Home » காசாவுக்கான உதவிகள் செல்வதில் இழுபறி: மனிதாபிமான அவலம்

காசாவுக்கான உதவிகள் செல்வதில் இழுபறி: மனிதாபிமான அவலம்

- “தரைவழி தாக்குதல் உத்தரவு விரைவில்”

by sachintha
October 21, 2023 6:40 am 0 comment

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து இடைவிடாது வான் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு உணவு, நீர் அவசியமாகி இருக்கும் சூழலில் காசாவுக்கு அருகில் பெரும் அளவான உதவிப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத தாக்குதலை எதிர்கொண்டிருக்கும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 1400 பேர் கொல்லப்பட்டு மேலும் 200க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிப்பதற்கு இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது.

இதற்கு பதிலடியாக இரண்டு வாரங்களுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் வான் தாக்குதல்கள் நேற்றைய தினத்திலும் தொடர்ந்து. இதில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. இதில் கால் பங்கினர் சிறுவர்களாவர். 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. எகிப்தில் இருக்கும் உதவி வாகனங்கள் வர இன்னும் பச்சை கொடி காண்பிக்கப்படாத நிலையில் காசாவின் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

காசாவுக்கு அருகில் இருக்கும் எகிப்தின் எல் அரிஷ் விமானநிலையத்தில் மருந்துகள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் மற்றும் போர்வைகள் என்ற உதவிகள் இறக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு தொடக்கம் மூன்று உதவி விமானங்கள் வருவதாக எகிப்து செம்பிறை சங்கத் தலைவர் அஹமது அலி தெரிவித்துள்ளார்.

காசாவுக்குள் நிலைமை “பேரழிவுக்கு அப்பாலுள்ளது” என்று வளைகுடாவுக்கான யுனிசெப் பேச்சாளர் சாரா அல்சவகாரி தெரிவித்துள்ளார். “காலம் கடந்து செல்வதோடு சிறுவர்கள் இடையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத காசாவுக்கான ஒரே வாயிலான எகிப்துடனான ரபா எல்லைக் கடவை நேற்று (20) திறப்பதாக இருந்தபோதும் குண்டுத் தாக்குதல்களால் சேதமடைந்திருக்கும் வீதிகளை சரி செய்ய காலம் தேவைப்படுவதாக எகிப்து குறிப்பிட்டுள்ளது.

காசாவுக்கு 20 உதவி லொறி வண்டிகள் செல்ல அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசிக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. எனினும் இந்த எண்ணிக்கை கடல் அளவு தேவைக்கு ஊசி அளவில் வழங்குவதற்கு ஒப்பானது என்று உலக சுகாதார அமைப்பின் அவசர பிரிவுக்கான பணிப்பாளர் மைக்கல் ரியா சாடியுள்ளார். “அது 2000 லொறி வண்டிகளாக இருந்திருக்க வேண்டும்” என்று அவர் ஜெனிவாவில் தெரிவித்தார்.

இஸ்ரேலில் போர் குரல்

ஹமாஸின் ஒக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல் இஸ்ரேலின் 75 ஆண்டு வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான தாக்குதலாக இருக்கும் சூழலில் இஸ்ரேல் காசா மீது தரைவழி தாக்குதல் ஒன்றுக்கு மும்முரமாக தயாராகி வருகிறது. அதன் தலைவர்களின் குரலும் தாக்குதலை தீவிரப்படுத்துவதாகவே உள்ளது.

இராணுவ உடையுடன் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு காசாவுக்கு அருகில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை சந்தித்தார். “சிங்கம் போன்று சண்டை பிடிக்கவும், முழு பலத்துடன் வெற்றி பெறவும்” அவர் படைகளை கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லனும் முன்னரங்கு பகுதிக்கு விஜயம் செய்தார். அங்கு தரைவழி தாக்குதல் ஒன்றுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகளிடம், “புதிய உத்தரவு விரைவில் வரும்” என்று தெரிவித்தார்.

“இப்போது உங்களுக்கு காசா தொலைவில் தெரியும். விரைவில் நீங்கள் உள்ளே பார்ப்பீர்கள். உத்தரவு விரைவில் வரும்” என்று ஒரு கடுமையான போருக்கான எதிர்கூறலை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹமாஸுக்கு எதிரான போருக்காக அமெரிக்கா மேலும் பல பில்லியன் டொலர்களை செலவிட அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (19) பின்னேரம் வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய பைடன், ஹமாஸ் இஸ்ரேலின் ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறது என்றார். இதன்போது ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

“ஹமாஸ் மற்றும் புடினின் தீவிரவாதமும், கொடுங்கோன்மையும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை ஆனால் இரண்டுக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும்.

ஆகையால் இந்தச் சூழலில் இத்தகைய போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பெருமளவில் நிதியுதவி அளிக்க வேண்டும். அதற்காக நான் வலியுறுத்துவேன். இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு என்பதைப் புரியவைப்பேன்” என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கான இராணுவ உதவியாக 10 பில்லியன் டொலர்களை அனுமதிக்க வேண்டும் என ஜோ பைடன் கொங்கிரஸிடம் கேட்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காசாவுக்கு அப்பால் பதற்றம்

இதேவேளை, காசாவில் உள்ள மருத்துவமனை மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டது மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குலுக்கான திட்டங்கள் காரணமாக அரபுலகம் பெரும் பதற்றத்தை சந்தித்திருப்பதோடு இந்தப் போர் காசாவை தாண்டி தீவிரம் அடையும் அச்சம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹிஸ்புல்லா மனாரா கிராமத்தில் இஸ்ரேலிய நிலைகள் மீது ரொக்கெட் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது. பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் மற்றும் ஐ.நா அமைதிகாக்கும் படையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய படை மற்றும் ஹிஸ்புல்ல பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் இராணுவம் தெரிவித்தது.

இந்த பரஸ்பர தாக்குதலுக்கு இடையே ஏழு ஊடகவியலாளர்கள் சிக்கிய நிலையில் தம்மை மீட்கும்படி அவர்கள் ஐ.நா அமைதிகாக்கும் படையை கேட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தெற்கு லெபனானில் கடந்த வாரம் ரோட்டர்ஸ் செய்தியாளர் இஸ்ஸா அப்தல்லா கொல்லப்பட்டதோடு மற்ற ஊடகவியலாளர்கள் காயமடைந்தனர். லெபனான் எல்லைக்கு அருகில் இருக்கும் வடக்கு நகரான கிரியா ஷமோனாவின் குடியிருப்பாளர்களை இஸ்ரேல் நேற்று அப்புறப்படுத்தியது. இந்த சிறு நகரில் 20,000 பேர் வசித்து வந்தனர்.

மேற்குக் கரையிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இது இந்த போரில் இஸ்ரேல் – காசா மற்றும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லாவுக்கு அப்பால் மூன்றாவது முனை போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குக் கரை நகரான துல்கர்மாவில் உள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமில் இஸ்ரேலிய படைகளுடனான மோதலில் 13 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. தவிர, இஸ்ரேலிய படை அங்கு நடத்தும் சுற்றிவளைப்புகளில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT