Thursday, March 28, 2024
Home » மனிதருக்கு அல்லாஹ்வின் செய்தி

மனிதருக்கு அல்லாஹ்வின் செய்தி

by Rizwan Segu Mohideen
October 20, 2023 11:38 am 0 comment

‘மனிதர்களே…! நீங்கள் உங்கள் இறைவனுக்கு பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரில் இருந்து ஆண்கள், பெண்கள் எனப் பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.
(அல் குர்ஆன் 4:1)

மற்றொரு வசனத்தில், ‘மனிதர்களே… உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணில் இருந்து தான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவரை விட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும் உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்
(அல் குர்ஆன் 49:13)

அல்லாஹ்தஆலா இந்த வசனங்கள் ஊடாக மாபெரும் செய்தியை மனித சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றான். அவன் சர்வ வல்லமை படைத்தவன். பூமி உள்ளிட்ட முழுப்பிரபஞ்சத்தையும் மாத்திரமல்லாமல் அவற்றிலுள்ள அத்தனை படைப்புக்களையும் படைத்து பராமரித்து ஒழுங்கமைத்து நிர்வகித்து வருபவன் அவன்.

இந்த உண்மையின் அடிப்படையில் அனைத்து மனிதர்களும் தம்மைப் படைத்த அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். இயல்பானதும், எளிமையானதுமான இந்த உண்மைகள் மிகவும் ஆழமானதும் கனதியானதும் ஆகும். மனிதன் தன் காதுகளையும் உள்ளங்களையும் கொண்டு அவற்றைக் கூர்ந்து கவனித்தான் என்றால் அதுவே அவனது வாழ்வில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக அமையும். குறிப்பாக அறியாமைகளில் இருந்து விடுபட்டு ஈமானையும் நேர்வழியையும் நோக்கி வர வழிவகுக்கும்.

இந்த வசனங்கள் மனிதன் வெளிப்பட்ட ஆரம்ப மூலத்தை நினைவூட்டுவதன் மூலம் அவனைப் பூமியில் படைத்த அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வர எதிர்பார்க்கிறது.

மனிதன் தற்போதைய உடல் உருவ அமைப்பை பெற்றுக்கொள்ள முன்னர் ஒன்றுமில்லாத நிலையில் தான் இருந்தான். அவன் உலகில் பிறக்க வேண்டும். இங்கு வாழ வேண்டும் என்ற சுய விருப்பு, எதிர்பார்ப்போடு பிறந்தன் அல்லன். வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தோடு வசதி வாய்ப்புக்களைப் பெற்று உலகில் வாழலாம் என்று பிறக்க முன்னரே எண்ணிப் பார்த்தவனும் அல்லன் மனிதன்.

எவ்வித நாட்டமும் இல்லாத நிலையில் இருந்த மனிதனை, இந்த உலக வாழ்வுக்கு கொண்டு வந்தவன் யார்? அவனுக்கு உலகில் வாழ்வுக்கு தேவையான அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுத்தவன் யார்? உலகில் தமக்காக அனைத்து படைப்புக்களையும் உழைக்க வசப்படுத்தி தந்தவன் யார்? இம்மையிலும் மறுமையிலும் விமோசனம் பெற்றுக்கொள்வதற்கான தெளிவான நேர்வழிகாட்டலை வழங்கியுள்ளவன் யார்? என்பவற்றை அவன் எண்ணிப்பார்க்க தவறியுள்ளான்.

ஆனால் அல்லாஹ்தஆலா மனிதனைப் படைத்ததோடு மாத்திரமல்லாமல் அவனுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தவனாவான். மனிதன் இம்மையிலும் மறுமையிலும் விமோசனமும் சுபீட்சமும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான தெளிவான வாழ்க்கைப் பாதையை வரைந்து அப்பாதையை முடிவு செய்து உலகில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான தனித்தன்மைகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் அவனுக்கு வழங்கியுள்ளான். அவ்வாறு வழங்குவதற்கான உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது. அவன் அனைத்தையும் அறிந்தவனாவான். அவனால் மாத்திரமே மனிதனை சிறந்த முறையில் பராமரித்து நிர்வகிக்க முடியும். அதனால் அவனது வழிகாட்டல்படியே வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ் உலகில் மனிதனுக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரமும் நன்மை தீமையைப் பிரித்தறியும் அறிவும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி ஈருலகிலும் விமோசனமும் சுபீட்சமும் பெற்றிட வேண்டும். அதனையே இலக்காகக் கொள்ள வேண்டும்.

தாம் பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தையும் அறிவையும் மனிதன் சரியான முறையில் பயன்படுத்துவான் என்றால் அவன் நிச்சயமாக அல்லாஹ்வின் பக்கமே சார்ந்திருப்பான். உலகம் உள்ளிட்ட பிரபஞ்சமும் அத்தனை படைப்புக்களும் அல்லாஹ்வின் ஆற்றல்களையும் மகத்துவங்களையும் வெளிப்படுத்தி நிற்பதே அதற்கு போதுமான சான்றுகளாகும். அவற்றுக்கு முன்னால் அல்லாஹ்வைத் தவிர மனிதனுக்கு வேறொரு தெரிவு இருக்க முடியாது. அதனால் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி அல்லாஹ்வை சார்ந்தவனாகவே மனிதன் இருப்பான்.

இந்த நிலையில் அல்லாஹ்தஆலா, ‘(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது’ (அல் குர்ஆன் 2:256) என்று குறிப்பிட்டிருக்கின்றான். உண்மையில் உலகம் உள்ளிட்ட பிரபஞ்சத்தையும் அவற்றிலுள்ள படைப்புக்களையும் அவற்றின் இயக்கங்களையும் மனிதன் சரியான கண் கொண்டு நோக்கும் போது நேர்வழி தெளிவாகிவிடும். அப்போது அவனது வாழ்வே இஸ்லாமாகிவிடும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது.

அதேநேரம் ‘அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை ‘ஆகுக’ எனக்கூறுவது தான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது. (அல் குர்ஆன் 36:82)

அவ்வாறான மாபெரும் சக்தி, ஆற்றல்களைக் கொண்டவன் தான் அல்லாஹ். அப்படியிருந்தும் அவன் பூமிக்கான தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்ததோடு அனைத்து மனிதர்களையும் ஆதம் (அலை), ஹவ்வா (அலை) என்ற ஒரே குடும்ப மூலத்தில் இருந்தே படைக்க நாடினான். இந்த மனித சமூகத்தின் மூல வேராக அவர்களே இருக்கின்றனர். அவர்களில் ஆதம் (அலை) அவர்களைத் தன் கரங்களால் படைத்ததாக அவன் குறிப்பிட்டிருக்கின்றான்.

‘இப்லீஸே…நானே என் இரு கரங்களால் படைத்தவற்றிற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடை செய்தது என்ன? (அல் குர்அன் 38:75) என்று அல்லாஹ் எழுப்பி இருக்கும் கேள்வி அதற்கான சான்றாகும். ஆதம் (அலை) அவர்களில் இருந்து தான் அவரது துணையை அவன் படைத்தான். அவர்கள் இருவரும் இணைந்த குடும்ப உறவின் ஊடாக ஆண்கள், பெண்கள் என மனித சமூகத்தைப் பரவச் செய்தான். இதன்படி உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மூல பிதாவாக இவர்களே இருக்கின்றனர்.

அல்லாஹ் நாடி இருந்தால் ஆதம் (அலை) அவர்களை மாத்திரமல்லாமல் மேலும் ஏராளமான ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களை இணைத்து குருகிய காலத்திற்குள் புவியில் மனித சமூகத்தைப் பரவச் செய்திருக்கலாம். அது அவனுக்கு சிரமமான காரியமே அல்ல. அவ்வாறு செய்திருந்தால் மனிதர்கள் ஆரம்பம் முதலே பல தனித்தனி குடும்பங்களாக இருந்திருப்பார்கள். அந்த அனைத்து மனிதர்கள் ஊடாகவும் தம் பணிகளை அவன் முன்னெடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் மத்தியில் ஒரே படைப்பாளனினால் படைக்கப்பட்டவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த உறவும் எந்த இணைப்பும் இருந்திருக்காது. இருப்பினும் அல்லாஹ் அவ்வாறு செய்ய நாடவில்லை. அதற்கு காரணங்கள் இருக்காமல் இராது. யாவற்றையும் அறிந்தவன் அவன்.

‘அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான்’ என்ற வசனத்தின் ஊடாக பூமியில் பிறக்கும் அனைத்து மனிதர்களதும் மூலம் ஒரு தாய், ஒரு தந்தையில் இருந்து தான் ஆரம்பமானது என்பது எடுத்தியம்பப்படுகிறது. இதன் ஊடாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் அவன் பக்கம் திரும்ப வேண்டும் என்ற செய்தி முன்வைக்கப்படுகிறது. அதேநேரம் முழு மனித இனமும் ஒரே மூலத்தில் இருந்து வெளிப்பட்டிருப்பதால் அவர்கள் அனைவரும் உறவு முறையைக் கொண்டிருக்கின்றார்கள். அந்த உறவின் பக்கம் திரும்புவதும் இன்றியமையாததாகும்.

அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் ஒரே தாயையும் தந்தையையும் மூல வேராகக் கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் மனிதர்கள் ஒன்றுபட வேண்டியவர்களாவர். கொள்கை, கோட்பாடுகள் ரீதியில் பிரிந்திருந்தாலும் அனைத்து மனிதர்களது இரத்தமும், சுவாசிக்கும் காற்றும், ஒட்சிசனும், கண்ணீரும், பசி, இச்சை உணர்வும் ஒரே விதமானது. உடலுறுப்புக்களும் அவ்வாறானதே. அதனால் மனித சமூகத்தில் பிரிவினை இருக்க முடியாது.

அதேநேரம் ‘ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்’ என்றும் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அதாவது ஒரே மூலத்தில் இருந்து பிறந்த மனிதர்கள் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் இருந்தாலும் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்வதற்காகவன்றி பிரிந்து பிளவுபட்டு இருப்பதற்கு அல்ல. அதுவே அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.

அதனால் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் அவனது நாட்டத்தின் ஊடாக ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவர்கள் என்ற அடிப்படையிலும் அனைத்து மனிதர்களும் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டியவர்கள். அதனால் மனிதன், தம் வாழ்வின் யதார்த்தத்தை சரியாக அறிந்து உணர்ந்து கொள்வான் என்றால் அவனது வாழ்வின் பிற்காலத்தில் உலகில் உருவான அனைத்து பிரிவுகளும் அவனை விட்டு நீங்கிவிடும். அந்த பிரிவுகள் தான் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த மனிதர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியதோடு அவர்களுக்கிடையிலான உறவுகளையும் அறுத்து தூரப்படுத்தி இருக்கின்றன. அவை தற்காலிகமாகத் தோன்றியவை தான்.

மனிதர்களுக்கிடையிலான உறவு, தொடர்பின் உண்மை நிலை என்பன ஒவ்வொருவரதும் மனதிலும் ஆழப்பதிந்து விட்டால் இன ரீதியிலான மோதல்கள் அகன்றுவிடும். ஆன போதிலும் இம்மோதல்களால் ஆரம்பம் முதல் பெரும் துன்பங்களை மனித சமூகம் அனுவித்து வந்திருக்கிறது. கோடிக்கணக்கானோரின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளன. உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இன்றைய நவீன உலகிலும் இவை இடம்பெறவே செய்கின்றன.

இந்த வசனங்களின் படி, மனிதர்கள் தங்களைப் படைத்த அல்லாஹ்வை நோக்கி திரும்ப வேண்டும். அப்போது உலகில் அமைதி சமாதானம் தலைத்தோங்கும். அல்லாஹ் வழங்கியுள்ள செய்தியும் அதுதான். அந்த செய்தியை அறிந்து தெரிந்து கொள்வதிலும் புரிந்துகொள்வதிலும் காணப்படும் பலவீனங்கள் தான் மனிதர்கள் மத்தியில் பிளவும் பிரிவுகளும் முரண்பாடுகளும் கோலோச்ச வழிவகை செய்திருக்கின்றன.

மனிதர்கள் அனைவரும் இன, நிற, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் இரத்த தொடர்பை உறவு முறையைக் கொண்டவர்கள் என்பதை அல் குர்ஆனின் இந்த வசனங்கள் தெளிவாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு வசனங்களதும் இரண்டாவது பகுதி மற்றொரு முக்கிய செய்தியையும் எடுத்தியம்புகின்றது. அது தான் இறையச்சமாகும். மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததும் அதுதான். இறையச்சத்தை பெற்றுக்கொள்ளும் மனிதன் தம் வாழ்வின், படைப்பின் நோக்கத்தை தெளிவாக அறிந்து புரிந்து கொள்வான்.

ஆகவே அல்லாஹ்வின் செய்தியை அதற்கேயுரிய ஒழுங்கில் புரிந்து அதற்கேற்ப வாழ்வொழுங்கை அமைத்துக் கொள்வோம். அதுவே ஈருலக வாழ்விலும் விமோசனம் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அமையும்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT