நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகள் பிரிட்டிஷ் எம்.பிகளுடன் சந்திப்பு | தினகரன்

நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகள் பிரிட்டிஷ் எம்.பிகளுடன் சந்திப்பு

நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகள் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் (பிரித்தானிய) பாராளுமன்ற குழு அறை 10 இல் (Committee Room 10, The House of Commons) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சுமார் மூன்று மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வலியுறுத்தியும் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

யுத்தம் இடம்பெற்ற போதும் யுத்தம் முடிவடைந்த கையுடனும் பலர் காணாமல் போயிருந்தனர். பலர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரியாத நிலையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என நீதி கோரி ஈழத்தில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் ஆறு மாதத்தை கடந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பொறுப்புக் கூற பிரித்தானியாவும், சர்வதேச சமூகமும் வலியுறுத்த வேண்டும்.

அத்துடன், கைதுகள், மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படல் ஆகியவை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதற்கு எதிராக பிரித்தானியாவும், சர்வதேச சமூகமும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என இந்தக் கலந்துரையாடலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களும், அதன் ஆதரவாளர்களும், ஈழ உணர்வாளர்களும் வலியுறுத்தினர். இந்த கலந்துரையாடலில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் நலன்சார்ந்து குரல் கொடுக்கும் சர்வதேச இராஜதந்திரிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், அதன் ஆதரவாளர்கள், ஈழத்தமிழ் உணர்வாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(வவுனியா விசேட நிருபர்) 

 


Add new comment

Or log in with...