Friday, March 29, 2024
Home » அரசியலமைப்புக்கமைய அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

அரசியலமைப்புக்கமைய அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

- பின் பாராளுமன்றத் தேர்தல்; 2025 முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

by Rizwan Segu Mohideen
October 22, 2023 10:13 am 0 comment

– இலங்கையை ஸ்மார்ட் நாடாகக் கட்டியெழுப்புவதே நோக்கம்
– ஸ்மார்ட் நாட்டிற்கான ஸ்மார்ட் கட்சியாக ஐ.தே.க. வை கட்டியெழுப்புவோம்

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்மார்ட் நாடு – 2048ஐ வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், திருத்தப்பட்ட கட்சியின் புதிய யாப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒன்லைன் மூலம் அமைப்புக்களை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் நாட்டிற்கு முன், ஐக்கிய தேசியக் கட்சி ஸ்மார்ட் கட்சியாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“என்னில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற குறியீட்டை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “சிய ரத” வின் பழைய இதழ் ஒன்று அதன் ஸ்தாபகரான திருமதி மாயா களுபோவிலவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப சகல துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்காக அரச நிறுவனங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஊழலைக் கட்டுப்படுத்த பல கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டுக்காக பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு ஸ்மார்ட் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, பிரதித் தலைவர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

பௌத்த பிக்குகள் தலைமையிலான மதகுருமார்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட பிரமுகர்கள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT