Friday, March 29, 2024
Home » இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதே நோக்கம்

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதே நோக்கம்

by damith
October 23, 2023 6:00 am 0 comment

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஸ்மார்ட் நாடு – 2048 ஐ வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், திருத்தப்பட்ட கட்சியின் புதிய யாப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒன்லைன் மூலம் அமைப்புக்களை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் நாட்டிற்கு முன், ஐக்கிய தேசியக் கட்சி ஸ்மார்ட் கட்சியாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

‘என்னில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற குறியீட்டை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘சிய ரட’ வின் பழைய இதழ் ஒன்று அதன் ஸ்தாபகரான திருமதி மாயா களுபோவிலவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது:

“இன்று நாம் நடாத்தும் இந்த விசேட மாநாட்டின் முதல் பணி, கட்சியின் புதிய யாப்பை முன்வைத்து, அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதுதான். எதிர்காலத்தை மையமாக வைத்து இந்தப் புதிய யாப்பை உருவாக்கினோம் என்றே கூற வேண்டும். அதன்படி தற்போதுள்ள யாப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருத்தத்தின் சில முக்கியமான விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இத்திருத்தத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு முதலில் இணையவழி (Online) அமைப்புக்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, அவர்கள் தங்கள் சமூக ஊடகங்கள் மூலம் செயல்பட முடியும். இது எதிர்காலத் திட்டம். 1977இல் நாங்கள் கட்சியில் செயற்பட்ட போது தொலைக்காட்சி இருக்கவில்லை. ஒரே ஒரு வானொலி மாத்திரமே இருந்தது. வீடு வீடாகச் சென்றோம். அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு 05 முதல் 10 இலட்சம் உறுப்பினர்கள் தேவைப்பட்டனர். இன்று, நிலைமை முற்றிலும் வேறுபட்டது. இன்று நாம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம்.

எனவே கட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. ஸ்மார்ட் நாட்டிற்கு முதலில் ஒரு ஸ்மார்ட் கட்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அந்த சவாலை ஏற்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கட்சியின் பொதுச்செயலாளரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

செயற்குழுவுக்கு இருந்த முக்கிய அதிகாரங்களை நிறைவேற்று சபைக்கு வழங்கியுள்ளோம். நிறைவேற்று சபையே தலைவரை நியமிக்கிறது. முக்கிய கொள்கை முடிவுகள் நிறைவேற்று சபையால் எடுக்கப்படுகின்றன. நிறைவேற்று சபை 03 மாதங்களுக்கு ஒருமுறை கூடும். ஆனால் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக 06 வாரங்களுக்கு ஒருமுறை கலந்துரையாட முடியும். நிறைவேற்று சபையின் தீர்மானங்களை எமது செயற்குழு நடைமுறைப்படுத்த வேண்டும்.

300,-400 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு இருந்தால், பாரிய செயற்குழு தேவையில்லை. கட்சி எப்போதும் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, அரசியல் வியூகங்களைத் தயாரிப்பதற்கு ஒரு உயர் சபை ஒன்று உள்ளது. இவை எங்களின் முக்கிய திருத்தங்கள். இந்த திருத்தங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். இதன் மூலம் இலங்கையின் முதலாவது டிஜிட்டல் கட்சி உருவாகியுள்ளது. நாம் கடந்த காலத்தில் சிக்கிக் கொள்ளாமல் எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இன்று முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணைக்கு எவரேனும் எதிராக இருப்பின் அதனை தெரிவிக்க முடியும். யாரும் எதிர்க்கவில்லை என்பதை மௌனம் காட்டுகிறது.

எனவே, நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளீர்கள் என்பதை இந்த சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யாப்பு ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன்னர் இந்த டிஜிட்டல் கட்சியை எப்படிக் கட்டியெழுப்புவது என்று ஆலோசிப்போம். இதன் மூலம் இலங்கையில் முதன்முறையாக தன்னை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு திறந்த கட்சி உருவாகி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் இன்று நான் உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகின்றேன். நான் இந்த கட்சியின் தலைவர் மற்றும் முழு நாட்டின் ஜனாதிபதி. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, ஏனைய அனைத்துக் கட்சிகளின் ஜனாதிபதி. நண்பர்களோ, எதிரிகளோ, அவர்கள் அனைவருக்கும் நான்தான் ஜனாதிபதி. அதன்படி தான் செயல்பட வேண்டும். இந்த இரண்டு பதவிகளையும் நாம் பிரித்து செயற்பட வேண்டும். அப்போது பிரச்சினைகள் ஏற்படாது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, இந்த நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எனக்கு உதவ முன்வந்தன. பிரதமரும் அமைச்சர்களும் அங்கிருந்தனர். கட்சிகள் இல்லாமல் பலர் இருந்தனர். அதைப் பாதுகாத்து முன்னேறுவோம். அங்கிருந்துதான் புதிய அரசியல் கலாசாரம் பிறக்கிறது.

எனக்கு முன்னர் உரையாற்றிய பேச்சாளர்கள் கூறியது போல், 2020 இல் கசப்பான உண்மையைச் சொன்னோம். இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 07 பில்லியன் டொலர்களை எடுத்தால் நாட்டை மீட்க முடியும். அதை யாரும் கேட்கவில்லை. வாக்காளர்கள் கேட்கவில்லை. பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லாத பலர், நாட்டின் பொருளாதாரம் குறித்தேனும் குறைந்தது பேசுமாறு என்னிடம் கேட்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவோம் என்றும் அன்று பாராளுமன்றத்தில் கூறினேன். சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள் இல்லையேல் நாட்டு மக்களுக்கு இக்கட்டான நிலைமை ஏற்படும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். அன்றைய தினம் நான் இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தபோதும், அது தேவையில்லை என சிலர் என்னை விமர்சித்தனர்.

மே மாதம் 1ஆம் திகதி, 2022 இற்குள், நாடு வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல, அரசாங்கத்தை வழிநடத்த யாரும் இருக்கவில்லை. அந்தப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. ஆளுங்கட்சியால் ஏற்க முடியவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும். அதிலிருந்து எதிர்க்கட்சிகள் விலகியது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் வந்து இந்த நாட்டைப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். இதை செய்ய முடியுமா என்று ஜனாதிபதி என்னிடம் கேட்டபோது, நான் செய்வேன் என்றேன். ஏனெனில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது ஐக்கிய தேசியக் கட்சியின் வேலையாகும். இது கடினமான பணி அல்ல. ஜனாதிபதி நிதியமைச்சைக் கையளித்ததும் நான் பொறுப்பேற்றேன். அப்படித்தான் முன்நோக்கி வந்தோம். அன்று ஓடிச்சென்றவர்கள் இன்று வந்து நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கச் சொல்கிறார்கள். 2022 ஜூலை 09ஆம் திகதி, அன்று என்ன நடந்தது. இந்த நாட்டில் அதிகாரம் ஜனநாயகத்தின்படியே மாற்றப்பட வேண்டும். ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், அலரி மாளிகை இடிக்கப்படும் போது கட்சித் தலைவர்கள் என்ன செய்தார்கள்? ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் நாம் இதைப் பற்றி பேசியபோது, இதை யாராவது நிறுத்தச் சொன்னார்களா? யாரும் அவ்வாறு செய்யவில்லை.

நாடு கொந்தளிப்பில் இருந்தது, ஜனாதிபதி மாளிகையை விட்டு ஜனாதிபதி வெளியேறி இருந்தார். இனி புதிய அரசாங்கம் எவ்வாறு அமையும்? அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகப் போவதில்லை என பகிரங்கமாக தெரிவித்தார். நான் வெளியேறுவேன் என நினைத்து எனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினர் அவ்வாறு வெளியேற மாட்டார்கள்.

பின்னர் திங்கட்கிழமை அமைச்சரவையைக் கூட்டி கலந்துரையாடல் பணிகளை ஆரம்பித்தேன். பின்னர் புதன்கிழமையன்று அந்தக் குழுவினர் பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்ற முயன்றனர். நாட்டின் நிலை குறித்து பாராளுமன்றத்தில் ஒன்லைன் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தபோது பாராளுமன்றத்தையும் சூழ்ந்தனர். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் உங்கள் கடமை என இராணுவத் தளபதியிடம் தெரிவித்தேன்.

அதற்கிணங்க இந்த பயங்கரமான நிலைமையை தடுத்து நிறுத்தி ஆட்சி அதிகாரத்தை பெற்று அமைச்சரவையுடன் நாட்டின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்தோம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன் என்றே கூற வேண்டும். இந்தப் பொருளாதாரத்தை சரி செய்ய முடியாது என்றும் ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார் என்றும் பலர் கூறினர். கோட்டாபய ராஜபக்ஷவிடம் பிரதமர் பதவியை எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ கேட்கவில்லை. அவர் சொன்னதால் ஏற்றுக்கொண்டேன். அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி என்னிடம் தெரிவிக்கும் போது, அதனை நான் பின்பற்ற வேண்டும். அது நாட்டின் பொறுப்பு. நான் அதைச் செய்து ராஜபக்ஷக்களைப் பாதுகாப்பேன் என்றால் அவர்களுக்குக் கடிதம் எழுதி பிரதமர் பதவியைக் கேட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு இலங்கையர்களையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அப்போது இந்த நாட்டில் உரம் இல்லை, எரிபொருளும் இல்லை. அன்றைய நாட்டின் நிலைமை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இந்தியாவிடமிருந்து 3500 மில்லியன் டொலர்கள் கிடைத்தது. அதுதான் எங்களிடம் இருந்தது. நான் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு வீட்டில் 100-200 டொலர்கள் மீதம் இருந்தன. அந்தத் தொகையைக் கருத்தில் கொண்டால் இலங்கை அரசை விட அதிக அந்நியச் செலாவணி என்னிடம் இருந்தது. இந்த நிலையிலேயே அரசாங்கத்தை முன்நோக்கி கொண்டு வந்தோம்.

சர்வதேச நாணய நிதியம் 2300 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. தற்போது எமக்கு 660 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. 1100 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்கியது. கடந்த ஆண்டும் உரம் கொண்டு வர பணம் வழங்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1350 மில்லியன் டொலர் பெறப்பட்டது.

எவ்வாறேனும் எங்களுடைய கையிருப்பில் 1500 மில்லியன் டொலர் சேர்ந்தது. இவற்றை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.

நாங்கள் பங்களாதேஷிடம் இருந்து பெற்ற 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்திவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் இருந்து பெற்ற பணத்தை தவணை முறையில் திருப்பி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை நான் நிறைவேற்றினேன். அங்கு அரசியலமைப்பு சபைக்கு இடம் வழங்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மேலும், அரசின் நிதி மேற்பார்வைக் குழுவை மீண்டும் அமைத்துள்ளோம். மேலும், வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பான குழுவும் அமைக்கப்பட்டது.

நாங்கள் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்தோம். மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவும் உருவாக்கப்பட்டது. வழிமுறைகள் பற்றிய குழுக்கள் அமைக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் இதில் இணைந்தனர். அவற்றின் தலைவர்களாக எதிர்க்கட்சியின் சிலர் உள்ளனர். அவர்கள் இந்தப் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அது எனக்கு ஒரு பாரிய ஆதரவு என்றுதான் கூற வேண்டும்.

மேலும், பாராளுமன்றத்திற்கு தனி அலுவலகம் ஒன்றை நான் உருவாக்கியுள்ளேன். அதுதான் பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம். எங்கள் புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களின் புள்ளிவிவரங்களை நீங்கள் ஒப்பிடலாம். தவறு இருந்தால் தெரிவிக்கலாம். இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் முறைகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

திங்கட்கிழமை நான் இன்னொரு ஆணைக்குழுவை நியமிப்பேன். ஊழல் நடக்கும் ஒரு இடம்தான் அரசியல் கட்சிகள். இன்று அது அதிக செலவாகும். பணத்தின் அளவு அதிகரிக்கும்போது, அழுத்தமும் அதிகரிக்கும். அதேபோன்று, பணத்துடன் குற்றவாளிகள் அதில் இணைகிறார்கள். இன்று இக்வடோர் போன்ற நாடுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கட்சிகளை கைப்பற்றி வருகின்றனர். அதன் ஜனாதிபதி வேட்பாளர் கொல்லப்பட்டார். மேலும், ஒரு சில கட்சிகளில் யார் இருக்கிறார்கள் என்பது கூட மக்களுக்கு தெரியாது. மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனவே, சர்வதேச முறைகளில் கவனம் செலுத்தி இலங்கையில் புதிய அமைப்பை உருவாக்க முன்னாள் பிரதம நீதியரசர் டெஃப் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்படும். இது சுயாதீனமானது மற்றும் பக்கச்சார்பற்றது மற்றும் அந்த அறிக்கையின்படி செயற்பட எதிர்பார்க்கிறோம்.

அடுத்த வருடம் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவேன். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு, 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படலாம். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இப்போதிருந்தே தயாராக வேண்டும்.

நாம் ஒரு ஸ்மார்ட் நாட்டை உருவாக்க விரும்புகிறோம். ஒரு ஸ்மார்ட் நாட்டை உருவாக்க, ஒரு சிறப்பான முறை இருக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். இதற்கு மற்ற கட்சிகளும் ஒத்துழைக்கும் என நம்புகிறோம். நாம் முன்னோக்கிச் செல்வோம். ஐக்கிய தேசியக் கட்சி ஸ்மார்ட் கட்சியாக இருக்க வேண்டும். அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் எப்படி ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அந்த ஸ்மார்ட் நாட்டை கட்டியெழுப்பும் பணியை நாம் மேற்கொள்வோம்”.

இவ்வாறு ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்தன குறிப்பிட்டதாவது:

“இந்த நாட்டின் இளைஞர் சமூகத்தை தொழில்நுட்பத்தால் பொருளாதார ரீதியாக பலப்படுத்த தயாராகி வருகிறோம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உரையாற்றுகையில் “2028ஆம் ஆண்டுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை எமது தலைவர் முன்வைத்துள்ளார். எனவே இந்த வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்து 100 இலட்சம் வாக்குகளை வழங்கி அவரை மீண்டும் ஜனாதிபதி நாற்காலியில் அமரவைக்க முன்வருமாறு உங்களை அழைக்கின்றேன்” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க உரையாற்றுகையில் “சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட விடயங்கள் உள்ளன. இரண்டாவது தவணை மூலம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடியும். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புகள் நாடு இன்று இருக்கும் நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு உதவுகின்றன. ஆனால் இப்போது நாங்கள் நிலையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியடைய முடியாது.” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார பேசுகையில் “ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த நாடு மிகவும் பயங்கரமான இடத்திற்கு தள்ளப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிந்து, நாடு அராஜகமான நிலையில் இருந்த போது, நாட்டை மீட்க எந்த அரசியல் தலைவரும் முன்வரவில்லை. அந்த சவாலை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். அவர் பிரதமர் பதவியைப் போலவே ஜனாதிபதி பதவியையும் ஏற்றார். இன்று அவரது தலைமையில் இந்த நாடு சரியான பாதைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்காலத்தில் மக்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் உரையாற்றுகையில், “மிக மோசமான நிலையில் இருந்த நாட்டைக் காப்பாற்றிய ஐ.தே.க. கட்சி, இன்று பல மாற்றங்களுடன் முன்னேறி வருகிறது. யானை எழுந்தவுடன் அதன் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மகாசங்கத்தினர் தலைமையிலான மதகுருமார்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் மற்றும் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT