Friday, March 29, 2024
Home » முதல் வெற்றியை எதிர்பார்த்து இலங்கை இன்று நெதர்லாந்து அணியுடன் களத்தில்

முதல் வெற்றியை எதிர்பார்த்து இலங்கை இன்று நெதர்லாந்து அணியுடன் களத்தில்

by sachintha
October 21, 2023 9:40 am 0 comment

உலகக் கிண்ணத்தில் தனது முதல் வெற்றியை எதிர்பார்த்து இலங்கை அணி இன்று (21) நெதர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

லக்னோவில் நடைபெறும் இன்றைய ஆட்டம் பகல் போட்டியாக காலை 10.30 மணிக்கே ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கும் பலவீனமான அணியான நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றியை ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கும்.

எனினும் கடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. லோகன் வான் பீக், ரோலொப் வாக் டெர் மெர்வ் மற்றும் அர்யன் டுட் போன்ற வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப வரிசை தடுமாற்றம் கண்டபோதும் கணிசமான ஓட்டங்களை பெறும் பட்சத்தில் எதிரணிக்கு சவால் கொடுக்கும் திறன் அந்த அணிக்கு உள்ளது.

உலகக் கிண்ண புள்ளிப் பட்டியலில் இன்னும் புள்ளிகளை பெறாத ஒரே அணியாக நீடிக்கு இலங்கை அணி அந்த நிலையை மாற்றுவதற்கான வாய்ப்பாக இன்றைய போட்டியை எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். அணியின் ஆரம்ப வரிசை துடுப்பாட்டம் வலுவாக இருந்தபோதும் மத்திய வரிசை தடுமாற்றம் கண்டுள்ளது. அனைத்தையும் விட அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.

இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்க மாத்திரம் சிறப்பாக பந்துவீசுகின்றபோதும் வேறு எந்த வீரரும் கைகொடுப்பதாக இல்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் ஆதிக்கம் செலுத்த தடுமாறி வருகிறார்.

மதீஷ பதிரணவுக்கு பதில் அழைக்கப்பட்ட லஹிரு குமாரவும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களுக்கு 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். எனவே உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு தனது பந்துவீச்சை சரிசெய்ய இலங்கை அணி இன்று முயற்சிக்கும்.

இன்றைய போட்டி நடைபெறும் லக்னோ மைதானத்திலேயே இலங்கை அணி அவுஸ்திரேலியாவையும் எதிர்கொண்டிருந்தது. இந்த மைதானம் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டுக்கும் உதவுவதாக உள்ளது. மைதானத்தில் சராசரி ஓட்டங்கள் 226 ஆக இருக்கும் நிலையில் ஆட்டம் எந்த திசைக்கும் மாற வாய்ப்பு கடைசிவரை உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT