பிக் போஸ் 81 ஆம் நாள்: புரண்டு, வீழ்ந்து, நீந்தி போட்டிக்கு மேல் போட்டி | தினகரன்


பிக் போஸ் 81 ஆம் நாள்: புரண்டு, வீழ்ந்து, நீந்தி போட்டிக்கு மேல் போட்டி

Part 01


Part 02

‘வேலாயுதம்’ திரைப்படத்தில் இருந்து விஜய் ஆண்டனியின் இசையில் ‘மஞ்சனத்தி மரத்துக் கட்டை’ என்கிற குத்துப்பாடலோடு பிக் பாஸ் வீட்டின் காலைப்பொழுது மங்கலகரமாக துவங்கியது. கர்நாடக சங்கீத பாணியில் அந்தப் பாடல் துவங்கும் போது ‘அடடே.. பாடல்களை தேர்ந்தெடுப்பவர்  இன்று திருந்தி விட்டாரோ’ என்று தற்காலிமாக ஏமாந்து விட்டேன். 

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் போட்டியாளர்களை பெண்டு எடுத்திருப்பதால், உடல் வலி காரணமாகவோ என்னமோ, நடனமாடுவதில் எவரும் ஆர்வம் காட்டவில்லை. சுஜா மட்டும் மெலிதாக நடனமாடினார். ‘நன்றி. பிக் பாஸ். எனக்குப் பிடிச்ச பாட்டு’ என்று அவர் கொஞ்சும் போது குழந்தை ரூபம் மறுபடி வந்து போனது. சுஜாவிற்குள் பல ரூபங்கள். லேடன் தெரியுமா… பின்லேடன்…

வெளியில் ஒட்டப்பட்டிருந்த மதிப்பெண் பட்டியலைப் பார்த்துவிட்டு, தன்னுடைய மதிப்பெண் குறைவாக இருப்பதையொட்டிய சந்தேகத்தை பிந்துவிடம் விரக்தியுடன் கூறினார் சிநேகன். ‘அடப்போங்கப்பா’ எனும் மனநிலைக்கு சிநேகன் வந்து விட்டார். ‘நூறு நாள் இருக்கிற நம்பிக்கையே போயிடுச்சு. ‘நான் வேண்டுமானால் என் பாயிண்ட்டுகளை தந்து விடவா?” ன்னு சுஜா கேட்டதுதான் எனக்கு கோபம். ஜெயிக்கலைன்றதுக்காக கூட இல்ல. கணேஷ் வேற எப்பவும் சுஜாவிற்குத்தான் சப்போர்ட் பண்ணுவார். அவரையே நீதிபதியா போடறதெல்லாம் என்ன நியாயம்?’ என்றெல்லாம் சிநேகனின் பொங்கல் அமைந்தது. ‘ஆமாம்.. நீங்க அத்தனை நேரம் ரொம்ப கஷ்டப்பட்டீங்க.” என்று ஆறுதல் சொல்ல முயன்றார் பிந்து.

Bigg Boss

இன்று செஃப் ஆனது கணேஷின் முறை. “இன்னிக்கு என்ன சமையல்?” “என்னவோ செய்” என்கிற உரையாடல் பொதுவாக நம் வீடுகளில் நடக்கும். ‘என்னவோ’ போல ‘குனோவா’ என்கிற வஸ்துவை கணேஷ் செய்யப் போகிறாராம். தனது buddy யான சுஜாவிடம் இது பற்றி அளந்து கொண்டிருந்தார். ‘இதைச் சாப்பிட்டவுடனே கார்ல என்ன, பிளைட்ல கூட நீ புட்போர்ட் அடிக்கலாம் buddy’ என்பது மாதிரியான பீற்றல் ஓவர்தான். ஆனால் அவர் செய்து முடித்து இறக்கும் போது அந்த உணவைப் பார்க்க வசீகரமாகத்தான் இருந்தது. 

