அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி, பன்னீரிடம் ஒப்படைப்பு | தினகரன்

அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி, பன்னீரிடம் ஒப்படைப்பு

 

அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .

பொதுசெயலாளர் சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும் நேற்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயாவுக்கு பின் பொதுசெயலாளர் யாரும் இல்லை என்றும் சசிகலா நியமனம் செல்லாது என்பதால் தினகரன் நியமனமும் செல்லாததாகி விடும் என்றும் தீர்மானத்தில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தை காத்திட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் , ராமர் லட்சுமணன் போல் இணைந்துள்ளனர் என்றும் இரு அணிகள் இணைந்ததற்கு அதிமுக பொதுக்குழுவில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தினகரன் ஆதரவாளர்கள் தளவாய்சுந்தரம்

உள்ளிட்டோரும் ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் கூட்டத்தை

நடத்தி தருமாறு முன்மொழிந்தார். இதனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெ. மறைவுக்கு மௌன அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு துவக்கத்தில காப்போம், காப்போம் கட்சியை காப்போம் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அமைச்சர் உதயகுமார் முன்மொழிந்து வாசித்தார். உறுப்பினர்கள் நிறைவேற்றினர்.

 

தீர்மானங்கள் விவரம்

* இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகவையும் மீட்க அனைவரும் ஒன்று பட வேண்டும்.

* இரு அணிகள் இணைந்ததற்கு அதிமுக பொதுக்குழுவில் பாராட்டு தெரிவித்தல்.

* ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த பதவியில் நீடிப்பார்கள்.

* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தியமைக்கு பாராட்டு

* தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது.

* ஜெயாவுக்கு பின் பொதுசெயலாளர் யாரும் இல்லை. ஜெயலலிதாவே நிரந்தர பொதுசெயலாளர் ஆவார்.

* வார்த் புயல் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல்.

* வழிகாட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் அளித்தல்.

* கட்சி விதி எண் 19 ல் திருத்தம் செய்ய முடிவு.

* அதிமுக தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் அதிகாரம் ஓ.பி.எஸ். இ.பி.எஸ்சுக்கு அளித்தல் , கட்சியில் யாரையும் சேர்ப்பதோ, விலக்குவதோ இவர்கள் இருவரே முடிவு செய்வார்கள். உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி பேசுகையில்: அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என கூறுபவர்கள் ஜெயலலிதாவை எந்த அளவுக்கு பாடாய் படுத்தியிருப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். இல்லாத 2 பொதுக்குழுவை நாம் நடத்தியுள்ளோம். ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்களுக்கு சுயநலம் தான் பெரிதாக இருந்திருக்கும். இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

இரண்டு துரோகிகள்: தினகரன் காட்டம் இதற்கிடையில் பொதுக்குழு கூட்டம் முடிந்த பின்னர் தினகரன் அளித்த பேட்டியில்: இரண்டு துரோகங்கள் கைகோர்த்துள்ளன.

பொதுக்குழுவை நான்தான் கூட்ட முடியும். இன்று (நேற்று) நடந்தது பொதுக்குழு அல்ல. பழனிசாமி அன்கோவின் கூட்டம் ஆகும். நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நீதிமன்றத்தின் முடிவே இறுதி பெறும்.

இன்றைய தீர்மானங்களுக்கு எவ்வித அனுமதியும் உரிமையும் கிடையாது. கட்சிக்கு துரோகம் செய்த இவர்கள் தமிழகத்திற்கு நன்மை செய்ய முடியும். முதல்வர் ஜெ. இருந்த முதல்வர் இடத்தில் பழனிசாமியையும் ஓ.பி.எஸ்சையும் வைத்து பார்க்க நாங்கள் விரும்பவில்லை . தற்போது நடப்பது ஜெ. ஆட்சி இல்லை. திமுகவினருடன் கூட்டணி என்பது தவறானது.

இரட்டை இலையை முடக்க காரணமானவர்களுடன் பழனிசாமி கைகோர்த்துள்ளார். தற்போது நடப்பது ஜெ. ஆட்சி அல்ல. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை துவக்கியுள்ளோம் என்றார். 


Add new comment

Or log in with...