Saturday, April 20, 2024
Home » பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் ஐ.எம்.எப் 2 ஆம் கட்ட கடனுதவி

பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் ஐ.எம்.எப் 2 ஆம் கட்ட கடனுதவி

by damith
October 23, 2023 6:02 am 0 comment

இலங்கை கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அந்நெருக்கடியில் இருந்து நாட்டை பொருளாதார ரீதியில் முழுமையாக மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பயனாக குறுகிய காலப்பகுதி முதல் பொருளாதார நெருக்கடியின் அசௌகரியங்களும் தாக்கங்களும் பாதிப்புக்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின.

இந்நிலையில் இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கான இவ்வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) உதவி ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவி செயற்றிட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை 48 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்குவதற்கான இணக்கப்பாடு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டப்பட்டது. அவ்விணக்கப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமைய, கடந்த மார்ச் மாதம் கடன் நிதியுதவிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதோடு, அதேமாதம் 330 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

இவை இவ்வாறிருக்க, இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு நம்பிக்கைதரும் வகையில் வேகமாக மீட்சி பெறத் தொடங்கியது. நாட்டின் பணவீக்கம் கட்டம் கட்டமாக வீழ்ச்சியடைந்து தற்போது ஒற்றை இலக்கத்தில் காணப்படுகிறது. மார்ச் முதல் ஜுன் வரையான காலப்பகுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக் காணப்பட்டது. வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் அனுப்பி வைக்கும் அந்நிய செலாவணியும் அதிகரித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் உயர்ந்துள்ளது. பங்களாதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை தரும் வகையில் மறுமலர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்கவென எட்டப்பட்டிருக்கும் இணக்கப்பாடுகளின் நிறைவேற்றம் குறித்த முதலாம்கட்ட மதிப்பீடு கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி மாதம் நடைபெற்றது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவென நிதியத்தின் தலைமையகத்தில் இருந்து உயரதிகாரிகள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி என்பவற்றின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றங்கள் எட்டப்படாத நிலைமை இம்மதிப்பீட்டின் போது அவதானிக்கப்பட்டது. அதனால் இரண்டாம் கட்ட கடன் நிதியை விடுவிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் என்ற கருத்துப்பட நிதிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இலங்கை அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் முதலாம் கட்ட மதிப்பீடு தொடர்பில் இரு தரப்பினருக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை நிதியம் அறிவித்தது.

இதேவேளை நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத் தலைவரும் பிரதித்தலைவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசாங்கத்தினால் முன்கூட்டியே நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிதியியல் உத்தரவாதம் தொடர்பான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் இணக்கப்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு நிதியியல் உத்தரவாதம் என்பது கடன் மறுசீரமைப்பு செயன்முறை உரிய காலப்பகுதியில் கடன்சார் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை அளிக்கப்படுதலையும் உள்ளடக்கி இருக்கிறது. அதன்படி, நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதியின் பிரகாரம் இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிதி வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி தலைமையில் அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாகவே கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போதிலும் கூட குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டை கட்டம் கட்டமாக மீட்சி பெறச் செய்து மறுமலர்ச்சி பாதையில் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டக் கடனுதவிக்கான அங்கீகாரம் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு வழிவகை செய்யும். அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலையை அடையும் என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT