிவிட்டார் கணேஷ். (சார்… உங்களை நாங்க எவ்ளோ பெரிய ஜெண்டில்மேன்னு சொல்லிட்டு இருக்கோம். ஒரு ஜென்டில்மேன் பண்ற வேலையா இதெல்லாம்). இதுதான் சாக்கென்று தன் கையில் இருந்த சாம்பாரை ஹரீஷ், பிந்துவின் அங்கிகளில் தெளித்தார். (ஜிப்பா சூப்பர் மயில்சாமி காமெடி நினைவுக்கு வந்தது). அப்படியே ரெண்டு இட்லியையும் கொடுத்துட்டீங்கன்னா தொட்டு சாப்பிட்டுக்குவேன் என்பதுபோல் பாவமாக பார்த்தார் ஹரீஷ். சிநேகனும் தன் பங்கிற்கு கையுறையை தண்ணீரில் நனைத்து ஹரீஷ் மற்றும் பிந்துவின் முகத்தில் தடவினார். கணேஷ் ஆரவ்வின் தலையில் பிந்துமாதவியின் தொப்பியை வைத்து அழகுபார்க்க, பிந்து மாதவி ‘அது பிக்பாஸ் நினைவா வச்சிருக்கேன் ஒண்ணும் பண்ணீடாதீங்கயா ப்ளீஸ்’ என்று கெஞ்சினார். கணேஷ் ஆரவ்விடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே லாக்கரைத் திறக்கமுயல ஆரவ் தடுத்துவிட எல்லாரையும் வரச் சொன்னார் கணேஷ். மொத்த டீமும் பாய்ந்ததில் லாக்கர் கீழே விழுந்தது. அவ்வளவு களேபரத்திலும் தான் எடுத்துவந்த ரசத்தை பொறுப்பாக ஹரீஷின் சட்டையில் ஊற்றிக் கொண்டிருந்தார் சுஜா. அது மைக்கில் படுவதாக ஹரீஷ் கத்தினார். சாவி பாதி நுழைந்து உடைந்துவிட சரி போங்கடா என்று ஒதுங்கிக் கொண்டார்கள் பேய்கள் அணி. பிறகு லாக்கரைத் திறந்தால், வாழ்த்துகள் உங்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன  என்று எழுதப்பட்ட சீட்டு உள்ளே இருந்தது. ஒருவழியாக அந்த டாஸ்க் முடிவடைந்தது.

**

அடுத்த சண்டையை ஆரம்பித்தார்கள். சாம்பாரும் ரசமும் கலந்திருந்த தன் அங்கியை  சிநேகனிடம் காட்டி ‘சுஜா இதை துவைச்சுக் கொடுப்பாங்களா?’ என்று மல்லுக்கு நின்றார் ஹரிஷ். ‘ டாஸ்க்னா அப்படித்தான் இருக்கும். என்னைக் கூட தான் எட்டி உதைச்சீங்க… நான் திருப்பி உதைக்கட்டுமா?’ என்று விட்டுக்கொடுக்காமல் பேசினார் சுஜா. ‘நாம போய் பிக்பாஸ்கிட்ட சொல்லுவோம். அவரு ரொம்ப நியாயமானவரு. இதெல்லாம் அவரே துவைச்சுக்குவாரு. ’  என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை உதிர்த்தார் கணேஷ். 

பிந்து மாதவி

வெளியில் ஆரவ் சுஜாவைப் பற்றி பிந்துமாதவியிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணு ஜெயிக்குறதுக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் போகும். பொசுக்குனு என்ன சொல்லிருச்சு பாத்தீங்களா? ’ என்றதோடு, ‘இனிமே இவளோட பேசவே மாட்டேன்’ என்று சபதமேற்றுக்கொண்டார். 

 

**

ஆண்களுக்கு பொதுவாக ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எந்தப் பெண்ணிடம் முழுதாக சண்டைபோட்டு ஒதுங்க நினைக்க மாட்டார்கள். கோபப்பட்டு கத்தினாலும் சில மணிநேரங்களில் தாங்களாகவே போய் சமாதானம் செய்ய முயற்சி செய்வார்கள். அதையேதான் ஹரீஷ் இப்போது செய்யத் தொடங்கினார். குனிந்து கிச்சனை பெருக்கிக் கொண்டிருந்த சுஜாவிடம்  ‘என்கிட்ட பேசுங்க இவ்ளோ ரூடா இருக்காதீங்க… அப்படி என்ன ஆகிப்போச்சு டாஸ்க்ல என்ன வேணா அடிச்சுக்கலாம் டாஸ்க் முடிஞ்சதும் சகஜமாகிடுங்க என்று வாலண்டியராக சென்று பேசத் தொடங்கினார். ‘இப்பதான் அது டாஸ்க்னு தெரிஞ்சதா?’ என்ற சுஜா எதிர்தாக்குதலுக்குப் பிறகு இரண்டு பக்கமும் வார்த்தைகள் அம்பாக சீறிக்கொண்டிருந்தது. லூசுனு கூப்பிட்டதுக்கு சாரி.. நான் சாதாரணமா தான் சொன்னேன். நீங்ககூட ஆரவ்வை அப்படி சொல்லிருக்கீங்க… ஏன் கவிஞரைக்கூட லூசுக் கவிஞரேனு நீங்க கூப்பிட்டதில்ல என்று ஃப்ளோவில் சொல்ல… இதைக் கேட்டுக்கொண்டிருந்த சிநேகன் ‘உங்க சண்டைல என்னை ஏண்டா டேமேஜ் பண்றீங்க?’ என்று காண்டாகியிருப்பார்.  அதற்கும் சுஜாவிடம் பதில் இருந்தது, ‘அவருக்கும் எனக்கும் வேற.. எனக்கு நீங்க க்ளாஸ் எடுக்காதீங்க நீங்க ஒரு நேரம் நல்லா பேசுறீங்க ஒரு நேரம் கோபப்படுறீங்க?’ என்று  தொடர்ந்து கோபமாகவே பேச… என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்த முயன்றார் ஹரீஷ். இப்ப என்ன என்று ஹரீஷூக்கு ஒரு ஹக் கொடுத்து போதுமா போங்க என்று சண்டையை முடித்துவைத்தார் சுஜா.

பிக் பாஸ் தமிழ்

 

அவ்வப்போது சுஜா இதுபோல் அன்யூசுவல் ஆகிவிடுகிறார் என்று கவலைப்பட்டார் பிந்து. அவங்ககூட ரொம்ப க்ளோஸ் ஆகுறப்போலாம் ஏதாவது விரிசல் வந்துடுதுன்னு வருத்தப்பட்டார் ஆரவ். டாஸ்க் நேரத்தில் எப்படி இருந்தாலும் அது முடிந்ததும் நார்மலாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் மூவரும். கணேஷ் இதை சிறப்பாக செய்வார் என்று சர்டிஃபிகேட் கொடுத்த ஆரவ். சிநேகன் டாஸ்க்கை சீரியஸாக எடுத்துக்கொண்டால் டவுன் ஆகிடுவார் என்றும் சொன்னார்.

**

அடுத்த டாஸ்க் ஆரம்பமானது. லிவிங் ரூமில் அனைவருக்கும் டாஸ்க்கைப் பற்றி படித்துக் காண்பித்தார் ஹரீஷ். இந்த டாஸ்க்கின் பெயர் ‘கண்கட்டி வித்தை’. ப்ளைவுட் கம்பெனி  தான் ஸ்பான்சர் போல. பவுலிங் லேனில் பத்து பவுலிங் பின்களை வைத்திருப்பார்கள் அதை ஓரே நேரத்தில் வீழ்த்தியபிறகு ஆக்டிவிட்டி ரூமிற்கு செல்ல வேண்டும். அங்கு வாலில்லாத யானை ஒன்று இருக்கும் போட்டியாளர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு அதன் சரியான இடத்தில் வாலை ஒட்ட வேண்டும். இதுதான் டாஸ்க். அட நம்மூர்களில் பொங்கல் விழாக்களின் போது தெருக்களில் நடத்தும் அதே விளையாட்டுதான். ஆனால் வழக்கமாக அதில் ஒரு நடிகையின் படத்தை வைப்பார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டு போய் அவர் நெற்றியில் பொட்டு வைக்கவேண்டும். கண்கட்டியிருப்பவர் தடவித்தடவி சரியாக நடிகையின் வாயில் பொட்டுவைப்பார். வாயில வைக்கிறதுக்கு அது புட்டு இல்லடா பொட்டு என்று கலாய்ப்பார்கள். அதே கேம் தான். ஆனால் இது என்ன சம்பந்தமே இல்லாமல் யானை - வால் என்று பார்த்தால் அது அந்த ப்ளைவுட் கம்பெனியின் லோகோவாம். சிறப்பான மார்க்கெட்டிங் யுக்தி. 88 நாட்கள் இதுபோன்ற பல ஸ்பான்ஸர் டாஸ்க்குகளை பார்த்துவிட்டதால் காஸ்ட்யூம் என்ன மாதிரியாக வந்திருக்கும் என்பதை முன்னமே கணித்தார் ஆரவ். அந்த ப்ளைவுட் கம்பெனியின் பெயர் பொறித்த டீசர்ட்டை அணிந்துகொண்டார்கள். இந்த டீசர்ட்டை அணிந்துகொள்ளும்போது ‘இதை விட ஃபன்னான டாஸ்க் கொடுக்கவே முடியாதுல’ என்று சர்காஸமாக பிக்பாஸையே கலாய்த்தார் ஹரீஷ்.  போட்டியாளர்களே காமெடி பண்ற அளவுக்கா டாஸ்க் யோசிப்பீங்க பிக்பாஸ்?

கணேஷ்

சுஜா, ஹரீஷ், கணேஷ் மூவரும் மஞ்சள் அணி. சிநேகன், ஆரவ், பிந்து மூவரும் பச்சை அணி. ஹரீஷ் முதல் முறை பந்தை உருட்ட, அத எல்லா கட்டைகளையும் கீழே தள்ளவில்லை. இரண்டாவது முறையில் எல்லாக் கட்டைகளும் விழுந்தது. ஆக்டிவிட்டி ரூமிற்கு விரைந்தார்கள். அங்கு கணேஷின் கண்கள் கட்டப்பட்டது. சுஜாவின் வழிகாட்டுதல்களைக் கேட்டு யானையின் வாலை சரியாக ஒட்டினார். அடுத்ததாக களமிறங்கியது சிநேகன் அணி, ஆரவ்வின் முதல் உருட்டிலேயே பந்து எல்லாக் கட்டைகளையும் கீழே தள்ளிவிட்டது. ஆக்டிவிட்டி ரூமில் பிந்துவின் கண்கள் கட்டப்பட்டு சிநேகன் வழிகாட்ட அவரும் யானையின் வாலை சரியாக ஒட்டினார். பத்து நிமிடத்துக்குள்ளாகவே இரண்டு அணியும் டாஸ்க்கை முடித்துவிட்டார்கள். குறைவான நேரத்தில் முடித்து டாஸ்க்கை வென்றது க்ரீன் டீம். இந்த டாஸ்க்கிற்கு பாயின்ட்ஸ் எல்லாம் கிடையாது. யானை வடிவ நினைவுக் கோப்பை ஒன்று பரிசளிக்கப்பட்டது. 

**

சுஜா திருமணம் செய்ய இருப்பவருக்கு அன்று பிறந்தநாள் போல அழகான ஒரு கோலமிட்டு I Miss You so much என்று அவர் பெயரைப் போட்டிருந்தார். தனது சக நண்பர்களை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லச் சொன்னார். எல்லாரும் அவருக்காக ஹேப்பி பர்த்டே சாங் பாடினார்கள். சுஜா கண்களில் காதல் மின்ன ‘ஹேப்பி பர்த்டே அத்தான்.. நீங்க இல்லாம எனக்கு இங்க நரக வேதனையா இருக்கு!’ என்று உணர்ச்சிபொங்க தன் அன்பிற்குரியவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துகொண்டார். (எங்கள் சார்பிலும் ஹேப்பி பர்த்டே பாஸ்..!) 

**

தேவதைகள் மற்றும் பேய்கள் டாஸ்க்கிற்கான மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. சிநேகன், சுஜா, கணேஷ் அந்த டாஸ்க்கின் முதல் பார்ட்டில் பேய்கள் லாக்கரை திறக்காமல் பார்த்துக்கொண்டதற்கு 10 பாயின்ட். இரண்டாவது பார்ட்டில் லாக்கரைத் திறந்ததற்கு 10 பாயின்ட்ஸ். இதுதவிர பிக்பாஸ் சிறப்பாக செயல்படும் ஒரு அணியைத் தேர்வு செய்து அந்த அணிக்கு 10 பாயின்ட்ஸ் தருவதாக சொல்லியிருந்தார். இப்போது 10 கொடுத்தால் 30 ஆகிவிடும் மூவரும் ஆளுக்கு 10 ஆக பிரித்துக்கொள்வார்கள். அது தப்பாச்சே என்று யோசித்த பிக்பாஸ் 5 மதிப்பெண்களை மட்டும் வழங்கினார். 25 மதிப்பெண்களை மூவரும் பிரித்துக்கொள்ள வேண்டும். இப்ப என்ன பண்ணுவீங்க? என்று தன் குரூரசிரிப்பை சிரித்திருப்பார் பிக்பாஸ். ஆளுக்கு 8 எடுத்துக்கொள்வோம் மீதம் இருக்கும் 1 பாயின்ட் யாருக்கு? என்று கேள்வி எழுந்தபோது.. ’நானே வாய்விட்டுக் கேட்குறேன்.. அந்த ஒரு பாயின்ட்டை எனக்கு கொடுத்துடுங்க. என்னை போட்டு அடிச்சாங்க.. குப்பையெல்லாம் மேல கொட்டுனாங்க தெரியுமா?’ என்று பாவமான குரலில் கேட்க மறுப்பேதும் சொல்லாமல் மற்ற இருவரும் சம்மதித்தார்கள். ஆக சுஜாவுக்கு 9 மதிப்பெண்கள் போனது.

கணேஷ் தோசை சுடுகிறேன் என்று சொல்லி  எதையோ முயற்சிக்க தோசைக்கல் தீய்ந்து கல்லில் இருந்து வராமல் தோசை ஒட்டிக்கொண்டது. அருகில் நின்றிருந்த சுஜா அவரின் சொந்த தோசைக்கல்லாய் இருந்திருந்தால், இந்நேரம் சாமியாடியிருப்பார். பரிசுத்தொகையே 50 லட்சம்தான் ஆனால் இவர்கள் கோதுமை மாவைக் கொட்டி, பீன் பேக்கை கிழித்து, போர்டை உடைத்து, இதோ இப்போது தோசைக்கல்லைத் தீய்த்து… பிக்பாஸூக்கு தாறுமாறாக செலவு வைக்கிறார்கள். இவர்கள் பாயின்ட்ஸெல்லாம் குறித்துவைக்கும் எக்ஸெல் சீட்டில் இந்த சேதாரங்களையும் போட்டு வச்சு பரிசுகொடுக்கும்போது அதெல்லாம் கழிச்சுட்டு குடுங்க பிக்பாஸூ…! அப்போதான் அடுத்த சீசன்ல வர்றவிய்ங்களாவது கண்ணும் கருத்துமா பாத்துப்பாய்ங்க போட்ட முதல் தப்பும்.

பிக் பாஸ் தமிழ்

 

**

Ticket To finale Task 2:

இந்த டாஸ்கிற்கு ‘எடுத்துட்டு ஓடு’ என்று பெயர் வைத்திருந்தார்கள். இப்படியே போனால் போட்டியாளர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து ‘எகிறிக் குதிச்சு ஓடு’ என்று தாங்களாகவே ஒரு போட்டியை உருவாக்கி வீட்டின் காம்பவுன்டு சுவர் ஏறிக்குதித்து ஓடத்தான் போகிறார்கள். இந்த டாஸ்க் என்னவென்றால் க்ரவுண்டின் நடுவே ஒரு க்யூப் வைத்திருப்பார்கள், இரண்டு சைடும் எல்லைக் கோடுகள் இருக்கும். இரண்டு பேர் களமிறங்குவார்கள், ஒருவரை ஏமாற்றி க்யூபை எடுத்துக்கொண்டு எல்லைக் கோடைத் தாண்டிவிட்டால் அவர் வெற்றி அப்படி ஓடும்போது இன்னொருவர் தொட்டுவிட்டால் தொட்டவர் வெற்றி. இரண்டு அணியாக பிரிய வேண்டும் என்று சொன்னதும் ஹரீஷ் நக்கலாக, உங்களுக்கே தெரியும் யார் யார் ஒரு டீம்னு என்று மீண்டும் சர்காஸத்தை பிழிந்தார். குறைவான மதிப்பெண்களை எடுத்த அணி மூவரும் சேர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு அடுத்த அறிவிப்பு வரும்வரை ஒன்றாகவே சுற்ற வேண்டும்.

ஹரீஷ் தன்னால் ஓடமுடியாது நான் இந்தப் போட்டியில் உப்புக்கு சப்பாணி என்று பிக்பாஸில் ஸ்பெஷல் பெர்மிசன் வாங்க, ‘மிஸ் மிஸ் நானும் மிஸ்’ என்று அதே பெர்மிசனை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு தானும் போட்டியிலிருந்து விலகினார் சுஜா. இவர்களுக்கும் சேர்த்து அவர்கள் டீமில் யாராவது ஆடவேண்டும்.

பிக் பாஸ் தமிழ்

 

ஆரவும் கணேஷூம் முதலில் களமிறங்கினார்கள். கணேஷை க்யூபை எடுத்துக்கொண்டு எல்லையைக் கடந்து வெற்றிபெற்றார். அடுத்து ஆரவும் சிநேகனும் இம்முறை ஆரவ் எடுத்துக்கொண்டு ஓட சிநேகன் அவரைத் தொட்டு அவுட்டாக்கினார். அடுத்த சுற்றில் பிந்துவும் கணேஷூம் பிந்து எடுத்தார் கணேஷ் தொட்டு அவுட்டாக்கினார். இப்படியாக தொடர போட்டியின் விதிப்படி எல்லைக் கோடை நோக்கித்தான் ஓடவேண்டும் ஆனால் கணேஷ் வேறு திசையில் எங்கோ ஓடியதால் அந்த பாயின்டும் ஹரீஷ் அணிக்குப் போனது. இறுதியில் மொத்தமாக சிநேகன் அணி வென்றது. அவர்கள் மொத்தம் 12 பாயின்ட்டுகள் எடுத்திருக்க ஆளுக்கு நான்காக பிரித்துக் கொண்டார்கள். 

**

விதிமுறையின் படி தோற்ற அணியினரின் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டன. மூவரும் சேர்ந்து சேது விக்ரம் போல நடந்து வந்தார்கள். சிநேகன் எல்லாருக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்தார்… பதனி பதனி என்று பதனி வித்ததைத் தவிர சிநேகன் கற்றுக்கொடுத்த வித்தையை வார்த்தைகளில் வடிப்பது சற்று சிரமம்தான். 

சரி எல்லார் காலையும் ஒண்ணா சேர்த்துக் கட்டியிருக்காங்களே.. தூங்கும்போது பாத்ரூம்போதெல்லாம்? என்று சந்தேகம் எழ அதற்கும் பிக்பாஸ் ஒரு விளக்கவுரை அனுப்பினார். பாத்ரூம் போகும்போது மட்டும் கட்டை அவிழ்த்துக் கொள்ளலாம். தூங்கும்போது நோ.

போட்டியாளர்களின் சுயநலத்தில் பொதுநலமும் பொதுநலத்தில் சுயநலமும் இருந்தது இவர்கள்  விட்டுக்கொடுக்கிறார்களா விட்டுப்பிடிக்கிறார்களா? என்ற குரலுடன் விளக்குகள் அணைக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...