அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் | தினகரன்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம்

 

அ.தி.மு.க பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுபடியற்றதெனஅக்கட்சியின் பொதுக்குழு தீர்மானித்துள்ளதுடன், முக்கிய 12 தீர்மானங்களையும் அ.தி.மு.க பொதுக்குழு நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானங்களில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவது, நிரந்தர பொதுச் செயலாளராக மறைந்த ஜெயலலிதாவின் பெயரையே தொடர்ச்சியாக வைத்திருப்பது, பொதுச் செயலாளர் பதவிக்கு யாரையும் நியமிக்காதிருப்பது, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் என்பன இதிலடங்குகின்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்த பின்னர் நேற்று (12) பொதுக்குழு கூடியது. பொதுக்குழு கூடுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோதும் அதனை தள்ளுபடிசெய்த நீதிமன்றம், பொதுக்குழு கூடுவதில் தடையில்லை என அறிவித்ததால் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு எவரையும் நியமிக்காது, பொதுச்செயலாளருக்கு காணப்பட்ட அதிகாரத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு வழங்குவதற்கும் பொதுக்குழு இணங்கியுள்ளது.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, (1) இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது, (2) ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்தல். (3) எம்ஜிஆர்.

நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு, (4) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றிசெலுத்தல், (5)வர்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட, விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றிகூறல், (6) நெருக்கடியான சூழலில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு, (7) அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் பெயரை தொடர்வது, 8) தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது ரத்துச்செய்து அவரது நியமனங்களை செல்லாக்கல். 9) கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் தினகரன் நியமிக்கும் நியமனங்கள் நிராகரித்தல். 10) தொண்டர்கள் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவிகளை உருவாக்கல், 11) பொதுச்செயலாளர் வகித்துவந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்.க்கு வழங்கல், 12) கட்சியின் சட்டவிதிமுறை விதி எண் 19 முதல் 40 வரை மாற்றம் செய்து திருத்தம் மேற்கொள்ளல்ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ரி.ரி.வி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

தற்காலிக பொதுச் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளரான நானே பொதுக்குழுவைக் கூட்டமுடியும். இவ்வாறு அல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகாது. தொண்டர்களுடன் இணைந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

(நமது விசேட நிருபர்)

  

 


Add new comment

Or log in with...