லலித் ஜெயசிங்க கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை | தினகரன்

லலித் ஜெயசிங்க கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை

புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கின் பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், சந்தேக நபரான வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், மாதத்தில் முதல் திங்கட்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று (13) இவர் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இவ் வழக்கு நேற்று (13) யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கு வழக்கின் வாதிகள் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நிசாந்தன் தமது ஆட்சேபனையை தெரிவித்தார்

எனினும் ஆட்சேபனைக்கான காரணங்களில் நீதிமன்றம் திருப்தியடையாததால், சந்தேகநபரான வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மூன்று லட்சம் ரூபா ரொக்கப்பணம் மற்றும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணைகளுடன் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...