20: சு.கவின் திருத்த யோசனைகள் சபையில் சமர்ப்பிக்கப்படும் | தினகரன்

20: சு.கவின் திருத்த யோசனைகள் சபையில் சமர்ப்பிக்கப்படும்

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பிலான எமது ஆலோசனைகளடங்கிய திருத்தங்கள் அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. இருபதாவது திருத்தம் பாராளுமன்றில் வரும்போது திருத்தங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றில் சமர்ப்பிக்குமென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். மேல் மாகாண  முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இருபதாவது திருத்தம் தொடர்பிலான நகல் சட்டமூலத்தின் ஒரே தினத்தில் மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவது தவிர்ந்த, ஏனைய பிரிவுகள் அரசியலமைபின் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக மீறும் செயலாகும். இந்த விடயம் சம்பந்தமாக மேல் மாகாண சபை தர்க்கரீதியாகவே செயல்படுகின்றது. எனவே எமது விருப்பமும் ஆட்சேபனையும் எதிர்ப்பும் திருத்தங்களும் அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதுடன்,அப் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேல் மாகாண சபை விவாதத்தில் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் பிரபல பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தனர்.

இருபதாவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு முன்வைத்த எமது கருத்துக்களை உள்ளடக்கிய திருத்தம் தொடர்பில் மேல் மாகாண சபையில் கருத்தொற்றுமை இருந்தது. சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயல்பாட்டினாலே மேல் மாகாண சபையின் தீர்மானத்தில் பிரிவினையேற்பட்டது. இவர்கள் தங்களது மனச்சாட்சிக்கு ஏற்றதாக இவ்வாறு செயற்படவில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இவர்களிடம் மேலோங்கியது.

அரசியல்வாதிகள் பணிப்புரைகளை விடுத்தாலும், குறிப்பிட்ட விடயம் தொடர்பிலான நிலைப்பாட்டை அரச அதிகாரிகள் தெரியப்படுத்தல் வேண்டும். எமது ஜனாதிபதி சிறந்ததொரு ஜனநாயகவாதியாக விளங்குகின்றார். சர்வதேச நாடுகளின் இணக்கப்பாட்டுடன் தேசத்தை வழி நடத்திச் செல்கிறார். நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவத்தினரையும், படையினரையும் அவர் பாதுகாப்பார். இன்று எமது நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைவரினதும் பிள்ளைகள் பயங்கரவாதத்தால் மரணிப்பரென்ற பயமின்றி இருக்கின்றனர். குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத அச்சம், பயங்களின்றி மக்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 பாணந்துறை மத்திய குறூப் நிருபர் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...