பிக் போஸ் 82 ஆம் நாள்: ஆணை பெண்ணாக்கிய பிந்துவின் டாஸ்க் | தினகரன்


பிக் போஸ் 82 ஆம் நாள்: ஆணை பெண்ணாக்கிய பிந்துவின் டாஸ்க்

Part 01


Part 02

பிக்பாஸே இன்று அசதியில் தூங்கி விட்டார் போலிருக்கிறது. காலை 08:30 மணிக்குத்தான் பாட்டு போட்டார்கள். ‘ஊதா கலரு ரிப்பன்’. சிவகார்த்திகேயனே இதை மறந்திருப்பார். புதுப்பாட்டா போடுங்க பாஸூ. ஹரிஷூக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வமுள்ளது போல. ஒவ்வொரு பாடலின் நடன அசைவுகளையும் நினைவில் கொண்டு அப்படியே நகலெடுக்க முயற்சிக்கிறார். 

இன்றைய செஃப் சுஜா. ஏதோவொரு இனிப்பு வகை உணவை தயாரித்தார். அது என்னமோ, எல்லோரும் சோதனை எலி மாதிரி ஆரவ்வையே முதலில் சுவைக்க தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் சாப்பிட்டுப் பார்த்து ‘வேற லெவல். கும்தலக்கடி கும்மா. சூப்பர்’ என்று சான்றிதழ் தந்தார். சுஜாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ்.

ஹரிஷ்

வையாபுரி திடீரென்று கண்கலங்கினார். மற்றவர்கள் பதறி அவரிடம் ‘என்னாச்சு’ என்று விசாரித்தனர். மூத்த உறுப்பினரிடம் கரிசனம் காட்டும் உண்மையான குடும்ப உணர்வை அந்த விசாரிப்பில் அறிய முடிந்தது. எல்லோரும் விசாரித்தும் “ஒண்ணுமில்ல.. நான் அழல. கண்ணு வேர்த்துடுச்சு” என்று சமாளித்தார் வையாபுரி. “வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?” என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் மற்றவர்கள் விதம் விதமாக விசாரிக்க, “ஒண்ணுமில்ல. ஒரு டம்ளர் காஃபி கொடுங்க” என்று முடித்தார். காஃபிக்காகவா இந்த அழுகை, இதை நேரடியாக முதலிலேயே கேட்டிருக்கலாமே பூரி?

வையாபுரி

வையாபுரி கண் கலங்கியதின் காரணத்தை ஆரவ்வும் ஹரீஷூம் யூகிக்க முயன்றனர். “ஷோ முடியப் போகுது. எமோஷன்ஸ் நிறைய வரும். இனிவரும் task கடினமாக இருக்கும். பிரியப் போறோம்-ன்ற உணர்ச்சியும் இருக்கும். ஏறத்தாழ எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும்” என்றார் ஆரவ். 

**

அது சவாலா என்று முதலில் தெரியவில்லை. ஆரவ்விற்கு பெண் உடையை அணிந்து பார்க்க வேண்டும் என்று பிந்துவிற்கு ஆசைவந்து விட்டது. எனவே தன்னிடமிருந்த ஓர் உடையை எடுத்து வந்து ஆரவ்விற்கு அணிவிக்க முயற்சித்தார். முதலில் சற்று தயங்கிய ஆரவ், பின்பு உற்சாகத்துடன், எப்படியோ சிரமப்பட்டு அதை அணிந்து கொண்டார். அணிந்து கொண்ட மறுகணத்திலிருந்தே ‘ரெமோ’வாக மாறி நளினத்துடன் பேச ஆரம்பித்தார். நடிகன்டா! 

ஆரவ்

ஆரவ்விற்கு பெண் உடையை அணிய வைக்கும் போது “:ஏ.. எதுக்குப்பா அதெல்லாம். வேண்டாம்” என்று மறுத்த வையாபுரி, பிறகு “அது ஆரவ்விற்கு டைட்டா இருக்கு. எனக்கு போட்டா சரியா இருக்கும்ல” என்று ஆசைப்பட்டார். எதிர்பாலினத்திவரின் உடைகள் மீது இருக்கும் ரகசியக் கவர்ச்சி சார்ந்த உணர்வு இந்தக் காட்சிக் கோர்வையில் வெளிப்பட்டது. 

பெண் உடையுடன் சுஜாவைப் பார்க்கச் சென்ற ஆரவ்வை, ‘வாடி.. ஆரவ்வி… எப்படிடி இருக்க” என்று கிண்டலாக வரவேற்றார் சுஜா. ஆரவ்வும் அதற்கேற்ப நாணிக் கோண, உடையின் பின்னாலிருந்த ஜிப்பை சிரமத்துடன் போட்டார் சுஜா. “இப்பவாவது தெரிஞ்சுக்க.. நாங்கள்லாம் எவ்ள கஷ்டப்படறோம்னு” 

ஹரிஷூக்கும் அதே மாதிரியான உடை அணிவிக்கப்பட்டது. அவரும் ஆரவ்வை நகலெடுக்க முயன்றார். பிறகு வையாபுரி. இவர் ஏதோவொரு திரைப்படத்தில், ஆண் நிலையிலிருந்து மெல்ல மெல்ல பெண் சுபாவத்திற்கு மாறும் நகைச்சுவைக் காட்சியில் நடித்திருக்கிறார். எனவே குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு தயாராக வந்து விட்டார். சிநேகனுக்கு அணிவிக்கப்பட்ட உடையில் அவரைப் பார்க்க காமெடியாக இருந்தது. குடுமி வைத்துக் கொண்ட ஜப்பானிய சாமுராய் போல இருந்தார் சிநேகன். 

ஹரிஷ், ஆரவ்

அவர்களுக்கு மாடல்களைப் போல நிற்கவும் நடக்கவும் பயிற்சியளித்தார் பிந்து. பிறகு ராம்ப் வாக் வேறு. “ஏதாவது பாட்டு போடுங்க பிக்பாஸ்” என்று வேண்டுகோள் விடுத்தனர். தூங்கிக் கொண்டிருந்த பிக்பாஸ், சற்று தாமதமாக எழுந்து ‘மய்யா, மய்யா..’ பாடலைப் போட, அவரவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு பாடலுக்கு நடனமாட வந்தனர். மல்லிகா ஷெராவத்தே வெட்கப்படும் அளவிற்கு நாணிக் கோணி ஆடி மகிழ்ந்தனர். 

“இது பெண்களுக்கான tribute’ என்று ஹரீஷ் நீதி சொன்னது ஒருபுறம் சரியாக இருந்தாலும்.. ரொம்பவே ஓவர். 

**

‘பொன்வண்டு’ சோப் விளம்பரத்தை இரண்டு அணிகளும் உருவாக்கி நடிக்க வேண்டும் என்பது அடுத்த சவால். அது தொடர்பாக கலந்து ஆலோசித்தனர். ‘பொன் வண்டு’ என்கிற பெயர் வருவதற்காக வையாபுரி தந்த ஐடியா, ரொம்பவும் சுமாராக இருந்தது. 

பிந்து, சிநேகன்

விளம்பரத்தை அரங்கேற்றும் வேளை. பத்து நொடிகளுக்குள் ஒரு சுவாரசியமான கதையை சொல்லி, பொருளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களின் நெஞ்சில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்பதே டி.வி. விளம்பரங்களின் அடிப்படையான பாணி. சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். விளம்பரங்களை உருவாக்குபவர்கள் இதற்காக பல்வேறு விதமாக தலையைப் பிய்த்துக் கொண்டு கான்செப்ட்டுகளை தயாரிக்கிறார்கள்.

வையாபுரி டீம் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை பார்த்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை. அவர்கள்  நடித்த விளம்பரம், பழைய கால தூர்தர்ஷன் நாடகம் போல இழுவையாக சென்றது. தலையைச் சுற்றி மூக்கை நுழைக்கும் விதமாக விளம்பரத்தின் மையத்திற்கு வந்தனர். ஆனால் இவர்களோடு ஒப்பிடும் போது ஹரீஷ், சுஜா, சிநேகன் நடித்த விளம்பரம் பல மடங்கு தேவலை. ரத்தினச் சுருக்கமாக விஷயத்திற்கு வந்து முடித்தார்கள். விளம்பர மாடலை சுஜா நன்றாக நகல் செய்தார். 

கணேஷ் இதற்கு நடுவராம். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு அல்லாமல் சீரியல்களின் ரசிகர் போலிருக்கிறது. நாடகத்தனமாக இழுத்த, வையாபுரி டீமிற்கு கோப்பையை பரிசளித்தார். ரசனையில்லாத தேர்வு. 

**

“எடுத்துக்கோ ஜெயிச்சுக்கோ” என்று சுவாரசியமான சவால். தனித்தனியாக விளையாட வேண்டிய போட்டியிது. ஒவ்வொருவருக்கும் நூறு பந்துகள் தரப்படும். கூடவே ஐஸ் அடங்கிய பெட்டியும். 

மற்றவர் அசந்திருக்கும் நேரம் பார்த்து அவரிடமிருக்கும் பந்துகளை அபகரிக்க வேண்டும். அவர் ஐஸ் பெட்டியில் இரண்டு கால்களையும் நுழைத்து நின்றிருந்தால் எடுக்கக்கூடாது. அதிக நேரம் ஐஸில் காலூன்றி நிற்க முடியாது. வெளியே வந்துதான் ஆக வேண்டும். மற்றவர்களிடமிருந்து அபகரிக்கும் ஒவ்வொரு பந்திற்கும் ஒரு மதிப்பெண்.

மற்றவர்கள் எல்லோரும் அவரவர்களின் இடத்திலேயே பாதுகாப்பாக நின்றிருக்க, ஆரவ் இந்த விளையாட்டை உற்சாகமாகத் துவங்கினார். அருகிலிருக்கும் வையாபுரிதான் அவருக்கு கிடைத்த பலியாடு. வையாபுரி அசரும் சமயத்தில் எல்லாம் ஒரு பந்தை தூக்கிக் கொண்டு வந்து விட்டார். “ஐய்யோ.. நான் ரெண்டு காலையும் உள்ளேதான் வெச்சிருந்தேன் ஆரவ்வு…” என்று வையாபுரி கதறினார். ஆரவ் அதை மறுக்க, கண்காணித்துக் கொண்டிருந்த பிக்பாஸ், ‘ஆரவ், அது உங்கள் மதிப்பெண்” என்று தீர்ப்பளித்தார். 

ஆரவ்வின் உற்சாகத்தைப் பார்த்த மற்றவர்களும் அவரவர்களின் இடத்திலிருந்து நகர்ந்து மற்றவர்களின் பந்துகளை அபரிக்க முயன்று சட்டென்று ஓடிவந்து ஐஸிற்குள் நின்றனர். ‘காலை வைத்து விட்டேன், ஏன் எடுத்தாய்?” என்கிற கூக்குரல்கள் ஒருபுறமும், “இல்லை. அதற்கு முன்பே நான் எடுத்து விட்டேன்” என்கிற கத்தல்கள் ஒருபுறமும் எதிரொலிக்க நிலவரம் கலவரமாக இருந்தது. 

கணேஷ் மற்றும் சிநேகன் விளையாடியது காமெடியாக இருந்தது. இருவரும் சட்சட்டென்று நகர்ந்து மற்றவர்களின் பந்துகளை எடுத்துக் கொண்டனர். இதற்கு பேசாமல் பந்துகளை சாவகாசமாக பரிமாறிக் கொண்டால் கூட நன்றாக இருந்திருக்கும். இதற்கிடையில் பிந்துவிற்கும் சிநேகனுக்கு கருத்து வேறுபாடு தோன்றி விட்டது. 

“அவருடைய பந்துகளை எடுக்கச் செல்லும் போது கைகளால் மறிக்கிறார். மட்டுமல்லாது, நான் எடுத்த இரண்டு பந்துகள் தவறி விழும் போது அதையும் எடுத்துக் கொண்டு விட்டார்” என்பது போன்ற புகார் பிந்துவிடமிருந்து எழுந்தது. ‘நான் இனி விளையாடப் போவதில்லை’ என்று கோபித்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று விட்டார் பிந்து. ‘சரி நான் திரும்பக் கொடுத்தடறேன்” என்று சிநேகன் சொன்னாலும் அவர் மனம் மாறுவதாக இல்லை. 

பிந்து மாதவி

எல்லோரும் விளையாட்டை நிறுத்தி விட்டு பிந்துவை சமாதானப்படுத்தச் சென்றனர். ‘சிநேகன் உண்டாக்கிய பிரச்னையைப் பற்றி சொன்ன பிந்து ‘தான் விளையாடப் போவதில்லை’ என்று உறுதியாக தெரிவித்து விட்டார். இது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே இருந்தவர்கள் திகைத்து நின்று கொண்டிருந்தனர். ‘போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று வாத்தியார் அறிவித்ததும், பள்ளி மாணவர்கள் போல் அனைவரும் தங்களின் நிலைக்கு ஓடினார்கள். 

பிந்து இல்லாததால் அவருடைய பந்துகள், பாதுகாப்பின்றி அநாதையாக இருந்தன. ‘அதை எடுக்கலாமா?’ என்று ஒருவர் சந்தேகம் எழுப்ப பதில் வருவதற்குள் அனைவரும் அதன் மீது பாய்ந்தார்கள். பிந்துவின் இடத்திற்கு அருகில் இருந்த சிநேகனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். பாய்ந்து பாய்ந்து ஓடி பந்துகளை சேகரித்தார். அவர் நகர்ந்த சமயம் பார்த்து அவர் இடத்திற்கு கணேஷ் பாய்ந்தார். 

ஹரிஷூற்கு மட்டும் மனச்சாட்சி உறுத்தியது போல. ‘this is not fair’ என்று கத்திக் கொண்டிருந்தார். மட்டுமல்ல விளையாட்டை நிறுத்தலாம் என்று சொல்லி விட்டு அடுத்த கணமே சட்டென்று பந்துகளை எடுக்கும் அநீதி பற்றியும் புலம்பிக் கொண்டிருந்தார். கண்காணிப்பில்லாமல் இருக்கும் தன்னுடைய பந்துகள் உற்சாகமாக களவாடப்படுவதை சுவாரசியமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் பிந்து. 

விளையாட்டு முடியவும் எல்லோரும் வந்து அமர்ந்தனர். “நீ விளையாடலன்னு சொன்னவுடனே, உன் பந்துகளை சூறையாடிட்டாங்களே” என்று வருத்தப்பட்டார் வையாபுரி. “இருக்கறதுலயே நான்தான் கம்மி” என்று ஆதங்கப்பட்டார் ஹரீஷ். நேர்மையாக விளையாட முயன்றால் இதுதான் கதி. “பாயிண்ஸ் போனால் போகுது. என்னால் அநீதியாகவெல்லாம் விளையாட முடியாது” என்பது அவரது அபிப்ராயம். பிந்துவின் பந்துகளில் இருந்து ஒன்றைக் கூட ஹரீஷ் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். தூரமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். 

விளையாட்டை முடித்து வந்த சிநேகன், பிந்துவிடம் தம் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்னார். ஆனால் பிந்துவின் புகாரில் எந்தவொரு மாற்றமும் இல்லை. தத்தக்கா பித்தக்கா தமிழில் ஆங்கிலத்தைப் போட்டுப் பிசைந்து அவர் அளித்த விளக்கம் புரியவேயில்லை. இருந்தாலும் பரவாயில்லை, பெண்ணென்றால் பேயும் இரங்கும். நானாக இருந்தால் என் பங்கு பந்துகள் அனைத்தையும் பிந்துவிற்கு பரிசாக அளித்திருப்பேன். 

**

“கிழி கிழின்னு கிழிக்கணும்’ என்பது அடுத்த சவால். போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். ஒரு அணியில் உள்ளவர், எதிரணி நபர்களைப் பற்றி கிண்டலும் கேலியாகவும் பேச வேண்டும். அதாவது கொச்சையான வழக்கில் சொன்னால் “கழுவிக் கழுவி ஊற்ற வேண்டும்’ இப்படி கழுவி ஊற்றுவதற்கான நேரம் ஒரு நிமிடம். 

மதிப்பெண் தேவைப்படாத ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுத்து, அவரை நடுவராக இருக்க சம்மதிக்க வைக்க வேண்டும். ஏற்கெனவே மூட்அவுட்டில் இருக்கும் பிந்து, ‘இது போன்ற போன்ற போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாது. என்னால் தரவும் முடியாது, திரும்பப் பெற்றுக் கொள்ளவும் முடியாது’ என்று கூறி சென்று விட்டார்.

ஆரவ்தான் முதலில் துவங்கினார். எதிரணியில் இருந்த வையாபுரியை நோக்கி, ‘எப்ப பாரு போறேன்.. போறேன்னு ஊளையிட்டுக்கிட்டே இருக்கறது. ஏன்.. கதவு திறந்திருச்சுல்ல… அப்ப போக வேண்டியதுதானே, சும்மா சீன் போட்டுக்கிட்டு.. ‘என்று மரணபங்கம் செய்தார். 

ஹரீஷ், சுஜாவை செய்தது சரியான கலாய்ப்பு. ‘இந்தம்மா வெளியே போய் சிறந்த நடிகை ஆவாங்களோ இல்லையோ.. சிறந்த வேலைக்காரியாவாங்க.. அந்தளவிற்கு பாத்திரமெல்லாம் பளிச்சுன்னு கழுவறாங்க” என்று வெறுப்பேற்ற சுஜாவின் முகத்தில் மறைத்துக் கொண்ட கோபம் எட்டிப் பார்த்தது. ‘மகனே.. இருடி.. என் சான்ஸ் வரட்டும்” ஆனால் அவரின் முறை வந்த போது, மற்றவர்களை திட்டி விட்டு ஹரீஷ் பக்கம் வந்த போது நேரம் முடிந்து விட்டது. ‘அய்யோ.. இவனைத் திட்ட முடியலையே” என்று பதற, ‘நேரம் முடிஞ்சிடுச்சே’ என்று ஒழுங்கு காட்டினார் ஹரீஷ்.

நக்கலடிப்பதில் அனுபவமுள்ள வையாபுரி கலக்கியெடுப்பார் என்று எதிர்பார்த்தால் சற்று நிதானமாகவே நடந்து கொண்டார். “ஆரவ்வு.. நீ ஆறு லவ்வா.. விவகாரமான ஆளா இருப்பே.. போலிருக்கே.. வாலிப விளையாட்டுல ஜகஜ்ஜால கில்லாடியே இருக்கே’ என்று வாரிக் கூட்டினார். பிறகு கணேஷை நோக்கி “முட்டைய தின்னுட்டே இருந்தே.. அப்புறம் நான் சொல்லிட்டே இருந்தப்புறம் நிறுத்திட்டே’ என்பது போல் கிண்டலடித்தார்.

இப்போது கணேஷின் முறை. ‘எவ்ள அடிச்சாலும் தாங்கும்’ நல்லவரான கணேஷ் எங்கே திட்டப் போகிறார் என்று நினைத்திருந்த போது கலக்கி விட்டார். “உங்க சொத்தை வித்து வந்த காசுலயா நான் முட்டை தின்னேன். பிக்பாஸ் சொத்து அது. உங்களுக்கு ஏன் வலிக்குது.. உங்களுக்கு எவ்ள சாப்பிட்டாலும் பாடி, பீடி மாதிரிதான் இருக்கும். அதுக்கு என்ன பண்றது?’ என்று வையாபுரியை கடுமையாக ஓட்டியவர், அடுத்தது சிநேகனிடம் வந்தார். “நம்ம கவிஞர் இருக்காரே.. அவருக்கு வெளியே வேறு பெயர் இருக்கு. ‘கட்டிப்பிடி வைத்தியத்துல கமலையே மிஞ்சிடுவாரு.. அது எப்படி பெண்களிடம் நெருங்கி, ஆறுதல்-ன்ற பேர்ல கட்டிப்பிடிக்கறீங்க.. அது மட்டுமில்ல.. எல்லாத்துக்கும் ஓ.. ன்னு அழறதில கில்லாடியா இருக்காரு” என்று ஒரு லாரி தண்ணீர் கொண்டு சிநேகனை கழுவி ஊற்றினார் கணேஷ்.

அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சிநேகன், தன் முறை வந்ததும், ‘நீங்கள்லாம்.. .. என்ன பருப்பா.. உங்களை பெரிய ஆளுன்னு நெனச்சீட்டு இருக்கீங்களா.. ஒரு பொண்ணு கிட்ட போய் ஆறுதல் சொல்றேன்னா.. முதல்ல அந்தப் பொண்ணுக்கு என் மேல நம்பிக்கை வரணும்.. அப்பதான் அது உண்மையா இருக்கும். இல்லைன்னா.. செருப்ப கழட்டி அடிப்பாங்க.. புரியுதா?” என்றெல்லாம் சீரியஸாகவே பதிலளித்தார். 

போட்டியாளர்கள் விளையாட்டுக்காக பரஸ்பரம் ஒருவரையொருவரைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டாலும், இதன் மூலம் அவர்களின் மனங்களில் நெடுநாட்களாக உறைந்துள்ள கோப, தாபங்கள், கிண்டல்,கேலிகள் போன்றவை தன்னிச்சையாக வெளிவந்து விடும். ஒருவர் பாதுகாப்பு உணர்வுடன் இருந்தாலும் கூட சற்று கசிந்து விடும். 

இந்தச் சவாலில் போட்டியாளர்கள் மற்றவர்களை அதிகமாக கிண்டலடித்து விடக்கூடாது என்கிற உணர்வுடன் ஜாக்கிரதையாகவே விளையாடினர். இது ஒருவகையில் பாராட்டத்தக்கது. நடுவர் என்கிற முறையில் கூட இந்த விளையாட்டில் கலந்து கொள்ள பிந்து விரும்பவில்லை. எனவே ‘தத்தக்கா பித்தக்கா” தமிழில் அவர் மற்றவர்களை வசையும் காமெடியை தமில் உலகம் காணும் பாக்கியத்தை இழந்து விட்டது. 

ஆனால் இந்தப் போட்டி நடந்த சமயத்தில் காயத்ரி, ஆரத்தி கோஷ்டிகள் இல்லாமல் போய் விட்டார்களே என்று ஆதங்கமாக இருந்தது. “நீ என்ன பெரிய உரோமமா? அப்பாடக்கரா.. வெஷம்’ என்றெல்லாம் ஆரம்பித்து கலக்கியெடுத்திருப்பார்கள். எதிரணி மட்டுமல்லாமல் நம்முடைய காதுகளிலும் ரத்தம் வந்திருக்கும்.

எல்லோரும் இணைந்து பிக்பாஸை திட்டுவது போல ஒரு சவால் வைத்திருந்தால் போட்டி இன்றோடு நிறைவு பெற்றிருக்கும். நிலைமை அத்தனை ரணகளமாக ஆகியிருக்கலாம். துணிவிருந்தால் அதைச் செய்யுங்களேன், பிக்பாஸ்.

- சுரேஷ் கண்ணன்

 


Add new comment

Or log in with...