Friday, March 29, 2024
Home » காசாவில் வான் தாக்குதலுக்கு மத்தியில் ரிஷி சுனக்கும் இஸ்ரேல் பயணம்

காசாவில் வான் தாக்குதலுக்கு மத்தியில் ரிஷி சுனக்கும் இஸ்ரேல் பயணம்

- உதவிப் பொருட்களை அனுப்ப எகிப்து இணக்கம்

by Rizwan Segu Mohideen
October 20, 2023 2:46 pm 0 comment

காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து சரமாரி வான் தாக்குதல்களை மேற்கொண்டு உயிர்ச்சேதங்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

முழு முற்றுகையில் இருக்கும் காசாவுக்கு எகிப்துடனான ரபா எல்லை வழியாக உதவிப் பொருட்கள் செல்ல உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் எட்டு மணி நேரத்திற்கும் குறைவான காலம் தங்கியிருந்த பைடன் புதன்கிழமை (18) இரவு நாடு திரும்பினார். இஸ்ரேலுக்கு தனது ஆதரவை உறுதி செய்த அவர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவரது சுற்றுப்பயணத்தில் ஒரே ஒரு இராஜதந்திர முயற்சியாக 2.3 மில்லியன் மக்கள் வாழும் காசா மீதான இஸ்ரேலின் முழு முற்றுகையை தளர்த்துவதற்கு இஸ்ரேலை வற்புறுத்தினார்.

எதிர்வரும் நாட்களில் 20 உதவி லொறிகள் காசாவுக்குச் செல்வதற்கான உடன்பாட்டை எகிப்துடன் செய்துகொண்டிருப்பதாக பைடன் தெரிவித்தார். எனினும் ஒரு நாளைக்கு 100 உதவி வாகனங்கள் தேவைப்படுவதாக ஐ.நா உதவித் தலைவர் மார்டின் கிரிபித் பாதுகாப்பு சபையிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் ஆயிரக்கணக்கான தொன் உதவிப் பொருட்களுடனான வாகனங்கள் காசா செல்லும் எதிர்பார்ப்புடன் நேற்றைய தினத்திலும் எகிப்து பக்கமாக காத்திருந்தன.

உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கு பைடனுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியின் பேச்சாளர் தெரிவித்தார். காசா உடனான எல்லையை எகிப்து மூடவில்லை என்றும் பலஸ்தீன பக்கமான நான்கு சுற்று இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் ரபா எல்லையை வலுக்கட்டாயமாக மூட வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். காசாவுக்கான இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே வழியான ரபா எல்லை பகுதியில் 150 லொறிகள் காத்திருப்பதாக அங்கிருப்பவர்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அழிவடையக் கூடிய பொருட்கள் ஏற்கனவே கேட்டுப்போக ஆரம்பித்திருக்கும் நிலையில் கூடிய விரைவில் இந்த உதவிப் பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனிதாபிமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் காசாவுக்கான மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்தை முற்றாக துண்டித்து முழு முற்றுகையை கடைப்பிடித்து வரும் நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு பயன்தராத மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் எகிப்தில் இருந்து காசாவை அடைய அனுமதிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும் ஆயுததாரிகளால் பிடிக்கப்பட்டிருக்கும் 200க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவித்தால் மாத்திரமே சோதனைச் சாவடியை திறந்து உதவிகள் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது.

பைடன் இஸ்ரேலை விட்டு வெளியேறி சில மணி நேரத்திற்குப் பின்னர், இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவது மற்றும் இஸ்ரேலியர்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் அதே செய்தியுடன் பிரிட்டன் பிரதமர் இஸ்ரேலை சென்றடைந்தார்.

“எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலிய மக்களுடனான எனது ஒருமைப்பாட்டை வெளியிடுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் கூறமுடியாத, பயங்கரமான பயங்கரவாதச் செயலைச் சந்தித்திருக்கிறீர்கள் என்பதோடு ஐக்கிய இராச்சியம் உங்களுடன் இருக்கிறது என்று இங்கு நான் கூற விரும்புகிறேன்” என்று இஸ்ரேலை அடைந்த சுனக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இடைவிடாத தாக்குதல்

மறுபுறம் காசாவில் 12 ஆவது நாளாகவும் நேற்று இடைவிடாது குண்டு மழை இடம்பெற்றதோடு அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3800 ஐ தாண்டி விரைவாக அதிகரித்து வருகிறது. மேலும் 12,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் கடைத் தொகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு குழந்தையின் இளஞ்சிவப்பு கட்டில் தரையில் கவிழ்ந்து, ஒரு துணிக்கடையின் ஜன்னல்கள் நொறுக்கப்பட்டிருந்ததோடு வாகனங்களும் சேதமடைந்திருந்தன.

இஸ்ரேலின் உத்தரவை கேட்டு காசாவின் வடக்கில் இருந்து அந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்த ரபாத் அல் நகால் என்பவர், “எங்குமே பாதுகாப்பில்லை” என்றார்.

“எனக்கு 70 வயதாகிறது. பல போர்களையும் தாண்டி வந்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற கொடூரத்தை இதற்கு முன் சந்திக்கவில்லை. எந்த மதமும், மனசாட்சியும் இல்லை. இறைவனுக்கே நன்றி கூற வேண்டும். இறைவனிடம் மாத்திரமே நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். எந்த ஒரு அரபு அல்லது முஸ்லிம் நாடுகளையோ அல்லது இறைவனைத் தவிர உலகின் எவர் மீதும் நாம் நம்பிக்கை வைக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் இடிந்த கட்டடத்தில் இடிபாடுகளை மக்கள் வெறுங் கைகளால் அகற்றி சிறிய ஆண் மற்றும் பெண் குழந்தைகளை மீட்டனர். கைபேசி விளக்கின் ஒளிக்கு மத்தியில் இடிபாடுகளில் இருந்து ஆடவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டது.

உலகின் அதிக சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றான காசாவில் பாதி அளவானவர்கள் வீடுகளை இழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவில் ரபாவுக்கு அருகில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் முதலாவது மற்றும் ஒரே பெண்ணான ஜமீலா அல் ஷன்டி கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அரசியல் பணியகம் பிரதான முடிவுகளை எடுக்கும் குழுவாகும். கொல்லப்பட்ட ஜமிலா, ஹமாஸ் இணை நிறுவனர் அப்தல் அஸிஸ் அல் ரன்டிசியின் விதவை மனைவி என்பதோடு ஹமாஸ் பெண்கள் பிரிவின் நிறுவனருமாவார்.

காசா மருத்துவமனை மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் ஆர்ப்பட்டங்கள் நேற்றைய தினத்திலும் நீடித்ததோடு ரமல்லா நகருக்கு அருகில் இஸ்ரேலிய படையின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதன்படி காசா போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுடனான மோதல்கள் அங்கு அதிகரித்துள்ளது.

இதில் ரமல்லாவின் மேற்காக உள்ள சுக்பா கிராமத்தைச் சேர்ந்த 15 மற்றும் 17 வயதானவர்களே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரசபையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் டயர் வண்டி ஒன்றை கொளுத்த முயன்றபோதே சுடப்பட்டதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கின் கோபம்

காசா மீதான தாக்குதல்கள் தொடரும் சூழலில் மத்திய கிழக்கு பிராந்தியம் எங்கும் அதற்கு எதிரான கோபம் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கின் அரபு நாடுகளுக்கான பைடனின் பயணமும் ரத்துச் செய்யப்பட்டதோடு மேற்குலக தலைவர்கள் தமது அரபு நட்பு நாடுகளின் தலைவர்களை அணி திரட்டுவதில் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய கிழக்கெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

பைடனுக்கு நேரடி சந்திப்பை ஏற்படுத்த முடியாத நிலையில் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பும் வழியில் அவர் தொலைபேசி வழியாகவே எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி உடன் உரையாடியுள்ளார்.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டதோடு லெபனானில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அமைதிக்கான யூதர்கள் குரல் என்ற மனித உரிமை அமைப்பின் சுமார் 300 ஆர்ப்பட்டக்காரர்கள் போர் நிறுத்தம் ஒன்றை கோரி அமெரிக்காவின் கபிடோல் வளாகத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் வொஷிங்டன், நியூயோர்க், சிக்காகோ உள்ளிட்ட பெரிய நகரங்களில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஐரோப்பாவிலும் பல இடங்களில் அதே போன்ற ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இதேவேளை லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலை குறிவைத்த பகுதிகளில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட கடந்த இரண்டு வாரங்களாக காசா மோதல் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்துவந்தபோதும் இன்னும் பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு அது பரவவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT