பிக் போஸ் 85 ஆம் நாள்: சூடு பிடிக்கும் சுஜா - சினேகன் மோதல் | தினகரன்


பிக் போஸ் 85 ஆம் நாள்: சூடு பிடிக்கும் சுஜா - சினேகன் மோதல்

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

84 ஆம் நாளின் தொடர்ச்சி. வையாபுரி விலகி விட்ட சோகத்தில் போட்டியாளர்கள் இருந்தனர். கலங்கிய ஹரீஷிற்கு ஆறுதல் சொன்னார் சுஜா. ஆனால் ஹரிஷீன் துயரத்திற்கு வையாபுரி மட்டும் காரணம் இல்லையாம். (அடப்பாவி. நாமதான் தப்பா நெனச்சிட்டோம். மற்றவர்களுக்காக அழும் போது நமக்கான காரணங்களும் அதில் கலந்திருக்கும் என்கிற ஆதாரமான உண்மை மறுபடியும் நிரூபணமானது) 

harish

ஹரீஷின் துயரத்திற்கு ஆரவ் சொன்ன பொய்யும் காரணம் போல. அதைப் பற்றி சுஜாவிடம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி, ஸ்மோக்கிங் ரூமில் தனியாக இருந்த போதாவது ‘நான் சவாலை பாத்ரூமில் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன்’ என்று ஆரவ் சொல்லியிருக்கலாமே என்பது ஹரீஷின் ஆதங்கம். தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதும் நாம் நேர்மையாக விளையாட நினைப்பதைப் போலவே மற்றவர்கள் இருப்பதில்லை என்பதுமான வேதனை அவரை ஆக்கிரமித்திருக்கிறது. சக்தி இங்கு இருந்திருந்தால் ஆரவ் அவரிடம் நிச்சயம் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்பது ஹரீஷின் உறுதியான யூகம். 

(கமலின் சந்திப்பின் போது ‘உங்க கிட்ட தனியா ஐந்து நிமிஷம் பேசணும்” என்று ஹரீஷ் கமலிடம் கேட்ட காட்சி promo-வில் இடம்பெற்றிருந்தது. அது என்ன விஷயம் என்று தெரியவில்லை.) கமலும் ஹரீஷை புரிந்து கொண்டதால் அவரை சமாதானப்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்தினார். ‘அவங்க அம்மா கிள்ளுவாங்க’ என்று சொல்லி ஹரீஷின் கன்னத்தைக் கிள்ளினார். 

‘எல்லோரும் கமல் வந்ததை ரசிச்சீங்க.. என்னால் அதைக் கூட ரசிக்க முடியவில்லை. என்று சொன்னதன் மூலம் தன் மனக்குழப்பத்தை வெளிப்படுத்தினார் ஹரீஷ். மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். 

வையாபுரி சென்ற பிறகு சம்பிரதாயத்திற்காக சோகமாக இருந்து விட்டு பிறகு அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று சுஜாவிற்கு கோபம். அந்தக் கோபத்தை காரணமின்றி சிநேகனிடம் காட்டினார். “எல்லோரும் போய்ப் படுத்துட்டாங்க.. இது முறையா? நீங்களும் என் கூட பேசமாட்டேன்றீங்க” என்றார். இந்த ஒட்டுதலை கார் சவாலில் அவர் காட்டியிருந்தால் இருவரும் ஏதாவது பேசிக் கொண்டிருந்து அந்த நீண்ட சிரமத்தை குறைத்திருக்கலாம். ‘நீங்க எனக்கு காஃபி போட்டுத்தந்தா என் மேல கோபமில்லை-ன்னு புரிஞ்சுக்கறேன். இல்லைன்னா என் கூட பேச விரும்பவில்லை என்று புரிஞ்சுக்கறேன்’ என்று விநோதமான விதியை உருவாக்கினார் சுஜா. தமிழ் சினிமாவின் அபத்தமான  காட்சிகளைப் பார்த்து ஜனங்கள் ரொம்பவும் கெட்டுப் போயிருக்கிறார்கள். காஃபி வேண்டுமானால் சுஜா நேரடியாகவே கேட்டிருக்கலாம். 

bindhu harish

**

85-ம் நாள் காலை. (புதிய) ‘காக்கி சட்டை’ படத்திலிருந்து ‘கட்டிக்கிடும் முன்னே  நாம  ஒத்திகய  பாக்கனுண்டி’ என்கிற கவித்துவமும் அழகியலும் வாய்ந்த பாடல் ஒலிபரப்பானது. கணேஷ் மற்றும் பிந்து நடனமாடினர். வழக்கமாக உற்சாகத்துடன் வந்து ஆடும் ஹரீஷ்ஷிற்கு இன்னமும் மனவருத்தம் போகவில்லை போல. வெளியே வரவில்லை. 

வையாபுரி வெளியே செல்வதற்கான மனநிலையுடன் முன்பே இருந்ததை ஆச்சரியத்துடன் போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். வையாபுரி சொல்லியது போல பிக்பாஸில் வெற்றி பெறுவதை விடவும் குடும்பத்தின் அன்பைப் பெறுவது மிக முக்கியமானது. போட்டியை விடவும் வாழ்க்கை முக்கியமானது. இதையே போட்டியாளர்களும் கருதினார்கள். ‘வையாபுரி இளைச்சுட்டாருல்ல” என்று ஒருவர் வருத்தப்பட்டார். இனிமேலும் இளைக்கறதுக்கு அந்த உடம்புல என்ன இருக்கு?

பிக்பாஸ் அனுபவம் தங்களுக்குள்ளும், பார்வையாளர்களுக்குள்ளும் ஏற்படுத்தக்கூடிய அனுபவங்களைப் பற்றி சிநேகன் ஆரவ்விடம் சொல்லிக் கொண்டிருந்தார். “கமல் சொன்னது போல இது போன்ற திரைக்கதையை கற்பனையாக எழுத முடியாது. சதுரங்கப் பலகையில் காய்களாக நாம் நகரும் போது அதற்கேற்ப பார்வையாளர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளக்கூடும்” என்றார் சிநேகன். கவிஞரிடமிருந்து அவ்வப்போது சிறந்த வாக்கியங்கள் வெளியே வந்து விழுகின்றன. (ஆனால் சமூகவலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களைப் பார்த்தால் தங்களை நீதிபதிகளாக்கிக் கொண்டு ‘திருத்துபவர்கள்தான்’ அதிகமாகி விட்டார்கள்).

டிரோல் வீடியோக்களை மனப்பாடம் ஆகிற அளவிற்கு பார்க்கும் வழக்கம் ஆரவ்விற்கு இருக்கிறது போலிருக்கிறது. ‘என்னம்மா இப்படிப் பண்ணீட்டிங்களேம்மா” என்கிற விஜய்டிவி நகைச்சுவை வீடியோவை பிந்துவிடம் ஏறத்தாழ  அப்படியே ஒப்பித்துக் கொண்டிருந்தார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்போதுதான் இந்த விவகாரத்தை மறந்திருக்கிறார். மறுபடியும் கிளப்பி விடுகிறீர்களே ஆரவ்? நகைச்சுவையுணர்வுள்ளவர்கள் இதர நகைச்சுவைகளை அணுஅணுவாக ரசிப்பார்கள் என்கிற விஷயம் ஆரவ்வின் மூலமாக தெரிகிறது. ஆரவ்வின் இந்த லூட்டியை பிந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார். ஹரீஷிடம் ஏற்பட்ட விலகலை, பிந்துவிடம் ஈடுகட்ட முயல்கிறாரோ ஆரவ்?

Arav

**

‘இது 13வது வாரம். மக்களிடம் நீங்கள் யார் என்று பறைசாற்றும் நேரம் வந்து விட்டது. போட்டிகள் கடுமையாக இருக்கும்” என்று பீதியைக் கூட்டினார் பிக்பாஸ். வழக்கமான முறையில் அல்லாது, இந்த வாரம் சிநேகனைத் தவிர இதர அனைவருமே நாமினேஷனில் வந்தனர். அணியாக task செய்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரது பங்களிப்பின் படி தனித்தனியாக மதிப்பெண் தரப்படும். இது தவிர வெளியேறுவது மக்களின் வாக்களிப்பில் இருக்கிறது. என்கிற புதிய சட்டத்திருத்தங்கள் வெளியிடப்பட்டன. 

நாமினேஷனில் இல்லாத காரணத்தால் சிநேகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாம் எவிக்ஷனில் இல்லை என்பதால் அவர் ஓவராக ஆடக்கூடாது என்பதற்காக ‘உங்களுடைய பங்களிப்பும் மதிப்பெண்ணும் முக்கியம்” என்று சிநேகனுக்கு ஒரு தடைக்கல்லை பிக்பாஸ் உருவாக்கினார். சமையல் உள்ளிட்ட மூன்று அணிகள் பிரிக்கப்பட்டன. ‘தலைவர் என்றாலும் தாமும் அவர்களின் பணியில் உதவுவதாக முன்வந்த’ சிநேகனின் அணுகுமுறை பாராட்டத்தக்கது. 

கணேஷூம் சுஜாவும் சமைத்துக் கொண்டிருக்க, “ஏதாவது உதவி வேணுமா?” என்று பிந்து, ஆரவ் வந்து கேட்டனர். “ஏதாவது பாட்டு பாடுங்க. அப்ப எங்களுக்கு கஷ்டம் தெரியாம இருக்கும்” என்றார்கள் சமையல் வல்லுநர்கள். ஆரவ் உற்சாகமாக நடனமாடி பாடினார். 

அடுத்த 2 வாரங்களுக்கு கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகளை பிக்பாஸ் அறிவித்தார். காலையில் ஒலிக்கும் பாடலுக்கு அனைவரும் கண்டிப்பாக நடனமாட வேண்டும். (என்ன கொடுமை இது சரவணன்) வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (பிக்பாஸையே போட்டுத் தள்ளிடலாமா?) பிக்பாஸ் அழைத்தவுடனே ‘சொல்லுங்க எஜமான்’ என்று வரவேண்டும். போட்டிக்காக உடனே தயாராக வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. மைக்கை கழற்றவோ, கழட்டுவேன் என்று மிரட்டவோ கூடாது என்று பல விநோதமான விதிகள். ஒவ்வொரு தவறுக்கும் 5 மதிப்பெண்கள் குறையுமாம். போட்டியாளர்களுக்கு மனநெருக்கடியை அதிகப்படுத்துவற்கான விதிகளாகத் தெரிகிறது. அவர்கள் சகிப்புத்தன்மையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரமிது. 

“என்னடா இது.. போட்டிகள் கடுமையாக இருக்கும் என்றார்கள். ஆனால் ‘ஐஸில் நின்று பந்துகளை சேகரிக்க வேண்டும்’ என்பது மாதிரி ஜாலியாக சென்று கொண்டிருக்கிறதே என்று போன வாரம் நினைத்தேன். ‘பொழுது விடிஞ்சிடுச்சே.ஃ பிரச்சினை ஏதும் வரலையேன்னு பார்த்தேன். வந்துடுச்சு.. நடத்திட்டாங்க”

வையாபுரி வெளியே செல்லும் வரை காத்திருந்தார்கள் போலிருக்கிறது. அடுத்து வந்து task போட்டியாளர்கள் தங்களுக்குள் மூர்க்கமாக அடித்துக் கொள்ளும் வகையில் இருந்தது. ‘முடிஞ்சா உடைச்சுப் பாரு” என்பது அதன் பெயராம். மூக்கையா, எலும்பையா என்று தெளிவாகச் சொல்லவில்லை. 

Bigg boss Tamil

போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். பலூன்களை ஊதி போர்டில் ஒட்ட வேண்டும். இரண்டு பேர் ஒட்டுவதில் ஈடுபட, எதிரணி நபர் அவர்கள் ஒட்டாதவாறு தடுப்பார் மற்றும் பலூன்களை  உடைப்பார். இதையும் மீறி எத்தனை பலூன்களை போர்டில் ஒட்ட முடிகிறதோ, அதற்கேற்ப மதிப்பெண்கள் கிடைக்கும். மூன்று சுற்றுகள் நடக்கும். 

பிறகு ஆரம்பித்தது அந்த ரணகளமான போட்டி. சிநேகனும் சுஜாவும் தங்களுக்குள் நண்பர்கள் போல நடித்துக் கொண்டிருந்தாலும், கார் சவால் முடிந்ததில் இருந்து அவர்களுக்குள் இருந்த பகைமை, நீறு பூத்த நெருப்பு போல வீசிக் கொண்டேயிருக்கிறது. துரதிர்ஷ்டமாக அவர்கள் எதிர் எதிர் அணியில் வேறு பிரிந்து விட்டார்கள். எனவே இப்போது அந்தப் பகைமை வெளிப்படையாக வெளியில் வந்து ஆவேசமாக குதித்தது. 

