வைத்தியர்களைப் பீடித்துள்ள வேலைநிறுத்த வியாதி! | தினகரன்

வைத்தியர்களைப் பீடித்துள்ள வேலைநிறுத்த வியாதி!

'எங்களைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தும் டொக்டர்களின் இந்த வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு முடிவே வராதா?'

மிகுந்த மனவேதனையோடு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஒரு மூதாட்டியின் வார்த்தைகள் இவை. அவரது இந்தக் கேள்வியை சில ஊடகங்கள் காட்சிப்படுத்தின. அவரது வார்த்தைகள் எல்லோரது உணர்வையும் தொடக் கூடியனவாகவே அமைந்திருந்தன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலை ஒன்றின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவெனச் சென்று, சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாததால் ஏற்பட்ட கவலையையும், வேதனையையும் இம்மூதாட்டி இவ்வாறு வெளிப்படுத்தினார்.

இவ்வாறு மூதாட்டிகள் மாத்திரமல்லாமல் தாய்மார்கள், வளர்ந்தவர்கள், முதியவர்கள் உட்பட தமது மருத்துவ தேவைக்காக அரசாங்க வைத்தியசாலைகளை நம்பி இருப்பவர்கள் அனைவருமே தமது மனவேதனையை நேற்று இவ்வாறுதான் வெளிப்படுத்தினர். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தமே இதற்குக் காரணம்.

இலங்கை தெற்காசியாவில் இலவச சுகாதார சேவை வழங்கும் முன்னணி நாடாகும். இந்நாடு சுதந்திரம் அடைவதற்கு மு-ன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில் இருந்து வருகின்றது. அதனால் இந்நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் தம் மருத்துவத் தேவைகளை அரசாங்க வைத்தியசாலைகளின் ஊடாகவே பெற்றுக் கொள்கின்றனர். இச்சேவையை அரசாங்கம் முற்றிலும் தனது பொறுப்பின் கீழ் முன்னெடுத்து வருகின்றது.

அதனால் வைத்தியசாலைகளில் மருத்துவ சேவை வழங்கும் பணியில் டொக்டர்களை அரசாங்கம் பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்த டொக்டர்கள் தம் தேவைகள், அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக தாம் சேவையாற்ற வேண்டிய அப்பாவி நோயாளர்களைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தப் பழக்கப்பட்டுள்ளனர். அதுவும் தாம் கற்று டொக்டர்களாகுவதற்கு ஏணிகளாக இருந்தவர்களையே இவர்கள் பணயக் கைதிகளாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்த அப்பாவி நோயாளர்களின் ஏக்கத்தையோ, ஆதங்கத்தையோ, மனவேதனையையோ ஏறெடுத்தும் பார்க்கத் தாம் தயார் இல்லை என்பதையே டொக்டர்களின் நடவடிக்கைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இது எந்த வகையிலுமே ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று ஆரம்பித்த 15 ஆம் திகதி வரையான அடையாள வேலைநிறுத்தமும் இதற்கு நல்ல எடுத்துக் காட்டாக உள்ளது. நேற்றைய அடையாள வேலைநிறுத்தம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக அப்பாவி நோயாளர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் தம் தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இவர்களின் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்க மருத்துவர்கள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறு நோயாளர்களை பணயக் கைதிகயளாக வைத்து என்ன நோக்கத்திற்காக இவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்பதை ஒரு தரம் திரும்பிப் பார்த்தால், பணயக் கைதிகளாக்கப்படும் நோயாளர்களுக்கும் அவர்கள் பணயக் கைதியாக்கப்படும் கோரிக்கைகக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதை அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.

தற்போது டொக்டர்கள் ஆரம்பித்திருக்கும் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைக்கான கோரிக்கையை எடுத்துப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அதாவது சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்தான் இத்தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக டொக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நோயாளர்களோ 'எமக்கும் சைற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாம் சைற்றத்தைக் கேட்வுமில்லை. அதற்கு ஆதரவு நல்கவுமில்லை. அப்படியிருக்கையில் டொக்டர்கள் ஏன் எம்மைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்துகின்றனர்?' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மையில் இந்நாட்டில் பெரும்பகுதியினர் 'சைற்றம்' என்றால் என்ன என்பதை முன்னர் அறியாதவர்களாகவே இருந்தனர். ஆயினும் டொக்டர்கள்தான் இவ்விவகாரம் தொடர்பில் அடிக்கடி வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து சைற்றம் குறித்து பட்டிதொட்டி எல்லாம் அறிந்து கொள்ள வழி செய்தனர்.

சைற்றம் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகபபடுத்தப்பட்ட ஒன்றாகும். அப்போது இந்த சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆக்கபூர்வமாக எதிர்ப்புகளை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் உரிய முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் அவர்கள் எதி-ர்பார்க்கும் பதிலை முளையிலேயே பெற்றிருக்க முடியும். ஆனால்அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அதனைச் செய்யவில்லை. அவர்கள் இதனைக் கண்டும் காணாதவர்கள் போல் இருந்தனர். ஆனால் இவர்கள் சைற்றம் இப்போதுதான் ஆம்பிக்கப்பட்ட ஒன்று என்ற அடிப்படையில் தம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவர்களது இந்நடவடிக்கை சந்தேகத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக அரசியல் நோக்கத்துடன்தான் இவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொள்வதாகப் பரவலாக பேசப்படுகின்றது.

என்னதான் இருந்தாலும் தம் தேவைகள், அபிலாசைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அப்பாவி நோயாளர்களைப் பணயக்கைதிகளாகப் பாவிக்கும் பழக்கத்தை டொக்டர்கள் கைவிட வேண்டும். அப்பாவி நோயாளர்களை மனிதாபிமானக் கண்கொண்டு நோக்கத் தவறக் கூடாது. இது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகவே தம் தேவைகள், அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக வேறு-மார்க்கங்களை டொக்டர்கள் நாட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் டொக்டர்கள் மக்களுக்கு செய்யும் பேருதவியாக இது அமையும். 


Add new comment

Or log in with...