தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பாரிய துரோகமிழைப்பு | தினகரன்

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பாரிய துரோகமிழைப்பு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதவு வழங்கி தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் வரலாற்றுத் துரோகம் இழைத்துள்ளதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். பலாத்காரமாகவும் முறையற்ற விதத்திலுமே கிழக்கு மாகாணத்தில் இந்த சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டதாக கூறிய அவர், சலுகைகளுக்கு மயங்கி ஆளும் தரப்பு இதனை அவசரப்பட்டு நிறைவேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

20 ஆவது திருத்தம்நேற்று(11) கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டமை குறித்து அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்:

20 ஆவது திருத்தம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை. கோரமின்றி 2,3 தடவைகள் அமர்வு ஒத்திவைக்கப்பட்டன.இந்த நிலையில் கட்சித் தலைவர் கூட்டம் நடத்தப்பட்டது. முதலமைச்சரினால் 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்படுமென முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவர் 20 ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்காது புதிய திருத்தங்கள் பற்றியே பேசினார்.சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கிய உத்தரவாதத்தை திருத்தமாக கருதி ஆதரிக்குமாறு முதலமைச்சர் கூறினார். இதனை நம்பி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட முடியாது.

சபை சம்பிரதாயத்திற்கு முரணாகவே பலர் நடந்து கொண்டனர்.

அதிகார ஆசைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் சட்ட வரைபை ஆதரித்து துரோகமிழைத்துள்ளன.வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் மாகாண சபையின் அதிகாரத்தை குறைக்கும் 20 ஆவது திருத்தத்திற்கு சில சலுகைகளுக்காக இந்த இரு கட்சிகளும் வாக்களித்துள்ளன.ஊவா மற்றும் தென்மாகாண சபைகள் இதனை நிராகரித்துள்ள நிலையில் அவசரப்பட்டு இங்கு திருத்தத்தை ஆதரவாக நிறைவேற்றியுள்ளனர்.ஆளும் தரப்பு கூறியது போன்று எமக்கு எந்த திருத்தமும் முன்வைக்கப்பட வில்லை.வெறும் வாய்மூல வாக்குறுதிக்காகவே இதனை நிறைவேற்றியுள்ளனர்.

20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்ட பின்னரே திருத்தங்கள் முன்வைக்கப்பட ​வேண்டும்.இந்த சம்பிரதாயம் மீறப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது சட்டபூர்வமாக நிறைவேற்றப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்வதாக வீரவசனம் பேசிய முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பி அதனை ஆதரித்தார்கள். இங்கும் அவ்வாறே 20 ஆவது திருத்தத்தை ஆதரித்துள்ளனர்.

இது வரலாற்று துரோகமாகும் என்றார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...