பிக் போஸ் 84 ஆம் நாள்: வெளியேறினார் வையாபுரி; கமல் கொடுத்த டிக்கெட்? | தினகரன்


பிக் போஸ் 84 ஆம் நாள்: வெளியேறினார் வையாபுரி; கமல் கொடுத்த டிக்கெட்?

Part 01


Part 02

“நாமினேஷன் வரிசையில் உள்ளவர்களில் எவர் வெளியேறப் போகிறார் என்கிற அறிவிப்பிற்கு முன்னால் ‘கோல்டன் டிக்கெட்’ வெற்றியாளரை தெரிந்து கொள்ளலாம். ‘இதை நானே கொண்டு வந்து தருவேன்’ என்று போட்டியாளர்களிடம் முன்பு வாக்குத் தந்திருக்கிறேன். இதுவரைக்கும் யார் வெற்றியாளர் என்று எனக்கும் தெரியாது. ஆனால் இப்ப தெரியும். வீட்டுக்குள் செல்கிறேன். அப்போது உங்களுக்குத் தெரியும்” என்று சஸ்பெனஸ் வைத்து விட்டு சென்றார் கமல்.

“யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா?” என்கிற ‘விஸ்வரூப’ பாடல் பின்னணியில் ஒலிக்க, வெடிச்சத்தத்துடன் தீப்பொறிகள் பறக்க, கமலின் வருகை நிகழ்ந்தது. போட்டியாளர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றார்கள். வீட்டின் வாசலில் போட்டிருந்த வரவேற்பு கோலத்தைப் பாராட்டினார் கமல். அவரின் காலில் விழ சிலர் முயன்ற போது ‘விழாதீங்க.. ப்ளீஸ்’ என்று வேண்டிக் கொண்டார் ‘சுயமரியாதை’யில் நம்பிக்கையுள்ள கமல். 

Bigg Boss

“ஏதாவது சாப்பிடறீங்களா?” வேர்க்கடலை இருக்கு” என்று உபச்சாரம் செய்தார் சிநேகன். “கொடுங்க.. காந்தி சாப்பிட்டது” என்றார் கமல். (கூட எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாம சாதாரணமாக பேசவே மாட்டீங்களா, ஆண்டவரே!) சிநேகன் வரவேற்பு மடல் வாசித்து கமலைப் பாராட்டினார். கமலின் படத்தலைப்புகள் சில இருந்தன. சில விஷயங்களில் தமிழர்களை மாற்றவே முடியாது. “வீடியோல பார்க்கும் போது உள்ள கலாட்டாவா இருக்கும். இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க?” என்றார் கமல். வேர்க்கடலையையும் கொடுத்து விட்டு பேசச் சொன்னது நல்ல ஐடியா இல்லை. மைக்கில் சத்தம் வரும். 

“உங்களை பேச வெச்சு பார்க்கணும்னு ஆசைப்படறோம்” என்றார் பிந்து. (அடுத்த படத்தில் நிச்சயம் சான்ஸ் உண்டு). “சாப்பிட்டுக்கிட்டே எப்படி பேசறது? அப்படி செய்யக்கூடாதுன்னு சின்னப்புள்ளல இருந்து வளர்த்துட்டாங்க” என்றார் கமல். வையாபுரியின் மூக்கைப் பற்றி விசாரித்தார். (“நீங்க கிட்ட வாங்க.. மூக்கு இங்க வராது”) “அவருக்கு மூக்குல அடி. இவருக்கு மனசுல அடி” என்றபடி ஹரீஷை குறும்பாக பார்த்தார்.  

பிக் பாஸ் வீட்டு அனுபவத்தைப் பற்றி வையாபுரியிடம் விசாரித்தார். “இப்ப தெளிவா இருக்கேன் சார்.. இது வரைக்கும் நெறய தப்பு பண்ணியிருக்கேன். இந்த 84 நாள்லதான் அதெல்லாம் புரியது. அது வரைக்கும் புரியலை” என்றார் வையாபுரி. “எல்லோருக்கும் அவங்க தப்பு பண்றது தெரியும். சிலர் தெரியாம மறந்துடுவாங்க. அவங்க மூக்கு மாதிரி.. அவங்களாலேயே பார்க்க முடியாது” என்றார். அவரவர்கள் பிக் பாஸ் வீடு ஏற்படுத்திய மாற்றத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டனர். “நான் தப்பு செஞ்சா எல்லோர் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு தோணுது” என்றார் சிநேகன். 

Bigg Boss

“இதெல்லாம் scripted –னு சில பேர் சொல்லிட்டு இருக்காங்க.. இந்த மாதிரி காட்சிகள்லாம் எந்த சினிமால பார்த்திருக்கீங்க? நான் கூட இந்த வீட்டிற்கு முதல்ல வந்த போது, ‘இதுவொரு கட்டிடம், 60 காமிராக்கள் இருக்கு’ன்னு சாதாரணமாகத்தான் பார்த்தேன். ஆனால் இப்போது ஒரு குடும்பத்தைப் பார்க்கிற உணர்வு வருகிறது. குடும்பத்துல சச்சரவு வராது –ன்னு சொல்ல முடியாது. கண்டிப்பா வரும். யாருக்காவது ஆபத்து, அடிப்பட்டது –ன்னா ஒண்ணா கூடிடுவாங்க..”

“இது போன்ற விஷயங்களுக்கு குடும்ப வாழ்க்கை அவசியம். அது உதவும். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நாம் இழந்து விட்டோம். உறவுகளை அடையாளம் சொல்லி அழைக்க வெட்கப்படுகிறோம். நீங்க அதை செஞ்சிக் காட்டீடிங்க. எனக்கு கூட சமயங்களில் இதைப் பார்த்து அழுகை வரும். முன்ன கோபம் நிறைய வந்தது. இப்ப குறைச்சிக்கிட்டேன்” என்று வெளிப்படையாக பேசினார் கமல்.

“வெளியே என்ன நடக்குது சார்?” என்று கமலின் வாயைப் பிடுங்க முயன்றார் பிந்து. ‘இன்னமும் இருட்டலை” என்று ஜாலியாக சமாளித்த கமல், ‘ரெண்டு மூணு புதுப்படம் ரிலீஸ் ஆயிருக்கு. அவ்ளதான்’ என்று முடித்தார். 

“இங்க விளையாடின விளையாட்டுக்களில் எது கடினமாக இருந்தது?” என்று கமல் கேட்டதற்கு, கயிற்றில் உள்ள  முடிச்சை அவிழ்க்கும் போட்டிதான் சிரமமாக இருந்தது” என்று கூறினர். எவருமே ஜெயிக்காத போட்டி அது. ‘சரி, அதை எடுத்துட்டு வாங்க” என்று தாமே அதை இலகுவாக செய்து காட்டினார். “எந்தவொரு கடினமான விஷயமும் அடிப்படையில் எளிமையாகத்தான் இருக்கும்’ என்றொரு பொன்மொழி உண்டு. இந்தச் சிக்கலும் அப்படியே. (இந்த முடிச்சை எவ்வாறு அவிழ்ப்பது என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் உள்ளது) ஆரவ்வும் ஹரீஷூம் அதை முயன்று பார்த்து ஆச்சரியப்பட்டனர். இனிமேல் எவரையும் “முடிச்சவிக்கி” என்று சுலபமாக திட்டி விட முடியாது. அந்த விஷயமும் கடினமானதுதான். 

**

Bigg Boss

“சரி. முக்கியமான விஷயம். கோல்டன் டிக்கெட். யார் வெல்லப் போறாங்கன்னு உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். இல்லையா?” வாங்க போகலாம்” என்று அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு அழைத்துச் சென்றார். மதிப்பெண்களின் வரிசை மட்டும் இருந்தது. போட்டியாளர்களின் அடையாளங்கள் இல்லை. கமலிடம் அதற்கான புகைப்படங்கள் இருந்தன. தன்னுடைய புகைப்படத்தை எடுக்கும் போதே, வையாபுரிக்கு புரிந்து விட்டது. “நான்தான் சார் கடைசில இருப்பேன்” என்றார். அதன்படியே ஆகிவிட்டது. வையாபுரிக்கு மேல் சுஜாவின் புகைப்படம். 

அடுத்த புகைப்படத்தை ரகசியமாக எடுத்ததாக கமல் நினைத்துக் கொண்டிருக்கும் போது ‘என் ஃபோட்டோ” என்றார் ஹரீஷ். “பார்த்தீங்களா?” என்று கேட்ட கமல், சட்டென்று தொனியை மாற்றி “பார்த்துட்டீங்களா?” என்றது சிறப்பு. (நடிகன்டா!. ) ஹரீஷ் பெற்ற மதிப்பெண்கள் முப்பது. கணேஷ் முப்பத்தொன்று. பிந்து 36.

முதல் இரண்டு இடத்தை எவர் பெறுவார் என்பதில் சஸ்பென்ஸ் வைத்தார் கமல். போட்டியாளர்களுக்கு பதற்றம் கூடியது. ஆரவ்வா, சிநேகனா? இரண்டு பேருக்குமே ஆதரவு இருந்தது. ஆரவ் பெயரை நிறைய பேர் சொன்னார்கள். சஸ்பென்ஸை இழுத்துக் கொண்டே போனார் கமல். “சரி போட்டோவை அப்புறம் வெச்சுக்கலாம்” என்று சொல்லி எல்லோரையும் பக்கத்தில் அழைத்தார். ஆரவ் மற்றும் சிநேகன் இடம் வலமாக நின்றார்கள். டிக்கெட்டை வாங்க தன் கையை நீட்டி காமெடி செய்தார் வையாபுரி. யோசிப்பது போல் பாவனை செய்த கமல், சட்டென்று சிநேகனின் கையில் கோல்டன் டிக்கெட்டை தந்தார்.

Bigg Boss

கவிஞரின் முகத்தில் பரவசம். இனிமேல் சிநேகனை எவரும் அவரை நாமினேட் செய்ய முடியாது.  எனவே வெளியேற்றத்திற்கு வாய்ப்பில்லை. நூறு நாள்கள் உறுதியாக இருப்பார். நான்கு இறுதிப் போட்டியாளர்கள் ஒருவராக சிநேகன் தகுதி பெற்றிருக்கிறார். ‘நன்றி.. நன்றி’ என்றார் சிநேகன். கார் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த வெற்றி ஒரு பெரிய மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் இதே போல் கடினமாக உழைத்த, சுஜா கடைசி வரிசைக்கு சென்றது துரதிர்ஷ்டமானது. 

“மக்கள் கைவிட மாட்டாங்கன்னு நான் சொல்லிட்டே இருந்தேனா, இல்லையா?” என்றார் வையாபுரி. “நீங்க வெற்றியை நெருங்கியிருக்கிறீர்கள் என்றுதான் இதற்குப் பொருள்” என்று சிநேகனின் மகிழ்ச்சித்  தீயில் சிறிது தண்ணீரை ஊற்றினார் கமல். மற்றவர்களுக்கு இதனால் உற்சாகம் குறைந்து விடக்கூடாதே என்று நினைத்தாரோ என்னமோ, “மத்தவங்கள்லாம் இதைப் பத்தி என்ன நெனக்கறீங்க. ஒரு வெற்றிப் பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கும். எதுவும் நிலையில்லை. சரி. எனக்கு சில கடமைகள் இருக்கு. எவிக்ஷன் பிராசஸை போய்ப் பார்க்கணும். நான் கிளம்புறேன்” என்றார் கமல். “ரொம்ப நாள் ஆசை சார். உங்களுக்கு ஒரு முத்தம் தரணும்” என்று ஆசைப்பட்டார் சிநேகன். கமல் அதற்கு இணங்கினார். (கமலுக்கே முத்தமா?!) ஹரீஷ் குழந்தை போல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, “உங்க கன்னத்தைக் கிள்ளணுமா?” என்று கிள்ளி விட்டார். ஹரீஷை உற்சாகப்படுத்தி போட்டியில் நீடிக்க வைக்க வேண்டும் என்கிற கமலின் முயற்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

