டெங்கு நுளம்புகள் வீரியமடைவதால் உருவாகும் ஆபத்து! | தினகரன்

டெங்கு நுளம்புகள் வீரியமடைவதால் உருவாகும் ஆபத்து!

டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாக இருக்கும் நுளம்புகள் முன்னரை விட தற்போது வீரியமுள்ளதாக மாறி இருப்பதே டெங்குக் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. முன்னரெல்லாம் டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்த போதிலும் மரணமடைவோரின் எண்ணிக்கை தற்போது அதிகமாகும்.

டெங்கு நுளம்புகளின் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதும், நுளம்புகள் முன்பை விட வலிமையானவையாக மாறியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் டெங்கு நுளம்புகளை ஒழிக்கப்பட வேண்டிய நுளம்புகளின் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது. இந்த நுளம்புகளின் பாதிப்பு சுமார் 130 நாடுகளில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொங்கிரீட் தொட்டிகள், தேங்காய்ச் சிரட்டைகள், பழைய டயர்களில் மிகச் சிறிய அளவில் நல்ல நீர் தேங்கியிருந்தாலும் அதில் சுமார் 200 முட்டைகள் வரை இட்டு இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் திறன் படைத்தவை டெங்கு நுளம்புகள்.இவை 16 முதல் 30 பாகை செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் வளரக் கூடியதாகும். அதேபோ​ை 60 முதல் 80 பாகை ஈரப்பதத்தில் இருக்கக் கூடியதாகும். முட்டையிட்டு கூட்டுப் புழுவாக மாறிய 15 வது நாளில் முழு வளர்ச்சி அடைந்த ஏடிஸ் நுளம்பு உருவாகும்.

டெங்கு நுளம்பு பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். பெண் ஏடிஸ் நுளம்புகள் முட்டையிடப் புரதம் தேவை என்பதாலும், அந்தப் புரதம் மனித இரத்தத்தில்கிடைப்பதாலுமே அவை மனிதர்களைத் தேடிவந்து கடிக்கின்றன.

டெங்கு ஏற்பட்டவருக்கு கடுமையான காய்ச்சல், உள்கண் வலி, உடல் வலி, வாந்தி, மலம் கறுப்பாக வெளியேறுவது உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்படும். உடலில் உள்ள இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் கீழ் குறைவதும் டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.

பாதிக்கப்பட்ட ஏழாவது நாளில்தான் பரிசோதனை மூலமாக டெங்கு பாதிப்பை முழுமையாக உறுதி செய்ய முடியும். டெங்கு பாதித்தவரைக் கடிக்கும் நுளம்புகள் அந்த நோயை மற்றவர்களுக்கு எளிதாகப் பரப்புகின்றன.

இவை டெங்கு நுளம்புகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட தகவல்கள் என்றாலும், அதிர்ச்சியூட்டும் வகையில் டெங்கு நுளம்புகள் மிகவும் வலிமையான நிலையை அடைந்திருப்பதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

பொதுவாக டெங்கு நுளம்புகளின் வாழ்க்கை என்பது 21 நாட்கள் மட்டுமே. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றம் காரணமாக அவை 40 நாட்கள் வரையிலும் உயிர் வாழ்வது தெரியவந்துள்ளது.

வீடுகளிலும், பிற பகுதிகளிலும் சேகரிக்கப்படும் தெளிவான நீரில் மட்டுமே முட்டையிட்டு வந்த ஏடிஸ் நுளம்புகள் தற்போது கிணறுகளிலும் முட்டையிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இவற்றால் பறக்க முடியாது என்பதால் மலைப் பிரதேசங்களில் டெங்கு பாதிப்பு இல்லாமல் இருந்தது; தற்போது மலைப் பிரதேசங்களிலும் ஏடிஸ் நுளம்புகளைப் பார்க்க முடிகிறது.

ஏடிஸ் நுளம்புகளின் வாழ்வியல் மாற்றத்துக்கு ஏற்ப நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. வரட்சிக் காலத்தில் கூட இந்நுளம்புகளின் முட்டைகள் தாக்குப் பிடிக்கக் கூடியவையாக மாறியுள்ளன.

வைரஸின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியாமல் சிகிச்சை அளிக்கப்படுவதாலேயே பல நோயாளிகள் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.எனவே நுளம்புகளின் வாழ்வியல் மாற்றம் குறித்து உரிய பூச்சியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் வைரஸின் தன்மைக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

தண்ணீரை முறையாக மூடி வைப்பதும், முடிந்தவரை நுளம்புகள் கடிக்காதவாறு தற்காத்துக் கொள்வதும்தான் டெங்குவிலிருந்து நம்மைக் காக்கும்.

ஒரு நுளம்பு முட்டையிட்டு கூட்டுப் புழுவாக மாறி நுளம்பாக வெளியேற 15 நாள்கள் தேவைப்படும். நான்கு கட்ட வளர்ச்சியில் இறுதிக்கட்டத்தில் கூட நுளம்பு உற்பத்தியாவதை ஒழித்தாலே டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வீடுகளில் உள்ள பாத்திரங்கள், தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீரை முறையாக மூடி வைக்க வேண்டும். முடிந்தவரை தங்களை நுளம்புகள் கடிக்காதவாறு தற்காத்துக் கொள்ள வேண்டும்.

கார்த்திக் பிரபு


Add new comment

Or log in with...