Wednesday, March 27, 2024
Home » இலவசக் கல்வியின் எதிர்காலம் மீது தோன்றும் அவநம்பிக்கை!

இலவசக் கல்வியின் எதிர்காலம் மீது தோன்றும் அவநம்பிக்கை!

by sachintha
October 21, 2023 6:00 am 0 comment

இலங்கையில் புதிதுபுதிதாக பல்கலைக்கழகங்கள் முளைவிடுகின்றன. அவை அத்தனையும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றுடன் இணைக்கப்பட்டதாக இப்பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பெருநகரப்பகுதிகளிலேயே இப்பல்கலைக்கழகங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.

தனியார் பல்கலைக்கழகங்களில் பெருமளவான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவர்களில் அதிகமானவர்கள் செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களாவர். பணவசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிலும் சிறிய தொகையினர் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்று வருகின்றனர். நடுத்தர வசதியுள்ள பெற்றோர் தங்கள் வசமுள்ள காணிகளை விற்றாவது தமது பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்த்து விடுகின்றனர்.

தனியார் பல்கலைக்கழகங்களில் கற்று பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களுக்கு அரசாங்க நிறுவனங்களில் தொழில்வாய்ப்புக் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இருப்பதில்லை. ஆனால் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற சில நிறுவனங்களில் அவர்களுக்கு தொழில்வாய்ப்புக் கிடைப்பதற்கு இடமுண்டு. அதுமாத்திரமன்றி, தனியார் நிறுவனங்களில் தொழில் பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது.

ஆனால் இங்கே மற்றொரு சிக்கலும் உருவாகுவதற்கு இடமிருக்கின்றது. தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு செல்லுமானால், அவர்கள் அத்தனை பேரையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இலங்கையில் தனியார் நிறுவனங்கள் கிடையாது. தனியார் தொழில்நிறுவனங்களைப் பொறுத்தவரை எமது நாடு இன்னுமே குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடையவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆகவே தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களின் தொழில்வாய்ப்பென்பது எதிர்காலத்தில் சிக்கலானதாகவே மாறப் போகின்றதென்பதுதான் உண்மை. ஆனாலும் இந்த மாணவர்களுக்கு மற்றொரு சிறந்த எதிர்காலம் உண்டென்பதையும் மறுப்பதற்கில்லை.

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இன்னும் குறையாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் அரசாங்க நிறுவனங்களைப் பார்க்கிலும், தனியார் நிறுவனங்களே அதிக வினைத்திறனுடன் இயங்கி வருகின்றன. அந்நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசாங்கப் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா என்பது முக்கியமல்ல.

பட்டம் பெற்றுள்ள மாணவர்களின் ஆற்றலும் வினைத்திறனுமே அந்நிறுவனங்களுக்கு அவசியமாகின்றன. தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்கள் பலர் வெளிநாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்கள் பலவற்றில் அதிக வேதனத்தில் தொழில் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை நாளும் பொழுதும் பல்கிப்பெருகி வருகின்றது. க. பொ. த உயர்தரம் சித்தியடைகின்ற மாணவர்களில் அத்தனை பேரையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இலங்கையிலுள்ள அரசாங்க பல்கலைக்கழகங்களில் இடம் கிடையாது. க.பொ.த உயர்தரம் சித்தியடைந்தோரில் அரசாங்க பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களின் நிலைமை உண்மையிலேயே பரிதாபமானது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோரில் பலர் சிறிதளவே குறைவான சித்தியுடன் அரசாங்க பல்கலைக்கழக வாய்ப்பைத் தவறவிடுகின்றனர். இவர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களில் பலர் மனவிரக்தியினால் பல்கலைக்கழகக் கனவைத் துறந்துவிட்டு தொழில்வாய்ப்பைத் தேடிச் செல்கின்றனர். மேலும் சிலர் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்கின்றனர்.

பணவசதி உள்ளோர் தனியார் பல்கலைக்கழகங்களை நாடுகின்றனர். இன்றைய நவீன உலகின் தொழில்சந்தையைக் கண்டறிந்து, அதற்கான பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு இவர்களால் முடிகின்றது. நான்கு வருட கால கற்கைநெறிக்காக அவர்கள் பில்லியன்கணக்கான ரூபா பணத்தைச் செலவிட வேண்டியிருக்கின்றது. உயர்கல்வி கற்று உயர்தொழில் புரிய வேண்டுமானால் பணத்தைச் செலவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை என்பதுதான் உண்மை.

இவற்றையெல்லாம் வைத்து நோக்குகின்ற போது, கல்வி என்பது இக்காலத்தில் பணமயமாக்கப்பட்டு விட்டதாகவே கருத முடிகின்றது. இலவசக்கல்வியானது அருகிச் செல்வதாகவும், பணம் செலுத்திக் கற்கும் கலாசாரம் உயர்ந்து செல்வதாகவும் கருதுவதற்கு இடமுண்டு. அவ்வாறானால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன என்ன வினா இங்கே எழுகின்றது. இது பரிதாபமான விடயம் ஆகும்.

பல்கலைக்கழகக் கல்வி மாத்திரமன்றி, பாடசாலைக் கல்வியின் நிலைமையும் இவ்வாறுதான் சென்று கொண்டிருக்கின்றது. பாடசாலையில் கற்கின்ற அத்தனை மாணவர்களும் ரியூஷன் கல்வியை நாட வேண்டியிருக்கின்றது என்றால் அதன் அர்த்தம் யாது? பரீட்சையை எதிர்கொள்வதற்கும், திறமையை அதிகரித்துக் கொள்வதற்கும் பாடசாலைக் கல்வி போதாதென்பதற்காகத்தானே மாணவர்கள் ரியூஷன் கல்வியை நாடுகின்றார்கள்?

இந்த விடயம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நன்றாகவே புரிந்திருக்கின்றது. ஆனால் அரசாங்க பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு இவ்விடயம் புரிந்திருக்கின்றதோ என்பதுதான் தெரியவில்லை!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT