அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சரத்தை நீக்கியதால் 20ஐ ஆதரித்தோம் | தினகரன்

அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சரத்தை நீக்கியதால் 20ஐ ஆதரித்தோம்

சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கிய உத்தரவுக்கமைய,அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு விளக்குகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்:

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு மாகாண சபைகளின் அபிப்பிராயத்தை கோர நகல் சட்ட மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டது. 20வது திருத்த நகல் எமக்கு திருப்தி அளிக்க வில்லை. ஏனெனில் இது மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவே இருந்தது.

மாகாணசபைகளை கலைக்கக் கூடிய அதிகாரம் அத்தோடு சகல மாகாண சபைகளுக்கம் ஒரே நாளில் தேர்தல் நடாத்தவது, இந்த தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கின்ற அதிகாரம் என்பவற்றை பாராளுமன்றத்திற்கு வழங்கும் வகையில் இந்த திருத்தங்கள் அமைந்திருந்தன .ஆகவே மாகாணசபை மீது பாராளுமன்றம் ஆதிக்கம் செலுத்தும் இந்த சட்டத்தை நாங்கள் முதலில் ஆதரிக்கவில்லை. இச்சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை நாங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தோம்.

திருத்தங்கள் அவசியமாகிறது என்ற கருத்தை எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் தெரியப்படுத்தி இருந்தோம். அவ்விடயம் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேசப்பட்டு 20வது திருத்ச் சட்டத்தில் மேலும் புதிய சில திருத்தங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன.20 ஆவது திருத்தத்திற்கான திருத்தங்கள் உயர்நீதி மன்றத்தில் சட்டமா அதிபரால் முன் வைக்கப்பட்டது.

ஏற்கனவே வந்த 20வது திருத்தத்தின் பின்னர் எம்மால் முன் வைத்த திருத்தங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு பாராளுமன்றம் மாகாணசபை அதிகாரத்தை கட்டப்படுத்தாதவாறு முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள 20வது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பிலே உள்வாங்கப்படவுள்ளன.

இந்த அடிப்படையிலே திருத்தபட்ட 20வது திருத்தத்துக்கு நாம் சாதகமாக வாக்களித்தோம் என்றார்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...