Bigg Boss

தன் நண்பர் ஒருவருக்கு கமலின் வாயால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று சுஜா விரும்பினார். ஆசிரியரிடம் பாத்ரூம் போக அனுமதி கேட்கும் எல்கேஜி மாணவன் போல் பயந்து பயந்து சுஜா கேட்க, அனுமதியளித்தார் கமல். சிவகுமார் என்கிற சுஜாவின் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லப்பட்டது. “சரி. கிளம்பறேன். எங்காவது வெடி வெடிக்கப் போவுது, பார்த்து… வரும்போதுதான் வெடி மரியாதையெல்லாமா? போகும் போது கிடையாதா?” என்று ஜாலியாக கமெண்ட் செய்து கொண்டே கிளம்பிய கமல், எல்லோரிடமும் மகிழ்ச்சியாக விடை பெற்றார். போட்டியாளர்களின் முகத்திலும் பயங்கர குஷி தெரிந்தது. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் சிநேகன் நன்றி சொன்னார். சுஜாவின் முகத்தில் உற்சாகம் குறைந்திருந்தது. 

**

கமல் அரங்கிற்குள் வந்தார். வெளியேற்றப்படவிருக்கிறவர் எவர் என்கிற விடை தயாராக இருந்தது. ஆரவ் மற்றும் வையாபுரியில் எவர் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்கள்? என்று பிந்துவிடம் கேட்டார் கமல். சிவாஜி போல அப்போதே கண்கலங்கத் துவங்கி விட்டார் பிந்து. ‘No Eviction day’வாக இருந்தால் நன்றாக இருக்கும். இந்த வீட்டில் நுழைந்தபோது நான் தனியாகத்தான் அமர்ந்திருப்பேன். வையாபுரி அண்ணன் தாமாக முன்வந்து என்னிடம் பேசுவார். பல உதவிகளைச் செய்தார். இந்த வீட்டில் என்னுடைய முதல் நண்பர். அவர் மேல் எனக்கு பெரிய மரியாதையுள்ளது” என்று பிந்து நெகிழ்ந்தார். ஆரவ்வைப் பற்றி சுஜாவிடம் விசாரித்தார் கமல். அமைதியாக இருந்த சுஜா ‘என்னால் சொல்ல முடியவில்லை” என்று சைகையில் சொன்னார்.

Bigg Boss

“நான் இங்க வந்ததுல இருந்து ஆரவ் கூட க்ளோசாகிட்டேன். வையாபுரி அண்ணன்தான் எங்க எல்லோருக்கும் என்டர்டெயிண்மெண்ட். எத்தனை கஷ்டம் இருந்தாலும் சிரிக்க வெச்சிடுவார். அதனால யாரு போனாலும் கஷ்டமாத்தான்  இருக்கும். நான் போனா சந்தோஷப்படுவேன். என்று நெகிழ்ந்தார் ஹரீஷ். வையாபுரி வயதில் மூத்தவர் என்பதால் அது சார்ந்த மரியாதையுடன் அவருடைய நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை இதர போட்டியாளர்கள் புகழ்ந்தனர். 

**

கமலின் சமயோசித நகைச்சுவையை நான் பல சமயங்களில் வியப்பேன். சினிமாக் காட்சிகளில் மட்டுமல்ல, மேடையில், நேர்காணல்களில் பேசும் போது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நகைச்சுவையுணர்வையின் கூர்மையை நெருக்கமாக உணர முடிந்தது.

‘இந்த வீட்டில் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் நூல் மாதிரி இணைத்து ஒரு மணியாக்கும் நபராக வையாபுரி இருந்தார்” என்று சிநேகன் பாராட்டிக் கொண்டிருந்தார். 

“ஓ.. அதனால்தான் நூல் கோர்க்க அத்தனை சிரமப்பட்டாரா?” என்று ஒரு அட்டகாசமான சிக்ஸர் அடித்தார் கமல். 

பெட்ஷீட் தைக்கும் ஒரு போட்டியில் வையாபுரி பட்ட சிரமம் அது. அந்த விஷயத்தையும், ‘நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ள போட்டியாளர்களை இணைப்பது எத்தனை சிரமம்’ என்பதையும் இணைக்கும் வகையில் கமல் அடித்த அந்த கமெண்ட்.
ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு எவிக்ஷ்ன் கார்டில் இருந்த வையாபுரியின் பெயரைக் காட்டினார் கமல். வையாபுரியின் முகத்தில் பெரிதாக எந்தவொரு சலனமும் இல்லை. இதற்காக தயாராக இருந்தது போலவே தோன்றியது. 

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் எவர் வெளியேறினாலும் அரங்கத்திற்குச் சென்று கமலுடன் உரையாடிய பிறகே அவரைப் பற்றிய இனிமையான நிகழ்வுகள் அடங்கிய குறும்படம் ஒளிபரப்பாகும். வீட்டினுள் இருக்கும் இதர போட்டியாளர்கள் அந்தக் குறும்படத்தைப் பார்க்க முடியாது. ஆனால் விதிவிலக்கு ஆச்சர்யமாக, பிக் பாஸ் வீட்டின் உள்ளேயே வையாபுரியைப் பற்றிய குறும்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. 

Bigg Boss

அனைவரும் உற்சாகத்துடன் நெகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். வையாபுரி முன்னர் கண்கலங்கிய நிகழ்வுகளைப் பார்த்து அவரே இப்போது கலங்கினார். பிந்துவின் கண்கள் கலங்கியபடியே இருந்தன. “யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சதில்லை. ரொம்ப நன்றி” என்றார் வையாபுரி. ‘என்னைத் தெரியாதவர்களுக்கு தெரிய வைத்த, என்னை எனக்கே தெரிய வைத்த, தெளிய வைத்த, பிக் பாஸிற்கும் விஜய் டிவிக்கும், கமல் சாருக்கும், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்றி” என்று சிநேகனை எழுத வைத்து போர்டில் கையெழுத்திட்டார் வையாபுரி. 

“இதே மாதிரி கலகலப்பா இருங்க. யார் வெற்றி பெற்றாலும் மத்தவங்க அவங்களுக்கு உறுதுணையா இருங்க. வாழ்த்துகள். நூறாவது நாள்ல சந்திக்கறேன்” என்று வையாபுரி விடைபெற்றார். எல்லோரும் அவரிடம் பிரியாவிடை தந்தனர். பிந்து மாத்திரம் அதிக நெகிழ்ச்சியுடன் இருந்தார். “இதோ இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கு. உடனே பார்க்கப் போறோம். அப்புறம் என்ன?” என்று ஆறுதல் சொன்னார் வையாபுரி. ‘hi buddy’ என்று வழியனுப்பி வைத்தார் பிந்து. ஹரீஷால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிந்து அமைதியாக சென்று உட்கார்ந்து விட்டார். சுஜா வையாபுரி சென்ற திசையையே பார்த்தபடி தயங்கி நகர்ந்தார்.

**

கமல் பாசமாக அழைத்தவுடன் வையாபுரி அரங்கத்திற்குள் வந்தார். பார்வையாளர்கள் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர். “உள்ளே போன வையாபுரி வேற. வெளியே வந்த வையாபுரி வேற. இல்லையா?” என்று ஆரம்பித்தார் கமல். “ஆமாம் சார்.. முதல்.. இரண்டு, மூன்று வாரத்தில் வெளியே வந்திருந்தால் இத்தனை உணர்ந்திருக்க மாட்டேன். 84 நாட்கள் கடந்து வரும் போது பல விஷயங்களை உணர்ந்துவிட்டேன்” என்றார் வையாபுரி. 

Bigg Boss

“எல்டாம்ஸ் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லலாமா?” என்று வையாபுரியிடம் சம்பிரதாயத்திற்கு அனுமதி கேட்டு விட்டு விஷயத்திற்குள் வந்தார் கமல். ‘வையாபுரிக்கு அப்ப சின்ன வயது. ‘அவ்வை சண்முகி எடுத்திட்டிருந்தோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது வையாபுரியும் இணைந்து கொண்டார். “அந்தப் படத்துல எனக்கு சின்ன சீன்தான்.. பாத்திரத்தின் படி என் பேரு ராஜா… அந்தப் பேரு ரொம்ப வழக்கமா இருக்கேன்னு கமல் சார் என்னிடம் பெயரை விசாரித்தார். வையாபுரின்னு சொன்னவுடன் அதையே வெச்சிடுவோம்’னார். என் பெயரை திரையில் கேட்கும் போது மகிழ்ச்சியா இருந்தது’ என நெகிழ்ந்தார் வையாபுரி. 

“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆறு படங்கள் பண்ணியிருக்கோம். (12 படங்கள் என்று திருத்தினார் வையாபுரி). பார்த்தீங்களா டபுள்ளா இருக்கு. அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ அந்தப் படம் சரியாப் போகலை. ஆனால் அதில் மனுஷன் பின்னியிருப்பார். அதற்கப்புறம் ரொம்ப காலம் கழிச்சு என்னோட வீட்ல இவரோட பேசிட்டு இருந்தேன். ‘என்ன வையாபுரி. படங்கள்லாம் பண்ணிட்டு இருக்கீங்களான்னு விசாரிச்சேன். ‘இல்ல சார். எனக்கு திறமை இருக்கான்னு சந்தேகம் இருக்கு –ன்னார். அவர் திறமை மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. நான் வெறும் வேஷம்தான் கொடுத்தேன். ஆனா நீங்க பிக் பாஸ் மூலமா நட்சத்திர அந்தஸ்து கொடுத்தீட்டீங்க. நன்றி” என்பதாக கமலின் உரை அமைந்தது. 

“கணேஷ் இதுவரைக்கும் கண்கலங்கினதேயில்லையாம். ரிலேஷன்ஸ் இறந்தா கூட கலங்க மாட்டாராம். நான் வெளியே வந்ததுக்கு அழுதுட்டார்” என்று நெகிழந்தார் வையாபுரி. “ஆம். ரியாலிட்டி ஷோன்றாங்க.. இதெல்லாம் சும்மாங்க.. எல்லாம் நடிப்பு –ன்றாங்க…. நான் ஒரேயொரு சின்ன சவால் விடறேன். எனக்கு பெரிய நடிகைகளையெல்லாம் தெரியும். இப்ப பிந்து கண்கலங்கினாங்க இல்லையா, அதே மாதிரி அழுது நடிக்க சொல்லிடுங்க பார்க்கலாம் முடியாது.  எனக்கே கூட அந்த மாதிரி காட்சிகள்ல நடிக்கும் போது மிகையாகி விடுமோன்னு சந்தேகம் வந்துடும். மக்கள் அதை சரியா கண்டுபிடிச்சுடுவாங்க. அதனால பாக்கெட்ல ஒரு விமர்சகனை வெச்சுக்கிட்டே நடிப்பேன்” என்றார் கமல்.

Bigg Boss

“அது சரி. நீங்க முதல் ரெண்டு வாரத்துலயே போயிடுவீங்கன்னு முதல்ல நெனச்சேன்” என்று வையாபுரியை நோக்கி கேட்டார் கமல். “ஆமாம் சார். சினிமாவுலயும் சரி, வெளிலேயேயும் சரி. எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. வீட்டுக்குள்ள கோப்பட்டுக்கிட்டு இருப்பேன். ஆனால் இங்கு வந்தபிறகுதான் உறவுகளின் அருமை தெரியுது. எனக்கு அப்பா கிடையாது. மாமனார் இருக்கார். ஆனால் ஒருமுறை கூட அவரை நான் மாமா –ன்னு கூப்பிட்டது கிடையாது. என் மனைவிக்கு கூட இதில் ஆதங்கம். அவருக்கு பிள்ளை இருந்தாலும் ‘வையாபுரிதான் எனக்கு கொள்ளி போடணும்’னு சொல்லிட்டாராம். “நீங்க அவரை அப்பான்னு கூப்பிடணும்னுதான் அப்படி சொல்லியிருக்கார் போல –ன்னு என் மனைவி சொன்னாங்க” என்று நெகிழ்ந்தார் வையாபுரி. 

ஆம். ஒற்றை பிள்ளைகள் இருக்கும் குடும்பம் பெருகி விட்டதால், அப்பா வழி, அம்மா வழியான உறவினர்கள் இருப்பதே அருகிப் போய்க் கொண்டிருக்கும் போது இருக்கிற உறவுகளை அந்த அடையாளத்துடன் கூப்பிடுவது குறைந்து விட்டது. அது சார்ந்த கூச்சம் இருக்கிறது. பொதுவாக நகரங்களில் இந்தக் கலாசாரம் நிறைய. நான் உட்பட, மாமனாரை ‘சார்.. நீங்க.. வாங்க..’ என்று பொதுவாக அழைப்பதே நிறைய பேர்களின் வழக்கமாக இருக்கிறது. 

“உங்க மச்சானை.. தம்பின்னு கூப்பிட்டிருக்கீங்களா?” என்றார் கமல். தனது உறவுகளை அந்த அடையாளத்துடன் உரக்க கூப்பிட்டு சந்தோஷப்பட்டார் வையாபுரி. “இப்ப மனது நிறைவா இருக்கு சார்”

“நான் எத்தனையோ பத்திரிகை பேட்டிகளிலும் சொல்லியிருக்கேன். வீட்ல பேசும் போதெல்லாம் அப்பா அம்மாவிற்குப் பிறகு கமல் சார் –ன்றதைத்தான் அதிகம் சொல்லியிருக்கேன். உங்க படம்னா நான் அதில் கட்டாயம் இருப்பேன்ற மாதிரி ஒரு சூழல் உருவாகிடுச்சு. அதுக்கு நீங்கதான் காரணம். ரஜினி சாரைப் பார்க்க போதும் கூட ‘என்னை விசாரித்து விட்டு கமல் கூட நெறய படம் பண்ணியிருக்கீங்க போல’ன்னு சொன்னார். சந்தோஷமாக இருந்தது” என்றார் வையாபுரி. “என் நண்பர் ரஜினி என் படங்களை அத்தனை உன்னிப்பா பார்த்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமை. நன்றி” என்றார் கமல்.

Bigg Boss

“இப்ப என்ன மிஸ் பண்ணுவீங்க?” என்று கேட்டார் கமல். “உள்ளே பழகிய அத்தனை பேரையும் மிஸ் பண்ணுவேன். உள்ளே சிலர் அப்பான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.. அண்ணன்னு உறவு சொல்லியே கூப்பிட்டாங்க..” “ஆமாம்.. நாம British Colonial children – ஆ வளர்ந்துட்டோம். உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டக்கூடாது என்பது கற்றுத்தரப்பட்டது. நாடகக்குழுவில் சண்முகம் அண்ணாச்சியை ‘அண்ணாச்சி’ன்னுதான் கூப்பிடுவோம். மத்தவங்களையும் அண்ணா.. அக்கா ‘ன்னுதான் கூப்பிடணும். வேற மாதிரி கூப்பிட்டா கேவலமாக நென்ப்பாங்க.. சரி.. இனிமே நீங்க என்னை கமல் சார் னு கூப்பிடக்கூடாது” என்றார் கமல். “அண்ணன்னு கூப்பிடறேன்” என்றார் வையாபுரி. கமலின் கட்டை விரல் உயர்ந்தது. 

**

“சரி.. வீட்டுக்குள்ள போனவுடனே ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்?” என்று ஜாலியாக விசாரித்தார் கமல். “பார்த்தவுடனே பொண்டாட்டி நிச்சயம் கட்டிப்பிடிச்சு அழுவா.. ஆனால் பொண்ணும் பையனும் நிச்சயம் திட்டுவாங்க.. அதுக்குள்ள என்ன அவசரம், ஜெயிச்சுட்டு வர வேண்டியதுதானே, எப்ப பாரு காமிராவை பார்த்து அழுதிட்டே இருந்தா எப்படி?.. நீங்க வீட்டுக்குள்ள வர வேணாம். அப்படியே மொட்டை மாடிக்கு போயிடுங்க.. அங்கயே சாப்பாடுல்லாம் வரும். பிக் பாஸ் வீடு மாதிரி நூறுநாள் முடிஞ்ச பிறகுதான் வீட்டுக்குள் வரணும்-னு சொல்லுவாங்க” 

“பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவங்களைப் பற்றி ஒரு வரில சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டார் கமல். “Sri – தூக்கத்துல நடக்கறவன். அனுயா – ரெண்டு மணிக்கு குளிக்கறவ. ஆரவ் – என்றதும் ரோமியோ மாதிரி சைகை செய்தார் வையாபுரி. கஞ்சா கருப்பு –என்றதும் அவரை மாதிரியே வட்டார வழக்கில் மிமிக்ரி செய்ய ஆரம்பித்து விட்டார். “சுருக்கமா பண்ணுங்க” என்றார் கமல். ரைசா என்றதும் தூங்கியெழுந்தவுடன் மேக்கப் போடுவதை வையாபுரி செய்து காட்டினார். 

ஒற்றை வார்த்தையில் சொல்லாமல் எல்லோரைப் போலவும் வையாபுரி செய்து காட்டியதைக் கிண்டலடித்த கமல், ‘பார்த்தீங்களா.. நடிகர்கள் மேடை கிடைச்சுதுன்னா.. விட மாட்டாங்க” என்றார். இவர் அதை சாதாரணமாகச் சொன்னாரோ, அரசியல் நையாண்டியாகச் சொன்னாரோ, தெரியவில்லை. அவர் அப்படி நம்மை பழக்கி விட்டதால் அரசியல் நையாண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எடுத்துக் கொள்ளலாம், என்ன இப்ப?

“சுருக்கமாக பண்ணுங்க வையாபுரி” என்று கமல் பலமுறை சுட்டிக் காட்டியும் அடக்கமாக செய்ய வையாபுரியால் இயலவில்லை. கணேஷைப் பற்றியும் நமீதாவைப் பற்றியும் நீளமான ஆலாபனைகளாக நடித்துக் காண்பித்தார். பார்வையாளர்களால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. கமல் எதிர்பார்த்தது அதையல்ல என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் நடித்து பழகிப் போன வையாபுரியால் subtle ஆக நடிக்க முடிந்தால்தான் ஆச்சர்யம். 

“யார் ஜெயிப்பாங்க’ன்னு நெனக்கறீங்க” என்று  கமல் கேட்டார். ‘ஆரவ், சிநேகன், கணேஷ் ஆகிய மூவரும் இறுதிப் போட்டியில் நிச்சயம் வருவார்கள். இளைஞர்கள் என்பதால் உடல்திறன் சார்ந்த போட்டிகளில் ஆரவ்விற்கும் கணேஷிற்கும் இடையே பலத்த போட்டி இருக்கும்.” என்கிற தன் யூகத்தை வையாபுரி சொன்னவுடன் “சரி, வீட்டுக்குப் போனதும் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன். நூறாவது நாள் விழாவிற்கு கட்டாயம் வரணும்:” என்ற கமல் வையாபுரியை அன்புடன் வழியனுப்பி வைத்தார். பார்வையாளர்களின் உற்சாகக் கூக்குரல்களுக்கு இடையில் கிளம்பி சென்றார் வையாபுரி. 

Bigg Boss

**

“நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. நமக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. இதுவரை ஏறத்தாழ சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தீர்கள். இடையில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். இறுதியில் சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன்.” என்ற கமல்.. “இப்பவும் நான் பிக்பாஸ் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்களாக ஏதும் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.  என் கடமையையும் இடையில் நான் செய்ய வேண்டும் இல்லையா? என்ற படி விடைபெற்றார் கமல். சொல்றதையெல்லாம் சூசகமாக சொல்லிட்டு, அப்புறம் அதை மழுப்புகிற பாவனையை கமல் செய்வது சுவாரசியமாக இருந்தாலும் மிகையாகவும் ஆகிவிடக்கூடாது. நடிப்பில் மிகையானால் கண்டுபிடிக்கிற பார்வையாளர்கள், இதையும் கண்டுபிடித்து விடுவார்கள். 

எல்லா உணர்ச்சி மோதல்களையும் நகைச்சுவையின் வழியாக எளிதாக கடந்து வர முடியும். வையாபுரி இல்லாத வீடு, இனி சிரிப்பு சப்தங்கள் குறைந்து வெறுமையாக காணப்படலாம். ‘நாளை’ என்று காட்டப்பட்ட பகுதியில் சுஜா வின் எரிச்சல் கலந்த கோபம் காட்டப்படுவது அதற்கான முன்னோட்டமாக இருக்கிறது. பார்ப்போம்.

- சுரேஷ் கண்ணன்

 


Add new comment

Or log in with...