மலையக பெருந்தோட்டங்களின் 30 வருட அநீதி இல்லாதொழிப்பு | தினகரன்

மலையக பெருந்தோட்டங்களின் 30 வருட அநீதி இல்லாதொழிப்பு

பெருந்தோட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு, பிரதேச சபைகள் நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின்படி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான ஆலோசனையை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இதன் மூலம் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ஆம் பிரிவு திருத்தப்படுவதுடன், வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியதாவது,

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட புறங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்யலாம். எனினும் பெருந்தோட்டங்களின் அபிவிருத்திகளுக்கு பிரதேச சபைகள் நிதியொதுக்க முடியாதவாறு 1987 ஆம் ஆண்டின் சட்டம் தடுத்தி ருந்தது.

இந்த அநீதியான சட்டத்தை மாற்றுவதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் பெருந்தோட்டங்களின் அபிவிருத்திகளுக்கு பிரதேச சபைகள் நிதியொதுக்கவுள்ளன.இதனால் முப்பது வருடமாக இருந்த இந்த அநீதியான நடைமுறை நீங்கி, தோட்டப்புற மக்களால் தெரிவு செய்யப்படும், பிரதேச சபை உறுப்பினர்களும்,பிரதேச சபைகளும் தோட்டப்புற அபிவிருத்திகளில் பங்களிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முப்பது வருட காலமாக மலையகத்தில் நிலவி வந்த இந்த பாரபட்ச கொடுமை திருத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கையை கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் குழுவினர் உட்பட, மலையக புத்திஜீவிகள் பலர் நீண்டகாலமாக இதை வலியுறுத்தி வந்தனர். இந்த முப்பது வருட அநீதி வரலாறு இப்போது, தமிழ் முற்போக்கு கூட்டணியினால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.இதற்கு முன்னரிருந்த 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்துக்கிணங்க, பெருந்தோட்ட பிரதேசத்தின் அபிவிருத்திக்கு உதவிய,உடபலாத்த பிரதேச சபை கலைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 19ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அவ்உட்பிரிவின் (xiv) என்னும் பந்தியில், 'கிராம வேலைகளை நிருமாணிப்பதிலும் மாற்றுவதிலும்' என்னும் சொற்களுக்குப் பதிலாக, 'கிராம வேலைகளை அல்லது தோட்டக் குடியிருப்புக்களை நிருமாணிப்பதிலும் மாற்றுவதிலும்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவ்வுட்பிரிவின் (xxii) என்னும் பந்தியில் 'தேர்ந்தெடுத்த கிராமங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, 'தேர்ந்தெடுத்த கிராமங்கள், தோட்டக் குடியிருப்புக்கள் என்பவற்றின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதன்மை சட்டவாக்கத்தின் 33ஆம் பிரிவு பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

'பெருந்தோட்ட பிராந்தியங்களின் விடயத்தில் பிரதேச சபைகள் விசேட தீர்மானமொன்றை சேர்த்துக் கொண்டதன் மேல் அத்துடன் இயைபான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான ஒருமைப்பாட்டுடனும்” அந்தந்த பெருந்தோட்ட பிராந்தியங்களில் வதிவோரின் சேமநலனுக்கென அவசியமான வீதிகள்” கிணறுகள் மற்றும் வேறு பொது வாழ்வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரதேச சபை நிதியத்தை பயன்படுத்தலாம்.

இப்பிரிவின் நோக்கத்திற்காக 'பெருந்தோட்டப் பிராந்தியங்கள்” என்பது தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் எண்ணெய்கொள் மரம் ஆகியன பயிர்ச்செய்யப்படும் தோட்டங்களில் வதிவுள்ள தொழிலாளர்கள் வாழும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ்வரும் இடப்பரப்புக்கள் எனப் பொருள்படும்'. இதுவரை காலமும் பிரதேச சபைகள் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்றிருந்த மலையக கறுப்பு வரலாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் பிரதேச சபைகள் நிதியை கொண்டு தோட்ட மக்களுக்கும் சேவையாற்ற முடியும் என்ற மலையக சரித்திர வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளதென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தஅனைத்து மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இது ஒரு மகத்தான வரலாற்று வெற்றியாகும். இதன்மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் மென்மேலும் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த முடியும் எனவும், இதற்கு குரல் கொடுத்த சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குனர் பெ. முத்துலிங்கம் அவர்களுக்கு எமது கூட்டணி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...