ரோகிங்கிய மக்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்கிறது மியன்மார் | தினகரன்

ரோகிங்கிய மக்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்கிறது மியன்மார்

ரோகிங்கிய மக்கள் மீது மியன்மார் அரசு வன்முறைகளை பிரயோகிப்பதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.

மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். பங்களாதேஷில் இருந்து குடிபெயர்ந்து மியன்மாரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக பங்களாதேஷிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், ரோகிங்கியா முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு சென்று பார்வையிட்ட பிறகு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:- ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் அரசு பல கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது. புத்தமதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியன்மார் நாடு, அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளவர்கள், மீண்டும் மியன்மார் திரும்புவதற்கான உரிய நடவடிக்கையை அந்த நாடு எடுக்க வேண்டும்.

மேலும், அண்டை நாடுகளுடன் நாங்கள்(பங்களாதேஷ்) நட்புறவையே விரும்புகிறோம். 

 


Add new comment

Or log in with...