விக்னேஸ்வரனின் நல்லெண்ண சமிக்​ஞை | தினகரன்

விக்னேஸ்வரனின் நல்லெண்ண சமிக்​ஞை

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அமைச்சர்கள் பரிவாரத்துடன் கடந்த சனிக்கிழமையன்று கண்டியிலுள்ள பௌத்த மகாநாயக்கர்களை சந்தித்துப் பேசியதில் இரு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இச்சந்திப்பில் முக்கியத்துவம் பெறுகின்ற விடயங்களில் பிரதானமாகக் குறிப்பிடப்பட வேண்டியது வடமாகாண சபை வெளிப்படுத்திய நல்லெண்ண சமிக்​ைஞ ஆகும்.

வட மாகாண சபை தோற்றம் பெற்ற நாள் முதல் அம்மாகாண சபை மீது தென்னிலங்கை சமூகம் சந்தேகமும் விரோதமும் நிறைந்த பார்வையையே செலுத்தி வருகின்றது. யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல், சர்வதேச விசாரணை, எழுக தமிழ் பேரணி என்றெல்லாம் அடுக்கடுக்காக தென்னிலங்கைக்குச் சீற்றமூட்டும் விடயங்களை வட மாகாண சபை முன்னெடுத்து வந்ததன் விளைவாக உருவாகிய வெறுப்பே இது!

வட மாகாண சபையானது ஒற்றையாட்சி என்ற கட்டுக்கோப்பில் இருந்து விடுபட்டு தனியானதொரு சுயாதீன ஆட்சியலகாக செயற்படுவதற்கு முற்படுவதாக தென்னிலங்கைக்கு அதிருப்தியும் வெறுப்பும் இருந்து கொண்டே வருகின்றன.அதேசமயம் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேசத்துக்கு எடுத்துரைப்பதில் வடமாகாண சபை எடுத்துக் கொண்ட அக்கறையும் தென்னிலங்கைக்கு சீற்றமூட்டுகின்ற விடயமாகும். இவ்வெறுப்பின் விளைவுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்ற அதிருப்தியாகும்.

விக்னேஸ்வரன் பெரும்பான்மை சிங்கள இனத்துக்கும், பௌத்தத்துக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டவரென்றும், நாட்டுப் பிரிவினைக்கான நிகழ்ச்சித் திட்டத்துடன் அவர் செயற்பட்டு வருவதாகவுமே சிங்கள மக்களில் கூடுதலானோர் எண்ணுகின்றனர். எனவே நாட்டின் தேசியத்துக்கு எதிரான மனிதராக சிங்கள அரசியல்வாதிகள் பலர் விக்னேஸ்வரனை சித்திரிக்கிறார்கள். சிங்கள, ஆங்கில ஊடகங்களும் அவ்வாறுதான் விக்னேஸ்வரனைப் பற்றி தாறுமாறாக எழுதித் தீர்க்கின்றன.

வட மாகாண முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன் கைப்பற்றி நான்கு வருடங்களாகின்ற போதிலும், தென்னிலங்கையில் தோன்றிய வெறுப்புகள் குறித்து அவர் சற்றேனும் பொருட்படுத்தியதில்லை. தென்னிலங்கையின் வெறுப்பைத் தணிக்கும் முயற்சியிலோ அல்லது அக்குற்றச் சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதிலோ விக்னேஸ்வரன் கவனம் செலுத்தியதுமில்லை.

வட மாகாண சபை மீதான வெறுப்பு இத்தனை தூரம் வளர்ந்து விட்ட இன்றைய நிலையில், தங்களது நல்லெண்ணத்தை சிங்கள சமூகத்துக்கு வெளிப்படுத்துவதற்கு முதன் முறையாக முற்பட்டிருக்கிறார் விக்னேஸ்வரன்.

இவ்வாறானதொரு முயற்சி எப்போதோ மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டியதாகும். ஆனாலும் காலம் தாழ்த்தியாவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறானதொரு முயற்சியில் இறங்கியிருப்பதைப் பாராட்டாமலிருக்க முடியாது.

விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பெளத்த மகாநாயக்கர்களைச் சந்தித்துப் பேசியதில் பிரதானமாக அமைந்துள்ள விடயம் இதுதான். வட மாகாண சபை மீதான சந்தேகங்கள் களையப்படுவதற்கு இதுபோன்ற சந்திப்புகள் வழி வகுக்குமென்பதில் ஐயமில்லை.

பெரும்பான்மை சமூகத்தின் சம்மதமின்றி இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒருபோதுமே சாத்தியமாகப் போவதில்லையென்ற யதார்த்தம் வட மாகாண முதலமைச்சருக்குப் புரியாததொன்றல்ல. அதேசமயம் பௌத்தமும் அரசியலும் இரண்டறக் கலந்துள்ள எமது நாட்டில் பௌத்த பீடங்களின் இணக்கப்பாடின்றி இனப்பிரச்சினைத் தீர்வானது இம்மியளவும் நகரப் போவதில்லையென்பதும் அவருக்குப் புரியாததல்ல. எனவே விக்னேஸ்வரனுக்கும் மகாநாயக்கர்களுக்கும் இடையிலான மேற்படி சந்திப்புப் போன்று, எதிர்வரும் காலத்திலும் நல்லிணக்க சந்திப்புகள் தொடர்வதே ஆரோக்கியமானதாகும்.

இது ஒருபுறமிருக்க, மகாநாயக்கர்களுக்கும் முதலமைச்சர் குழுவினருக்குமிடையே கண்டியில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஒருபுறம் சாதகமாகவும் மறுபுறத்தில் பாதகமாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்குத் தமிழ் இனத்தினால் முன்வைக்கப்படுகின்ற சமஷ்டி யோசனையானது பிரிவினைக்கு ஒப்பானதென்று மகாநாயக்கர் கருத்து வெளியிட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆகவே இச்சந்திப்பானது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

சமஷ்டி யோசனைக்கு எதிரான கருத்தை பௌத்த மகாநாயக்கர்கள் தெரிவித்திருப்பது உண்மையாக இருக்கக் கூடும். இச்சந்திப்பில் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய இரண்டாவது விடயம் அதுவாகின்றது.

ஆனாலும் மகாநாயக்கர்களின் அக்கருத்தை அடிப்படையாக வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நல்லெண்ண வெளிப்பாட்டை கொச்சைப்படுத்தவோ அல்லது ஏளனம் செய்யவோ முற்படுவது அழகல்ல. அவ்வாறான சிந்தனை வக்கிரம் கொண்டதாகும்.

அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நகர்ந்து கொண்டிருக்கின்ற அதேவேளை, இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவது முக்கியம். விக்னேஸ்வரனுக்கும் மகாநாயக்கர்களுக்குமிடையிலான சந்திப்பை இவ்வாறு நோக்குவதே சிறந்ததாகும். 


Add new comment

Or log in with...