தேர்தலுக்கு தயாராக அழைப்பு | தினகரன்

தேர்தலுக்கு தயாராக அழைப்பு

தமிழக அரசியலில் களமிறங்கும் மற்றுமொரு நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு விரைவில் கிடைக்கலாமென்று செய்திகள் வெளிவருகின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவருடைய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தற்போது தகவல் பரவி வருகிறது.

இருந்தாலும் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை டுவிட்டரில் எப்போதே ஆரம்பித்து விட்டேன் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அவர் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கூட சாடைமாடையாக அடிக்கடி அரசியல் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்.

கடந்த வாரம் கூட "விரைவில் உங்கள் விரலுக்கு வேலை வரலாம், அப்போது தவறாமல் உங்கள் விரல்களை வாக்களிப்பதற்குப் பயன்படுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டார் கமல். சமீபத்தில் சுப்பிரமணியசுவாமி கூட "கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போகிறார்" என்று சொல்லியிருந்தார்.

ஆனால், கமல்ஹாசன் தற்போது இருக்கும் எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணத்தில் இல்லை, தனிக் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில்தான் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களைச் சந்தித்த போது, எதிர்காலத்தில் அரசியலில் நுழையப் போவதாக ஆருடமாகச் சொல்லியிருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் ரஜினிகாந்திற்கு முன்பாகவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, கேரளாவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் விழாவுக்கு தான் அழைக்கப்படவில்லை என்று கமல் விளக்கமளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் விழாவுக்கு கமல் அழைக்கப்பட்டு இருப்பதாகவும், அக்கட்சியில் அவர் இணையவிருப்பதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி வந்தன.

இச்செய்தி குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கோழிக்கோடு நிகழ்ச்சியில் கேரள முதல்வருடன் பங்கேற்க எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. ஒக்டோபர் மாதம் வரை எல்லா சனிக்கிழமைகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இருப்பினும், கேரள நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Add new comment

Or log in with...