‘இந்த மூன்று நாட்களில் இந்த மெனுதான் பெஸ்ட்’ என்று தன் buddy-க்கு பட்டி பார்த்து உற்சாக பெயிண்ட் அடித்தார் சுஜா. ஆரவ்வும் சாப்பிட்டுப் பார்த்து தன் பங்கிற்கு நற்சான்றிதழ் தந்தார். உணவுப்பொருளின் பிராண்டை ஹரீஷ் மறக்காமல் இணைத்தது சிறப்பு. (புத்திசாலியான பிள்ளை, பிழைத்துக் கொள்ளும்.)

**

Ticket to finale – Bonus task – ‘அய்யோ சிக்கிக்கிச்சு’ என்பது அதன் பெயராம். எனில், ‘அய்யோ பத்திக்கிச்சு’ சவால்தான் அடுத்ததா? எதற்கும் ஹரீஷூம் பிந்துவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. 

இது ஜோடியாக விளையாடும் விளையாட்டு. வீட்டில் ஏழு பேர் இருப்பதால் ஒருவரைக் கழற்றியாக வேண்டும். ‘அவர்களுக்குள் அடித்துக் கொள்ளட்டும்’ என்று இந்தப் பொறுப்பையும் போட்டியாளர்களிடமே விட்டு விட்டார் சாமர்த்தியக்கார பிக் பாஸ். அவர்கள் கலந்தாலோசித்து, இந்தப் போட்டியில் ஒருவர் கலந்து கொள்ளாமல் இருக்க சம்மதிக்க வேண்டும். 

எதிர்பார்த்தபடியே வையாபுரியை கழற்றி விட முடிவு செய்தனர் போட்டியாளர்கள். உடல்திறன் சார்ந்த போட்டி என்பதால் வயது காரணமாக அவரால் சிறப்பாக இயங்க முடியாது என்பதை விதம் விதமாக சொல்லி அமர்த்தி விட்டார்கள். வையாபுரியும் சற்று பாவனையாக போராடிப் பார்த்து, ‘ஆள விடுங்கடா, போங்கடா’ என்று அமர்ந்து விட்டார். 

Bigg Boss

வெவ்வேறு நிறம் கொண்ட இரண்டு கயிறுகளின் மூலம் சிக்கலான முடிச்சுகளால் ஜோடிகள் இணைக்கப்படுவார்கள். தங்கள் கைகளின் பக்கம் உள்ள கயிறு அவிழாமல் இதர வழிகளில் அந்த முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். இப்படி விடுபடும்வரை அவர்கள் ஒன்றாகவே இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், திருமண பந்தம் மாதிரியான சிக்கலான முடிச்சு. ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.’ 

இந்த சவாலில் வெற்றி பெறும் ஜோடிக்கு பத்து மதிப்பெண்கள். இதற்கும் சண்டையிட்டு அடித்துக் கொள்ளாமல், சமர்த்தாக ஆளாளுக்கு ஐந்து ஐந்தாக பிரித்துக் கொள்ளலாம். இந்தச் சவாலில் ஆரவ் மற்றும் ஹரீஷ் ஜோடி செய்த முயற்சிகள்தான் காமெடி கலாட்டாவாக அமைந்தன. விதம் விதமான முறைகளில் அவர்கள் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, வில்லங்கமான தோற்றங்களையும் தந்தன. ஆங்கில திரைப்படங்களில் மிதமான பாலியல் நகைச்சுவையாக பயன்படுத்தும் காட்சிகள்.

ஆரவ் பயங்கர சேட்டைக்காரராக இருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு சமகால இளைஞனின் கலாய்ப்புத்தன்மையை பல சமயங்களில் வெளிப்படுத்தி சூழலை சுவாரசியமாக்குகிறார். ஹரீஷ் கழிவறைக்கு செல்லும்போது ஆரவ்வும் கூடவே செல்ல வேண்டிய தர்மசங்கடமான நிலைமை. அவர் உள்ளே தன் ‘பணியை’ செய்யும் சப்தங்கள் கேட்க, கழிவறையின் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரத்தில் உள்ள தமன்னாவின் புகைப்படத்திற்கு மிக அருகில் நிற்க வேண்டிய நிலைமை ஆரவ்விற்கு. 

Bigg Boss

‘எப்படி ஒகேவா?” என்று கண்ணாலேயே காமிராவை நோக்கி கேட்டது மட்டுமல்லாமல், தமன்னாவுடன் உற்சாகமாக ஒரு துரித டூயட்டும் பாடி முடித்ததும் சுவாரசியம். நல்ல வேளை, ஹரீஷ் அந்த டூயட் பாடல் தனக்கானது என்று நினைத்துக் கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொண்டது ஆறுதல். இந்த வேளையில் இன்னொரு தர்மசங்கடமான விஷயமும் தோன்றாமல் இல்லை. அதிர்ஷ்டவசமாக ஹரீஷிற்கு வந்தது ‘ஒன்’ பாத்ரூம். ‘டூ பாத்ரூமாக இருந்திருந்தால் நிலைமை இன்னமும் சங்கடமாகியிருக்கும். 

‘போவோமா ஊர்கோலம்’ என்று பாடியபடி ஆரவ், ஹரீஷூம் இணைந்து கடந்து கொண்டிருக்க, கணேஷூம் சிநேகனும் படுத்துக் கொண்டு தங்களின் சிக்கல்களை அவிழ்க்க, விதம் விதமாக முயன்றார்கள். முன்னர் சொன்ன அதே நகைச்சுவை விதத்தை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். என்ன செய்ய முயன்றும் சிக்கல் தீராததால் சிஐடி சங்கரான கணேஷ், புத்திசாலித்தனமாக இந்த விஷயத்தை கையாள முயன்றார். ஒரு தாளில் அந்தச் சிக்கலின் படத்தை வரைந்து கொண்டு எப்படி அதிலிருந்து வெளியே வர முடியும் என்பதை தர்க்க ரீதியாக சிந்திக்க ஆரம்பித்தார். (நீங்க ஒரு வில்லேஸ் விஞ்ஞானி பாஸ்).

ஆனால் இந்த முயற்சியின் போது துரதிர்ஷ்டவசமாக சிநேகனின் கையிலிருந்த கயிறு அவிழ்ந்து விட்டது. கார் போட்டியில் ஏற்கெனவே அத்தனை நீண்ட பஞ்சாயத்து நடந்து விட்டதால், இதை நேர்மையாக பிக்பாஸிடம் ஒப்புக் கொண்டு பிறகு அவர் சொல்படி கேட்போம் என்று நீதிக்காக பிக் பாஸிடம் வந்தனர். ஆனால் கறாரான நாட்டாமையான பிக் பாஸ், அவர்களை வாக்குமூல அறைக்கு அழைத்து, இது பிழையாக இருந்தாலும் தவறு, தவறுதான். நீங்கள் போட்டியைத் தொடர முடியாது.’ என்றுகூறி அனுப்பி விட்டார். 

பாவம், சிநேகன் செய்த பிழை காரணமாக கணேஷூம் தன் மதிப்பெண்களை இழப்பார் என்றாலும், இந்த விஷயத்தை கணேஷ் இயல்பாக எடுத்துக் கொண்டது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் கயிறு அவிழ்ந்ததாக சிநேகன் சொல்வது தற்செயல்தானா? கணேஷின் மீது சிநேகன் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கும் சமயம் இது என்பதையும் பார்க்க வேண்டும். 

Bigg Boss

 

‘கவிஞருக்காகத்தான் இந்த task பண்ணேன். அவருக்கு பாயிண்ட் வரணுமின்னு நெனச்சேன். இப்படி ஆயிடுச்சு’ என்று வருத்தப்பட்டார் கணேஷ். ‘இது ஒருவேளை தீர்க்கவே முடியாத puzzleஆ? பிக்பாஸ் நம்மை வெச்சு காமெடி பண்றாரோ?’ என்கிற சரியான கேள்வியை எழுப்பினார் ஆரவ். (இருக்கலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது)

கணேஷ் –சிநேகன் ஜோடி போட்டியிலிருந்து நீக்கப்பட்டதால், ‘நாம ஜெயிக்கலைனாலும் பரவாயில்ல. Disqualify ஆகிடக்கூடாது” என்று பிந்துவிடம் எச்சரித்தார் சுஜா. ஆனால் Lateral thinking எனும் வித்தியாசமான முறையில் இந்த புதிரை அவிழ்க்க முயன்ற பிந்து, உணர்ச்சி வேகத்தில் தன் கையிலிருந்த கயிறை தன்னிச்சையாக அவிழ்த்து விட்டார். ‘பெட்ரோமாக்ஸ்ல மேண்டில் மேண்டில்ன்னு சொல்றீங்களே.. இதுதானா அது.. இது எப்படிண்ணே எரியும்?” என்று கேட்டு அதை உடைத்து விட்டு ஆல்இன்அழகுராஜாவின் முறைப்பிற்கு ஆளாகும் செந்திலைப் போலானது பிந்துவின் நிலைமை.

தன் புத்திசாலித்தனம் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஐடியா மன்னரான கணேஷை சாட்சியத்திற்கு அழைத்தனர். அவர் சிரிப்புடன் வந்து பார்த்து விட்டு ‘இது அறிவு இல்ல. ஏமாத்தறது’ என்று கிண்டலடித்துக் கொண்டிருக்கும் போதே ஆந்தை போல் பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ், பிந்து – சுஜா ஜோடியை வாக்குமூல அறைக்கு அழைத்தார். ‘பிந்து.. உங்கள் கையிலிருந்து கயிறு கழன்றதால் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்” என்றார். சிநேகனுக்கு கிடைத்த அதே தண்டனை பிந்துவிற்கும். 

கூடவே இருந்த சுஜா ‘எனக்குத் தெரியாம இந்தச் சம்பவம் எப்ப நடந்துச்சு?” என்று வாய் பிளந்தார். ‘நான் டிரை பண்ணும் போது அப்படியாச்சு” என்று சாக்லெட்டை தின்று விட்ட குழந்தை பாணியில் பிந்து இயல்பாகச் சொன்னாலும் கணேஷைப் போன்ற பெருந்தன்மையுடன் சுஜாவால் இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அவ செஞ்ச பிழைக்கு நான் ஏன் பாயிண்ட்ஸை இழக்கணும். பிக் பாஸ் இதுக்கு ஏதாவது வழிசொல்லுங்க” என்று புலம்பத் துவங்கி விட்டார். ஒருவகையில் சுஜாவின் கோரிக்கை நியாயமானதுதான். இதே போல் இன்னொரு ஜோடியில் தவறு செய்திராத கணேஷூடன் இணைத்து ‘முதலில் இருந்து துவங்கலாமா?” என்கிற அவரது கோரிக்கையும் ஏற்கத்தக்கதே. ஆனால் கறார் நாட்டாமை இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாரே!

Bigg Boss

‘பிந்துவிற்குத்தான் இருப்பதிலேயே அதிக பாயிண்ட்ஸ் இருக்கு. அதுல இருந்து ரெண்டு பாயிண்ட்டாவது எனக்கு வாங்கித் தரணும்” என்கிற சுஜாவின் புலம்பல் சிறுபிள்ளைத்தனமானது. ‘பாயிண்ட், பாயிண்ட் என்று பொழுது பூராவும் புலம்பி பாயைப் பிராண்டுகிறார் சுஜா. இன்னொருவரின் பிசகாக இருந்தாலும் பெருந்தன்மையுடன் அதைக்கடப்பதுவும் ஒருவகையில் sportsmanshipதான். மேலும் இது போனஸ் மதிப்பெண்கள் மட்டுமே. 

**

‘காட்டுங்கள் உங்கள் கைவண்ணத்தை’ என்பது அடுத்த சவால். விளம்பரதாரர்களின் அடையாளங்களை நம் மூளையில் நுழைக்கும் முயற்சிகளுள் ஒன்று.

