Friday, March 29, 2024
Home » தொழுகையில் இறையச்சம்

தொழுகையில் இறையச்சம்

by Rizwan Segu Mohideen
October 20, 2023 11:48 am 0 comment

‘திண்ணமாக இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தி (தக்வா) வை மேற்கொள்கின்றார்கள்’ (ஸூரா: அல்முஃமினூன் 1-2)

‘குஷூஃ’ என்கிற சொல் பயபக்தி (இறையச்சம்) என இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ‘குஷூஃ’ என்பதற்கு குனிதல், அடங்கிப் போதல், அடக்கத்தையும் பணிவையும் வெளிப்படுத்துதல் என்பன பொருளாகும். ஒருவர் ‘குஷூஃ’ வை மேற்கொள்ளுதல் என்பது உள்ளத்து நிலைமையையும் குறிக்கும். உள்ளம் ‘குஷூஃ’வை மேற்கொள்வது ஒன்றின் மீதான பயபக்தியால் ஆட்பட்டு அதன் மகத்துவம், பேராற்றல், பேரொளி ஆகியவற்றை நினைத்துத் திகைத்து மலைத்து நிற்பதை குறிக்கும்.

பொதுவாக பேராற்றலும் சர்வ வல்லமையும் மிக்க ஆளுமையின் முன்னால் நிற்கும் போது மனிதன் விக்கித்துப் போகின்றான். தலையைத் தாழ்த்திக் கொள்கின்றான். கைகள் தளர்ந்து விடுகின்றன, பார்வை ஒடுங்கி விடுகின்றது, குரல் அமுங்கிப் போகின்றது, மகத்துவமும் வல்லமையும் மிக்க ஆளுமையின் முன்னால் நிற்கும்போது மனிதனுக்குள் இயல்பாகவே ஏற்படுகின்ற தாக்கங்கள் அனைத்தும் மனிதனை ஆட்கொள்கின்றன.

ஒருமுறை ஒருவர் தாடியை நீவி விட்டவாறு தொழுது கொண்டிருப்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அவருடைய உள்ளத்தில் குஷூஃ இருந்திருக்குமேயானால் அவருடைய உடலையும் குஷூஃ கவ்விக் கொண்டிருக்கும்’ என்றார்கள்.(நபிமொழி)

உள்ளத்துடன் தொடர்புடையதுதான் குஷூஃ எனில் அதன் இயல்பான தாக்கம் உடலையும் பாதிக்கும் என்பது மேலே கூறப்பட்ட நபி மொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தொழுகையின் அனைத்து நிலைகளும் மன நிறைவுடனும் மன அமைதியுடனும் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். ஒன்றை முழுமையாக நிறைவேற்றிய பிறகுதான் அடுத்த நிலைக்கு போக வேண்டும். தொழுகையின் போது மனத்தை இங்குமங்கும் அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தி வைத்திருப்பதும் மிகவும் அவசியமானது.

வேண்டுமென்றே தொழுகைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் குறித்து யோசிப்பதிலிருந்தும் மனக் கணக்குகளைப் போடுவதிலிருந்தும் முற்றாக விலகி இருத்தல் வேண்டும். நம்மை அறியாமல் எண்ணங்கள் அலைமோதலாம். இது மனித இயல்பு. மனிதனின் பலவீனம் என்றாலும் தொழுகையின் போது உள்ளத்தையும் சிந்தனையையும் அல்லாஹ்வின் மீதே குவித்திருக்க முயல வேண்டும். ஒருமுகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

அல்குர்ஆனின் வசனங்கள் ஓதப்பட்டாலும் சரி, அவனது புகழ் பாடப்பட்டாலும் சரி. வெறுமனே உதட்டளவில் சொல்லப்படுகின்றவையாக அல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மொழியப்படுகின்றவையாக அவை பரிணமிக்க வேண்டும். அந்த உன்னத நிலையை அடைவதற்காக முயல வேண்டும். அப்படியும் தன்னை மீறி வேறு எண்ணங்கள் அலைமோதினால் உடனே அந்தக் கணத்திலிருந்தே கவனத்தை திருப்பி தொழுகையின் பக்கம் கவனத்தை குவித்திட வேண்டும்.

மைஸரா அப்துல் காதிர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT