பிக் போஸ் 86 ஆம் நாள்: ஹலோ பிக் போஸ் முடியை கழட்டணுமா? | தினகரன்


பிக் போஸ் 86 ஆம் நாள்: ஹலோ பிக் போஸ் முடியை கழட்டணுமா?

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

86-ம் நாள் விடிந்தது. முந்தைய நாள் விளையாடிய பலூன் விளையாட்டில் பட்ட காயத்துக்கு இன்னும் மூன்று நாள்களுக்குத் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் எனும் அளவுக்கு போட்டியாளார்கள் சோர்வில் இருந்திருப்பார்கள். ஆனாலும் ’சின்சியர்’ பிக் பாஸ் காலை எட்டு மணிக்கே 'வேக் அப் ஸாங்' ஒலிக்கவிட்டார். ’இறுதிச்சுற்று’ படத்திலிருந்து ரித்திகா சிங்கின் அசத்தல் சென்னை ஆட்டத்தில் ’அஞ்சுநூறு தாளை பாத்து ஆட்டம் போடுறா’ பாடல் ('அஞ்சாறு பாயிண்ட்டுக்கு ஆட்டம் போடுறாங்க ஹவுஸ்மேட்ஸ்' என்றும் கொள்ளலாம்!). சுஜாவும் கணேஷூம் வெளியில் வந்து ஆடத்தொடங்கியிருந்தனர். ஹரீஷ் காலைத் தூக்கமுடியாமல் விந்திவிந்தி நடந்துவந்தார். ’இனி காலையில் ஒலிக்கும் பாடலுக்கு அனைவரும் கண்டிப்பாக  ஆட வேண்டும்’ என்ற விதிமுறை விதிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியில்லாமல் ஹரீஷும் ஆட வேண்டிய நிலை. அனைவருக்குமே பாயின்ட் முக்கியம் என்பதால், ஆட ஆரம்பித்து இருந்தனர். கால் வலி காரணமாக 'இந்தியன்' சீனியர் கமல் களிமண்ணில் ஆடுவது போல், இடுப்புக்கு மேலே மட்டும் ஷேக்கி ஷேக் செய்து ஆடியதாக கணக்கு காட்ட முயற்சித்தனர்  (பாயிண்ட் முக்கியமாச்சே.. முட்டி ஜாயிண்ட் கழண்டதைப் பார்த்தா முடியுமா?). கணேஷ் மட்டும்தான் கோவாவுக்கு பிக்னிக் வந்திருக்கும் அங்கிள் போல், டவுசர் அணிந்துகொண்டு ஜாலியாக ஆடினார். ஆனால், நடக்கும்போது வலிமிகுதியால் தாங்கித் தாங்கி நடந்த சுஜா, ஆடும்போது மற்றவர்களைவிட இயல்பாகவே நடனமாடினார். உண்மைய சொல்லும்மா.... உனக்கு போர்டுல அடிபட்டுச்சா இல்லையா?! 

bigg boss Tamil

**

சிநேகனும் ஆரவ்வும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ’மெண்டல் சேலஞ்சுனா ஓகே... பிசிக்கல் சேலஞ்சுனா முடியவே முடியாது’ என்றார் ஆரவ். சிநேகனும் வழிமொழிந்து ‘நம்மளை ரொம்ப சோதிக்குறாங்க. வெளில இருக்குற மக்கள் தினமும் நிறைய மக்களை சந்திக்கிறாங்க… பல விஷயங்கள்ல அவங்களை ரிலாக்ஸ் பண்ணிக்குறாங்க. அவங்களால இதை பண்ணமுடியும். ஆனா நூறு நாள் ஒரே வீட்டுக்குள்ள இருக்குறவங்க மனநிலை எப்படி இருக்கும்னு யோசிக்கணும். ஒரே இடம், ஒரே சூழ்நிலை...’ என்றெல்லாம் ஏகத்துக்கும் அங்கலாய்த்தார். ஆனால், ஹவுஸ்மேட்ஸிடம் இப்படியெல்லாம் பேசிவிட்டு, பிக்பாஸ் கூப்பிட்டதும் ஓடிச் சென்று 'சொல்லுங்க எசமான்.... உத்தரவு எசமான்.... செஞ்சுப்புடலாம் எசமான்!' என்றெல்லாம் முதல் ஆளாக ஆமாம் சாமி போடுவது என்ன லாஜிக் கவிஞரே..!?    

**

ட்ரிங்.. ட்ரிங்…! 