இந்தச் சவாலுக்கு வையாபுரி நடுவராக இருக்க (பாவம், இந்த மனுஷனை எப்படியெல்லாம் கழட்டி விடறாங்க!) போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். Blobby மற்றும் Nippon அணி. டாஸில் வென்றவர் முதலில் சென்று தங்கள் அணியின் பெயரை பெயிண்ட்டில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களால் அடுக்க வேண்டும். பிறகு ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் சமாச்சாரங்களின் மூலம். நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பொருட்களை உருவாக்க வேண்டும். சிறப்பான முறையில் செயல்படும் அணி வெற்றி பெறும். 

Bigg Boss

ஆரவ் டீம் டாஸில் வென்று முதலில் ஓடியது. பெயிண்ட்டில் போடப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களை பொறுக்கி ‘blobby’ என்கிற வார்த்தையை அமைத்தது. பிறகு ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடினார்கள். மகாராஜா கல்யாண விருந்து மாதிரி அங்கு பல பொருட்கள் இருப்பதைப் பார்த்து முதலில் திகைத்துப் போனார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு தங்கள் கற்பனையைச் சார்ந்து வீட்டு உபயோகப் பொருட்களை செய்யத் துவங்கினார்கள். 

பின்னாலேயே சிநேகன் அணியும் வந்து சேர்ந்தது. இரு அணியும் உருவாக்கிய விதம் விதமான பொருட்களை நடுவர் வையாபுரி பார்வையிட்டார். பாவம், நடுவருக்கான கெத்து அவருக்குப் போதாது. மட்டுமல்லாமல் பல பொருட்களின் உபயோகம் பற்றி அவருக்குத் தெரியவில்லை. எதை எதையோ மாற்றிச் சொன்னார். போட்டியாளர்கள் நடுவருக்கு விளக்கிச் சொன்னார்கள். பழைய தலைமுறைக்கும் இளம் தலைமுறைக்குமான வித்தியாசம். ‘ஒப்புக்கு சப்பாண்’ நடுவராக எதை எதையோ சொல்லி, ‘இது சிறப்பு, இது வெறுப்பு’ என்று தன் பொறுப்பை நிலைநாட்ட முயன்றார் வையாபுரி.

‘குப்பைக்கூடை செஞ்சீங்க.. சரி. ஆனா அதுல குப்பையே இல்லையே’ என்று வையாபுரி, லாஜிக் கண்டுபிடித்த போது உள்ளபடியே புல்லரித்தது. சிநேகன் செய்த கடிகாரம் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. நல்ல கற்பனை. எப்படியோ இங்க்கி பிங்க்கி காரணங்களைச் சொல்லி சிநேகன் அணி பெற்றதாக அறிவித்தார் வையாபுரி. குப்பைக்கூடை செய்தது மட்டுமல்லாமல் அதில் குப்பையும் போட்டு வைத்தது வெற்றி பெற்ற அணிக்கு கூடுதல் தகுதியாம். 

கயிறு கட்டப்பட்ட நிலையிலேயே இந்தச் சவாலை செய்த ஆரவ் – ஹரீஷ் ஜோடிக்கு அந்த நிலைமை வெறுத்துப் போயிருக்க வேண்டும். இதர ஜோடிகள் இந்தச் சிக்கலில் இருந்து வெளியேறியதைப் போலவே, ஆரவ்வும் ‘கயிறு அவிழ்ந்து விட்டது’ என்று நைசாக சொல்லி ‘தப்பிச்சம்டா சாமி” என்று அந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து வெளியேறினார். ஆனால் ‘இது செமயான task பிக் பாஸ். மூளைக்கு வேலை தந்த சவால்” என்று சாமர்த்தியமாக பிக்பாஸிற்கு ஐஸ் வைக்கவும் முயன்றனர். 

**

Ticket finale task 4. “நீ என்ன அப்பாடக்கரா?’ என்பது அதன் பெயர். (நன்றி: காயத்ரி). இதுவும் சுவாரசியமான விளையாட்டு. ஒவ்வொரு போட்டியாளரும் இதர போட்டியாளர்களின் மீதான எதிர்மறை விஷயங்களை பதிவு செய்யும் சவால். ஏறத்தாழ 360 டிகிரி சுழற்சியில், அனைவரைப் பற்றி அனைவரும் பதிவு செய்யும் வாய்ப்பு. 

நீச்சல் குளத்தில் வெவ்வேறு மதிப்புள்ள எண்கள் அடங்கிய பிளாஸ்டிக் காயின்கள் கொட்டப்பட்டிருக்கும். அவற்றில் எண்கள் இல்லாத வெற்று காயின்களும் இருக்கும்.  போட்டியாளர்கள், இரண்டு நபர்கள் கொண்ட அணியாகப் பிரிய வேண்டும். (முதல் ரவுண்டில் சிநேகன் இல்லை). பஸ்ஸர் ஒலித்ததும் ஜோடிகளில் ஒருவர் குளத்தில் பாய்ந்து மதிப்பெண்களைப் பொறுக்கி கரையில் இருக்கும் தனது ஜோடியிடம் தருவார். இது முதல் பகுதி. 

Bigg Boss

கார்டன் ஏரியாவில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டிய சோளக்காட்டு பொம்மைகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் 2000 மதிப்பெண்கள் தரப்படும். ஒவ்வொரு ஜோடியும் நீச்சல் குளத்தில் பொறுக்கிய மதிப்பெண்களை, தங்களுக்குள் கலந்து ஆலோசித்து. சம்பந்தப்பட்ட நபரிடம் தனக்குப்பிடிக்காத விஷயம் என்ன என்பதற்கான காரணங்களைக் கூறி மைனஸ் மதிப்பெண்களை பொம்மையின் மீது ஒட்ட வேண்டும். 

பொம்மைகளுக்கு தரப்பட்டிருக்கும் 2000 மதிப்பெண்களில் இருந்து எதிர்மறை விஷயங்களுக்கான மதிப்பெண்கள் குறைக்கப்படும். நிகரம்தான் ஒவ்வொரு போட்டியாளர் பெறும் இறுதி மதிப்பெண். (அப்பாடி! மூச்சு வாங்குது).

இப்படியாக ஒவ்வொரு ஜோடியாக நீச்சல் குளத்தில் மதிப்பெண்களைப் பொறுக்கி. பொம்மைகளின் மீது எதிர்மறை விஷயங்களைச் சொல்லி அவற்றின் மீது ஒட்டினார்கள். ‘ஹரீஷ் எதிரணியில் இருக்கும்போது தன் பொம்மையின் அருகிலேயே நீண்ட நேரம் இருப்பதை தொலைவில் இருந்த கவனித்த ஆரவ்.. ‘மகனே.. எனக்கு நெறய மார்க் போட்டே.. கொன்னே புடுவேன். ஏன் என் பக்கமே ரொம்ப நேரம் நிக்கறே.. என்ன பூவா போட்ற’ என்று ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்தார். 

கார் போட்டியில் சிநேகன் தோற்றதால் ஆறுதல் பரிசாக சரோஜாதேவி உபயோகித்த சோப்பு டப்பாவை அவருக்கு பரிசளிக்க முயன்றார் பிக் பாஸ். எனவே ஜோடியாக அல்லாது, அவர் மட்டும் தனியாகச் சென்று எதிர்மறை மதிப்பெண்களை ஒட்டலாம். 

நான்கு சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டி முடிந்த பிறகு, எல்லோரும் சென்று தங்களின் நிகர மதிப்பெண்களை அறிய முயன்றனர். தோரயமாக ஒவ்வொருவருக்கும் 1500 மதிப்பெண்கள் நிகரமாக நிற்கும் போலிருக்கிறது. 

நாளை போட்டியில் பெண்களின் ஆடைகளை அணிந்து கொண்டு ஆண் போட்டியாளர்கள் நடனமாடுவதைக் காட்டினார்கள். போட்டியாளர்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் வதை செய்வதென்று பிக் பாஸ் தீர்மானித்து விட்டார் போல.

- சுரேஷ் கண்ணன்

 


Add new comment

Or log in with...