பாடசாலை மாணவர்களுக்கிடையிலான 45வது ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் இலங்கை தோல்வி | தினகரன்

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான 45வது ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் இலங்கை தோல்வி

ஈரான் நாட்டில் நடைபெற்று வரும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான 45 வது ஆசிய கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் சீனா மற்றும் மலேசியா நாட்டு அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக அங்கு சென்றுள்ள புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியரும், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் செயலாளரும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளன பொருளாருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் அங்கிருந்து இந்த தகவலை

தெரிவித்துள்ளார்.

18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடர் இம்மாதம் 16 ம் திகதி வரைக்கும் ஈரான் நாட்டின் சீராஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணிக்கான முதலாவது போட்டியில் இலங்கை அணியானது சீன அணியினை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சீன அணியானது 06 : 03 கோல்களினால் வெற்றியடைந்தது.

இது வரை காலமும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட எந்த வயதெல்லை கொண்ட கால்பந்தாட்ட அணியும் சீன நாட்டு அணிக்கு எந்தவித கோல்களையும் புகுத்தியதில்லை. மாறாக இந்த போட்டியில் இலங்கை அணி சீன நாட்டு அணிக்கு 03 கோல்களை புகுத்தியமை வரலாற்று சாதனையாக பதிந்துள்ளது.

இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 02 கோல்களை பெற்றிந்தன. இரண்டாவது பாதியில், போட்டியின் 60 வது நிமிடத்தில் 03 : 02 விகிதம் கோல் காணப்பட்டாலும் 70 வது நிமிடத்தில் இலங்கை அணி வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதால் இந்த பின்னடைவை சந்திக்க நேர்ந்ததாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் தெரிவித்தார்.

இலங்கை அணிக்காக கொழும்பு சென் பீட்டர்ஸ் கல்லூரி மாணவன் சபீர், கொழும்பு ஹமீதியா கல்லூரி மாணவன் அம்மான், கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவன் ஆகிப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை புகுத்தினர்.

இலங்கை அணி தனக்கான இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா அணியினை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் மலேசியா அணி 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் கொழும்பு சென் பீட்டர்ஸ் கல்லூரி அணி வீரர் சபீர் இலங்கை அணிக்கான கோலினை புகுத்தினார்.

மலேசியாவுடனான 80 நிமிடங்களை கொண்ட போட்டியில் 70 நிமிடங்கள் வரையிலும் கோல் 01 : 01 கவே காணப்பட்டது. எனினும் 75 வது நிமிடத்தில் மலேசியா அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதையினை அவ் அணி கோலாக்கியதால் மலேசியா அணி 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது.

கடந்த வருடம் கொரியாவில் நடைபெற்ற போட்டி தொடரில் இலங்கை அணிக்கும் மலேசியா அணிக்குமிடையிலான போட்டியில் மலேசிய அணி இலங்கை அணிக்கு கோல் போட சந்தர்ப்பம் வழங்காமல் மலேசிய அணி 04 கோல்களை புகுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இரு போட்டிகளிலுமே இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அந்த சந்தர்ப்பம் கைநழுவி போயுள்ளதாக தெரிவித்த இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத், எனினும் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இவ்வருடம் இலங்கை அணி அபார முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புத்தளம் தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...