'ரொஹிங்கிய இனப்படுகொலை' என்றே நாமும் கூறுகின்றோம் | தினகரன்

'ரொஹிங்கிய இனப்படுகொலை' என்றே நாமும் கூறுகின்றோம்

வன்முறை நீடித்து வரும் மியன்மாரின் ரகின் மாநிலத்தில் ‘இனப்படுகொலை’ ஒன்று இடம்பெறுவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.எச் மஹ்மூத் அலி குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறைகளால் பங்களாதேஷில் சுமார் 300,000 ரொஹிங்கியாக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

“சர்வதேச சமூகம் இதனை ஒரு இனப்படுகொலை என்று கூறுகிறது. நாமும் இதனை ஒரு இனப்படுகொலை என்றே வர்ணிக்கிறோம்” என்று டாக்காவில் இராஜதந்திரிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் கூறினார்.

ரொஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் அரசியல் தீர்வு மற்றும் மனிதாபிமான உதவிகளை பெறும் முயற்சியாக அலி மேற்கத்தேய மற்றும் அரபு இராஜதந்திரிகள் மற்றும் பங்களாதேஷை தளமாகக் கொண்ட ஐ.நா நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 300,000 அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பி வந்திருப்பதாக அவர் இராஜதந்திரிகளிடம் குறிப்பிட்டார். இதன்மூலம் பங்களாதேஷில் உள்ள ரொஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை 700,000 ஆக உயர்ந்துள்ளது.

“இது தற்போது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது” என்று அலி கூறினார்.

தற்போதைய புதிய சுற்று வன்முறைகளில் 3,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ராஜதந்திரிகளிடம் விளக்கியுள்ளார். இது 1,000 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நாவின் முந்தைய அறிவிப்பை விடவும் அதிகமாகும்.

ரகினில் கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் மியன்மார் பொலிஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து 294,000 ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருப்பதாக ஐ.நா கூறியது.

ரகின் மாநிலத்திற்குள் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இதேவேளை மனிதாபிமான நெருக்கடியினை தணிக்கு முயற்சியாக ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்த ஒரு மாத யுத்த நிறுத்தத்தை மியன்மார் நிராகரித்துள்ளது. அரகான் ரொஹிங்கிய மீட்புப் படை என்ற கிளர்ச்சியாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யுத்த நிறுத்த பிரகடனத்தை வெளியிட்டனர்.

மியன்மார் இராணுவம் ஆயுதத்தை கிழே வைக்கும்படியும் அந்த கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்தனர்.

எனினும் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று மியன்மார் அரச பேச்சாளர் சவ் ஹிடாய் குறிப்பிட்டுள்ளார். கொள்கை அடிப்படையில் நாம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருக்கும் ரொஹிங்கிய அகதிகள் போதிய இடவசதி இன்றி தற்காலிக முகாம்கள் மற்றும் வீதி ஓரங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவு, நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதில் சர்வதேச உதவி அமைப்புகள் மற்றும் உள்நாட்டு தன்னார்வ பணியாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

உதவி வாகனங்கள் அகதிகளை நெருங்கும்போது அங்க மோதல்கள் இடம்பெறுவதால் பங்களாதேஷ் மேலதிக பொலிஸார் மற்றும் படையினரை அங்கு அனுப்பியுள்ளது. ரகின் மாநிலத்திலுள்ள பல இனங்களும் கலந்து வாழும் ரதடொங் பிராந்தியத்தின் பல டஜன் முஸ்லிம் கிராமங்களும் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தீவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவன் குறிப்பிட்டுள்ளது.

பங்களாதேஷின் கொக்ஸ் பசார் முகாமில் புதிதாக அகதிகளின் வருகை தொடர்பில் ரோய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. பெரும்பாலும் பெண்கள், சிறுவர்கள் உணவு மற்றும் உடைகளை பெறுவதற்கு நீண்ட வரிசைகளில் காத்துள்ளனர்.

இதில் 300க்கும் அதிகமானோர் சிறு படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் பங்களாதேஷை அடைந்துள்ளனர்.

மியன்மார் எல்லையை கடக்கும் முயற்சியில் நிலக்கண்ணிவெடிகளில் சிக்கி கடந்த சனிக்கிழமை மூன்று ரொஹிங்கியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நிலக்கண்ணிவெடிகளில் ஒருவரது கால் துண்டானதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. 


Add new comment

Or log in with...