அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டிப்போட்ட இர்மா சூறாவளி | தினகரன்

அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டிப்போட்ட இர்மா சூறாவளி

அட்லாண்டிக் கடலின் பயங்கர சூறாவளியான இர்மா அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை புரட்டிப்போட்டு சென்றுள்ளது. மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் வீடுகள், படகுகள் தூக்கி எறியப்பட்டதோடு கட்டுமானங்களுக்கு பயன்படும் கிரேன்களையும் வீழ்த்தியுள்ளது. மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காரணமாக நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதோடு பல பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

640 கிலோமீற்றர் பரந்த இந்த சூறாவளி அமெரிக்க நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையை தாக்கியது. புளோரிடாவின் தாழ்வான பகுதியான கீஸ் தீவை தாக்க ஆரம்பித்த சூறாவளி நகர நகர மணிக்கு 200 கிலோமிற்றர் வேகத்தில் காற்று வலுப்பெற்றது. இதனால் அங்கு காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்ததோடு அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சூறாவளியில் சிக்கி மரங்கள் வேரோடு சரிந்தன. வீதியில் சென்ற வாகனங்களும் தூக்கி எறியப்பட்டன. இந்த அனர்த்தத்தில் மூவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின.

புளோரிடாவின் மேற்கு கரையில் உள்ள மார்கோ தீவுகளில் இர்மா சூறாவளியின் மையம் தாக்கியுள்ளது. புளோரிடா மாநிலத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மியாமி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இர்மா சூறாவளி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கணிப்பால் புளோரிடா மாகாண கடற்கரை பகுதிகளில் தங்கியிருந்த கிட்டத்தட்ட 6.3 மில்லியன் மக்கள் வெளியேறுமாறு முன்னதாக கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதனால் சுமார் 56 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, 568 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பாடசாலைகள், கல்லுௗரிகள், தேவாலயங்கள், உள் விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றில், பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

சூறாவளியால் வீதிகள் முழுவதும் மரங்கள் விழுந்ததுடன், வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடியதால் நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவிப்புக்குள்ளாகினர். பலத்த காற்றின் காரணமாக மின்மாற்றிகளும் வெடித்துச் சிதறியதால், புளோரிடா மாகாணத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் இருளில் மூழ்கின.

இர்மா புயல் தாக்குதலால், பல்லாயிரக்கணக்கான வீடுகள் உருகுலைந்துள்ளன. புயல் ஓய்ந்த பின்னர வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே, வொஷிங்டனில் செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மீட்புப்படை உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். விரைவில் புளோரிடா மாகாணத்துக்கு செல்ல உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஒரு தசாப்தத்தில் அட்லாண்டிக் கடலில் தேன்றிய அதிக சக்தி வாய்ந்த இர்மா சூறாவளி பல கரீபியன் தீவுகளில் ஏற்கனவே பாரிய சேதங்களை ஏற்படுத்தியது. சுற்றுலா தீவான சென்ட் மார்டின் தீவு இந்த சூறாவளியால் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த தீவு தற்போது மனிதர் வாழ முடியாத அளவுக்கு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. சூறாவளி காரணமாக பத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அதேபோன்று சிறிய தீவான பார்புடாவில் 95 வீதமான கட்டடங்கள் சேதமாகி இருப்பதால் அங்கும் மனிதர் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 மில்லியன் டொலர் அளவு சேதம் ஏற்பட்டிருப்பதாக அன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் கிரவுன் குறிப்பிட்டுள்ளார். இந்த தீவில் சூறாவளியால் ஒருவர் உயிரிழந்தார். இதன்படி இர்மா சூறாவளி காரணமாக 10 கரீபியன் நாடுகளில் 28 பேர் வரை பலியாகினர்.

அமெரிக்காவை தாக்கும் முன்னர் இர்மா சூறாவளி கடந்த சனிக்கிழமை கியூபாவில் அதிக சேதங்களை ஏற்படுத்தியது. உயிரிழப்புகள் இடம்பெறாத நிலையில் பாதிப்பு பற்றிய உத்தியோகபூர்வ விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் தலைநகர் ஹவானா எங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது பலவீனம் அடைந்திருக்கும் இர்மா சூறாவளி அமெரிக்க நேரப்படி நேற்று அந்த நாட்டின் மக்கள் தொகை அதிகம் காணப்படும் டம்பா மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இர்மா சூறாவளி ஜோர்ஜியா, மிசிசிப்பி, டென்னிசி ஆகிய பகுதிகளை தாக்கும் என்று கூறப்படுகிறது. 


Add new comment

Or log in with...