தீர்ந்தது தலைவலி | தினகரன்

தீர்ந்தது தலைவலி

அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுபடியாகாது என்றும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மிகப் பரபரப்பான சூழ்நிலையில், பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் ேநற்றுக் காலை திட்டமிட்டபடி நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

அவற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் வி.கே. சசிகலாவின் பொதுச் செயலர் நியமனம் செல்லாது என்ற அறிவிப்பும், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, பொதுச் செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொதுச் செயலருக்கான அதிகாரங்கள் கட்சியின் ஒருங்கிணைப்புத் தலைவர் பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஒருங்கிணைப்புத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் வழிகாட்டும் குழு அமைக்கப்படும். அதிமுக வழிகாட்டுதல் குழுவில் 15 பேர் இடம்பெறுவார்கள். வழிகாட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருவரை கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கட்சி விதிகளில் மாற்றம் செய்ய வழிகாட்டும் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. மேலும், கட்சி விதி எண் 19 இல் திருத்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலராக ஜெயலலிதாவே இருப்பார். கட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எனவே, இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் பொறுப்பு என்பது கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பொதுச் செயலாளர் பதவி கிடையாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் செயல்பாடுவார்கள். அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களின் முழு விபரம்:

1. இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எதிர்வரும் தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்துடன் ஓரணியில் போட்டியிட முடிவு.

2. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அவரவர் பதவிகளில் நீடிப்பார்கள்.

3. எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வரும் அரசுக்கு பாராட்டு.

4. ஜெயலலிதாவுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.

5. வர்தா புயல் பாதிப்பின் போது மீட்புப் பணிகளையும், வரட்சியின்போது நிவாரணப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

6 அதிமுக அரசை காப்பாற்றி சிறப்பாக நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டு.

7. ஜெயலலிதாவுக்குப் பிறகு அவரது இடத்தை யாரும் நிரப்ப முடியாது. எனவே அவரே நிரந்தர பொதுச் செயலர். எனவே இனி அதிமுகவில் பொதுச் செயலர் பொறுப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மூலம் வி.கே. சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட நியமனம் ரத்து செய்யப்படுகிறது.

8. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட துணைப் பொதுச் செயலர் பதவியும் நீக்கப்படுகிறது. அவரது நியமனங்கள் ரத்து

9. கட்சியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையில் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது.

10. தொண்டர்களின் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி ஏற்படுத்துவோம்.

11. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

12. கட்சி விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்படும்.

மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

"இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது" என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

"பிரிந்த இயக்கம் ஒன்றுசேர்ந்த வரலாறு இல்லை. ஆனால், நாம் சேர்ந்திருக்கிறோம். தமிழகத்தில் ஆண்ட கட்சியே தொடர்ந்து மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. இனி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும்" என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

தினகரன் ஆவேசம்:

துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடத்தும் இந்த ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது என்று 'அதிமுக அம்மா' அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் நேற்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

"பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலருக்கே உள்ளது. பொதுச் செயலர் இல்லை என்றால் துணைப் பொதுச் செயலரான நான் தான் கூட்ட வேண்டும்.

பழனிசாமியின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தன்னை முதல்வர் பதவிக்குக் கொண்டு வந்த சசிகலாவுக்கே துரோகம் செய்கிறார்களே. அவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு நன்மை செய்வார்கள்? இதைத்தான் என்னை சந்திக்கும் மக்களும், கழகத்தினரும் கேட்கிறார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியாது என இன்று கூறுபவர்கள்தான், அன்று சசிகலாவை பொதுச் செயலராக வேண்டும் என்று கோரினர்.

அதையேதான் நாங்களும் கூறுகிறோம், இன்று இவர்களை ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் பதவியில் வைத்து எங்களால் பார்க்க முடியாது என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம் மட்டுமல்ல அதிமுகவின் 90 சதவீத தொண்டர்களின் நிலையும். துரோகமும் துரோகமும் இணைந்து நடத்தும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன். அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா? செல்லாதா என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்" என்று கூறினார் தினகரன்.

"என்னால் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என நான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூறுகிறார்கள். தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. மீண்டும் தேர்தல் வந்தால் அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே" என்றும் தினகரன் தெரிவித்தார்."ஆளுநர் இன்னும் 2 நாட்களில் முடிவெடுப்பார் என்று நம்புகிறேன். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்" என்றும் தினகரன் பேசினார்.

“ பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தேன். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கட்சியின் பொதுக்குழுவை பொதுச் செயலாளர்தான் கூட்ட முடியும். அவர் பணியாற்ற முடியாததால், துணை பொதுச் செயலாளர் நான்தான் கூட்ட முடியும். அவர்கள் கூட்டி இருப்பது பொதுக்குழுவே அல்ல.

அவர்கள் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் சொல்லி விட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் தீர்மானம் செல்லும்" என்றார் தினகரன்.

 

பன்னீருக்கு அதிக அதிகாரம்:

ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போதைய அதிமுகவில் அதிக அதிகாரம் படைத்தவர் என்ற பெருமையை பெறுகிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.

உயிரோடு இருந்தவரை ஜெயலலிதாவை அதிமுக நிர்வாகிகள், நிரந்தர பொதுச்செயலாளர் என்றே அழைத்து வந்தனர். அந்த பதவி நீக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பதவி பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்குரிய அதிகாரங்கள் இந்த பதவிக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் பன்னீர்செல்வம் அமர வைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், பன்னீர்செல்வம் தரப்பை நம்ப எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தயாராக இல்லை. எனவே இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி அமர வைக்கப்பட்டுள்ளார். கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பதை இவ்விருவரும் இணைந்தே செய்ய முடியும். எனவே அதிகாரத்தில் எடப்பாடியும் பங்கு பெற்றுள்ளார்.ஆட்சி அதிகாரத்தில் துணை முதல்வராக பன்னீர் செயல்படுவதால், கட்சி அதிகாரத்தில் துணை பொறுப்பை எடப்பாடி பெற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம், இணைவதற்கு முன்பாக பன்னீர்செல்வம் கேட்ட கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேறி விட்டன.

இதுஇவ்விதமிருக்க தினகரன் ஆதரவு 20 எம்.எல்.ஏக்கள் நாளை கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுவையில் இருந்து கர்நாடகாவின் குடகுமலைக்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளனர் தினகரன் ஆதரவு 20 எம்.எல்.ஏ.க்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர சபாநாயகர் தனபால் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் குடகு மலையில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை சென்னை வருகை தர உள்ளனர். அப்போது சசிகலா, தினகரன் நீக்கத்துக்கு பதிலடி தரும் வகையில் அதிரடி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 20 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்து எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடி தருவது என முடிவு செய்துள்ளனராம். அப்படியான ஒரு நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டாக வேண்டும் என்பது தினகரன் அணியின் வியூகம்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்போ, 20 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையில் 50% என்கிற அடிப்படையில் எளிதாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என கூறி வருகிறது. இதனால் ராஜினாமா செய்வது பற்றி தீவிரமாக ஆலோசிக்கிறது தினகரன் தரப்பு.

இதனிடையே திமுக எம்.எல்.ஏக்களையும் கூண்டோடு ராஜினாமா செய்ய வைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம். என்னதான் திமுக எதிரி என தினகரன் கூறினாலும் அக்கட்சியுடனான திரைமறைவு பேச்சுகள் சுமுகமாகவே நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களின் ராஜினாமா மிரட்டலைத் தொடர்ந்து அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கம் செய்யும் முடிவை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படவில்லை.

பொதுச்செயலர் நியமனத்தை ரத்து செய்த பொதுக்குழு ஏன் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, சசிகலாவின் பொதுச்செயலர் நியமனத்தை ரத்து செய்வதற்கே அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இருந்தபோதும் முதல்வர் எடப்பாடி தரப்பு அவர்களை சமாதானப்படுத்தி வைத்திருந்தது. ஒருகட்டத்தில் சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தது. அப்படி நீக்கினால் நாங்களும் எங்கள் ஆதரவு எம்.எ.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என அமைச்சர்கள் மிரட்டி இருக்கின்றனர்.

இதனால் கடந்த ஞாயிறு வரை சசிகலா தொடர்பாக எப்படி தீர்மானம் கொண்டுவருவது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனையடுத்து முதல் கட்டமாக பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்குவோம்.. அமைச்சர்களை சமாதானப்படுத்திவிட்டு சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவோம் என ஊசலாட்டமாக முடிவு செய்து நேற்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.

தற்போதைய நிலையில் ஓபிஎஸ்-, ஈபிஎஸ்-க்கு கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் நீக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அடுத்த கட்டமாக சசிகலாவை அதிமுகவில் இருந்தும் நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

எம்.ஜி.ஆரின் வாக்குறுதி:

அறிஞர் அண்ணா மட்டுமே என் தலைவர். அதிமுகவில் தலைவர் பதவி கிடையாது என்றார் எம்ஜிஆர். அதுபோல் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் என்று அதிமுகவின் இரு அணிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

அண்ணாவின் திராவிட கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் எம்ஜிஆர். இதனால் திமுகவில் எம்ஜிஆர் இணைந்தார். இதனிடையே அண்ணா 1969-இல் மறைந்தார். அதன் பின்னர் கருணாநிதியின் கை திமுகவில் ஓங்கியது. இந்த நேரத்தில் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. இதனால் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுக என்ற கட்சியை 1972 -இல் தொடங்கினார்.

அப்போது தனக்கு தலைவர் என்றால் அது அண்ணாதான். அதிமுகவின் தலைவர் பதவியை தான் ஏற்க விரும்பவில்லை என்று கூறிய எம்ஜிஆர் கடைசி வரை அதிமுகவில் தலைவர் பதவியை உருவாக்கவில்லை. மாறாக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி அதில் அமர்ந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கடும் போராட்டத்துக்கு பின்னர் ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றினார். அதன்பின்னர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக வலம் வந்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூடியது.

இதில் பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. இதனால் இனி பொதுச் செயலாளர் பதவியே இல்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணாவுக்காக தலைவர் பதவியே இல்லை என்று எம்ஜிஆர் கூறியது போல், ஜெயலலிதாவுக்காக பொதுச் செயலாளர் பதவியே இனி இல்லை என்று அதிமுகவினர் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

 


Add new comment

Or log in with...