சீற்றம் தணிந்து கசப்பு மறைகிறது | தினகரன்

சீற்றம் தணிந்து கசப்பு மறைகிறது

 

சீனாவில் நடைபெற்ற 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டின் பிறகு இந்தியா வும் சீனாவும் மீண்டும் நட்புப் பாதைக்குத் திரும்பி விட்டது போன்ற தோற்றம் தெரிகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண பஞ்சசீலக் கொள்கைக்குப் புத்துயிர் ஊட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய கசப்பான அனுபவங்களை மறந்து விட முயற்சி நடக்கிறது என்பதை இரு தலைவர்களும் உணர்த்தி விட்டனர்.

இரு தலைவர்களுடைய பேச்சின் தோரணை முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், அதற்கும் ஒரு வாரத்துக்கு முன்னால்தான் டோக்லாம் நிலப் பகுதியில் இராணுவப் படைகள் முறைத்துக் கொண்டு நின்றது முடிவுக்கு வந்தது. டோக்லாம் பகுதியில் ஏற்பட்டதைப் போல இன்னொரு இடத்தில் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்று இரு நாடுகளுமே கருத்து தெரிவிப்பதிலிருந்து, எல்லைப்புறப் பாதுகாப்புக்கு இதுவரை கடைப்பிடித்து வந்த வழிமுறைகளைக் கைவிட்டு, புதிய வழி மூலம் உறவை வலுப்படுத்த விரும்புவது தெரிகிறது.

அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தும் பொருளாதார சுய பாதுகாப்புக் கொள்கையை அனுமதிக்க முடியாது என்று இந்தியாவும் சீனாவும் கூட்டாக இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வரவேற்கத்தக்க இன்னொரு கருத்தொற்றுமை வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் பற்றியது.

தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியையும் நிர்வாகத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளாக லஷ்கர்-இ-தொய்பாவும் ஜெய்ஷ்-இ-முகம்மதுவும் குறிப்பிடப்பட்டு கண்டிக்கப்படுவதை சீனா ஆமோதித்தது.

‘ஒரே மண்டலம் – ஒரே பாதை’ என்ற சீனாவின் அரசியல் – பொருளாதார வியூகம் குறித்து இந்தியாவுக்குச் சில சந்தேகங்கள் இருப்பதால் அதைப் பற்றி பேசாமல் தவிர்த்து விட்டனர். பிரிக்ஸ் மாநாடு எதிர்பார்த்ததற்கு மாறாக சுமுகமாகவும் பலனுள்ள வகையிலும் முடிந்து விட்டது.

இனி இரு நாடுகளின் அதிகாரிகளும் டோக்லாம் பிரச்சினை எப்படி ஏற்பட்டது, எப்படி வளர்ந்தது என்று ஆராய்ந்து, இனி அப்படியொரு நிலைமை இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் எங்குமே ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டும். சிக்கிம் எல்லை, இந்தியா,-சீனா,-பூட்டான் நாடுகளின் நிலப் பகுதிகள் சந்திக்கும் இடம் போன்றவை குறித்து நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு கூடி விவாதித்து நல்ல முடிவுக்கு வர வேண்டும்.

பிரிக்ஸ் மாநாட்டில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது குறித்து அறிவிப்பில் குறிப்பிட்டது மட்டும் போதாது. அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டினால் ஏற்பட்ட பலன்கள் இந்திய-,சீன உறவை வலுப்படுத்தவும் அதிகபட்சம் இரு நாடுகளும் பரஸ்பரம் பலன் காணவும் உதவ வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம், இரு தேசங்களின் நலன்களைப் பெருமிதத்துக்காகவும் வீம்புக்காகவும் பலிகொடுத்து விட முடியாது என்பதை இந்தியாவும் சீனாவும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.(ஹிந்து) 

 


Add new comment

Or log in with...