ஒன்றிணைந்த எதிரணி சபை நடுவில் திரண்டு பெரும் அமளி | தினகரன்

ஒன்றிணைந்த எதிரணி சபை நடுவில் திரண்டு பெரும் அமளி

மாகாண சபைகளின் கருத்தை பெறாமல் முறையற்ற விதத்தில் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணி நேற்று சபை நடுவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கவிடாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் எதிரணியின் கோசத்திற்கு மத்தியில் விவாதம் நடத்தப்பட்டு பின்னர் பாராளுமன்றம் சுமார் இரண்டு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

கட்சித்தலைவர் கூட்டத்தின் பின்னர் பாராளுமன்றம் பிற்பகல் 11.30 மணியளவில் கூடியதோடு இந்த சட்ட மூலத்தை மாகாண சபைகளின் அனுமதிக்கு அனுப்ப தேவையில்லை என சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் சட்ட மூலத்தை விவாதத்திற்கு எடுப்பதற்கு எந்த சட்ட ரீதியான சிக்கலும் கிடையாது என்று அறிவித்த சபாநாயகர் விவாதத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.இந்த நிலையில் விவாதம் நடத்துவதை தடுக்க முற்பட்ட எதிரணியினர் மௌனம் காத்ததோடு விவாதம் சுமூகமாக இடம்பெற்றது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடியது.தினப்பணிகளை தொடர்ந்து மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பமானது.

இதன் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து தினேஷ் குணவர்தன இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் கடுமையான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

மாகாண சபைகள் தொடர்பான சட்டமூலம் முதலில் மாகாண சபைகளின் அனுமதிக்காக அனுப்பப்பட வேண்டும்.20 ஆவது திருத்தத்திலும் மாகாண சபைகளின் கருத்து பெறப்பட்டன என தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், மாகாண சபைகளின் அனுமதி பெறத் தேவையில்லை .நான் சட்ட ஆலோசனை பெற்றேன் என்றார்.

அடுத்து கருத்து வெளியிட்ட விமல் வீரவங்ச எம்.பி பொதுமக்கள் நீதிமன்றம் செல்லும் உரிமையை மறுக்கும் வகையில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

மக்களின் வாக்குரிமை தொடர்பான இந்த சட்டமூலத்தை காலையில் கையில் தந்து மாலையில் வாக்களிக்குமாறு கோருவது அநியாயம்.

சபாநாயகர்

சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்ற அமைச்சருக்கு இடமளிக்கு மாறு கோருகிறேன்.இதிலுள்ள பிரச்சினைகளை கட்சித்தலைவர் கூட்டத்தில் பேச முடியும் என சபாநாயகர் அறிவித்தார்

இதனையடுத்து மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா உரையாற்றினார்.

ஆனால் அவரின் உரைக்கு இடையூறு செய்யும் வகையில் ஒன்றிணைந்த எதிரணியினர் கோசம் எழுப்பினார்கள். ஆனால் இடையூறுக்கு மத்தியில் அவர் உரையை தொடர்ந்தார்.

ஒழுக்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த காமினி லொகுகே எம்.பி

நான் மாகாண சபை தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தலைவராக இருக்கிறேன்.இதிலுள்ள திருத்தங்கள் குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா

நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஏதும் சட்ட மூலம் தொடர்பில் திருத்தம் கொண்டுவர சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அதிகார உள்ளது.

டளஸ் அலகப்பெரும எம்.பி

இந்த சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட்டதா என நாம் ஏற்கெனவே வினவியிருந்தோம். அரசாங்கம் பதில் வழங்கவில்லை.துறைசார் மேற்பார்வை குழுவுக்கும் திருத்தங்கள் வழங்கப்படவில்லை.

சபை முதல்வர் அமைச்சர் கிரியெல்ல

18 ஆவது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தினம் காலை தான் திருத்தம் வழங்கப்பட்டன. மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஹெக்டர் அப்புஹாமி எம்.பி

நானும் துறைசார் மேற்பார்வை குழுவில் அங்கம் வகிக்கிறேன். இங்கு இந்த சட்டமூலம் பற்றி ஆராய்ந்து பயனில்லை பாராளுமன்ற விவாதத்தில் ஆராய்வோம் என லொகுகே எம்.பி குறிப்பிட்டார்.

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி

இது முக்கியமான சட்டமூலமாகும்.இந்த சட்டமூலத்திற்கு குழுநிலையில் திருத்தம் முன்வைக்க முடியும்.தற்பொழுது வேட்புமனுவில் 10 வீதம் கூட பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை

அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல

மேற்பார்வை குழுவுக்கு திருத்தங்கள் முன்வைக்க தேவையில்லை என்றார்.

விவாதத்தை நடத்தாது பாராளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு எதிரணி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததோடு சபாநாயகர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் காலை 10.55 மணியளவில் ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் சபையில் நடுப்பகுதிக்கு வந்து செங்கோலுக்கு முன்பாக திரண்டு கோஷம் எழுப்பினார்கள்.

அவர்களை கலைந்து செல்லுமாறு சபாநாயகர் பலதடவை கோரினாலும் சுமார் 30 இற்கும் அதிகமான ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகள் சபை நடுவில் குழுமியிருந்தார்கள். ஆளும் தரப்பிலும் ஐந்தாறு எம்.பிகள் செங்கோலை பாதுகாத்தவாறு அந்த இடத்தில் திரண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி உரையாற்றினார். அவரின் உரைக்கு எதிரணியினர் கோசம் எழுப்பி இடையூறு செய்தார்கள். ஆனால் அவர் தொடர்ந்து உரையை நிகழ்த்தினார். அவரின் உரையை தொடர்ந்து 11.15 மணியளவில் சபாநாயகர் சபை நடவடிக்கையை 12.00 மணி வரை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் சபாநாயகர் தலைமைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.சட்டமா அதிபரும் இதில் பங்கேற்றார்.

மீண்டும் பாராளுமன்றம் 1.30 மணியளவில் கூடியது.

இதன் போது கட்சித் தலைவர் கூட்டம் குறித்து அறிவித்த சபாநாயகர்.

மாகாண சபைகளின் அனுமதிக்காக இந்த சட்ட மூலத்தை அனுப்புவது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்து வினவப்பட்டது. சட்டமா அதிபர் கடிதம் மூலம் தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.துறைசார் குழுவில் கடந்த 6 ஆம் திகதி இது பற்றி ஆராயப்பட்டுள்ளது. திருத்தங்களை துறைசார் குழுவுக்கு அனுப்பத் தேவையில்லை. இங்கு சட்பூர்வமான தவறு எதுவும் நடக்கவில்லை என்றார்.

விமல் வீரவங்ச எம்.பி

மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை என்ற சட்டமா அதிபரின் கடிதத்ததை சபையில் சமர்ப்பிக்குமாறு கோருகிறேன்.

சபாநாயகர்

அதனை முன்வைக்கிறேன். அவநம்பிக்கை இருந்தால் முன்வைக்கிறேன்.

விமல் வீரவங்ச எம்.பி

உங்களை பற்றிய நம்பிக்கை நாளாந்தம் குறைந்து வருகிறது.

காமினி லொகுகே எம்.பி

நாம் அனுமதித்த சட்ட மூலமன்றி வேறு சட்டமூலமே முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாண தேர்தல் சட்டத்துடன் தொடர்பற்ற திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல

கட்சித்தலைவர் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை பற்றி ஆராயப்பட்டது. பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என்றார்.

இதனையடுத்து விவாதம் ஆரம்பமானதோடு பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா உரையாற்றினார். மாலை 6 மணி வரை விவாதம் நடத்தப்பட்ட பின்னர் திருத்தங்களின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...