ஒக்டோபர் மழையுடன் டெங்கு தீவிரம் | தினகரன்

ஒக்டோபர் மழையுடன் டெங்கு தீவிரம்

 

* டெங்கு நோயாளர் தொகை 65 வீதத்தில் குறைவு
* உயிரிழந்த 300 பேரில் 68 வீதமானோர் பெண்கள்
* செப். 20 முதல் 25 வரை ஒழிப்பு நடவடிக்கை

ஒக்டோபர் மாதத்தில் மழை வீழ்ச்சி அதிகரிப்பதோடு மீண்டும் டெங்கு நோய் தீவரமடையும் அபாயம் உள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

டெங்கு பரவும் சூழலை துப்புரவு செய்து, டெங்கு மரணம் மற்றும் நோயாளர் தொகையைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு டெங்கு ஒழிப்புப் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார்.

இந்த வருடத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதுடன் அதில் 200 பேர் உயிரிழந்தனர். ஜூன் மாதத்தில் வேகமாக டெங்கு நோயாளர் தொகை அதிகரித்ததாகக் குறிப்பிட்ட அவர் சகலரதும் ஒத்துழைப்பினால் டெங்கு நோயாளர் தொகையை 60 வீதத்தினால் குறைக்க முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

டெங்கு ஒழிப்பதற்காக காத்திரமாக பங்களிப்பவர்களுக்கு பரிசில் வழங்குவது குறித்தும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

செப்டம்பர் 20 முதல் 26ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வாரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்; நான்கு வகையான டெங்கு நோயில் இந்த வருடம் இரண்டாம் வகை டெங்கு பரவியிருந்தது. இம்முறை கூடுதலான டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டாலும், ஒப்பீட்டளவில் இழப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. கிராம பகுதிகளை விட நகர பகுதிகளிலே அதிகமாக டெங்கு பரவுகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டடம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர் தொகை கணிசமாக குறைவடைந்தது.

ஊடகங்களும் பாதுகாப்பு தரப்பினரும் அரச நிறுவனங்களும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள். வாராந்தம் 10 ஆயிரம் பேர் வரை நோய்க்கு இலக்காகி சிகிச்சை பெறும் நிலை 900 ஆக குறைந்துள்ளது.

இந்த வருடம் டெங்கினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் பேரில் 30 விதமானவர்கள் மாணவர்களாகும்.

இறந்தவர்களில் 10 வீதமானவர்கள் மாணவர்கள் என்பதோடு 86 வீதமானவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.

இறந்தவர்களில் 68 வீதமானவர்கள் பெண்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதில் பாதியளவானவர்களே ஆண்களில் இறந்துள்ளனர்.

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கவனம் செலுத்துவது குறைவு என்பதாலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு நாடுபூராவும் 20 இலட்சம் இடங்கள் பரீட்சிக்கப்பட்டன. அதில் 20 வீதமான இடங்கள் டெங்கு பரவும் அபாயம் உள்ளவை என அடையாளம் காணப்பட்டன.

இது தவிர டெங்கு குடம்பி உள்ள 2 வீதமான இடங்கள் இதில் அடங்கும்.

டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது டெங்கு பரவும் அபாயம் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகள் கூடுதலாக பரீட்சிக்கப்படும். இது தவிர 144 பிரதேச செயலக பிரிவுகளிலும் பரிசோதனைகள் முன்னேடுக்கப்படும்.

சகல வீடுகளுக்கும் டெங்கு பரவுவது தொடர்பாக பரீட்சிக்கும் அட்டையொன்று வழங்கப்படும். வாராந்தம் வீட்டை அண்மித்த பகுதிகளை சுத்தம் செய்து அதில் குறிப்பு எழுத வேண்டும். டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் அதனை நேரில் வந்து பரீட்சிப்பார்கள்.

டெங்கு தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்ட வருகிறது. மூன்று நாட்டு தடுப்பு மருந்து பற்றி தற்பொழுது ஆராயப்படுகிறது என்றார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் ஜெயசுந்தர பணடா கூறுகையில் ஜூன் மாதத்தில் டெங்கு தீவிரமடைந்தது. ஊடகங்களினது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றியளித்த நிலையில் டெங்கு நோயாளர் தொகையை 65 வீதத்தினால் குறைக்க முடிந்ததும் மலேரியா போன்று டெங்கு நோயையும் முற்றாக ஒழிக்க முடியும். இதற்கு 15 வருடங்கள் வரை செல்லலாம். டெங்கு பற்றி விமர்சிப்பதை விடுத்து ஒவ்வொருவரும் இதனைத்தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

 

 


There is 1 Comment

நலம் தரும் நிலவேம்பு சித்த மருத்துவத்தில் ஆண்டாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியபோது, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது நிலவேம்பு. சிறு செடி வகையைச் சேர்ந்த இதற்கு, காண்டம், காண்டகம், கோகனம், கிராதம் போன்ற பல பெயர்கள் உள்ளன. நிலவேம்பில் சீமை நிலவேம்பு, நாட்டுநிலவேம்பு என இரண்டு வகைகள் உள்ளன. சிறியா நங்கையும் நிலவேம்பும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. *நிலவேம்பின் எல்லா பாகங்களுமே மருத்துவக் குணங்கள் உடையவைதான். எனினும், இலையும் தண்டும் அதிக அளவில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. *வாதசுரம் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல், நீர்க்கோவை, மூக்கடைப்பு ஆகியவற்றைப் போக்கும் ஆற்றல் நிலவேம்புக்கு உண்டு. நிலவேம்பு இலையைப் பொடித்து, 15 கிராம் எடுத்து, இதனுடன், கிச்சிலித்தோல், கொத்தமல்லி தலா சுமார் 200 மி.கி சேர்த்து, வெந்நீரில் கலக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, வடிகட்டி 15 - 30 மி.லி அளவுக்கு நாள்தோறும் இரண்டு மூன்று முறை குடித்துவர, நிவாரணம் கிடைக்கும். *நிலவேம்புச் செடியை முதன்மை பொருளாகக்கொண்டு சித்தமருத்துவத்தில் தயாரிக்கப்படும் நிலவேம்புக் குடிநீர், டெங்கு காய்ச்சல் மற்றும் மூட்டுக்களைப் பாதித்து, தாங்கமுடியாத வலியை உண்டாக்கும் சிக்குன்குனியா ஆகிய இரண்டு காய்ச்சல்களுக்கும் சிறந்த மருந்து. *டெங்கு சுரம், சிக்குன்குனியா மற்றும் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, அவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது நிலவேம்புக் குடிநீர் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. *நிலவேம்பைப் பொடித்து, 34 கிராம் எடுத்து, 700 மி.லி வெந்நீரில் கலந்து, கிராம்புத்தூள், கருவாப்பட்டைத்தூள், ஏலப்பொடி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நான்கு கிராம் கலந்து, சுமார் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் 15-30 மி.லி அளவுக்கு தினமும் பருகிவர, முறைசுரம், குளிர்சுரம், மூட்டுக்களில் ஏற்படும் பிடிப்பு, அஜீரணம், வயிற்றுப்புழுக்கள் நீங்கி, உடலுக்கு வலிமை கிடைக்கும். *நிலவேம்பு இலையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து, குடிநீர் செய்து, குடித்துவர கல்லீரல் தளர்ச்சி, நரம்புவலி, அஜீரணம், குடல் பொருமல் நீங்கும். *Dengue Kasaya* Green chirayta, creat, king of bitters, andrographis, India echinacea Siriyaa Nangai [சிறியா நங்கை]/ Nila Vembu [நிலவேம்பு] Hīn Kohomba / Heen Kohomba (හීන් කොහොඹ), meaning "small neem", or Hīn Bīm Kohomba / Heen Bim Kohomba(හීන් බිම් කොහොඹ) meaning "small neem of the ground".

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...