தொடரை சமப்படுத்திய அவுஸ்திரேலியா | தினகரன்

தொடரை சமப்படுத்திய அவுஸ்திரேலியா

பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் திகதி சஹூர் அஹமத் அரங்கில் ஆரம்பமானது. முதல் போட்டியை வென்று வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ் இரண்டாவது போட்டியையும் வெல்லும் முனைப்புடன் உறுதியான நம்பிக்கையுடனும், இரண்டாவது போட்டியை வென்று தொடரை சமப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் அவுஸ்திரலிய அணியும் களமிறங்கியது.

நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய சௌம்யா சர்க்கார் மற்றும் தமீம் இக்பால் ஜோடி ஆரம்பம் முதலே அதிர்ச்சியளிக்கும் வகையில் விக்கெட்டினை இழந்தது. மீண்டுமொரு முறை அபாரமான சுழலினை வெளிக்காட்டிய லியோனின் பந்து வீச்சில் சிக்கி தமீம் இக்பால் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணியின் முதலாவது விக்கெட் 13 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது.

லியோனின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 117 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளை அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் சபீர் ரஹ்மான் ஜோடியின் சதம் கடந்த இணைப்பாட்டம் மூலம் பங்களாதேஷ் அணி சரிவிலிருந்து மீண்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

2ஆவது நாள் தொடர்ந்து பங்களாதேஷ் அணி விக்கெட்டுகளை இழக்க முதல் இன்னிங்சுக்காக அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 68 ஓட்டங்களையும் சபீர் ரஹ்மான் 66 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். இதற்கு மேலதிகமாக சௌம்யா சர்க்கார் 33 ஓட்டங்களையும் மொமினுள் ஹக் 31 ஓட்டங்களையும், நசிர் ஹுசைன் 45 ஓட்டங்களையும் மற்றும் சகிப் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக மீண்டுமொருமுறை அபாரமான பந்து வீச்சினை வெளிப்படுத்திய லியோன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது தவிர அஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிரிச்சியளிக்கும் வகையில் ரேன்சோ 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் 2ஆவது விக்கெட்டுக்காக ஸ்மித் வோர்னர் சோடி மிகச்சிறப்பாக ஆட 2ஆம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஸ்மித் 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

மழை காரணமாக 3ஆம் நாள் ஆட்டம் சற்று தாமதித்தே ஆரம்பித்தது. இதன் போது களத்தில் வோர்னர் 88 ஓட்டங்களுடனும் ஹென்ட்ஸ்கொம்ப் 69 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர். 3ஆம் நாள் ஆட்டம் மதிய போசணத்தின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய வோர்னர் தனது 20ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்தார். ஏற்கனவே முதல் போட்டியிலும் வோர்னர் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஹென்ட்ஸ்கொம்ப் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் சுதாகரித்துக் கொண்ட பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற அவுஸ்திரேலிய அணி 377 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக வோர்னர் 123 ஓட்டங்களையும், ஹென்ட்ஸ்கொம்ப் 82 ஓட்டங்களையும் மற்றும் ஸ்மித் 58 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க அவுஸ்திரேலிய அணி 72 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற சகிப் மற்றும் தைஜுள் இஸ்லாம் தலா 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

72 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு, அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிர்ச்சியளித்தது. சர்காரின் விக்கெட்டினை கம்மின்ஸ் வீழ்த்த மறுமுனையில் தனது அபார சுழலின் மூலம் லியோன் விக்கெட்டுகளை வீழ்த்த பங்களாதேஷ் அணி 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் 5 விக்கெட்டுகளில் தமிம் மற்றும் இம்ருள் கைஸ் ஆகியோர் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து எமாற்றமளித்தனர்.

மீண்டுமொரு முறை பங்களாதேஷ் அணியின் பொறுப்பினைக் கையில் எடுத்துக் கொண்ட சபீர் ரஹ்மான் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி நிதானமாக ஆட 4ஆம் நாள் மதிய போசன இடைவேளை வரை பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்களைப் பெற்றது.

மதிய போசண இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பித்து பங்களாதேஷ் அணி மேலும் ஒரு விக்கெட்டினை இழக்க 97 ஒட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிறப்பாக ஆடிய சபீர் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை லியோனின் பந்து வீச்சில் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களம் புகுந்த மொமினுள் ஹக் அணித்தலைவருடன் இணைந்து சற்று நிதானமாக ஆடி பங்களாதேஷ் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினார். எனினும் பெட் கம்மின்சின் சிறப்பான பந்து வீச்சில் அணித்தலைவர் முஷ்பிக் ரஹீம் ஆட்டமிழக்க மீண்டும் பங்களாதேஷ் அணி தடுமாற ஆரம்பித்தது. முஷ்பிக் தனது அணிக்காக 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து லியோன், பந்து வீச்சில் மிரட்ட பங்களாதேஷ் அணி 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக 31 ஓட்டங்கள் அணித்தலைவர் முஷ்பிக் ரஹிமினால் பெறப்பட்டது. பந்து வீச்சில் லியோன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ச்சியாக மூன்று இன்னிங்சுகளில் 5 விக்கெட்டுகளைப் பெற்று லியோன் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். இவர் தவிர ஓ கேபீஈ மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

86 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் பங்களாதேஷ் அணியின் சிறப்பான பந்து வீச்சினால், அவுஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வோர்னர், ரேன்சோ, ஸ்மித் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். எனினும் மெக்ஸ்வெல்லின் நிதானம் கலந்த அதிரடி மூலம் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது. மெக்ஸ்வெல் 17 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார். பங்களாதேஷ் சார்பாக முஸ்தபிசுர் ரஹ்மான், சகிப் மற்றும் தைஜுள் ஆகியோர் தலா 1 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மொத்தமாக ஒரு போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய லியோன் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


Add new comment

Or log in with...