பிக் பாஸ் வீட்டுக்குள் புதியதாக ஒரு பழைய மாடல் டெலிபோன் வைத்திருந்தார்கள். அதில் வரும் அழைப்பு மூலம் இனி ஒவ்வொருவருக்கும் தனித்தனி டாஸ்க். (அதுவும் நல்லதுதான் ஒருநாள் முழுக்க ஒரே டாஸ்க் என்பது கொஞ்சம் சலிப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது. அதிலும் அந்த டாஸ்க்குகளுக்கு பிக்பாஸ் வைத்த பெயர்கள் எல்லாம் ' நாந்தாண்டா உங்க அப்பன் பேசுறேன் ' என டப்பிங் பட டைட்டிலாகவே இருந்தது....ரண கொடூரம்!). டெலிபோன் ஒலித்ததும் யார் முதலில் போனை எடுக்கிறார்களோ அவருக்கான டாஸ்க் அதில் சொல்லப்படும். அதுதான் இந்த ட்ரிங்.. ட்ரிங். முதல் அழைப்பை ஹரிஷ்  எடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து அவரது தலைமுடியின் ஒரு பகுதியில் கலரிங் செய்யவேண்டும். இந்த டாஸ்க்கை செய்து முடித்தால் இருவருக்கும் சேர்த்து 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதை இருவரும் எப்படி வேண்டுமோ அப்படி பிரித்துக்கொள்ளலாம். போனில் இதையெல்லாம் கேட்ட ஹரீஷிடம் என்ன என்ன என்று எல்லோரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்டோர் ரூம் மணி ஒலிக்க, சிநேகன் உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கலரிங் கிட் எடுத்து வந்தார். 'இது எதுக்கு' என்று சிநேகன் புரியாமல் பார்க்க.. அதான் டாஸ்க் என்று விளக்கினார் ஹரீஷ். உடனே சுஜா தனக்கு ஓ.கே. என்றார். இருந்தாலும் அனைவரிடமும் ஒருமுறை கேட்டுவிடுகிறேன் என்று ஹரிஷ் சென்றார். அது பெரிய மனுஷத்தனமாக தோன்றியது. ஆனால், அதற்காக மூடிய பாத்ரூமில் பிஸியாக இருந்த கணேஷ், ஆரவ்விடம் டாஸ்க்கை விவரித்தது....உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா ஆபிசர். அவர்களும் பாத்ரூமுக்குள் இருந்தபடியே, 'என்ன கலர்.... எவ்வளவு நேரம்?' என்றெல்லாம் டெக்னிக்கல் டீடெய்ல் கேட்டுக்கொண்டிருந்தார்கள். முடிலடா சாமி! 

ஒருவழியாக சுஜாவே ஹரிஷின் கலரிங் பார்ட்னர் ஆனார். பர்கண்டி சாயலில் சுஜா கூந்தலில் கலரிங் செய்யத் துவங்கினார் ஹரிஷ். அதைப் பார்த்தபோது அமைதியாக இருந்த ஆரவ், பின்னர் சினேகன் அண்ட் கோவிடம் 'அது ஏதோ சிவப்பு கலரா இருக்கு.... முடி என்ன ஆகுமோ தெரில!' என்று வம்பளத்துக் கொண்டிருந்தார்.  

Bigg Boss

**
இரண்டாவது ட்ரிங்.. ட்ரிங்…

இம்முறை போனை எடுத்தது சிநேகன். அவருக்கான டாஸ்க், ஆரவ்வை கன்வின்ஸ் செய்து அவருடைய ஒரு கால் ஒரு கையில் வேக்ஸிங் செய்ய வேண்டும். அதாவது காலில் வேக்ஸ் தாளை ஒட்டி இழுத்து காலில் இருக்கும் மொத்த முடியையும் பிடுங்க வேண்டும். யப்பா நினைத்தாலே மயிர்கூச்செறிகிறது. 'ரைட்டு இது வில்லங்கம்!' என்பதை உணர்ந்த சிநேகன் எடுத்த எடுப்பிலேயே ‘தம்பி உன் கால்ல விழுகுறேன்டா.. நான் ஒரே ஒரு டாஸ்க் சொல்றேன்.. செஞ்சுக்கிறியேடா’ என்று ஆரவ்விடம் பம்மினார். ஆரவ் டாஸ்க் என்ன என்று தெரிந்துகொண்டதும், 'கஷ்டம் ப்ரோ. இதுக்கு நீங்க கன்வின்ஸ் பண்ணித்தான் ஆகணும்!' என்றபோது சிநேகனுக்கு லேசாக ஜெர்க் அடித்திருக்கும். பிக்பாஸும், 'மாப்பு....வைச்சுட்டோம்ல ஆப்பு' என்று குஷியாகி இருப்பார். ஆனால், அங்கு ஆரவ் வைத்தார் ட்விஸ்ட். 'பிக்பாஸ் சொல்லிட்டார்... பண்ணிருவோம்... அவர் இன்னும் என்ன சொன்னாலும் பண்ணிருவோம்' என்று சம்மதித்தார்.  இந்த டாஸ்க்குக்கும் பத்து பாயின்ட். இருவரும் பேசி பிரித்துக்கொள்ளவேண்டும். 'நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என்று பிக்பாஸ் சொல்ல, இருவரும் சரிசமமாக பிரித்துக்கொள்வதாகச் சொன்னார்கள். இதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் இதில் சிநேகனின் பங்கு குறைவுதான் எனும்போது ஏன் அவருக்கு சரிசமமான பாயிண்டை ஆரவ் விட்டுக்கொடுக்கவேண்டும்? ஆனால், அதற்கெல்லாம் இருவரும் அலட்டிக் கொள்ளாமல், மயிர் நீக்கும் பணியில் மும்முரமானார்கள்.  

அந்தப் பக்கம் பாயிண்ட் பிரிக்கும் பஞ்சாயத்து சுஜா ஹரிஷூக்கும் வந்தது. “எனக்கு 6... உங்களுக்கு 4 ஓக்கேவா” என்று ஹரீஷ் சொல்ல… “இல்லல்ல எனக்கு 6 உங்களுக்கு 4” என்று சுஜா சொல்ல.. “அதாங்க நானும் சொல்றேன் எனக்கு 6 உங்களுக்கு 4 சரிதானே” என்று ஹரிஷ் வம்பிழுத்தார். பின் கேமரா முன் இருவரும் சிரித்துக்கொண்டே ஆளுக்கு 5 பாயிண்ட் எடுத்துக்கிறோம் என்று சொன்னார்கள். ‘அதெல்லாம் முடியாது எனக்குதான் அதிக பாயிண்ட்ஸ் வேணும்’ என்று அடித்துக்கொள்வார்கள் என்று நினைத்து இப்படி ஒரு ஐடியாவை பிடித்திருப்பார் பிக்பாஸ். ஆனால், பிக்பாஸ் குடும்பம்தான் விக்ரமன் படங்கள் வழிவந்த குடும்பமாச்சே. 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம்' என்று எதையும் சமாளித்தார்கள். 'வட போச்சே' என்று நொந்து போனார் பிக்பாஸ்.

bigg boss Tamil

இதற்கு நடுவில் ஆரவ் - சிநேகன் தங்கள் டாஸ்க்கை தொடங்கியிருந்தார்கள். வேக்ஸிங் அனுபவமுள்ள பிந்து அவர்களுக்கு வழிகாட்டியாக ஒளிகாட்டினார். மருத்துவமனைகளில் ஊசி குத்துவதற்கு முன்னால் ஊசியைப் பார்த்ததும் குழந்தைகள் கத்தி அமர்க்களம் செய்வார்களே, வேக்ஸ் தாள் காலில் ஒட்டப்பட்டதுமே அப்படி ஒரு அமர்க்களத்தை நிகழ்த்தினார் ஆரவ். ‘பாப்பாவுக்கு ஐஸ்கிரீம் புடிக்குமா? சாக்லேட் புடிக்குமா?’ என்று நர்ஸ்கள் குழந்தைகளிடம் பேச்சுக்கொடுத்து வலி மறக்கச் செய்வதுபோல், 'நமக்கு நிறைய வேலை இருக்கு... அதெல்லாம் எப்படி முடிக்கப் போறோம்.... அங்க பார்க்காத' என்று ஆரவ்வை திசை திருப்பிக் கொண்டிருந்தார் பிந்து. பொண்ணுக்கு தங்க மனசு! ஆனால், சிநேகன் இப்படியெல்லாம் மெனக்கெடவில்லை. ஆரவ் காலில் தாள்களை ஒட்டி சர்ரக்... சர்ரக்கென்று தேய்த்து இழுத்துவிட்டார். ஆரவ்வும் அதை சகஜமாக எடுத்துக்கொண்டார். காலுக்கும், கைக்குமாக பிக்பாஸ் கொடுத்த வேக்ஸிங் தாள்களை காலுக்கு மட்டுமே செலவழித்துவிட்டு, 'ஆங்... கைக்கு இன்னும் பேப்பர் கொடுங்க' என்று பிக்பாஸுக்கு டாஸ்க் கொடுத்தார் கவிஞர்.

காலில் இருக்கும் முடியெல்லாம் இழந்தபிறகு தன் கால் பளபளப்பாகிவிட்டதாக அங்கலாய்த்துக்கொண்டார் ஆரவ். 'அப்படியே ஒரு கொலுசு மாட்டினா பொம்பளப் புள்ள கால் மாதிரியே இருக்கும்ல,... கொலுசும் கொடுத்துவிடுங்க பிக்பாஸ்' என்று ஆரவ் சொல்ல… 'இந்தா இருக்கே!' என்று தன் கொலுசை கழட்டிக் கொடுத்தார் பிந்து மாதவி . ஆரவ்வும் அந்த கொலுசை மாட்டிக்கொண்டு ஜாலியாக பிக்பாஸ் கேமராவுக்குப் போஸ் கொடுத்தார். கண்ணகிதான் கால்சிலம்பை கழட்டிக் கொடுத்ததாய் படித்திருக்கிறோம். இங்கு 'மாதவி' கால்கொலுசைக் கழட்டிக் கொடுத்த காட்சி.... ஐயகோ....இப்படிலாம் யோசிச்சு எழுத வைச்சுட்டியே பாஸூ...பாஸு... பிக்பாஸு! 
ஆனாலும். ஒரு சந்தேகம் எழாமல் இல்லை. காயங்களில் ஒட்டிய பேன்டேஜை பிரிக்கும்போதே வலி உயிர் போகுமே.. ஆனால், ஆரவ் எப்படி சிரித்துக்கொண்டே இருந்தார் எனத் தோன்றியது. 

kolusu

 ஒருமுறை என் நண்பன், 'பெண்களுக்கு சாஃப்ட் ஸ்கின். அதனால்தான், வேக்ஸிங் செய்யும்போது ஓவரா கத்தறீங்க!' என அவன் அக்காவிடம் ஆணாதிக்கத்தனமாகப் பேசியிருக்கிறான். 'அப்படியா,,, இரு வாரேன்!' என்று அக்கா அவன் முகத்தில் ஒரு வேக்ஸிங் தாளை ஒட்டி 'வரட்'டென இழுத்திருக்கிறார். எருமை மாட்டுக்கு சவால் விடும் சருமம் கொண்ட நம் நண்பன் துடிதுடித்துப் போய்விட்டான். ஆனால், அப்படியாக ரியாக்‌ஷன் காட்டாமல் ஆரவ் இருந்ததைப் பார்க்கும்போது, அவர் மாடல் என்பதால் வேக்ஸிங் பரிச்சியம் இருக்கும் என்றும் தோன்றியது. பிந்து மாதவி இப்படியெல்லாம் ஆறுதல் அளித்தால், ஒரு கால், ஒரு கைக்கு என....தாடி, முடி என மொத்தமாகவே வேக்ஸிங் செய்துகொள்ளலாம் என்றும் தோன்றியது! 

ஒரு கால் முடிஞ்சது. டாஸ்க் படி ஒரு கைக்கும் வேக்ஸ் செய்ய வேண்டும். அதுவரை பஞ்சாயத்து எதுவும் எழவில்லை. உடனே பிக்பாஸ் 'ஆரவ்... கைக்கு செய்யும் முன் உங்கள் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்' எனக் கொளுத்திப் போட முயற்சித்தார். ஆனாலும், 'சொன்ன சொல்லைத் தவறமாட்டான் இந்த கோட்டைச்சாமி. ஆளுக்கு 5 மதிப்பெண்களே இருக்கட்டும்!' என மலர்ந்தருளினார் அருள்வள்ளல் ஆரவ். ஒருவேளை ஓவியா வீட்டுக்குள் இருந்திருந்தால், 'ஆரவ்... பாயிண்ட்டுக்காக இப்படிலாம் பண்ணனுமா.... ஃபிஷ்... அதெல்லாம் வேண்டாம். மாட்டேன்னு சொல்லிரு... வாட் த ஹெல்!' என்று பொங்கியிருப்பார். ஆனால், கூண்டுக்குள்ள பச்சக் கிளிதான் இல்லையே...ஹ்ம்ம்..!

டைனிங் ஹாலில் ’Strategy’ கணேஷ், இந்த டாஸ்க்கை எப்படி செய்தால் வலிக்காமல் செய்யலாம் என்கிற ‘ஆக்சுவலா பாத்திங்கன்னா..’ ஐடியாக்களை சுஜாவிடம் பகிர்ந்துகொண்டிருக்க.. அவருடைய பாடி லாங்குவேஜை வைத்தே கணேஷ் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருப்பார் என்று ஆரவும், பிந்துவும் கிண்டலடித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவரை இமிடேட் செய்யும் இந்த விஷயத்தில் 'ட்ரிக்கர்' சக்திக்கு அடுத்து ஆரவ், பிந்துதான் செம்ம! 

 **

மூன்றாவது ட்ரிங்… ட்ரிங்…

இந்த முறை போனை எடுத்தது கணேஷ். எடுத்ததும் “ஹலோ பிக்பாஸ் ஹவுஸ்” என்றார். பிக்பாஸையே கலாய்க்கிறாராமாம்.  யாராவது ஒருவரை கன்வின்ஸ் செய்து அவருடைய நான்கு ஜோடி காலணிகளை வெட்ட வேண்டும் என்பது அவருக்கு விதிக்கப்பட்ட டாஸ்க். பிந்துவும் ஆரவ்வும் ஜகா வாங்க, சுஜா ஒப்புக்கொண்டார். 'எனக்கு என்ன பாயிண்ட் கொடுப்பீங்க?' என்று கணேஷை ஆழம் பார்த்தார் சுஜா. '10 மதிப்பெண்களை ஆளுக்கு 5 -ஆ  பிரிச்சுக்கலாம்!' என்று கணேஷ் சொல்ல, சின்ன ஏமாற்றத்துடன் ஏற்றுக்கொண்டார். சுஜாவின் செருப்புகளை கணேஷ் வெட்டத்தொடங்க, பிந்துவும் ஆரவ்வும் வழக்கம்போல ‘ஆக்சுவலா பாத்திங்கன்னா இந்த ஷூவை இப்படி வச்சு கட் பண்ணனும்ங்க’ என்று கணேஷை ஓட்டினார்கள். தன் செருப்புகளை வெட்டும்போது சுஜா, ‘கேமரால காட்டிகாட்டி கட் பண்ணுங்க Buddy’ என்றார். ஏன்மா அவரு என்ன கிச்சன் ஷோல சிக்கனையா கட் பண்றாரு? ஆனால், கணேஷ் செருப்பை வெட்ட வெட்ட....'ஐம் ஸாரி... ஐம் ஸாரி' என்று சுஜா கெஞ்சிக் கொஞ்சியது....பச்ச மண்ணுய்யா!
பச்ச மண்ணாக இருந்தாலும் அனைத்து டாஸ்க்குகளிலும் பங்கெடுத்து புள்ளிகளைக் குவிக்க வேண்டும் என பரபரத்துக்கொண்டே இருந்தார் சுஜா. அதனால், எந்த டாஸ்க் என்றாலும் 'ரை ரைட்' சொல்லி ஒப்புக்கொண்டார். இதை ஒரு மூலையில் இருந்து அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தார் சிநேகன்.  

suja

**

ட்ரிங்… ட்ரிங்…

இப்போது சுஜா போனை எடுத்தார். அவருக்கான டாஸ்க் யாரையாவது கன்வின்ஸ் செய்து அவருடைய முகத்தில் பெயிண்ட் செய்ய வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும்வரை அவர் முகத்தை கழுவக்கூடாது. கொஞ்சம் ஈசியென்று நினைத்ததால் எல்லாருமே ஆர்வம் காட்டினார்கள். அதிலும் சுஜாவுடன் தனக்கு வாய்க்கா வரப்பு தகராறு இருந்தாலும், முதல் ஆளாக கை தூக்கினார் சிநேகன். ஆனால், அவரைக் கண்டுகொள்ளாமல்  சுஜா கணேஷைத் தேர்வு செய்தார்.  டாஸ்க் தொடங்குமுன், ‘நினைவிருக்கட்டும் அடுத்த அறிவிப்பு வரும்வரை பெயிண்ட் அப்படியே இருக்க வேண்டும் கழுவக்கூடாது’ என்று மீண்டும் ஒரு முறை டாஸ்க் விதிகளைப் புரியவைத்தார் பிக்பாஸ். சுஜா, கணேஷ் முகத்தில் பெயிண்ட் செய்யத் தொடங்கினார். இந்த சமயத்தில் பிந்து சிநேகனிடம் ஒரு பாட்டு பாடுங்க என்று சொன்னதுதான் தாமதம்… அந்நியன் படத்தில் வரும் ரயில் காட்சியைப் போல சங்கீத காலாட்சேபம் செய்தார்கள். ஐய்ய்யயோ..!

**

மீண்டும் ட்ரிங்… ட்ரிங்.. 

ஆரவ் இம்முறை போனை எடுத்தார். யாரையாவது கன்வின்ஸ் செய்து ஒரு நாள் முழுக்க தரையில் அமரச் செய்ய வேண்டும். படுக்கையிலோ.. சோபாவிலோ… அமரக்கூடாது. அவர்கள் தரும் பாயில்தான் படுக்க வேண்டும். சிநேகன் இந்த டாஸ்க்கை ஏற்றுக்கொண்டார். வழக்கம்போல ஆளுக்கு 5 மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டார்கள். ஒரு டவுட்டு… கன்வின்ஸ் பண்றதுனா முடியாதுனு சொல்றவனை ஒப்புக்க வைக்குறதுதானே. ஆனால், இங்கோ, 'டாஸ்க்கா... நாந்தான் இருக்கேன்ல!' என்று பறக்கிறார்கள். பிறகு ஏன் கன்வின்ஸ் செய்யச் சொல்கிறார் பிக்பாஸ்? 

**
'அடுத்த டாஸ்க்தான் வந்துடுச்சே... நான் மேக்கப்பை கலைத்துவிடலாமா? அல்லது அடுத்த அறிவிப்புக்குக் காத்திருக்க வேண்டுமா?' என்று குழம்பினார் கணேஷ். பிக் பாஸிடமே கேட்டார். பதில் இல்லை. சுஜாவோ, 'அடுத்த அறிவிப்புனுதான் சொன்னாங்க. அப்படின்னா information. அதான் வந்துருச்சே!' என்றார். சிநேகன் குழப்பியும் குழப்பாமலும் ஒரு விளக்கம் கொடுத்தார். அது கணேஷை இன்னும் குழப்பியது. ஒருவழியாக கணேஷ் தன் முகத்தை கழுவினார். ஆனால், அவர் விதிமுறையை மீறியதற்காக அவருக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக அறிவித்தார் பிக்பாஸ். ‘நாந்தான் உங்ககிட்ட கேட்டேன்ல. அரைமணி நேரம் வெயிட் பண்ணேன். ஏன் பதில் சொல்லலை?’ என்று பிக் பாஸின் மீது கோபப்பட்டார். நியாயமான கோபம்தான். சுஜாதான் தான் சரியாக புரிந்துகொள்ளாமல் தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டார். 'Its ok. he wanted to play like this. let him play' என்று அதிருப்தியைக் காட்டிவிட்டு அமைதியாகிவிட்டார் கணேஷ். வேறு எந்த வம்பும் சிக்காததால், பிக்பாஸ் வலிந்து கணேஷுக்கு அநீதி இழைத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது. 
**

பிந்து ‘ரொம்ப கூட்டம் கம்மியா இருக்குல’ என்று ஃபீல் பண்ண சிநேகன், “வையாபுரி போனதுல இருந்து ஒரு நாளே நீளமா இருக்கு” என்று ரிலேட்டிவிட்டி தியரி பேசினார். ஆம், உண்மையில் வையாபுரியின் வெளியேற்றம் என்பது அவர்களுக்கு ஒருவகையில் ஈடுசெய்யமுடியாதது தான். பிக்பாஸ் டீமில் எல்லோருக்கும் காஃபி போட்டு அந்த நாளுக்கான டாஸ்க்குக்கு இவர்களைத் தயார் செய்யும் பணியில் இருந்தார் வையாபுரி. அதிலும் வையாபுரியை மிஸ் செய்வதை ஒரு வார்த்தையில் சுள்ளென உணர்த்தினார் பிந்து. 'நமக்கு இன்னும் வையாபுரி ஹேங்க் ஓவர் இருக்கு!' அட்றா சக்க.... பொண்ணுகிட்ட கத்துக்கங்க பாய்ஸ்! 

போன் வருகிறது. மீண்டும் கணேஷ்தான் போனை எடுத்தார். யாராவது ஒருவரை கன்வின்ஸ் செய்து மர்ம உணவு வகைகளை சாப்பிட வைக்கவேண்டும். கணேஷ் முழுமையாக சொல்லி முடிக்கும் முன்பே பிந்து கைதூக்கினார். “நீ சைவமாச்சே அதுல அசைவம் வந்தா சாப்பிடுவியா?” என்று கணேஷ் கேட்க.. இந்த ஐடியா நமக்கு தோணாமா போச்சே என்று பிக்பாஸே நினைத்திருப்பார். ஆனால், வந்தது அதைவிட கொடூரம். பாகற்காய், இஞ்சி, வேப்பிலை என விநோதமான காம்போ. 

ஒட்டுமொத்த டீமின் ஆரவாரத்தோடு பிந்து மாதவி சாப்பிட ஆரம்பித்தார். முதலில் பாகற்காயில் இருந்து ஆரம்பித்தார் பிந்து மாதவி. ஒருகட்டத்துக்கு மேல் முடியாமல் போக, ஒவ்வொன்றுக்கும், ஒரு பெயர் வைத்து அழைத்து, விழுங்க ஆரம்பித்தார்.  கணேஷ் மூலிகை டாக்டராகவே மாறி இருந்தார். 'வேப்பிலையை கடைசியா சாப்பிடுங்க செமிக்கும்.. இஞ்சியை அப்படியே சாப்பிடுங்க!' எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஹரிஷ் 'பாட்டுப்பாடவா ' பாடலைப் பாட ஆரம்பிக்க, பிந்து நடனமாடிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். யூடியூபில் குழந்தைகளை எலுமிச்சையை சாப்பிடச் சொல்லி, அவர்களின் முக ரியாக்ஷனை பதிவு செய்வார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாமல், ரியாக்ஷன்களை அள்ளி வழங்கிக் கொண்டு இருந்தார் பிந்து மாதவி. 'விருந்தாளி' பிந்து மாதவி இப்படியொரு படையலை எதிர்பார்த்திருக்க மாட்டார். பல நாள்கள் கழித்து, பிக்பாஸ் டீமில் இருக்கும் அனைவரும், ஒருவர் வெல்ல உற்சாகப்படுத்தியது இதில்தான். இந்த டாஸ்குக்கு மட்டும் பிந்து 8, கணேஷ் 2 என பிரித்துக்கொள்ளலாம் என ஹரிஷ் ஐடியா கொடுத்தார். 

bindhu madhavi

விநோதமான காம்பினேஷன், தொட்டுக்கா அயிட்டங்களை மெயின் டிஷ்ஷாக சாப்பிட்டது எல்லாம் சேர்ந்து பிந்துவுக்கு குமட்டலை உண்டாக்கியது. கையில் பிளாஸ்டிக் பையுடன் இருந்த ஆரவ், பிந்து குமட்டும்போது, அதில் ஏந்திக்கொண்டார். தொடர்ந்து குமட்டினாலும் சளைக்கவில்லை பிந்து. கடைசிவரை சாப்பிட்டார். அதிலும் கடையில் இஞ்சியை சாப்பிடும்போது, 'ஏப்பம் வரும்... கசக்கும்... பீ கேர்ஃபுல்!' என்றெல்லாம் கணேஷ் ஆறுதல் சொல்ல, ஒரே கல்ப்பில் இஞ்சியை விழுங்கிவிட்டு பிந்து கொடுத்த அந்த சூப்பர் ஸ்மைலி ரியாக்க்ஷன்..... 'சார்.... பிந்து சார்....!' என்று பிந்து ஆர்மியினரை உற்சாகப்படுத்தியிருக்கும். 

**

அடுத்த அழைப்பை சிநேகன் எடுக்கிறார். ஆரவ், ஹரீஷ் இருவரில் யாருக்காவது க்ளீன்ஷேவ் செய்ய வேண்டும் என்பது அடுத்த டாஸ்க். ‘ரெண்டு பேர்ல யார்னாலும் பண்ணலாம். ஆனா நான் ஃபர்ஸ்ட் ஆரவ்ட்ட கேட்கிறேன்’ என்று சிநேகன் தன் சாணக்கியதனத்தைக் காட்டினார். அவர் ஹரீஷை வேண்டுமென்றே ஓரம் கட்டுவதாகத் தெரிந்தது. 'மொட்டை போடக் கூட ரெடி' என்று முன்னரே சொல்லியிருந்த ஆரவ், இதற்கா சளைக்கப் போகிறார். உடனே ஒப்புக்கொண்டார் . இம்முறையும் ஆளுக்கு 5 மதிப்பெண்கள். அவ்வளவு செலவழித்து, ஓட்டு வாங்கி ஜெயித்த எம்.எல்.ஏ-க்களை ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்ததுபோல பொசுக்குனு இந்த மார்க்கெல்லாம் செல்லாதுனு சொல்லிட்டா ஆரவ் நிலைமை என்னாகும்! ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்த கதையாகிப்போய்விடும்.  மீசை தாடி இல்லாமல் ஆரவ்வைப் பார்க்க காற்று வெளியிடை பட கார்த்தி போல இருந்தது. 

**

சிநேகனும் பிந்துவும் தரையில் அமர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் போல் ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள்.  'பிந்து போன் எடுக்கும்போது ஒருவர் பெயரைச் சொல்லி டாஸ்க் சொன்னால் மட்டும் அவர்களோடு சேர்ந்து செய்யுங்கள். யாரைவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்று சொன்னால் என்னையோ ஆரவையோ தேர்ந்தெடுங்கள். நமக்குள் பாயின்ட்களைப் பிரித்துக்கொள்ளலாம்' என்றார் சிநேகன். என்ன போங்காட்டம் இது. இன்றைய நாளின் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு டாஸ்க்கிலும் பிந்து, ஆரவ், சிநேகன் மூவரும் தங்களுக்குள்ளாக மட்டுமே டாஸ்க்கை பகிர்ந்துகொண்டார்கள். இந்த க்ரூப்பிசத்தை ஆண்டவர்தான் தட்டிக்கேட்க வேண்டும்.

**

இரவு 9 :45 க்கு மீண்டும் ஒரு அழைப்பு. ஆரவ் எடுத்தார். 'இவனை நாள் முழுக்க வச்சு அடிச்சாச்சு. இதுக்கு மேல தாங்க மாட்டான்' என்று பிக்பாஸே பாவம் பார்த்து ஜாலியான டாஸ்க் ஒன்றைக் கொடுத்தார். ஆரவ் ஒருவரை கன்வின்ஸ் செய்து அவருடன் பாடிக்கொண்டே டான்ஸ் ஆட வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும்வரை பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்க வேண்டும். உடனே.. “ப்ரோ நான் கூட டான்ஸ் ஆடுறேன்” என்று ஹரீஷ் கையைத் தூக்கினார். ஆரவ் அம்புட்டு லூஸா என்ன? பிந்துவைத் தேர்ந்தெடுத்தார்.

Aarav bindhu madhavi

ஆரம்பித்தது சவால். ஆரவ்வும் பிந்துவும் சளைக்காமல் மாறிமாறி பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும்.... ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார்கள். 'சொக்கா.... சொக்கா.... எனக்கு இல்லை... எனக்கு இல்ல...!' என்ற நாகேஷின் மனநிலை....'வட போச்சே' என்ற வடிவேலுவின் மனநிலை.... இரண்டின் கலவையாக இந்த ஆட்டம் பாட்டத்தை பார்த்து உள்ளுக்குள் பொருமலுடன் உலவிக் கொண்டிருந்தார் கவிஞர்.

ரொமான்ஸ் பாடல்களாக பாடிக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கட்டத்தில் பிந்து வெறுத்துப் போய்… “பிக்பாஸ்.. இது நியாயமா நியாயமா” என்று கேட்டார் பிந்து. டான்ஸ்ங்ற பேர்ல ஆரவ் பண்றது மட்டும் நியாயமா பிந்து? பிந்து  நாளின் ஆரம்பத்தில் ஆரவ்வுக்கு கொடுத்த கொலுசை மீண்டும் மாட்டவில்லை போல, ஒற்றை சிலம்புடன் ச்சே... கொலுசுடன் (ஆனால் அது சிலம்பு போல் தான் இருந்தது) ஆடிக்கொண்டு இருந்தார்.

bindhu madhavi

யார் யார் இதுவரை எத்தனை மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னார் பிக்பாஸ். ஆரவ் - 20, சுஜா - 18, சிநேகன் - 15, கணேஷ் - 14,  பிந்து - 10, ஹரிஷ் - 8.
**
நாளின் இறுதியில் மீண்டும் போன்கால். நம் வீடாக இருந்தால், ‘இந்த நேரத்துல எவன்டா போன் பண்றான்?’ என்று திட்டியிருப்பார்கள். ஆனால் இது பிக்பாஸ் வீடாச்சே. பாயின்டு  பாயின்டு. சிநேகன் எடுத்தார். அவருக்கான டாஸ்க்... அகல்விளக்குகள்! அதை  இரவு முழுக்க அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விடிய விடிய சிவராத்திரிதான். பேச்சுத்துணைக்கு பிந்து அல்லது சுஜாவை வைத்துக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்தார் பிக்பாஸ். ஆனால், அதை முதலில் வெளிப்படையாக தெரிவிக்காமல், பிந்துவுக்கு வாய்ப்பு  கொடுப்பதாகச் சொன்னார் சிநேகன். சட்டென சுதாரித்து, 'பிந்துவால முடியலைன்னா சுஜாவை சேர்த்துக்கிறேன். உங்க ரெண்டு பேர்கிட்டயும் கேட்கச் சொன்னார் பிக்பாஸ்' என்றார். பிந்து ஓகே சொல்ல, அகல்விளக்கு டாஸ்குக்கு ஆயத்தமானார்கள். 'ரெண்டு பேர்ட்டயும்தானே கேக்கச் சொல்லிருக்காங்க. ஆனா, என்கிட்ட கேக்காமலே பிந்துவை சேர்த்துக்கிட்டது சரியா?' என்று ரெளத்ரமாக இருந்தார் சுஜா. நியாயம்தான்!

சிநேகன் ஏற்றி வைத்த அகல்விளக்குகளைத் தவிர, வீட்டின் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டது. இரவு முழுவதும் இருக்கும் டாஸ்க் என்பதால், இதற்கு 20 பாயின்ட் வேண்டும் என எஜமானர் பிக்பாஸிடம் முறையிட்டார் பிந்து மாதவி. சிநேகன் அதையே ' எங்க பிக் பாஸ் நல்ல பிக்பாஸ்' என வேறு மோடில் கேட்டுக்கொண்டு இருந்தார். ஆனால், இரவு முழுக்க விளக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கப் போகும் சிநேகனுக்கு காலையிலேயே 'இனி பெட் இல்லை பாய் மட்டும்தான்' டாஸ்க் கொடுத்தது எல்லாம் பிக்பாஸ் ஒரு தீர்க்கதரிசி என்பதைக் காட்டியது. ' நீங்க இந்த வாரம் சேஃப் ஆவீங்க பாருங்க' என மக்களின் வாய்ஸ் எப்படி இருக்கும் என சிநேகன் பிந்துவுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருந்தார்.

loading...

பாய் பிக் பாஸ் தமிழ்

கவிஞரும் பிந்து மாதவியும் விளக்கை அணையாமல் காப்பார்களா? அல்லது இரவில் பிக்பாஸ் எல்லாரையும் எழுப்பிவிட்டு, விளக்கை அணைக்கச் சொல்லும் டாஸ்க்கை அவர்களுக்கு கொடுப்பாரா!?

இந்த இடத்தில் பிக்பாஸூக்கு ஒரு கேள்வி...
'சிகையை நீக்கு என தோற்றத்தை குலைக்கும், இஞ்சி, வேப்பிலை என சாப்பிடச் சொல்லி அசெளகரியம் உண்டாக்கும் பணிகள் மூலம் போட்டியாளர்களை மன/உடல்ரீதியாக துன்புறுத்துவது டீ எஸ்டேட் கங்காணிக்கே சவால் விடும் போக்காக இருக்கிறதே...!?  போட்டியாளர்கள் ஏ.சி வீட்டில் சொகுசாக இருந்தால் நிகழ்ச்சி எப்படி சூடுபிடிக்கும் என நினைத்தால், சுவாரஸ்யமான சவால்களை அளிக்கலாமே..! இப்படி பார்வையாளர்களின் ரசனையை தரமிறக்குவது....நிச்சயம் சரியில்லை!'

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கேள்வி...
'என்னதான் போட்டியென்றாலும் சில விஷயங்களை செய்ய மாட்டேன் என அனைவரும் ஒற்றுமையாக பிக்பாஸை எதிர்த்தால் என்ன...? எதையோ செய்து புள்ளிகளை அள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலை...சரியா? இந்த இடத்தில்தான் மனசுக்குப் பிடிக்காததை செய்ய மாட்டேன், பிடித்ததை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் செய்வேன் என்று திமிறிய ஓவியாவுக்குக் குவிந்த ஆதரவைப் புரிந்துகொள்ள முடிகிறது. சுவாரஸ்ய சவால்களை எவ்வளவும் எதிர்கொள்ளலாம்....அடிமைத்தனங்களை அல்ல!

- தி. விக்னேஷ்

 


Add new comment

Or log in with...