சில குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகளில் முரட்டுத்தனம் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது. ரக்பி, குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் காட்டுத்தனமாக அடித்துக் கொள்வார்கள். அது அந்த விளையாட்டின் இயல்பு.  ஆனால் அவற்றில் கலந்து கொள்ளும் வீரர்கள் அதற்கேற்ப பயிற்சி எடுத்திருப்பார்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அணிந்திருப்பார்கள். மட்டுமல்லாமல் பாலின அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகத்தான் போட்டிகள் நடக்கும். உடல்திறன் சார்ந்து இருவருக்கும் இருக்கும் வித்தியாசம் ஒரு காரணம். சமமான பலம் உள்ளவர்களைத்தான் உடல்திறன் சார்ந்த போட்டியில் ஈடுபடுத்த வேண்டும். இது தவிர ஆண்களுடன் மோதுவதில் பெண்களுக்கான சில பிரத்யேகமான சங்கடங்கள் இருக்கின்றன. 

ஆனால் இது போன்ற அடிப்படையான விதிகள் எதுவும் பிக்பாஸ் வீட்டில் இல்லை. மானுட சமத்துவத்தை பிக்பாஸ் போல வலியுறுத்தும் ஆசாமி வேறு எவரும் இருப்பார்களா என தெரியவில்லை. பாலினம், உடல்பலம் வித்தியாசமின்றி ‘எப்படியாவது மோதிக் கொள்ளுங்கள்’ என்று விட்டு விட்டார். 

ganesh

ஹரிஷூம் சுஜாவும் ஒட்ட முயன்ற பலூன்களை ஆக்ரோஷமாக பிடுங்கி உடைத்தார் சிநேகன். விலங்கை வேட்டையாடும் மனோபாவத்துடன் தன் காரியத்தில் மூர்க்கமாக அவர் ஈடுபட்டது சற்று மிகையாக இருந்தது. ‘வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற விதி அவரை உற்சாகப்படுத்தி விட்டது போல. சிநேகனுக்கும் சுஜாவிற்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். எனவே சிநேகனின் ஆவேசத்தை ஈடுகொடுக்க முடியாத சுஜா, வீச்வீச்சென்று கத்தினார். அவரின் மூர்க்கத்தை தானும் பின்பற்ற முயன்றார். முடியாத சமயங்களில் ‘போய்யா.” என்று திட்டினார். 

இங்கு நேர்மையாக விளையாடுவதில் பயனில்லை என்கிற வருத்தத்தில் ஏற்கெனவே இருந்த ஹரீஷ் முதலில் சிநேகனை மென்மையாகத்தான் கையாண்டார். ஆனால் ஜெயிப்பது மட்டுமே முக்கியம் என்கிற நோக்கில் சிநேகன் விளையாடியதால் பதிலுக்கு அவரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார். இருதரப்பிலும் போர்டுகள் கீழே விழுந்து உடைந்தன. லோ –பட்ஜெட்டில் செய்யப்பட்ட ஸ்டாண்ட் போலிருக்கிறது. அவர்கள் சற்று மோதியதுமே உடைந்து விட்டது. ‘என்ன செய்யலாம்’ என்று பிக்பாஸிடம் கேட்டார்கள். ‘கார்ப்பெண்ட்டர்’ அதற்குள் கிளம்பி விட்டார் போலிருக்கிறது. அப்படியே வைத்து விளையாடுங்கள் என்று பதில் வந்தது. எனவே போர்டை தரையில் பரப்பி வைத்து விளையாடினார்கள்.

எதிர்தரப்பில் பிந்துவும் ஆரவ்வும் இணைந்து பலூன்களை போர்டில் ஒட்ட முயல கணேஷ் அவர்களை தடுத்துக் கொண்டிருந்தார். தான் ஒரு கனவான் என்பதை இந்த முறையும் கணேஷ் நிரூபித்தார். ஆரவ் அவருடைய கால்களை மூர்க்கத்தனமாக பலமுறை இழுத்த போது திமிறிக் கொண்டு வந்து பலூன்களை உடைத்தார். ஆனால் அது சார்ந்த புகார் எதையும் சொல்லவில்லை. மட்டுமில்லாமல் ஆரவ் மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் ‘கட்டுப்பாடான’ ஆக்ரோஷத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள். ‘ஓகேவா.. அடிபடலையே’ என்று பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். பிந்துவை கையாளும் போது, அவர் பெண் போட்டியாளர் என்கிற கவனத்தை கணேஷ் பெரும்பாலும் கருத்தில் கொண்டார்.

பஸ்ஸர் அடிப்பதற்கு முன்பாக சுஜா கையாண்ட ஒரு பலூனை சிநேகன் பலவந்தமாக உடைத்து விட ‘பெல் அடிச்சப்பறம் உடைச்சுட்டார்’ என்று உரத்த குரலில் பஞ்சாயத்து வைத்தார் சுஜா. எதிரணி நபர்களையும் இந்தப் பஞ்சாயத்திற்காக அழைத்தார். சுஜா அணிக்கு சார்பாக தீர்ப்பளித்தார் பிக்பாஸ். எனவே முதல் சுற்றின் முடிவில் சிநேகன் அணி 0 – சுஜா அணி 1.

தேவர் மகன் திரைப்படத்தில் ‘பஞ்சாயத்தாடா இது.. இல்ல.. பஞ்சாயத்தா.. ன்னு கேட்கறேன். இது பஞ்சாயத்தே இல்லை. நான் இங்க இருக்க முடியாதப்பு.. கிளம்பறேன்’ என்று சிவாஜி ஆவேசப்படுவது போல. ‘விளையாட்டாடா.. இது..’ என்று பார்வையாளர்கள் கேட்கக்கூடிய இந்த அபத்தமான விளையாட்டு அடுத்த சுற்றிற்கு தொடர்ந்தது. ஆனால் விதியில் சற்று மாற்றம். போர்டில் பலூனை ஒட்டுவதற்கு முன்பே உடைக்கலாம். எனவே சிநேகன் இன்னமும் ஆவேசம் ஆனார். எதிரணி கஷ்டப்பட்டு ஊதி வைத்திருந்த பலூன்களையெல்லாம் சிறுபையனின் உற்சாகத்துடன் தேடித் தேடி உடைத்தார்.

சிறுவயதுகளில் காற்றை நிரப்பி பலூன் ஊதுவது என்பது உற்சாகமான விளையாட்டு. ஆனால் குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு இந்த எளிய விஷயமே, கடுமையான சவாலாக இருக்கும் என்பது நான் எதிர்பாராதது. அலுவலகத்தின் ஆண்டு விழாவிற்காக அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவலாமே என்று ஒரு பலூனை எடுத்து ஊதிப் பார்த்தேன். ம்ஹூம் முடியவில்லை. கால்வாசி பலூனை ஊதுவதற்குள் தொண்டை காய்ந்து பலமான இருமல் வந்து விட்டது. தோல்வியை ஒப்புக் கொண்டு பலூனை வைத்து விட்டேன். எனக்கு சுவாசப்பிரச்சினை இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எனவே என் கண்ணெதிரே அத்தனை பலூன்கள் உடைக்கப்பட்ட போது ‘அடடா~ எத்தனை மனித உழைப்பு வீண்” என்று ஏனோ தோன்றியது. சிநேகனின் மீது கோபமாக வந்தது. 

அடுத்த சுற்று. விண்வெளி பயணத்திற்கு செல்வதற்கான பாதுகாப்பு விஷயங்களை அணிந்து கொண்டு வாக்குமூல அறையில் களைத்துப் போய் உட்கார்ந்திருந்தார் ஆரவ். அவரைவிடவும் உயரத்திலும் அகலத்திலும் பெரிதான கணேஷை அவர் சமாளித்ததில் நிறைய சக்தி போயிருக்க வேண்டும். 

விதியில் சற்று மாற்றத்தை அறிவித்தார் பிக்பாஸ். ‘போர்டில் பலூனை ஒட்டிய பிறகு உடைக்கக்கூடாது’ இது ஒருவகையில் நியாயமான மாற்றம் போல் தெரிந்தாலும், போட்டியாளர்களின் ஆவேசம் அதிகமாகும். ஒரு பலூன் கூட போர்டு பக்கம் செல்லக்கூடாது என்று மூர்க்கம் ஆவார்கள். பிக்பாஸின் திட்டம் அற்புதமாக பலித்தது. கற்கால மனிதர்களின் ஆவேசமும் போட்டி மனோபாவமும் அவர்களுக்குள் மெல்ல எழுந்தன. ‘யார் விலங்கின் இரையை முதலில் வீழத்தியது’ என்கிற போட்டியில் மனித உயிர்களே பலியாகக்கூடிய ஆதிவன்முறையின் இச்சை அவர்களுக்குள் அரும்பத் துவங்கியது. 

இந்த தள்ளுமுள்ளுவில் போர்டு சரிந்து சுஜாவின் காலின் மீது பட ‘அய்யய்யோ’ என்று அவர் கத்தினார். போட்டி சற்று நிறுத்தப்பட்டு அவருக்கு உதவ ஓடினார்கள். ஆவேசம் தணியாமல் சிநேகன் ஒதுங்கி நின்றார். விளையாட வேண்டாம் என்று மற்றவர்கள் வற்புறுத்தினாலும் சுஜா பிடிவாதமாக ஆட்டத்தை தொடர்ந்தார். சிநேகன் அவர் மீது மோத முயன்ற பல சமயங்களில் கோபமடைந்தார். ‘கை பார்த்து’ என்று சிநேகனை சூசகமாக எச்சரித்த சுஜா, பிறகு கோபம் அதிகமாகி  ‘பந்துகள் சேகரிக்கும் போட்டியில் பிந்து ஏன் சென்று விட்டார் என்று இப்போதுதான் புரிகிறது’ என்கிற வில்லங்கமான குற்றச்சாட்டை தூக்கியெறிந்தார். 

Snehan

சுஜா குறிப்பிட்ட அதே காரணத்தை சிநேகன் வெறுப்பாளர்கள் சமூகவலைத்தளங்களிலும் தெரிவித்திருந்தார்கள். இதுவொரு சங்கடமான, விவகாரமான விஷயம். உண்மை எதுவென்று அறியாமல் வெளியில் அமர்ந்தபடி வாய்க்கு வந்தபடி பேசி விட முடியாது. நாமே கூட இது போன்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.  ‘பிக்பாஸ் ஒவ்வொரு முறையும் தனக்கு சார்பாக சொல்லாமல் எதிர்தரப்பினருக்கு சாதகமாக சொல்லிக் கொண்டிருந்த எரிச்சலில்தான் போட்டியிலிருந்து விலகினேன்’ என்பதுதான் பிந்துவின் விளக்கம். மட்டுமல்ல, அதற்குப் பிறகு சிநேகனிடம் அவர் இயல்பாக பேசத் துவங்கி விட்டார் என்பதை கவனிக்க வேண்டும். 

நடைமுறை வாழ்வில் பெண்களின் மீதான பாலியல் சீண்டல்களை, கீழ்த்தரமான உத்திகளை பயன்படுத்துவதில் ஆண்களின் சதவீதம் அதிகம் என்பது உண்மைதான். ஆனால் இது பெரும்பாலும் ரகசியமாக, எவருக்கும் அறியாத முறையில் நடப்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டியில் சிறு அசைவைக்கூட பதிவு செய்யும் இத்தனை காமிராக்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போது, அதிலும் ஆவேசமான போட்டியின் போது அவ்வாறான உணர்வுகள் தோன்றுமா என்பது கேள்விக்குரியது. சிநேகனுக்கு சாதகமான அபிப்பராயமாக  இதை எடுத்துக் கொண்டு கோபப்பட வேண்டாம்.  நாமாக இருந்தாலும் அப்படி நடந்து கொள்வோமா என்று நிதானமாக யோசித்துப் பார்க்கலாம். இன்னொரு வகையில், ஓர் ஆணை எளிதில் சாய்ப்பதற்கு இந்தக் குற்றச்சாட்டை உடனே எடுத்து வீசும் பெண்களின் சதவீதமும் உண்டு. 
ரணகளமான இந்தப் போட்டி முடிவிற்கு வந்தது. அடிபட்ட பிந்துவிற்கு முதலுதவி செய்வதில் எதிரணியைச் சார்ந்த கணேஷ் மிகுந்த ஆர்வம் காட்டியது பாராட்டுக்குரியது. இரையாடி முடித்த விலங்கு போல களைப்புடன் அப்படியே சாய்ந்து விட்டார் சிநேகன். 

திருவிளையாடல் தருமி போல ஆரவ்வின் நகைச்சுவையான புலம்பல் சில நிமிடங்களுக்கும் மேலாக நீண்டது. ‘வெச்சு செஞ்சிட்டாங்களே’ என்பது போல அனத்திக் கொண்டிருந்தார். ‘இதுல ஜெயிச்ச காசெல்லாம் ஆஸ்பத்திரி செலவுக்கே சரியாயிடும் போலயே. கதவைத் தொறந்தப்பவே போயிருக்கலாம். மக்கள் நம்ம மேல இருக்கிற அபிமானத்துலதான் வாக்களிச்சு இருக்க வெச்சிருக்காங்கன்னு நெனச்சோம்… இல்ல.. இவனுங்கதான் எவ்ள அடிச்சாலும் தாங்குவாங்கன்னு நம்மை விட்டு வெச்சாங்க போல. இப்பதான் புரியது” என்றெல்லாம் புலம்பியவர், இடையில் பிக்பாஸ் மீதும் விமர்சனம் வைத்து விட்டதை ‘சோத்துல விஷத்தை வெச்சிடுவாங்களோ” என்று பயந்து ‘மன்னிச்சிடுங்க. பிக்பாஸ். உங்களையெதுவும் சொல்லலை’ என்று முன்ஜாமீன் மனு வாங்க முயன்றார். 

ஆரவ் குறிப்பிட்டது போல, நல்லவேளையாக வையாபுரி இதற்கு முன் வெளியேறி விட்டார். இப்போது தொலைக்காட்சியில் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘அப்பாடா.. தப்பிச்சம்டா.. சாமி.. கொலைவெறி விளையாட்டால்ல இருக்குது’ என்று ஆறுதல் அடைந்திருக்கக்கூடும். 

Suja

“நாங்கள் விளையாடிக் கொண்டிருந்ததை விடவும் உங்கள் பக்கம் என்ன நடக்கிறது என்கிற கவலையே எனக்கு அதிகமாக இருந்தது” என்றார் கணேஷ். உண்மைதான். சிநேகன் மற்றும் சுஜாவின் ஆவேசம் அத்தகையதாக இருந்தது. ‘அங்க நடந்தது போட்டி இல்லை, சண்டை’ என்ற சுஜா, “என் கிட்ட வந்து இழுத்துடுவேன்றாரு.. என் மேல கையை வெச்சுடுவாரா.. என்னை அடிச்சா அவருதான் evict ஆயிடுவாரு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். 

பார்வையாளர்கள் தன் நல்லியல்பை கவனித்தார்களோ இல்லையோ என்கிற கவலை கணேஷிற்கு வந்து விட்டது போல. ‘அதனால்தான் பிந்து கிட்ட நான் கவனமாக விளையாடினேன்’ என்று சுஜாவிடம் சொல்வது போல பார்வையாளர்களிடமும் பதிய வைத்தார். ஏற்கெனவே வெறுப்பில் இருக்கும் ஹரீஷ், சிநேகனின் முரட்டுத்தனம் காரணமாக ‘என்னடா இது விளையாட்டு’ என்பது போல புலம்பினார். 

அதுவரை அமைதியாக இருந்த சிநேகன், ஆரவ் மற்றும் பிந்துவிடம் தன் மனத்தாங்கலை வெளிப்படுத்தினார். “என்னங்க.. அந்தப் பொண்ணு .. போய்யா.. வாய்யா ன்னுது.. டச் பண்ணாதீங்கன்னுது.. அப்ப எதுக்கு விளையாட வரணும். நான் என்ன பொறுக்கியா.. மத்தவங்கள்லாம் விளையாடினாங்க . ஏதாவது சத்தம் வந்ததா.. இந்தப் பொண்ணு மாத்திரம் அப்படிக் கத்துது…நேர்மையைப் பத்தி யாரு பேசறது.. விளையாட்டு ஆவேசத்துல போர்டு கீழே விழுந்தது. அதுக்கு நானா பொறுப்பு.. ‘காலை உடைச்சிட்டாரு’ன்னு சொல்றாங்க.. என்றெல்லாம் அவருடைய புகார் பட்டியல் நீண்டது. அவற்றை ஆரவ் ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல் பிந்துவும் ஒப்புக் கொண்டார் என்பதுதான் விஷயம். சிநேகன் முன்பு வில்லங்கமாக நடந்து கொண்டிருந்தால், பிந்து அவருக்கு சாதகமாக எதிர்வினை ஆற்றியிருக்க மாட்டார் என்பது ஒரு யூகம். 

ஆனால் என்னவொன்று, சிநேகன் இதை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காமல் நேரடியாக சுஜாவையே தனிமையில் அழைத்து உரையாடியிருக்கலாம். அல்லது அமைதியாக இதை கடந்து போயிருக்கலாம்.

அபத்தமான இந்தப் போட்டியின் முடிவு தெரிவிக்கப்பட்டது. சுஜா, கணேஷ், ஹரீஷ் அணி வெற்றி பெற்றது. இது சரியா என தெரியவில்லை. சுஜா மற்றும் கணேஷ் பலூன்களை ஒட்ட விடாதவாறு சிநேகன் ஆவேசமாக தடுத்துக் கொண்டிருந்ததால் அவர்களால் அதிகம் செயல்பட முடியவில்லை. இதற்கு மாறாக எதிரணி சற்று நாகரிகமாக விளையாடியதால் பிந்துவால் அதிக பலூன்களை ஒட்ட முடிந்தது என்பதைக் கவனித்தோம். ஒட்டப்பட்ட பிறகு உடைக்கப்பட்ட பலூன்கள், தவறுதலாக உடைக்கப்பட்டவை, வேண்டுமென்றே உடைக்கப்பட்டவை என்பதையெல்லாம் ஒருமாதிரியாக கூட்டிக் கழித்துப்பார்த்தால் கூட சிநேகன் அணிதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 

இந்த வெற்றி சுஜாவின் போராட்டத்திற்காக கிடைத்த பரிசா எனத் தெரியாது. கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் Duckworth–Lewis முறையை விடவும் சிக்கலானது பிக்பாஸ் பின்பற்றும் விதிமுறைகள். சுஜா அணிக்கு பத்து மதிப்பெண்கள் கிடைத்தன. கோயில் தேங்காய் போல அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவித்து விட்டதால் ‘யார் யாருக்கு எவ்வளவு மதிப்பெண்கள்’ என்பதை ஆலோசித்தனர். ‘பத்தை மூன்றாக வகுத்து எடுத்துக் கொள்ளலாமே’ என்று ஆலோசனை தந்தார் பெண் ராமானுஜம் சுஜா. 10 என்கிற மதிப்பை மூன்றால் வகுத்தால் என்ன விடை என்பதை இணையத்தில் சற்று தேடிப் பார்த்தேன். 3.33333333333  உள்ளிட்டு பல விடைகளைப் பார்த்ததில் தலை சற்று ‘கிர்’ என்று ஆனதால் விட்டு விட்டேன். சிறுவயதிலிருந்தே கணக்கிற்கும் எனக்கும் அத்தனை நட்பில்லை. 

கணேஷ் 4 மதிப்பெண்களை எடுத்துக் கொள்ள, சுஜா மற்றும் ஹரீஷ், தலா 3 மதிப்பெண்களை பகிர்ந்து கொண்டனர். (கூட்டல் சரிதானே?) சுஜாவிற்கு நான்கு மதிப்பெண்கள் தந்திருக்கலாம். ஆண்களுக்கு நிகரான போராட்டத்தை அவர் நிகழத்தினார். 

“எங்க ஆத்தா அப்பவே சொல்லுச்சு.. சென்னைக்கு போகாதடான்னு.. ஊர்லயே ஆடு மாடுங்களோட இருந்திருக்கலாம்’ என்று இந்த பயங்கர அனுபவத்தை விளையாட்டாக சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். இப்போது சற்று இயல்பு நிலைக்கு வந்து விட்டார் போலிருக்கிறது. 

வெளியே புலம்பிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் வரவேற்பறைக்கு நுழைந்த போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விக்டோரியா மகாராணியார் உபயோகித்த ஒரு பழைய மாடல் டெலிபோன் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. எடுத்துப் பார்த்தனர். டயன் டோல் வந்தது. வெளியிலிருந்து மட்டுமே அழைப்பு வரும் போல. அல்லது அடுத்த taskல் எவருக்காவது எலும்பு உடைந்தால், அவரே எழுந்து வந்து ஆம்புலன்ஸை கூப்பிடுவதற்காக நல்லெண்ணத்துடன் பிக்பாஸ் செய்த ஏற்பாடாக இருக்கலாம். 

‘போட்டிகள் கடுமையாகின்றன. போட்டியை கடுமையாக காண்பார்களா, அல்லது போட்டியாளர்களுக்குள் கடுமையாக பார்த்துக் கொள்வார்களா’ என்கிற ரைமிங்கான வசனத்துடன் (ரணகளுத்துலயும் இந்தக் கிளுகிளுப்பு தேவைதானா?) விளக்குகள் அணைந்தன. 

போட்டிகள் இனி கடுமையாக இருக்கும் என்பது முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது பாலின வித்தியாசத்தையும் உடல் பலத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப அமைக்கப்படுவதே நியாயமானதாக இருக்கும். பிக்பாஸ் காதில் இந்தக் குரல் விழுமா?

- சுரேஷ் கண்ணன்

 

 

Add new comment

Or log in with...