பிக் போஸ் 80 ஆம் நாள்: இறங்க மறுத்த சுஜா, தில்லு முல்லு சிநேகன் | தினகரன்


பிக் போஸ் 80 ஆம் நாள்: இறங்க மறுத்த சுஜா, தில்லு முல்லு சிநேகன்

Part 01

Part 02

“காருக்குள்ள யாரு, தொப்பி மாமா நேரு” என்கிற சவாலுக்காக சிநேகனும் சுஜாவும் காருக்குள் சோர்வாக அமர்ந்திருந்தனர். நேரம் இரவு 02:30 மணி.

80-ம் நாள். காலை 5:35. இருவரும் கண் அயர்ந்து விட்டனர். இயந்திர நாய் குரைத்து அவர்களை எழுப்பியது. அது ஐசியூ-ல் இருந்து குணமாகி திரும்ப வந்து விட்டது போல. பிக்பாஸின் சரியான அடியாள்தான் அது. சிநேகனும் சுஜாவும் தங்களின் தற்காலிக கருத்து வேறுபாடுகளை சற்று மறந்து பேசிக் கொண்டாவது இருக்கலாம். சோர்வு தெரியாமல் சற்று உற்சாகமாகவாது இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் ‘உர்’ரென்று இருந்தார்கள். 

Bigg Boss

காலை 08:00 மணி. அனிருத் அதியுச்ச குரலில் பாடிய ‘வேலையில்லா  பட்டதாரி’ பாடல் ஒலித்தது. அது சரி, அப்படி வேலையில்லாமல் நிறைய பட்டதாரிகள் இருப்பதால்தான் முதலாளி வர்க்கத்தினருக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. பணியாளர்களை எப்படி வேண்டுமானாலும் வதைக்கலாம் என்று துணிகிறார்கள். நோ.. நான் பிக் பாஸை சொல்லவில்லை. அவர் ரொம்….ப நல்லவர். (?!).

“அவங்க தூங்கக் கூடாதா?” என்று கேட்டார் தூங்கியழுந்து வந்த ஹரீஷ். “நோ.. தூங்கக்கூடாது. Rest room கூட உபயோகிக்கலை” என்று பரிதாபப்பட்டார் ஆரவ். பாவம், அது சார்ந்த உடற்கோளாறுகள் அவர்களுக்கு வராமல் இருக்க வேண்டும். 

ஹரீஷ் இன்று செஃப் ஆக மாறினார். ‘டொமோட்டோ உப்புமா’ என்ற பெயரில் அவர் செய்து காட்டிய உணவு சாம்பார் சாதம் போல தோற்றமளித்தது. ‘ஆனால் சுவையாக இருக்கிறது’ என்று சான்றிதழ் தந்தார் பிந்து. (ஏதோ வொர்க் அவுட் ஆவுது போலிருக்கிறதே). “முதன்முறையாக முறையான சமையல் மூலம் செய்த உணவு இது. நன்றி பிக் பாஸ்” என்றார் ஹரீஷ். 

காலை பத்து மணி. சிநேகன் காருக்குள் இருப்பதால் பிக்பாஸின் தகவல் தொடர்பு செயலாளராக கணேஷ் மாறி விட்டார் போலிருக்கிறது. வயிற்றுவலிக்காரன் பாத்ரூமிற்கு அடிக்கடி செல்வது போல வாக்குமூல அறைக்குள் அடிக்கடி போய் வந்தார். “கார்ல இருக்கறவங்களுக்கு டீ, காஃபி, டிபன், தண்ணி கொடுக்கலாமாம். அவங்க கிட்ட பேசலாமாம்” என்று ஆம்னி பஸ் கண்டக்டர் மாதிரி உற்சாகமாக சொன்னார்.  பிக்பாஸ் அனுமதி தந்து விட்டாராம். (அடப்பாவிகளா! அப்ப அதுவரை அதையெல்லாம் தடை செஞ்சு வெச்சிருந்தீங்களா?)

வெளியே வந்த பிந்து, சிநேகனிடம் பேசிக் கொண்டிருந்தார். காரில் இறந்து இறங்கியதற்காக பிக்பாஸ் நேற்று இரவு திட்டித் தீர்த்ததை சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் கேட்ட சில பொருட்களை எடுத்து வந்து தந்தார். இருவரும் உணவுண்ண மறுத்து விட்டனர். 

வீட்டிற்குள் ஆரவ் பேசிக் கொண்டிருந்தார். “கார்ல இருந்து நான் ஏன் இறங்கி வந்தேன்னா.. அடுத்த task இன்னமும் கடுமையா இருக்கும். அப்புறம் daily task- கூட செய்ய முடியாது. அந்த அளவிற்கு டயர்ட் ஆகிடும்” என்றார். “அதில்ல ப்ரோ… வெளில வந்தது கூட பிரச்சினையில்லை. நாம self nominate ஆகி வந்ததுதான் பிராப்ளம்” என்றார் ஹரீஷ். 

Bigg Boss

கணேஷ் உணவருந்தி விட்டு தன் தட்டை கழுவி வைத்து விட்டு வர பிக் பாஸ் மூக்கில் வியர்த்திருக்க வேண்டும். கணேஷை கூப்பிட்டு ‘சிநேகன் மற்றும் சுஜா அவர்களின் taskஐ முடித்து வி்ட்டு வரும் வரை எவரும் எந்தப் பொருட்களையும் கழுவி வைக்க கூடாது” என்று உத்தரவிட்டார். உலகத்திலேயே கடுமையான மாமியாராக பிக் பாஸ் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. போட்டியாளர்களுக்கு எம்மாதிரியெல்லாம் உளவியல் அழுத்தம் தரவேண்டும் என்பதை விதம்விதமாக சிந்திக்கிறார். 

நேரம் காலை 11:45. வையாபுரி இருவரிடமும் விசாரித்தார். “ஏதாவது சாப்பிடறீங்களா. பழம்.. ஜூஸ்?” 

மதியம் 12:00 மணி. பெட்ஷீட் தைக்கும் சவாலில் வையாபுரி மட்டும் ஏன் தனியாக வீட்டின் உள்ளே சென்று தைத்துக் கொண்டிருக்கிறார் என்று நேற்று தோன்றியது. அதற்கான விடை அவரின் வாயால் இன்று கிடைத்தது. “நான் ஏன்.. உள்ளே வந்து தைச்சேன்னா.. வெளியே இருந்தா.. யார் கிட்டயாவது உதவி கேட்பேன். இல்லைன்னா.. புலம்புவேன்.. மத்தவங்க யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாதுன்னுதான் தனியா வந்துட்டேன்” என்றார். பாவம். 

மதியம் 12:15. காருக்குள் இருவரும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக அமர்ந்திருந்ததால் அதை நிறைவுக்கு கொண்டு வரும் விதமாக அறிவிப்பு வந்தது. இன்னமும் ஒரு மணி நேரத்திற்குள் எவராவது ஒருவர் வெளியே வர வேண்டும். அவர்கள் இதற்காக தங்களுக்குள் ஆலோசனை செய்யலாம். ஒரு மணி நேரம் கடந்த பிறகும் அவர்கள் இறங்கவில்லையென்றால், இதர போட்டியாளர்கள் கூடிப் பேசி காருக்குள் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கட்டாயமாக வெளியேற்றலாம். 

Bigg Boss

இதர போட்டியாளர்கள் இந்த விஷயத்தை சிநேகன் மற்றும் சுஜாவிடம் தெரிவித்தனர். “சரி. முதல்ல அவங்களுக்குள்ள பேசிக்கட்டும். அப்புறம் நாம வருவோம்” என்று கிளம்பினர். 

முதலில் சுஜா ஆரம்பித்தார். “சிநேகன் சார்.. இதை நான் கேமா மட்டும்தான் பார்க்கறேன். அடுத்த வாரம் நான் நாமினேஷன்ல வரலாம். என் கிட்ட பாயிண்ட்ஸ் இல்லை. எனவே இந்த சவால் எனக்கு ரொம்பவே முக்கியம். திரைத்துறையில் 15 வருஷத்திற்கும் மேலாக இருக்கேன். இதுவரைக்கும் வெற்றியின் ருசியை நான் சுவைத்ததில்லை. கடுமையான உழைப்புதான் வெற்றியைத் தரும்’ன்றாங்க. அதுக்காகத்தான் இவ்ள கஷ்டப்படறேன். உங்களுக்காக வேணுமின்னா போறேன். ஆனா விளையாட்டு என்கிற நோக்கில் போக மாட்டேன்” என்றார். 

தான் நீண்ட நாட்களாக போராடி வரும் பழைய போட்டியாளர் என்கிற முறையில் மட்டுமல்லாது அந்த வார நாமிஷேனில் இருப்பதால் தனக்கு இந்த வெற்றி எத்தனை முக்கியமானது என்பதை பலஹீனமாக வாதாடிப் பார்த்தார் சிநேகன். 

மற்றவர்களும் இவர்களிடம் ஒவ்வொருவராக வந்து பேசிப் பார்த்தனர். சிநேகன் பக்கம் நிறைய ஆதரவு இருந்தது. அவர் அந்த வார  நாமிஷேனில் இருப்பதை பிரதானமாக சுட்டிக் காட்டினார்கள். வையாபுரி வேறு விதமாக அணுகினார். ‘கவிஞரே.. உங்க திறமை மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இதுல விட்டா கூட வேற எதுலயாவது பிடிச்சிடுவீங்க. இறங்கி வாங்க” என்றார். 

பிரிந்து போன கட்சி இணைப்பு மாதிரி எந்தவொரு முடிவிற்கும் எட்டப்படாமல் நிலைமை குழப்பமாகவே இருந்தது. போட்டியாளர்கள் வீட்டினுள் இது குறித்து ஆலோசித்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்து, சுஜாவை இறங்கச் சொல்லலாம் என்பது அவர்களின் முடிவாக இருந்தது. “நான் கதவைத் தாண்டி வெளியே செல்லும் போதுதான் தோல்வியின் ருசி எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்படி போயிருக்கவில்லையென்றால் கூட எனக்குத் தெரிந்திருக்காது. அந்த வகையில் இதன் வெற்றி எனக்கு முக்கியம்” என்றார் சுஜா. “நான் இதுவரை நிறைய முறை நிறைய பேருக்காக விட்டுத் தந்திருக்கேன். ஆனா இப்ப கேட்டா …” என்றார் சிநேகன் பரிதாபமாக. 

முன்பு, சுஜாவிற்கு இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டிய சவால் வந்தபோது அவர் முதலில் கேட்டது சிநேகனைத்தான். அவரும் கேள்வி கேட்காமல் உடனே ஒப்புக் கொண்டார். அந்த நன்றிக்காக சுஜா ஒருவேளை விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படி விட்டுக்கொடுத்தாலும் பிக் பாஸ் கூப்பிட்டு பஞ்சாயத்து வைப்பார். “வீட்டுக்குள் பாயாசம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாசம் என்பது மருந்திற்கும் இருக்கக்கூடாது” என்று கடுமையான லெக்சர் தருவார். எனவே சுஜா அந்த நோக்கிலும் விட்டுத்தர முடியாது. பிராண சங்கடம். 

மதியம் 01:00 மணி. ‘நீங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள்’ என்பது மாதிரியான அறிவிப்பை சொல்லி போட்டியாளர்களை இன்னமும் உசுப்பேற்றினார் பிக் பாஸ். நேரம் 1:15 மணி. இதர போட்டியாளர்கள் வந்து சுஜாவை கன்வின்ஸ் செய்ய முயன்றார்கள். “பழைய போட்டியாளர்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பது அவர்கள் இத்தனை நாட்கள் நீடிப்பதிலிருந்து தெரிகிறது. ஆனால் அவ்வாறான சோதனையை நான் இன்னமும் கடக்கவில்லை. எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் நான் எப்படி பாயிண்ட்டுகளை இழப்பது?” என்பது சுஜாவின் தரப்பாக இருந்தது. 

Bigg Boss

இப்போது பிக்பாஸ் சீனிற்குள் வந்தார். ‘சுஜா… இப்போது நீங்கள் இறங்க வேண்டாம் என்று முடிவெடுத்தால் இந்தப் போட்டி மேலும் தொடரும். மட்டுமல்லாமல் டிக்கெட் மதிப்பெண் உயரும்” என்று இப்படியும் அப்படியுமாக ஆசை காட்டினார். ‘எனக்கு இறங்க விருப்பமில்லை பிக் பாஸ். விட்டுக்கொடுக்க மனதிருந்தாலும் இறங்கக்கூடாதுன்னு தோணுது. முழுமனசா அதற்கு சம்மதிக்க விரும்பலை. என் கிட்ட பாயிண்ட்ஸ் இல்ல. என்னைக் காப்பாத்திக்கறதுதான் புத்திசாலித்தனம்னு தோணுது” என்றார் சுஜா.

‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று மனதிற்குள் மகிழ்ந்த பிக் பாஸ் “அப்படியென்றால் போட்டி தொடரும்” என்று உற்சாகமாக அறிவித்து விட்டு துண்டை தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார். 

அது மட்டுமல்ல, இந்தப் பஞ்சாயத்தையே எவ்வளவு நேரம் நீட்டிப்பது? வேறு எண்டர்டெயிண்மெண்ட் வேண்டாமா? என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னமோ, கந்தல் துணிகளை வைத்து பெட்ஷீட் தைக்கும் போட்டியைத் தொடருங்கள் என்று உத்தரவிட்டார். காருக்குள் சோர்வுடன் இருந்த போட்டியாளர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. ‘சும்மாதானே உட்கார்ந்திருக்காங்க. அவங்க கிட்ட அவங்களோட பொருட்களைக் கொண்டு போய் கொடுங்க” என்ற உத்தரவும் வந்தது. 

குடுகுடுப்பைக்காரன் சட்டை போல் தயாராகிக் கொண்ருந்த போர்வையை அணு ஆராய்ச்சிக்கான கவனத்துடன் ஒவ்வொருவரும் தயாரித்துக் கொண்டிருந்தனர். தன்னிடம் கறுப்புத் துணி இருந்தாலும் பிந்துவிற்கு அதிகம் தொந்தரவு தராமல் மாற்றிச் சென்றார் கனவான் கணேஷ். பிந்து தன்னுடைய பெட்ஷீட்டை முடித்து விட்டதாக முதலில் சொன்னதால், அனைவரையும் தைப்பதை நிறுத்தச் சொன்னார் பிக் பாஸ். ஹரீஷ், தரக்கட்டுப்பாடு மேலாளராக மாறி பிந்துவின் பெட்ஷீட்டை சோதனை செய்தார். அளவு சற்று கூடுதலாக இருந்தது. பிறகு அவர் அதை மாற்றிமைக்க, ‘அருமையான பெட்ஷீட் பிக் பாஸ். இதை ஏலம் விட்டா பிந்து ஆர்மி பத்து லட்சம் தந்து கூட வாங்கிப்பாங்க” என்று சான்றிதழ் தந்தார் ஹரீஷ். 

காருக்குள் இருந்த சிநேகனும் சுஜாவும் ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டார்கள். சிநேகன் ஏதோ கேட்க, ‘நான் தைச்சிட்டு இருக்கேன்ல. முடிச்சிட்டு தர்றேன்’ என்று சுஜா அடம்பிடிக்க அவர் பிக் பாஸிடம் நியாயம் கேட்டார். பிறகு ஒவ்வொருவராக பெட்ஷீட் முடித்தது அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் இதை சோதித்தனர். வையாபுரி தைத்தது பெட்ஷீட்டாக இல்லாமல் வண்ணமயமான நீண்ட கோமணம் மாதிரி இருந்தது. அதை தரையில் விரித்துதான் படுக்க வேண்டும். பிறகு அதை அவர் சரிசெய்ய, ‘பாவம்யா.. மனுஷன்’ என்று அதையும் ஒப்புக்கு சப்பாணியாக ஓகே செய்தனர். 

Bigg Boss

மாலை 4:45. சிநேகனும் சுஜாவும் காருக்குள் பிடிவாதமாக இருந்ததால், “இது தப்பாச்சே.. இவங்களை ஏதாச்சும் பண்ணணுமே” என்று வில்லங்கமாக யோசித்த பிக் பாஸ், அவர்களை காரின் வெளியே இருந்து foot board travel செய்ய உத்தரவிட்டார். (‘படிக்கட்டில் நின்று பயணிப்பது ஆபத்தானது’ என்று ஒவ்வொரு பேருந்திலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டு விதிகளே வேறு). எனவே இருவரும், கட்சி அமைச்சர்கள் போல காரின் வெளியே தொங்கிக் கொண்டிருந்தனர். 

நேரம் 5:45. ‘இப்பவும் அடங்கமாட்றாங்களே” என்று மூக்கின் மீது விரலை வைத்து யோசித்த பிக்பாஸ் தேர்ந்த sadist போல விதிமுறையை இன்னமும் கடுமையாக்கினார். அதன்படி இருவரும் ஒற்றைக்காலில் நிற்க வேண்டும். 

மட்டுமல்லாமல் கணேஷிற்கு கூடுதலான பதவி கிடைத்தது. கண்காணிப்பு அதிகாரி. இருவரும் கால்களை சரியாக வைத்திருக்கிறார்களா என்று கணேஷ் ரகசியமாக கண்காணித்துக் கொண்டேயிருக்க இருக்க வேண்டுமாம். 

“ஏம்யா.. பிக்பாஸூ… இத்தனை காமிராக்கள் வெச்சு பார்த்திக்கிட்டுதானே இருக்கே.. அதுல தெரியாதா.. ஏன் என்னை வேற தனியா பார்க்கச் சொல்றீங்க.. நான் என்ன வெட்டியா இருக்கேனோ.. என்னைப் பார்த்தா அவ்ள மொக்கையாவா தெரியுது?” என்றெல்லாம் கணேஷ் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறெல்லாம் கேட்காமல், பழைய படங்களில் அடியாள்  ஜஸ்டின் சொல்வது மாதிரி விறைப்புடன் ‘ஒகே பாஸ்” என்றார். மட்டுமல்லாமல் சிஐடி சங்கர் மாதிரி விதம் விதமான கோணங்களில் அவர்களின் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்காணிக்கறாராமாம். பத்து பதினைந்து மிஷ்கின் படங்களை பார்த்த எபெக்ட் கணேஷிற்கு கிடைத்திருக்கும். பாவம். 

காரில் தொங்கிக் கொண்டிருந்த சுஜாவிற்கு வலி துவங்கி விட்டது போல. அழுகை பாவத்திற்கு அவர் முகம் சென்று விட்டது. உடலமைப்பு நோக்கில் ஆணோடு ஒரு பெண் போட்டியிடுவது சமத்துவமில்லை என்று சொன்னால் பெண்ணியர்கள் அடிக்க வருவார்கள். என்றாலும் உண்மைதானே? எனவே சுஜா காரின் மீது அப்படியே தலையை சாய்த்து விட்டார். சிஐடி சங்கர், தன்னுடைய ரிப்போர்ட்டை வாக்கி டாக்கி மூலமாக பாஸிற்கு தெரிவித்தார். ‘மொல்லாளி…. சிநேகன் சீட்டிங் பண்றாரு.. அவர் காலை நைசா கார் ஓரத்துல வெச்சுட்டாரு. நான் பார்த்தேன்” என்று கச்சிதமாக போட்டுக் கொடுத்தார். 

சோர்வு காரணமாக சுஜாவிற்கு வாந்தி வரும் நிலைமை ஏற்பட்டது. முன்பு ஜூலிக்கு சிநேகன் கையேந்தியது போல அவரால் இப்போது வரமுடியாத நிலைமை வேறு. சங்கடமான situation. இதை சிநேகனிடம் சொன்ன சுஜா, கணேஷின் உதவியைக் கேட்டார். மிக ஆர்வமாக வந்த கணேஷ் ‘ you want a date?” என்று கேட்டதும், ‘என்னய்யா மனுஷன் இந்தாளு.. இந்தச் சமயத்துல போய் டேட்டிங் போலாமான்னு கேக்கறாரே” என்று எனக்கு தோன்றி விட்டது. அப்புறம்தான் என் தவறு புரிந்தது. பேரிச்சம்பழம் வேண்டுமா என்றுதான் கணேஷ் கேட்டிருக்கிறார். பாவம்.  பிறகு எலுமிச்சம் பழம் கொண்டு வந்து தந்தார். 

“ஆரத்தி –கணேஷ் ஒண்ணா இறங்கிய மாதிரி நாம இறங்கிடலாமா?” என்று ஒரு சமாதான உடன்படிக்கையை நூலாக விட்டுப் பார்த்தார் சுஜா. சிநேகன் அதற்கு ஏமாறத்தயாராக இல்லை. வாந்தி வரும் நிலையிலும் “என்கிட்ட பாயிண்ட்ஸே இல்லையே” என்பதுதான் சுஜாவின் புலம்பலாக இருந்தது. “இதை முடிச்சிட்டு அடுத்தடுத்த task-லாம் பண்ண வேண்டியிருக்கும்” என்று மறைமுகமாக எச்சரித்தார் சிநேகன். 

நேரம் மாலை 06:45 – சிநேகன் ஒரு காலை காரின் ஓரத்தில் சாய்த்து வைத்துக் கொண்டிருந்ததை திறமையான சாகசத்தின் மூலம் கண்டுபிடித்த கணேஷ், இதை பிக் பாஸிடம் அதிகாரபூர்வ அறிக்கையாக சமர்ப்பித்தார். “என்ன பார்த்தீங்க சொல்லுங்க?’ என்பது பிக் பாஸின் கேள்வி. ‘வெட்டத் தெரியாவதனுக்கு பத்து அருவாளு” என்கிற கதையாக இதற்கு அறுபது காமிராக்கள் வேறு. 

“சரி. எல்லோரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்து சுஜா வெற்றி பெற்றதாக சொல்லுங்கள்” என்பது நாட்டாமையின் தீர்ப்பு. கணேஷ் உற்சாகமாகச் சென்றார். (‘ஒரு காலுக்கு சிநேகன் ஓய்வு தந்தார்’ என்பது கணேஷின் சாட்சியம். ‘ஒருக்கால் அவர் சரியாக பார்க்காமலிருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?’ அய்யோ.. இந்த நேரத்துல போய் ரைமிங்கா வருதே..)

Bigg Boss

பிக் பாஸ் சொன்னதை சிநேகனிடம், கணேஷ் குத்துமதிப்பாக ஆரம்பிக்கும் போதே சிநேகனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. “அப்ப நான் போர்ஜரி’ பண்றேன்னு சொல்றீங்களா? நான் இவ்ள நேரம் கஷ்டப்பட்டதெல்லாம் சும்மாவா?” என்று பொங்கினார். 

‘இல்ல ப்ரோ.. பொய் கையெழுத்து போட்டு ஏமாத்தறதுக்கு பேர்தான் போர்ஜரி.. இதுக்கு பேரு பிராடுத்தனம்” என்று கணேஷ் சிநேகன் சொன்னதை திருத்தியிருந்தால், மதிப்பெண்கள் போனால் போகிறது என்று சிநேகன் காரில் இருந்து இறங்கி வந்து கணேஷை பொளேர் என்று அறைந்திருப்பார் போல. அத்தனை கோபத்தில் இருந்தார் சிநேகன். நல்லவேளையாக கணேஷ் அவ்வாறெல்லாம் விளக்கம் அளிக்கவில்லை. 

“எத்தனை மணி நேரம் கஷ்டப்பட்டு இங்க நிக்கறேன். இப்ப வந்து கேம் சரியா ஆடலைன்னு சொல்றீங்க. நான் போக மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார் சிநேகன். பிறகு பிக்பாஸிடமும் அதையே முறையிட்டார்.  “நீங்க எப்பவுமே எனக்கு ஃபேவரா இருந்ததில்லை’ என்று தன் கோபத்தை கணேஷிடமும் காட்டினார். (தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கணேஷ் அவரை காப்பாற்றியதை கோபத்தில் சிநேகன் மறந்து விட்டார் போல.) 

சுஜாவின் நிலைமை இன்னமும் பாவம். அவரின் வெற்றி ஏறத்தாழ உறுதி என்ற நிலையிலும் முடிவு அறிவிக்கப்படாததால் “சீக்கிரம் சொல்லுங்க பிக் பாஸ்” என்று வலியில் துடித்துக் கொண்டிருந்தார். சிநேகன் எவ்வாறு தன் காலை அப்படி வைத்திருக்க முடியும் என்று மற்றவர்கள் டெமோ காட்டிக் கொண்டிருந்தார்கள். கணேஷூம் அதையே சிநேகனிடம் செய்முறையின் மூலமாக விளக்கிக் கொண்டிருந்தார். “உங்க டிஸ்கஷன்ல தீய வைக்க. என்னை இறக்கிட்டு என்ன வேணா பேசிக்கங்க” என்பது சுஜாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். பாவம், அவஸ்தையாக துடித்துக் கொண்டிருந்தார். 

Bigg Boss

“இந்த task முடிஞ்சாலும் நான் அப்படியே நிக்கத்தயார். ஆனா ஏமாத்திட்டு ஜெயிச்சேன்னு மட்டும் சொல்லாதீங்க. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்பது சிநேகனின்  கோபமான அபிப்ராயம். ‘நானும் பார்த்தேன். சிநேகன் காலைவெச்சிட்டு இருந்தார்” என்றார் ஆரவ். (கணேஷை மட்டும் நம்பாமல் ஆரவ்விற்கும் கண்காணிப்பு அதிகாரி பதவியை பிக் பாஸ் ரகசியமாக தந்திருக்கிறார் போலிருக்கிறது). இன்னும் சிலரும் சாட்சி சொன்னார்கள். கணேஷ் மறுபடியும் தன் நிலைமையை விளக்கினார். “இது என்னோட முடிவு இல்ல சிநேகன். என்னை பார்த்துட்டு சொல்லச் சொன்னாங்க.. அவ்வளவுதான்”. கணேஷ் தன் தரப்பை விளக்கிச் சொன்னாலும் சுஜா வெற்றி பெற்ற முடிவைத் தெரிவிக்க தயங்கிக் கொண்டிருந்தார். அதை தான் சொன்னால் சிநேகனின் கோபம் தன் பக்கம் திரும்பும். பிக் பாஸே சொல்லட்டும் என்பது அவரின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். நியாயம்தான்.

**

இரவு மணி 07:15

‘உங்களின் இந்த இருபது மணி நேரப் பேராட்டம் முடிவிற்கு வந்தது. வெற்றி பெற்றவர் சுஜா’ என்று அறிவித்தார் பிக் பாஸ். பாவம், சுஜாவால் அந்த வெற்றியை கொண்டாட கூட முடியவில்லை. கால்வலியால் துடித்துக் கொண்டே இறங்கினார். இந்த முடிவை எதிர்பார்த்திருந்தாலும் கோபத்திலும் விரக்தியிலும் இருந்த சிநேகன், காரில் இருந்து இறங்காமல் அப்படியே நின்றார். அத்தனை கால்வலியிலும் சுஜா அவரிடம் சென்று எதையோ சொல்ல முயன்றார். “நான் உன்னை ஏமாத்திட்டம்மா.. கிளம்பு கிளம்பு:” என்று கோபப்பட்ட சிநேகன் தானும் காரிலிருந்து இறங்கி வலி தாங்காமல் கீழே விழப் போனார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். 

**

“ரொம்ப தப்பா இருக்கு ப்ரோ.. கமல் சார் வந்தவுடன் சொல்லிட்டு நான் கிளம்பறேன். நான் ஏதோ ஏமாத்தி ஜெயிச்ச மாதிரி ஆயிடுச்சு. நீங்கள்ளலாம் சொல்லி நான் விட்டுக்கொடுத்திருந்தா கூட பரவாயில்ல. ஏமாத்தி ஜெயிக்கணும்லாம் நான் நினைக்கவேயில்லை. அந்த மாதிரி பழக்கம் எனக்கு கிடையாது. மதியம் முழுக்க வெயில் அடிச்சது. சுஜாவாவது பின்சீட்ல இருந்தாங்க. நான் முன்சீட்ல அத்தனை வெயில்லயும் உட்கார்ந்திருந்தேன். அசிங்கமா இருக்கு. பொய்யால்லாம் எனக்கு விளையாடத் தெரியாது. என்று சொல்லி விட்டு குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதார் சிநேகன். 

சிநேகனின் தரப்பு பரிதாபம்தான். ஏறத்தாழ சுஜாவிற்கு இணையாக அத்தனை நேரம் பொறுமை காத்து விட்டு கடைசி நிலையில் எதையோ சொல்லி “நீ தோல்வி” என்றால் எவருக்குமே கோபமும் அழுகையும் வரத்தான் செய்யும். ஆனால் எப்படியாவது இந்தப் போட்டியை முடித்து விட வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்த பிக் பாஸ், கணேஷின் சாட்சியத்தை வலுவாக பற்றிக் கொண்டார் என்று தோன்றுகிறது. இல்லையெனில், இந்தப் போட்டியை இன்னமும் நீட்டித்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கலாம். 

Bigg Boss

‘கிட்ட போனால் பாய்ந்து விடுவாரோ’ என்கிற தயக்கத்தில் சிலர் தூரமாக நிற்க, கணேஷின் ஆறுதல் இந்தச் சமயத்தில் சிநேகனுக்கு முக்கியமாக இருந்தது. விதம் விதமாக சிநேகனை தேற்றினார் கணேஷ். ஓய்வு எடுப்பதையும் விட்டு விட்டு சிநேகனின் அருகில் வந்தார் சுஜா. ஆனால் சிநேகனின் கோபம் அப்படியே இருந்தது. ‘நீ கேமை கேமாத்தான் பார்ப்பே. அப்புறம் என்ன?” என்று கோபித்துக் கொண்டார். “நீங்கள்லாம் முடிவு செஞ்சு விட்டுத்தர சொன்னாக் கூட வந்திட்டு இருப்பேன்” என்பதே சிநேகனின் புலம்பலாக இருந்தது. பாவம் சுஜா, சிரமப்பட்டு வெற்றியடைந்தாலும் அதை ருசிக்க முடியாமல் குற்றவுணர்வுடன் தவித்தார். 

கமல் சொன்னது போல இது போன்ற திரைக்கதையை எத்தனை திட்டமிட்டாலும் ஒருவர் யோசித்து எழுத முடியாது. வாழ்க்கை அத்தனை சுவாரசியமான நாடகம். தினம் தினம் விதம்விதமான காட்சிகள். உடல்ரீதியாக பெண் பலவீனமானவள் என்று நம்பப்பட்டாலும், ஓர் ஆணிற்கு இணையாக உடல்திறனில் போட்டியிட்டு வென்ற சுஜாவைப் பாராட்டத்தான் வேண்டும். 

சிநேகன் துயரம் மாறாத நிலையில் அமர்ந்திருக்க, வெளியில் மதிப்பெண் போர்டு புதுப்பிக்ப்பட்டிருந்தது. பிந்து முதல் இடத்தில் இருந்தார். இதுக்குத்தான் எங்கூர்ல ஒரு பழமொழி சொல்வாங்க… ‘வெல்லம் தின்றது ஒருத்தன்….

- சுரேஷ் கண்ணன்

 


Add new comment

Or log in with...