பெருந்தோட்ட மக்கள் மீதான பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி | தினகரன்

பெருந்தோட்ட மக்கள் மீதான பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி

‍இலங்கை நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இந்நாட்டின் சில பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை விடவும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் பின்தங்கியே காணப்படுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கையாளப்படும் ஒழுங்குகளும் அதிக செல்வாக்கு செலுத்தவே செய்கின்றன.

அதிலும் மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை எடுத்துப் பார்த்தால் அவை நாட்டின் ஏனைய பிரதேசங்களை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. இது மறைக்க முடியாத உண்மையாகும். இதற்கு பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டமை ஒரு உதாரணம்.

அதாவது இந்த நாடு சுதந்திரமடைந்து ஒரு வருட காலம் செல்வதற்குள், அதாவது 1949 இல் இந்நாட்டின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அரசாங்க காலத்தில் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிப்பு இடம்பெற்றது. இதன் ஊடாக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் நாடற்ற பிரஜைகளாக்கப்பட்டனர். அத்தோடு அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் யாவும் ஏறெடுத்துப் பார்க்கப்படாத நிலைக்கு தள்ளப்பட்டன. குறிப்பாக அப்பிரதேசங்களில் எவ்வித உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுமில்லை. அப்பிரதேசங்களுக்கு வளப்பங்கீடும் இடம்பெறவுமில்லை.

பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிலைமை ஒருபுறம் நீடித்துக் கொண்டிருக்கையில் மறுபுறம் மலையக பெருந்தோட்டத் தலைவர்கள் பிரஜாவுரிமை கோரிக்கையை முன்வைத்து சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் பயனாக சுமார் அரை நூற்றாண்டு காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையோடு பிரஜா உரிமையும் மீண்டும் வழங்கப்படலானது.

பெருந்தோட்ட மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை மலையகப் பெருந்தோட்டப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பின்தங்க முக்கிய காரணமாக அமைந்தது. அத்தோடு அதற்கு துணைபுரியக் கூடிய வகையிலான துணை ஏற்பாடுகளும் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான ஏற்பாடுகளில் ஒன்றுதான் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33வது பிரிவு ஆகும். இப்பிரிவின்படி, பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு பிரதேச சபைகள் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியாதென தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஏற்பாடு பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் பிரதேச சபைகள் ஊடாக உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. இச்சட்ட ஏற்பாட்டின் பாரதூரத்தையும் பாதிப்பையும் பெருந்தோட்ட மக்களின் புத்திஜீவிகளும், குறிப்பாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் நீண்ட காலமாக எடுத்துக் கூறி வந்தனர். இருந்தும் இவ்விடயம் குறித்து உடனுக்குடன் கவனம் செலுத்தப்படவில்லை.

இருந்த போதிலும் தற்போதைய இணக்கப்பாட்டு அரசாங்கம் மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த பாரபட்ச சட்ட ஏற்பாடு குறித்து இப்போது விஷேட கவனம் செலுத்தி இருக்கிறது.

இதற்கு தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கிய பங்காற்றியுள்ளது.

இதன் பயனாக பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பிரதேச சபைகள் நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதை தடுக்கும் வகையில் அமைந்துள்ள 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33 ஆம் பிரிவை திருத்துவதற்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் இத்திருத்தம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு சட்டமாக்கப்படும். இந்நடவடிக்கையானது, இந்நாட்டு பெருந்தோட்ட மக்களின் வரலாற்றில் முப்பது வருடங்கள் நீடித்து வந்த கரும்புள்ளியைத் துடைத்தெறியும் செயலுக்கு ஒப்பானது.

இதன் ஊடாக, பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு கடந்த 30 வருடங்களாக காட்டப்பட்டு வந்த பாரபட்சமும், அநீதியும் முடிவுக்கு வருகின்றது. அத்தோடு பெருந்தோட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பிரதேச சபைகள் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றது.

இதன் பயனாக பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாக மேம்பாடு அடையும் என்பதில் ஐயமில்லை.

அதேநேரம் 1949 இல் பிரஜாவுரிமை பரிப்பின் ஊடாக தோற்றம் பெற்று எஞ்சியுள்ள பாதிப்புகளும் இத்திருத்தத்தின் ஊடாக முற்றாக நீங்கிவிடும் என்பதே பெருந்தோட்ட மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

பெரு-ந்தோட்ட மக்களும் இந்நாட்டுப் பிரஜைகளே.அவர்கள் நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போன்று சமத்துவமாக மதித்து நடாத்தப்பட வேண்டும். அதுவே அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். முன்னேற்றமடைந்த மனித நாகரிகத்தின் உண்மையான வெளிப்பாடும் அவ்வாறு தான் இருக்கும்.


Add new comment

Or log in with...