மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் அபாயம்! | தினகரன்

மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் அபாயம்!

நாட்டின் அரசாங்க மருத்துவத் துறையினர் மீண்டும் டெங்கு தொடர்பான முன்னெச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். ஏனெனில் அதற்கான முன் சமிக்ைஞ தென்பட ஆரம்பித்திருப்பதே இதற்கான அடிப்படைக் காரணமாகும். அதாவது கொழும்பில் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் உயர் மருத்துவ அதிகாரிகள் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்தனர்.

'எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையுடன் டெங்கு மீண்டும் தலைதூக்குவதற்கான சமிக்ைஞ தென்படுவதாக' அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதாவது எதிர்வரும் தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சியுடன் இந்த நிலைமை ஏற்படும் என்பதே அவர்களது கருத்தாக உள்ளது.

பொதுவாக டெங்கு நோய் மழைக்காலத்துடன் சேர்த்து இந்நாட்டில் தலைதூக்கக் கூடிய ஒன்றாக விளங்குகின்றது. இந்நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்நோய் பெரும்பாலும் பருவப் பெயர்ச்சி மழைக் காலநிலையுடன் சேர்த்தே தீவிரமடைவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு வருடா வருடம் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் ஆரம்பமாகும் தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி நல்ல சாதகமான காலநிலையாக விளங்கி வருகின்றது.

டெங்கானது நுளம்புகளால் காவிப் பரப்பப்படும் ஒரு வைரஸ் நோயாகும். இவ்வின நுளம்புகள் தெளிந்த நீர் தேங்கும் இடங்களில்தான் பெரும்பாலும் பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதற்கு பருவப்பெயர்ச்சி மழைக் காலநிலை நல்ல சாதகமான சூழ்நிலையாக உள்ளது. இந்த அடிப்படையில் எதிர்வரும் தென்மேல் பருவப் பெயர்ச்சி மழைக் காலநிலையுடன் சேர்த்து இந்நோய் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் இப்பருவப் பெயர்ச்சி காலநிலை இம்முறை ஆரம்பமாக முன்னரே அரசாங்க மரு-த்து-வ நிபுணர்கள் இந்த முன்னெச்சரிக்ககையை விடுத்திருக்கின்றனர்.

ஏனென்றால் அரசாங்க மருத்துவத் துறையினர் டெங்கு நொய் தொடர்பில் முன்னொரு போதுமே இல்லாத சவாலுக்கு இவ்வருடத்தின் ஆரம்பப்பகுதியில் முகம் கொடுத்தனர்.அதாவது இவ்வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் தீவிரமடையத் தொடங்கிய டெங்கு நோயைக் கட்டுப்பாட்டு நிலைக்குக் கொண்டு வருவதற்காக டொக்டர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் சகலரும் இரவுபகலாக அர்ப்பணிப்புடன் கடமையாற்றினர். அதன் பயனாக ஜுன் மாதத்தின் பிற்பகுதி முதல் இந்நோய் கட்டுப்பாட்டு நிலையை அடைந்திருக்கின்றது.

இந்நோய்க்கு இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரையும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 390 பேர் உயிரிழந்துள்னனர். அதுவும் இந்நோய்க்கு உள்ளானவர்களில் 30 வீதமானோர் மாணவர்களாவர். அவர்களில் 10 வீதத்தினர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இந்நோய்க்கு உள்ளானவர்களில் 86 வீதமானோர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இவர்களில் உயிரிழந்தவர்களில் 68 வீதமானவர்கள் பெண்களாவர். இந்த தகவல்களை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

இந்நாட்டில் அரை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்நோய் இம்முறை தான் முதற் தடவையாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்து இருக்கின்றது. இவ்வாறு இந்நோய் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

டெங்கு வைரஸ் நோயில் நான்கு கட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் தான் இற்றை வரையும் இலங்கையரைப் பாதித்து வந்தது. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக இரண்டாம் கட்ட வைரஸ் வீரியமடைந்து பெருந்தொகையினரைப் பாதித்தது. அதனால் அதனைக் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வர மருத்துவத்துறையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏனெனில் முன்னொரு போதுமே இல்லாத வகையில் இம்முறை இந்நோயின் இரண்டாம் கட்டம் தீவிரமடைந்ததே இதற்கான காரணமாகும்.

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட கடும் பிரயத்தனத்தின் பயனாக ஜுன் மாதத்தின் பிற்பகுதி முதல் இந்நோய் 65 வீதக் கட்டுப்பாட்டு நிலையை அடைந்திருக்கின்றது. அதற்காக அது மீண்டும் தீவிரமடையாது என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஏனெனில் டெங்கு வைரஸை பரப்பக் கூடிய நுளம்புகள் சுற்றுச்சூழலில் காணப்படவே செய்கின்றன. அதனால் தெளிந்த நீர் தேங்கி காணப்படும் சுற்றுச் சூழல் அதிகரிக்குமாயின் மீண்டும் இந்நோய் தீவிரமடையும். அதற்கு பருவ பெயர்ச்சி காலநிலை நல்ல சாதகமானதாக அமைய முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டுதான் அரசாங்க சுகாதாரத் துறையினர் பருவ பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாக முன்னரே இந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். டெங்கு நோயைப் பொறுத்த வரை என்னதான் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி அதனை முழுமையான கட்டுப்பாட்டு நிலையில் வைத்திருக்கவே முடியாது.

ஆகவே சுற்றுசூழலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் இந்நோயைக் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு- வரவென இம்முறைஅளித்த பங்களிப்பை தொடர்ந்தும் அளிக்க வேண்டும். அதனை ஒவ்வொருவரும் தம் பொறுப்பாகக் கருதி செயற்பட வேண்டும். அப்போது டெங்கு என்பது சவாலாகவே இருக்காது. 


There is 1 Comment

டெங்கு நோய்க்கு நிலவேம்பு கஷாயம் கைகண்ட மருந்து

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...